Sunday, December 27, 2015

ஜல்லிக்கட்டு

தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் ஐயனார் (அய்யனார்) கோயில் இருக்கிறது; இங்கு திருவிழாக்கள் நடக்கும்; ஒவ்வொரு வருடமும் நடத்த முடியாது என்பதால், வசதிக்காக ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை மிகச் சிறப்பாக நடத்துவர்; இந்த திருவிழாவில் ஒருநாள், “மாடு பிடி விழா” நடக்கும்; நீர் இல்லாத குளம், கண்மாய், வயல்வெளி இவைகளில், இதற்கென பழக்கப்படுத்தப்பட்ட மாடுகளை கொண்டு வந்து, ஒவ்வொரு மாட்டையும் ஒரு நீண்ட பெரிய கயிறு கொண்டு (இதை வடம் என்பர், இது தேர்வடம் போன்றது) அந்த மாட்டின் கழுத்தில் கட்டிவிடுவர்; அந்த மாடு அந்தப் பெரிய மைதானத்தை ஒரு வட்டம் சுற்றிவர வேண்டும்; இதற்குள் மாடு பிடிக்கும் இளைஞர்கள் அதை விரட்டி விரட்டி அதன் தோளை அமுக்கி, கொம்பை அமுக்கி, அதை கீழே சாய்த்து விடுவர்; இது கொஞ்சம் பாதுகாப்பான விளையாட்டு என்று இளைஞர்கள் நம்புவதால், இதை எல்லா ஊர்களிலும் (மதுரை பகுதியிலும் அதைத் தாண்டிய தென் தமிழகத்திலும்) திருவிழாவாகவே நடத்துவர்;
இந்த மாடுபிடி விழாவை “எருது கட்டு” என்பர்; எருதை கயிற்றால் அதன் கழுத்தில் கட்டி ஓடவிட்டு அதை அடக்குவது; பின்னர், இந்த மாடுபிடி விளையாட்டில் சுவாரசியம் இல்லை என்று நினைத்திருப்பர்; மாட்டின் கயிற்றை அவிழ்த்துவிட்டு ஓடவிட்டு அதை அடக்குவதே வீரம் என்று நினைத்திருப்பர்; எனவே கயிறு இல்லாத மாட்டை அடக்குவது என்பது பாம்புடன் விளையாடுவது போல! இந்த விளையாட்டை ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஒருசில பகுதிகளில் பிரபலப்படுத்தினர்; இதைப் பார்க்க உள்ளூர் மக்கள், வெளியூர் மக்கள், வெளிநாட்டு மக்கள் வருகை அதிகரித்தவுடன் மீடியாவும் துணைக்குச் சேர்ந்து கொண்டது; இது கொஞ்சம் ஆபத்தான விளையாட்டாக இருந்தாலும், தனி மாடும், தனி வீரனும், நேருக்கு நேர் மோதும் விளையாட்டல்ல இது; ஒரு மாட்டை அதன் கயிற்றை அவிழ்த்து விட்டால், அதை சுற்றி நூறு வீரர்கள் இருப்பர்; அது ஓட்டமெடுக்கும் போது அதை தொடர்ந்து கூட்டமாக சென்று அந்த மாட்டை அமுக்கி பிடிப்பர்; இதில் சில மாடுகளை இளைஞர்கள் பிடிப்பர்; சில மாடுகள் இளைஞர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிடும்;
இது இல்லாமல், ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போதும், ஒவ்வொருவர் வீட்டிலும், (ஒரு சிலர் வீட்டில் மட்டும்), இளம் காளையின் கழுத்தில் வேட்டி, துண்டு, கரும்பு, பணம் இவைகளைக் கட்டிவிட்டு, “என் காளையை யார் அடக்குகிறாரோ அவர் அந்தப் பரிசுப் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம்” என்ற அறிவிப்போடு அந்த இளம் காளையை விரட்டி விடுவார்: இதுவும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான விளையாட்டானது; இது இல்லாமல், சிறுவர்களின் வீரத்துக்காக, ஆக்ரோஷமாக முட்டும் ஆட்டுக் கிடாய்களை, கன்றுக் குட்டிகளை இவ்வாறு விரட்டி விடுவர்; இது ஆரம்ப நிலை வீரவிளையாட்டு; தென் தமிழகத்தில் வாழ்ந்த, வாழ்கிற எல்லோருக்கும் இது தெரிந்த ஒன்றுதான்;
ஜல்லிக்கட்டு;
இந்த ஜல்லிக் கட்டு மாடுபிடி விளையாட்டு தேவையா இல்லையா என்பது பற்றி பல விவாதங்கள் உண்டு; இன்னும் கொஞ்ச காலத்துக்கு இந்த ஜல்லிக்கட்டின் மீதுள்ள மோகம் தொடரும்; அடுத்துவரும் தலைமுறைகளில் இது ஒரு தேவையில்லாத விளையாட்டு என்று அந்த தலைமுறை மறந்துவிடும்;  
இப்போதுள்ள தலைமுறைக்கு இது வீர விளையாட்டு; ஏனென்றால் மாடு பிடிக்கும் விரர்கள் இருக்கிறார்கள்; இவர்களின் எண்ணிக்கை சுருங்கும் காலத்தில் இது மறைந்துவிடும்;
ஜல்லிக்கட்டுக்கு தடை
இப்படி மாட்டைப் பிடிப்பது, அந்த மாட்டை வதை செய்வது போன்றது என சென்னை ஐகோர்ட்டின் கிளையான மதுரை ஐகோர்ட்டில் ஒரு ரிட் வழக்கு வருகிறது: அதன் மீது 2006ல் நடந்த ரிட் அப்பீல் வழக்கில், எப்படி பாதுகாப்பாக ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என சில நிபந்தனைகளை கோர்ட் விதிக்கிறது; ஆனால் அதன்மீது சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது:
தமிழக அரசு 2009ல் ஒரு சட்டம் கொண்டுவருகிறது; The Tamil Nadu Regulation of Jallikattu Act, 2009: இதில் ஜல்லிக்கட்டு நடத்த சில கட்டுப்பாடுகள் சட்டமாக்கப்பட்டன; இந்த சட்டத்தை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது;
சுப்ரீம்கோர்ட்டில் இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே, மத்திய அரசு ஒரு புதிய நோட்டிபிகேஷனை 2011ல் கொண்டு வருகிறது; அதன்படி, ஏற்கனவே விலங்குகளை கொடுமைப்படுத்த தடை சட்டம் 1960 உள்ளது; The Prevention of Cruelty to Animal Act, 1960; இதில் விலங்குகள் என்று உள்ள விளக்கத்தில் “எருது-Bull” என்ற வார்த்தை இல்லை; எனவே இந்த புதிய நோட்டிபிகேஷனில் இந்த “எருது” என்ற வார்த்தையை சேர்த்து விட்டது மத்திய அரசு; எனவே இந்த புதிய நோட்டிபிகேஷன் சட்டப்படி எருதுகளை கொடுமைப்படுத்தும் எந்த விளையாட்டும் தடை செய்யப் பட்டது; சுப்ரீம் கோர்ட்டும் இந்த புதிய நோட்டிபிகேஷனின் படி, தமிழக அரசு ஏற்கனவே கொண்டுவந்த சட்டமான ஜல்லிக்கட்டு சட்டம் 2009 செல்லாது என அறிவித்தது; ஏனென்றால், இந்த விலங்குகளை கொடுமைப்படுவது என்ற வகை சட்டங்களை மத்திய அரசும் இயற்றலாம், மாநில அரசும் இயற்றலாம்; இவ்வாறு இரண்டு அரசுகளும் ஒரு சட்டத்தை இயற்றி இருந்தால், அதில் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள் இருந்தால், மத்திய அரசின் சட்டமே செல்லுபடியாகும்; மாநில அரசின் சட்டம் அந்தவகையில் செல்லாத நிலையில் இருக்கும்; (பார்க்க; இந்திய அரசியல் சாசனச் சட்டம் ஆர்ட்டிகிள்: 254ஐ);
எனவே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, எருது என்பது 1960 விலங்குகள் கொடுமை தடை சட்டத்தில் உள்ளதால், (மத்திய அரசின் 2001ன் புதிய நோட்டிபிகேஷனின்படி) எருதுகளை கொடுமைப்படுத்த முடியாது; தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டமும் செல்லாத நிலையில் இருக்கிறது;
ஒருவேளை மத்திய அரசு, 1960ன் விலங்குகளை கொடுமைப்படுத்த தடை சட்டத்தில் (The Prevention of Cruelty to Animals Act, 1960) உள்ள எருது-Bull  என்ற வார்த்தையை நீக்கி விட்டால், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டம் 2009 சட்டம் புத்துயிர் பெற்றுவிடும்;
இன்று இந்தப் பிரச்சனை வேகமாகத் தெரிகிறது; இனி வரும் காலங்களில் இது ஒரு அவசியமில்லாத பிரச்சனையாக ஆகிவிடக் கூடும்;
**

No comments:

Post a Comment