Chettiar’s Property case in 1944
இந்து விதவைகளின் சொத்துரிமை பற்றி:
RM.AR.AR.RM.அருணாசலம் செட்டியார் என்பவர் தேவகோட்டையில் உள்ள நாட்டுக்
கோட்டை செட்டியார்களில் மிகப் பெரிய பணக்காரர். இவர் ஒரு உயில் எழுதி வைத்துவிட்டு,
1938-ல் இறந்து விடுகிறார். இந்த உயிலை சப்கோர்ட்டில் புரேபேட் ஆர்டர் பெறுகிறார்கள்.
புரபேட் (Probate) என்பது, உயில் எழுதியது உண்மைதான் என்று அதில் உள்ள
சாட்சிகளைக் கொண்டு நிரூபித்து பெறப்படும் நிரூபணச் சான்றிதழ்.
அந்த காலத்தில், 1938-ல் இறந்த அருணாசலம் செட்டியாரின் சொத்துக்களின்
மதிப்பு ரூ.40 லட்சத்தை தாண்டும். இந்தியாவில் இல்லாமல், பர்மா (அப்போது பிரிட்டீஸ்
நிர்வாகத்தில் உள்ளது), மலாய், சிலோன், கொச்சின் (அப்போது பிரன்ஸ் நாட்டின் நிர்வாகத்தில்
உள்ளது) மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் அவருக்கு சொத்துக்கள் உண்டு. இது இல்லாமல்,
ஏகப்பட்ட சாரிட்டிகள், என்டோவ்மெண்டுகள் உண்டு. இவைகளின் மதிப்பே ஒரு 24 லட்சத்தைத் தாண்டும்.
அருணாசலம் செட்டியாருக்கு மூத்த மனைவி மூலம் ஒரு மகனும், மூன்று மகள்களும்
இருக்கிறார்கள். மூத்த மனைவி இல்லாமல் மேலும் இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி
இவருக்கு முன்பே இறந்து விட்டார். மூத்த மனைவி மூலம் பிறந்த மகனும் இவருக்கு முன்பே
இறந்து விட்டார். மூத்த மனைவியின் மூன்று மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து விட்டார்.
இரண்டாம் மனைவியும் மூன்றாம் மனைவியும் இருக்கிறார்கள். இரண்டாம் மனைவிக்கு குழந்தை
ஏதும் இல்லை. மூன்றாம் மனைவிக்கு ஒரு மகள் மட்டுமே. மூத்த மனைவியின் மகன், உமையாள் ஆச்சி என்பவரைத்
திருமணம் செய்திருந்தார். (பின்னர் மகன் இறந்து விட்டார்). அவர்களுக்கு
குழந்தை ஏதும் பிறக்கவில்லை.
அருணாசலம் செட்டியார் இறந்த பின்னர், அவரின் சொத்துக்களை நிர்வாகம் செய்வதற்காக,
அவரின் மருமகளான உமையாள் ஆச்சி Administration Suit என்ற வழக்குப் போடுகிறார்.
அருணாசலம் செட்டியார் எழுதி வைத்த உயிலை நிறைவேற்றுபவராக (Executor)
தனது மைத்துனர் சுந்தரேசன் செட்டியாரையும் தனது மருமகன் அருணாசலம் செட்டியாரையும் நியமித்திருந்தார்.
அந்த உயிலில், தனது இரண்டு மனைவிகளுக்கும் ஆண் குழந்தை இல்லாததால், அவரவர்
ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள உரிமை வழங்கி இருந்தார். அதேபோல், தன் மருமகளும்
(இறந்த மகனின் மனைவி) ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று அதிகாரம்
வழங்கி இருந்தார்.
பழைய
இந்து சாஸ்திர சட்டம்:
பழைய இந்து சாஸ்திரப்படி, ஒரு இந்து ஆணுக்கு, தன் இறப்புக்குப் பின்னர்,
தனக்கு செய்யவேண்டிய கர்ம காரியங்களைச் செய்தவதற்காக ஒரு மகன் வேண்டும் என்று சாஸ்திரம்
சொல்கிறது. அப்போதுதான், அந்த இறந்த இந்து ஆண் சொர்க்கத்துக்கு போக முடியும் அல்லது
ஆன்மா இறைவனடி சேரும் என்பது ஒரு சம்பிரதாயம். அப்படி ஒரு மகன் இல்லாதபோது, அல்லது
பிறக்காதபோது, தன் பங்காளிகளின் மக்களின் ஒரு மகனை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று
சாஸ்திரம் சொல்கிறது. ஒருவேளை, அப்படி தத்து எடுப்பதற்கு முன்னரே அவர் இறந்து விட்டால்,
தன் மனைவிக்கு அந்த உரிமையை வழங்கலாம் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.
இந்தப் பின்னனியில்தான், அருணாசலம் செட்டியாரும் அவரின் உயிலில் அப்படி
எழுதி இருக்கிறார். அப்படி தத்து எடுக்கும் போது, உயிலில் நியமிக்கப்பட்டுள்ள நிறைவேற்றாளர்களான
மைத்துனன் சுந்தரேசன் செட்டியாரையும், மருமகன் அருணாசலம் செட்டியாரையும் கலந்து ஒப்புதல்
வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அந்த உயிலில் எழுதி இருக்கிறார்.
அதன்படி, மூவரும் (இரண்டு மனைவிகளும், ஒரு மருமகளும்) ஆளுக்கு ஒரு மகனாக
தத்து எடுத்துக் கொள்கிறார்கள். தத்து மகன்கள் மேஜர் வயதை அடைகிறார்கள். அவர்கள் மூவரும்,
உயிலில் நியமிக்கப்பட்ட நிறைவேற்றாளர்களுடன் சேர்ந்து சொத்துக்களையும், டிரஸ்டுகளையும்
நிர்வகித்து வருகிறார்கள்.
பழைய
இந்து சாஸ்திர சட்டம்:
பொதுவாக, தத்து எடுப்பது என்பது இந்து சாஸ்திர சட்டத்தி்ல் மட்டுமே உள்ளது.
கிறிஸ்தவர், முஸ்லீம் ஆகியோர் தத்து எடுக்க முடியாது. அவர்களின் மதநூல்களான பைபிள்,
குரான் இவைகளில் அவ்வாறு சொல்லப்படவில்லை. ஏனென்றால், அங்கு மறுபிறப்பு, கர்மா, ஆன்மா
போன்ற தத்துவங்களுக்கு இடமில்லை. எனவே இந்து சாஸ்திரத்தின்படி, இறந்தவரின் ஆன்மா முக்தி
அடைய வேண்டுமானால், அவரின் மகன் இந்தப் பூவுலகில், தன் மூதாதையருக்கு (ஏழு தலைமுறை
மூதாதையருக்கு) பிண்டம் கொடுத்து கர்மம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
மகன் இல்லாதவர் தத்து எடுத்து அந்த சாஸ்திரத்தை செய்ய வேண்டும். தத்து எடுக்காமல் காலம்
சென்றவரின் விதவை-மனைவி தன் கணவனுக்காக அவ்வாறு
தத்து எடுக்கலாம். அல்லது அந்த இந்து ஆணே உயிருடன்
இருக்கும்போதே ஒரு உயில் மூலம் அந்த அதிகாரத்தை தன் மனைவிக்கு அளிக்கலாம் என்பது பழைய
இந்து சாஸ்திர சட்டம். ஆண் குழந்தையை மட்டுமே அவ்வாறு தத்து எடுக்க முடியும். ஒரு பெண் குழந்தையை
அவ்வாறு தத்து எடுக்க முடியாது. மேலும், அந்த ஆண் குழந்தையும் 14 வயதுக்குள் இருக்க
வேண்டும். தத்த ஹோமம் என்னும் நிகழ்ச்சியை நடத்தி, உறவினர்கள் முன்னிலையில் அக்னி சாட்சியாக,
அந்த குழந்தையின் இயற்கை பெற்றோர்கள் (Biological parents), வளர்ப்பு பெற்றோர்களிடம்
(Adoptive parents) இந்தக் குழந்தையை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அந்த தத்து
(Adoption) சாஸ்திரப்படி செல்லுபடியாகும்.
பழைய
இந்து சாஸ்திர சட்டம்:
இந்த சாஸ்திர தத்து விதிகளுக்கு மாறாக தத்து எடுத்திருந்தால் அந்த தத்து
செல்லாது. அப்படி எடுக்கப்பட்ட மகன், அந்த சொத்தில் எந்த உரிமையும் கோர முடியாது. ஆனாலும்,
ஒரு சில சமுதாயங்களில் (ஜாதிகளில்) இந்த சாஸ்திர விதிகளுக்கு மாறாக, காலம் காலமாக தொடர்ந்து
வேறு ஏதாவது ஒரு “வழக்கம்” & “பழக்கம்” (Custom & Usage) தொன்றுதொட்டு கடைப்பிடித்து
வந்தால், அதில் இந்த சாஸ்திர சட்டம் மூக்கை நுழைக்காது. இந்த தேவகோட்டைப் பகுதியில்
உள்ள நாட்டுக்கோட்டை செட்டிகளிடம் (இவர்களை நாட்டார் என்றும் சொல்வர்) ஒரு வகைப் பழக்க-வழக்கம்
தொன்று தொட்டு இருந்து வருகிறது. அதன்படி, இவர்கள், தனக்கு ஒரு மகன் பிறக்கவில்லை என்றால்,
தன் தாயாதிகளின் மகனை தத்து எடுத்துக் கொள்வார்கள். சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி
அந்த மகனுக்கு 14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த தத்து மகனுக்குத்
திருமணம் கூட ஆகி இருக்கலாம். அப்படி ஒரு பழக்க-வழக்கம் கடைப்பிடித்து வருகிறார்கள்.
எனவே இது இந்து சாஸ்திர விதிகளின் விதிவிலக்காக
ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அருணாசலம் அவர்களின் உயிலில் டிரஸ்டுகளை எப்படி நிர்வகிக்க வேண்டும்
என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர, அவரின் சொத்துக்களை யார் யார் அடைய வேண்டும் தனித்துச்சொல்லவில்லை.
ஏனென்றால்,, அப்போது அவருக்கு மகன்கள் யாரும் இல்லை. மனைவிகளுக்கும் மருமகளுக்கும்
தத்து மகன்களை எடுத்துக் கொள்ளும் உரிமை மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது.
எனவே, அவரின் மருமகள் (இறந்த மகனின் மனைவி) இந்த சிவில் வழக்கைப் போடுகிறார்.
எதிர் பார்ட்டிகளாக, இரண்டு மாமியார்களையும், இரண்டு உயில் நிறைவேற்றாளர்களையும் சேர்த்திருக்கிறார்.
இந்த வழக்கில், மாமனார் எழுதி வைத்த உயிலே சட்டப்படி செல்லாது என்று
சொல்கிறார். இந்த உயிலை அவர் எழுதும்போது, அவர் நல்ல மனநிலையில் இல்லை என்பது அவர்
கூற்று. (Not in a sound state of mind). அந்த உயிலை எழுதி, அவர் கையெழுத்தை போட வைத்தது,
அவரின் உறவினர்களான, அவரின் மைத்துனரும், மருமகனுமான இந்த உயிலில் நிறைவேற்றாளர்களாக
இருப்பவர்களே என்கிறார்.
மேலும், மருமகளின் வாதம் என்னவென்றால்: மாமனாரின் உயிலில் அவரின் சொத்துக்கள்
யார் யாருக்கு போகவேண்டும் என்று எழுதப் படாத நிலையில், அந்த சொத்துக்களைப் பொறுத்து,
அவர் உயில் எழுதாமல் இறந்து விட்டதாகவே கருத வேண்டும் என்பதே. (Testator died
intestate in respect of the bulk of the estate).
மேலும், மருகளுக்குக் கொடுத்த சீதனமும், அவளின் மாமியாரின் சீதனமும்,
ஏற்கனவே மாமனார் டெப்பாசிட்டுகளாக வைத்து விட்டுப் போயிருக்கிறார். அவைகளும் தனக்கே
வர வேண்டும் என்றும் கேட்கிறார்.
மேலும் மருமகள் சொல்கிறார்: மாமனார் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னர், தன்னை
அழைத்து, “ஒரு மகனைத் தத்து எடுத்துக் கொள்” என்று சொன்னதாகச் சொல்கிறார். அப்படி இருக்கும்போது,
உயிலில், Executors சம்மதத்தின் பேரிலேயே தத்து எடுக்க வேண்டும் என்று எப்படி எழுதி
இருப்பார். அப்படியே எழுதி இருந்தாலும் அது ஒரு உத்தரவு ஆகாது. அது ஒரு யோசனையே என்கிறார்.
இப்படியான சூழ்நிலையில், தன் சுய அறிவுடன் எழுதப்படாத அந்த உயில் செல்லாமல்
போனால், மூத்த விதவை மனைவியே (மகன் இல்லாதபோது), 1937-ம் வருடத்திய இந்து பெண்கள் சொத்துரிமை
சட்டப்படி, இறந்த கணவரின் முழு சொத்துக்கும் உரிமையாளராகி நிர்வகித்து வர வேண்டும்
என்பது மூத்த மனைவியின் வாதம்.
ஆனால் உயில் நிறைவேற்றாளர்கள் பதில் என்னவென்றால்: இந்த உயில் அவரின்
சுய சிந்தனையுடனேயே எழுதி அவர் கையெழுத்துப் போட்டுள்ளார் என்றும், எனவே அவர்கள் அந்த
உயில்படி சொத்துக்களை நிர்வாகம் செய்ய அதிகாரம் உள்ளவர்கள் என்றும், அதன் வரும்படியை
மட்டும் வளர்ப்பு மகன்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது உயிலில் கண்டுள்ளது என்றும்,
சொல்கிறார்கள்.
இதில், உயில் எழுதிய அருணாசலம் செட்டியாரின் மூன்றாவது மகளை (மூத்த மனைவி
மூலம் பிறந்தவள்) உயில் நிறைவேற்றாளராக உள்ள தன் மருமகனுக்குத் தான் திருமணம் செய்து
கொடுத்துள்ளார்.
சப்கோர்ட்
தீர்ப்பு: இந்த உயில் கட்டாயத்தின் பேரில்
ஏற்பட்ட்டது இல்லை என்றும், எனவே புரபேட் உத்தரவு வழங்கி தீர்ப்புக் கொடுத்து விட்டது.
ஆனாலும், அருணாசலத்தின் மற்ற சொத்துக்களைப் பொறுத்து அவர் உயிலில் குறிப்பிட்டுச்
சொல்லாததால், அவைகளைப் பொறுத்து உயில் எழுதிவைக்காமல் இறந்ததாகக் கருதி. அவைகளுக்கு
நிர்வாக உரிமையை மருமகளுக்கு உத்தரவிடுகிறது கோர்ட்.
ஆனால், மற்ற சொத்துக்களைப் பொறுத்து உயில் இல்லாமல் இருப்பதால், அவரின்
இரண்டாவது மனைவி (இப்போது உயிருடன் இருக்கும் தலைமை மனைவி Senior widow) க்கு 1937
பெண்கள் சொத்துரிமை சட்டப்படி உரிமை உண்டு என்று கீழ்கோர்ட் தீர்ப்புச் சொல்கிறது.
இந்த உத்திரவை எதிர்த்து ஐகோர்ட்டுக்கு வழக்கு வருகிறது.
1937
பெண்கள் சொத்துரிமை சட்டம்:
1937-க்கு முன்னர் பெண்களுக்கு
இந்து கூட்டுரிமை சொத்தில் பங்கு கிடையாது. (பெண்கள், தனியாக சீதனச் சொத்துக்களை வைத்துக்
கொள்ளலாம். அல்லது புதிய சொத்துக்களை வாங்கிக் கொள்ளலாம்). இந்து கூட்டுரிமை சொத்து
என்றால், ஒரு இந்து ஆண் ஒரு சொத்தை வைத்திருந்தால் (வாங்கி இருந்தாலும், பூர்வீகமாக
கிடைத்து இருந்தாலும்), அதில் அவருக்கும், அவரின் மகனுக்கும், அவரின் பேரனுக்கும்,
அவரின் கொள்ளுப் பேரனுக்கும் “அவர்களின் பிறப்பால்” பங்குரிமை பெறுவர். இதுவே இந்து
கூட்டுரிமை சொத்து எனப்படுவது. இதை கோபார்சனரி சொத்து (Coparcenary property) என்பர்.
இப்போது இதை மூதாதையர் சொத்து (Ancestral Property) என்றும், பூர்வீகச் சொத்து என்றும்
சொல்லிக் கொள்கிறார்கள். பெண்களுக்கு (அந்த குடும்பத்தில் உள்ள மனைவிகளுக்கும், மருமகள்களுக்கும்
அந்த சொத்தில் பங்கு கேட்கும் உரிமை கிடையாது; ஆனால் அவர்களின் வாழ்நாள்வரை அவர்களுக்கு
உணவு, உடை, உறைவிடம் கொடுத்து காப்பாற்ற வேண்டிய அந்த கோபார்சனர்கள் என்னும் ஆண்களின்
கடமை. மகள்களைப் பற்றி இங்கு சொல்ல வேண்டுமானால், அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கும்
வரை அந்த ஆண்களின் கடமை. அதற்குப் பின்னர் அவள் வேறு வீட்டு மருமகள். இந்த வீட்டுக்குச்
சம்மந்தமில்லாதவள்).
இப்படி இருந்த வந்த பெண்களின் நிலையை சற்று உயர்த்த நினைத்த பிரிட்டீஸ்
அரசு (ஏனென்றால், அந்தக் காலக்கட்டத்தில்தான்,
இங்கிலாந்தில் பெண்களுக்கு சொத்துரிமை வந்து விட்டது), 1937-ல் இந்து பெண்கள் சொத்துரிமை
சட்டம் கொண்டு வருகிறது.
குறிப்பு: இந்து பெண்களுக்குத்தான் இந்த நிலை. கிறிஸ்தவப் பெண்களுக்கு கணவர்
சொத்தில் மூன்றில் ஒரு பங்கு என்று ஏற்கனவே 1925-ல் சட்டம் வந்து விட்டது. முஸ்லீம்
பெண்களுக்கு தந்தை, தாய் சொத்தில் மகனுக்கு முழுப் பங்கு என்றும் மகளுக்கு பாதி பங்கு
என்றும், கணவர் சொத்தில் குழந்தைகள் இருந்தால் எட்டில் ஒரு பங்கு என்றும், குழந்தைகள்
இல்லை என்றால் நான்கில் ஒரு பங்கு என்றும் ஷரியத் சட்டம் ஏற்கனவே இருந்து வருகிறது.
எனவே இந்து பெண்களுக்கு கணவனின் சொத்தில் பங்கு இல்லை. எனவே ஒரு இந்து பெண், அவள் கணவன்
உயிருடன் இருக்கும்வரை அவன் தயவில் வாழ்கிறாள். கணவன் இறந்தபின், கணவனின் தாயாதிகள்
தயவில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். எனவே கணவன் இறந்தபின்னர், அவருக்குச்
சேர வேண்டிய பங்கு முழுவதும் அவளின் பங்காக அனுபவிக்கலாம். ஆனால் முழுமையாக அனுபவிக்க
முடியாது. வாழ்நாள் சுதந்திரம் மட்டுமே உண்டு. கிரயம் செய்ய முடியாது. எனவே இது அவளின்
ஜீவனாம்ச உரிமை மட்டுமே. இதுதான் 1937-ல் பெண்களுக்குக் கொடுத்த சொத்துரிமை. பின்னர்
1956-ல் வந்த இந்து வாரிசுரிமை சட்டத்தில் விதவை மனைவிக்கு அவளின் கணவனுக்குக் கிடைக்கும்
“கூட்டுக் குடும்பச் சொத்தில்” கிடைக்கும் பங்கில் மற்ற வாரிசுகளுடன் ஒரு பங்கு மட்டும்
கிடைக்கும்படி மாற்றினார்கள். (கணவரின் “தனிச் சொத்தில்” மனைவிக்கு மற்ற வாரிசுகளுடன்
சேர்த்து ஒரு பங்கு கிடைக்கும் என்பது வேறொரு தனிச் சட்டம்).
இங்கு
அருணாசலம் செட்டியாரின் வழக்கில் தீர்ப்பு:
இந்து பெண்கள் சொத்துரிமை சட்டம் 1937 பிரிட்டீஸ் அரசால் கொண்டு வரப்பட்டது.
அது மொத்த பிரிட்டீஸ் இந்திய நிலப்பகுதிக்கும் செல்லும். இந்தச் சட்டத்தை, பிரிட்டீஸ்
பலுசிஸ்தான், சோன்தல் பர்கானாஸ் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியது. ஆனால் பர்மாவுக்கு
விரிவு படுத்தவில்லை. ஏனென்றால், இந்த சட்டத்தில் கவர்னர்-ஜெனரல் கையெழுத்து இட்ட தேதி
14 ஏப்ரல் 1937. ஆனால் பிரிட்டீஸ் இந்திய நிலப்பரப்பில் இருந்து 1 ஏப்ரல் 1937லிலேயே
அது பிரிக்கப்பட்டு விட்டது. 1940-ல் இந்தச் சட்டத்துக்கு ஒரு திருத்தல் சட்டம் கொண்டு
வரப்பட்டது. அப்போதும் அது பர்மா பகுதியை பிரிட்டீஸ் இந்தியப் பகுதி என்று சொல்லவில்லை.
எனவே இந்தியாவில் உள்ள சொத்துக்கள் மட்டும் இந்த கோர்ட் அதிகார எல்லைகுக்கு
உட்பட்டது. இதில் விவசாய நிலத்துக்கு இந்த 1937 சட்டம் பொருந்தாது.
எனவே, அருணாசலம் என்ற தகப்பனும், அவரின் இறந்த மகனும் கோபார்சனர்கள்.
எனவே இருவருக்கும் பாதி பாதி பங்கு உள்ளது. அந்த இறந்த மகனுக்கு கிடைத்த பாதி சொத்து
அவனின் மனைவியான விதவைக்கு (இங்கு வழக்குப் போட்டவள்) கிடைக்கும். இது 1937 பெண்கள்
சொத்துரிமை சட்டத்தின்படி கிடைப்பதால், விவசாய நிலத்தில் அவள் பங்கு பெற முடியாது.
மற்ற சொத்துக்களில் பங்கு பெறலாம். பர்மாவில் உள்ள சொத்தில் 1937 சட்டப்படி அவளுக்கு
கொடுக்க முடியாது. ஏனென்றால், 1937 பெண்கள் சொத்துரிமை சட்டம் பிரட்டீஸ் இந்திய எல்லைக்கு
உட்பட்ட சொத்துக்களுக்கு மட்டுமே செல்லும். அப்போது, பர்மா பிரிட்டீஸ் இந்தியப் பகுதியாக
இல்லை. வேறு நாட்டில் உள்ள சொத்துகளில் அந்த நாட்டு சட்டப்படியே கிடைக்கும்.
அருணாசலம் செட்டியாரின் கூட்டுரிமைபங்கு அவரின் விதவைகளுக்குப் போய்
சேரும். டிரஸ்ட் சொத்துக்களில் கடைசி டிரஸ்டி அவரே ஆவார். அடுத்த டிரஸ்டிகள் இல்லாத
நிலையில், (இங்கிலாந்து சட்டப்படியே இந்தியாவிலும் இருப்பதால்), அவரின் வாரிசுகளே அடைந்து
கொள்ளலாம்.
No comments:
Post a Comment