இந்து பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்து ஆண்களுக்கு மட்டுமே சொத்துரிமை உண்டு. இந்து பெண்கள், அவர்களின் இந்து ஆண்களை நம்பி வாழ வேண்டி இருந்தது. தனியே அவர்களுக்கு சொத்தில் வாரிசு உரிமையே கிடையாது என்ற நிலையே இருந்து வந்தது. இந்து பெண்கள் சீதனச் சொத்துக்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது சீதனப் பணத்தில் சொத்துக்களை வாங்கலாம். ஆனால் அவற்றை விற்கும் போது, அவள் கணவனின் சம்மதம் தேவைப் பட்டது.
இந்து ஆண்கள் கோபார்சர்கள் என்ற இந்து கூட்டுக் குடும்ப முறையில் வாழ்ந்து வந்தார்கள். ஒரு இந்து ஆணுக்கு அவரும், அவரின் மகனும், பேரனும், கொள்ளுப் பேரனும் ஆக நான்கு தலைமுறை ஆண்களே இந்து கோபார்சனர்கள் என்று இந்து சாஸ்திர சட்டம் சொல்கிறது. இவர்கள் இந்து கூட்டுக் குடும்பச் சொத்தை கூட்டாக அனுபவித்து வருவர். யாருக்கு எவ்வளவு பங்கு என்று கூற முடியாது. இந்த குடும்பத்தில் ஒரு ஆண் பிறந்தால் அவருக்கும் பங்கு வரும். ஒரு ஆண் இறந்து விட்டால், அவரின் பங்கு மற்ற ஆண்களுக்கு சேர்ந்து விடும். இவர்களுக்குள் பாகம் பிரித்துக் கொண்டால், அப்போது, உயிருடன் இருக்கும் அத்தனை ஆண்களுக்கும் (கோபார்சனர்கள் மட்டும்) தலைக்கு ஒரு பங்கு என்று பிரித்துக் கொள்வார்கள். தந்தை, மகன் என்ற வித்தியாசம் இருக்காது. தலைக்கு ஒரு பங்கு என்ற கணக்குத் தான் இருக்கும்.
இந்து பெண்களுக்கு கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கு கொடுக்க மாட்டார்கள். அந்த பெண்களின் வாழ்நாள் வரை அவர்களை பாதுகாக்க வேண்டிய இந்து கோபார்சனரி ஆண்களை கடமை. இப்படிப்பட்ட நிலையை மாற்றுவதற்காக இந்து விதவை வாரிசு உரிமை சட்டத்தை 1937 ல் இந்திய பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்தது. அதில், ஒரு இந்து கோபார்சனர் இறந்து விட்டால், அவருக்கு வரவேண்டிய பங்கை, அவரின் விதவை மனைவி எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதையும் அவள், தன் வாழ்நாள் வரை மட்டுமே அனுபவித்து வர முடியும். அதை விற்பனை செய்ய முடியாது. அவளின் வாழ்நாளுக்குப் பின்னர், அந்த பங்கானது மற்ற கோபார்சனர்களுக்கே திரும்ப போய் சேர்ந்து விடும் என்று நிலை இருந்தது.
இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956:
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்த இந்து சாஸ்திர சட்டத்தை முழுவதுமாக மாற்றி அமைத்து, புதிய சட்டத்தை கொண்டு வந்தனர். அதன் பெயர் இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956. இதன்படி, உயிருடன் இருக்கும் கோபார்சனரி இந்து ஆண்கள் பங்கு பெறுவர் என்ற நிலையை மாற்றி, புதிதாக, இறந்த கோபார்சனரி ஆணின் பங்கை அவரின் வாரிசுகள் வாரிசு முறைப்படி பெறுவர் என்று மாற்றி அமைத்தது.
இந்து ஆண்களின் தனிச் சொத்தில் வாரிசு உரிமை (பிரிவு 8):
1956 புதிய இந்து வாரிசுரிமை சட்டத்தில், பிரிவு 8-ல் இந்து ஆண்களின் தனிச் சொத்துக்களை எப்படி பங்கு பிரிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது. அதாவது, ஒரு இந்து ஆண், ஒரு சொத்தை விட்டுவிட்டு (உயில் எழுதாமல்) இறந்து விட்டால், அவரின் சொத்தானது அவரின் முதல் நிலை வாரிசுகளான அவரின் தாய், மனைவி (பல மனைவிகள் இருந்தால், அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு மனைவி என்ற கணக்கில் ஒரு பங்கு), மகன்கள், மகள்கள், இறந்த மகன் அல்லது மகளின் பிள்ளைகள், இறந்த மகனின் விதவை மனைவி, இறந்த மகன் வழிப் பேரனின் பிள்ளைகள் இவர்களுக்கு அந்த சொத்து போய் சேரும். இறந்தவரின் தாய்க்கு ஒரு பங்கு, மனைவிக்கு ஒரு பங்கு, ஒவ்வொரு மகனுக்கும் தலைக்கு ஒரு பங்கு, ஒவ்வொரு மகளுக்கும் தலைக்கு ஒரு பங்கு, இறந்த மகனின் அல்லது மகளின் பிள்ளைகளுக்கு இறந்த மகனின் அல்லது மகளின் கணக்கில் ஒரு பங்கு, இப்படி பங்கு போகும்.
ஒருவேளை, இறந்தவருக்கு மேற்சொன்ன முதல் நிலை வாரிசுகள் யாருமே இல்லாமல் போய்விட்டால், இறந்தவரின் தந்தை, அந்த முழுச் சொத்தையும் அடைந்து கொள்வார்.
ஒருவேளை தந்தையும் இல்லாமல் போய் விட்டால், இறந்தவரின் சகோதரர்கள், சகோதரிகள் (அப்போது உயிருடன் இருக்கும் சகோதரன், சகோதரி) அவரின் சொத்துக்களை தலைக்கு ஒரு பங்கு என்று எடுத்துக் கொள்வர்.
ஒருவேளை சகோதரனும், சகோதரியும் இல்லாமல் போய்விட்டால், இறந்தவரின் இறந்த சகோதரர், இறந்த சகோதரி இவர்களின் பிள்ளைகள் அந்த சொத்தை, அவர்களின் தந்தை, அல்லது தாய் கணக்கில் ஒரு பங்கு என்ற கணக்கில் எடுத்துக் கொள்வர்.
இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் வாரிசு உரிமை (பிரிவு 6):
1956 க்கு முன்பு வரை பழைய இந்து சாஸ்திர சட்டமே இருந்து வந்தது. அதில் இந்து ஆண்களுக்கு (குறிப்பாக, இந்து ஆண், அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன்) இவர்களுக்கு மட்டுமே பூர்வீகச் சொத்தில் பங்கு இருந்து வந்தது. பூர்வீகச் சொத்து என்பது, ஒரு இந்து ஆணுக்கு அவரின் தந்தை, பாட்டன், கொள்ளுப் பாட்டன் மூலம் வாரிசு முறையில் கிடைத்த சொத்துக்களை பூர்வீகச் சொத்து அல்லது கோபார்சனரி சொத்து, அல்லது மூதாதையர் சொத்து என்று சொல்வர். இப்படி ஒரு இந்து ஆணுக்கு கிடைத்த பூர்வீகச் சொத்தை, அவரும் அவரின் மகனும், பேரனும், கொள்ளுப் பேரனும், அவர்களின் பிறப்பால் உரிமை பெற்று கூட்டாக அனுபவித்து வருவர். இந்த நான்கு தலைமுறையையும் (ஒரு இந்து ஆணும், அவரின் மகனும், பேரனும், கொள்ளுப் பேரனும்) கோபார்சனர்கள் என்று சொல்வர். அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள், அந்த ஆண்களை நம்பி வாழ்வர். இந்த ஆண்களும் பெண்களும் அடங்கியதே இந்து கூட்டுக்குடும்பம். அதாவது நான்கு தலைமுறை ஆண்களை கோபார்சனர்கள் என்றும், அந்த ஆண்களும், அவர்களைச் சேர்ந்த பெண்களையும் உள்ளடக்கிய பெரிய குடும்பத்தை கூட்டுக் குடும்பம் என்பர். ஆக, ஆண்கள் மட்டும் இருந்தால் கோபார்சனரி குடும்பம் என்றும், ஆண்களும் பெண்களும் சேர்ந்து இருந்தால் கூட்டுக் குடும்பம் என்றும் இந்து சாஸ்திர சட்டம் சொல்கிறது. இந்து கூட்டுக் குடும்ப பெண்களுக்கு இந்த கூட்டுக் குடும்ப சொத்தில் அல்லது கோபார்சனரி சொத்தில் அல்லது பூர்வீகச் சொத்தில் பங்கு ஏதும் கிடையாது. அந்த பெண்களின் வாழ்நாள் வரை ஜீவனாம்ச உரிமை மட்டுமே உண்டு.
1937-ல் இந்து விதவைகளுக்கு அவர்களின் கணவரின் பூர்வீகச் சொத்தில் பங்கு:
1937 க்கு முன்பு வரை, இந்து கோபார்சனரி ஆண்களின் விதவை மனைவிகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு ஏதும் இல்லை என்ற நிலை இருந்து வந்தது. 1937-ல் அதை மாற்றி, ஒரு கோபார்சனரி ஆண் இறந்து விட்டால், அவரின் பங்கு அவரின் விதவை மனைவி அடைந்து, அவளின் வாழ்நாள் வரை அவளின் ஜீவனாம்சத்துக்காக அதை அனுபவித்து வரலாம் என்றும், அந்த சொத்தில் அவளுக்கு முழு உரிமை (கிரயம் செய்யும் உரிமை) இல்லை என்றும், அவள் வாழ்நாளுக்குப் பின்னர் அந்த பங்கு, அவள் கணவனின் மற்ற கோபார்சனர்களுக்கே திரும்ப வந்து சேர்ந்து விடும் என்று அந்த சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தது.
1956-ல் இந்து பெண்களுக்கு பூர்வீகச் சொத்தில் முழு உரிமை வழங்கியது:
1956 இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் பிரிவு 14-(1)ல் இந்து பெண்களுக்கு, இவ்வாறு ஜீவனாம்ச உரிமை மூலம் இறந்த கணவரின் பங்கு கிடைத்திருந்தால், அதை அவள் ஆயுட்கால உரிமையுடன் அனுபவித்து வந்தால், 1956-க்கு பின்னர் அவள் அந்த சொத்தை தன் முழு உரிமை உடைய சொத்தாக கருதி (விற்பனை செய்யும் அதிகாரத்துடன்) அனுபவித்துக் கொள்ளலாம் என்று இந்த 1956 சட்டத்தில் புதிய உரிமையை வழங்கியது.
1956 சட்டத்தில் இந்து பெண்களின் தனிச் சொத்துரிமை:
இந்து பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கு தனியே சொத்தில் வாரிசுரிமை கொடுக்கப்படவில்லை. அவர்கள் தனியாக சீதனச் சொத்துக்களை வைத்துக் கொள்ளலாம். தனிச் சொத்தை வாங்கி அவர்கள் முழு உரிமையுடன் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் வாழும் குடும்பத்தில், பூர்வீகச் சொத்தில் பங்கு ஏதும் இல்லை என்ற நிலையே இருந்து வந்தது. பின்னர், 1937-ல் வந்த சட்டத்தில் பூர்வீகச் சொத்தை விட்டுவிட்டு இறந்த அவள் கணவனின் பங்கை அவள் “வாழ்நாள் உரிமை” கொண்டாடலாம் என்று சட்டம் வந்தது. பின்னர் வந்த 1956 சட்டத்தில், அத்தகைய வாழ்நாள் உரிமையானது அவளுக்கு முழு உரிமை ஆகி விடும் என்று சட்டம் மாறியது.
இந்து பெண்களுக்கு மூன்று வகைகளில் சொத்துக்கள் வந்து சேரும். (1) அவளே தனியே சம்பாதித்த அவளின் தனிச் சொத்து. அல்லது அவளுக்கு சீதனமாக கிடைத்த சொத்து. இது அவளின் தனிச் சொத்தாகும். (2) அவளுக்கு அவளின் கணவர் வழியில் வாரிசுரிமையில் கிடைத்து சொத்து. அதாவது அவளின் கணவனின் தந்தை சொத்தை வைத்திருப்பார். அவளின் கணவர் இறந்து விடுவார். தன் மாமனார் இறந்தவுடன் அவரின் மகன் என்ற முறையில் அவளின் கணவனுக்கு ஒரு பங்கு உண்டு. அவள் கணவர் இல்லாததால் அந்த பங்கு அவளுக்கு கிடைக்கும். இதை அவள் கணவர் வழியில் கிடைத்த சொத்து என்பர். (3) அவளுக்கு அவளின் தந்தை வழியில் பங்கு கிடைத்திருக்கும். அதாவது, அவளின் தந்தை இறந்து விடுவார். அவரின் தனிச் சொத்தில், மகள் என்ற முறையில் அவளுக்கும் ஒரு பங்கு உண்டு. இதை அவள் தந்தை வழியில் கிடைத்த பங்கு என்று சொல்வர். அவளின் தாய் வழியிலும் இவ்வாறு பங்கு கிடைத்திருக்கும். அதையும் அவள் தந்தை வழியில் கிடைத்த பங்கு என்று சட்டம் சொல்கிறது.
ஆக ஒரு இந்து பெண்ணுக்கு மேற்சொன்ன மூன்று வழிகளில் சொத்து கிடைத்து அவள் அனுபவித்து வருவாள். அவள் இறந்து விட்டால், அவளின் சொத்துக்கள் எப்படி வாரிசு முறைப்படி சேர வேண்டும் என்று இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 பிரிவு 15-ல் சொல்லி உள்ளது.
அவளுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தால், அவள் காலத்துக்குப் பின்னர் அவளின் எந்தச் சொத்தாக இருந்தாலும் (மேற்சொன்ன மூன்று வழிகளில் கிடைத்த சொத்துக்கள் அனைத்தும்), அவளின் கணவர், மற்றும் குழந்தைகளுக்கு தலைக்கு ஒரு பங்கு என்று விகிதத்தில் போய் சேரும்.
இந்து பெண்ணுக்கு குழந்தை இல்லை என்றால்:
ஆனால், அவளுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை என்றால், அவளின் சொத்துக்கள் யாருக்கு போகும் என்பதில் சில விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, அவளின் தனிச் சொத்துகள், மற்றும் அவளின் கணவர் வழியில் கிடைத்த சொத்துக்கள், அவளின் கணவர் உயிருடன் இருந்தால் கணவருக்கும், கணவர் உயிருடன் இல்லையென்றால், கணவரின் வாரிசுகளுக்கும் சேரும். (கணவரின் வாரிசுகள் என்பது, அவள் சொத்து, கணவர் சொத்தாக ஆகி விடும். கணவரின் வாரிசுகள் என்பது, அவரின் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, அவர்களின் பிள்ளைகள் போன்றார்).
அவளுக்கு அவளின் தந்தை, தாய் வழியில் கிடைத்த சொத்துக்களாக இருந்தால், அவை அவளின் கணவருக்கோ, கணவரின் வாரிசுகளுக்கோ சென்று சேராது. மாறாக, அவளின் தந்தை இருந்தால் அவருக்கும், அவளின் தந்தை காலமாகி விட்டால், அவரின் வாரிசுகளுக்கும் போய் சேரும். அதாவது, ஒரு இந்து பெண்ணுக்கு குழந்தை இல்லாமல் இருந்தால், அவளுக்கு அவள் தந்தை தாய் மூலம் அந்த சொத்து கிடைத்திருந்தால், அவள் காலத்துக்குப் பின்னர், அந்த சொத்து அவளின் தந்தை வழி ஆட்களுக்கே திரும்ப போய் சேர்ந்து விடும். கணவர் வழி ஆட்களுக்குப் போகாது.
1956 சட்டத்தில் பூர்வீக சொத்தில் பெண்களுக்கு பங்கு:
1956 சட்டத்தில், பூர்வீகச் சொத்தை விட்டுவிட்டு ஒரு இந்து ஆண் (கோபார்சனர்) இறந்து விட்டால், அவரின் பங்கானது, மற்ற கோபார்சனர்களுக்கு போகாது. (பழைய இந்து சாஸ்திர சட்டப்படி, அந்த பங்கு மற்ற கோபார்சனர்களுக்கே போய் விடும்). மாறாக, இறந்த இந்து ஆணின், வாரிசுகளான, அவரின் மனைவி, மகன்கள், மகள்கள், அவர்களில் யாராவது இறந்து விட்டால், அவர்களின் பிள்ளைகள் இவர்களுக்கே அந்த பங்கு கிடைக்கும் என்று 1956 இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 6-ல் சொல்லப்பட்டுள்ளது.
1989 தமிழ்நாடு இந்து வாரிசுரிமை திருத்தல் சட்டம் பிரிவு 29ஏ:
தமிழ்நாடு, ஒரு திருத்தல் சட்டத்தை 1989-ல் கொண்டு வருகிறது. அதன்படி, பூர்வீகச் சொத்திலும் மகள்களுக்கும் (மகன்களைப் போலவே) சரி சம பங்கு உண்டு என்று இந்து வாரிசுரிமை சட்டம் 1956-ஐ திருத்துகிறது. இதே போன்று ஏற்கனவே மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் திருத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை ஒட்டியே தமிழ்நாட்டிலும் இதை திருத்தம் செய்யப்பட்டது. இது 1989 மார்ச் 25 தேதியில் இருந்து அமலுக்கு வந்தது.
இந்த தமிழ்நாடு திருத்தல் சட்டத்தின்படி, பூர்வீகச் சொத்தில் ஆண்களுக்கு (கோபார்சனர்களுக்கு) மட்டுமே பங்கு உண்டு என்ற நிலையை மாற்றி, மகன்களைப் போலவே மகள்களுக்கும் பூர்வீகச் சொத்தில் பங்கு உண்டு என்று கொண்டு வரப்பட்டது. அதன்படி, மகளுக்கும் சம உரிமை அல்லது பங்கு கிடைத்தது. ஆனால் ஒரு சிக்கல் ஏற்பட்டது. திருமணம் ஆகி வேறு வீட்டுக்குச் சென்ற மகள், இந்தக் குடும்பத்தில் கோபார்சனர் (உறுப்பினர்) என்று எடுத்துக் கொள்ள முடியுமா? எனவே இந்த சட்டம் வந்த தேதியான 25-3-1989 தேதிக்கு முன்னர் திருமணம் ஆகி சென்ற மகள்களுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு இல்லை என்றும், அப்போது திருமணம் ஆகாமல் இருக்கிற மகள்களுக்கு மட்டுமே பங்கு உண்டு என்றும், அந்த சட்டம் வந்த பின்னர் திருமணம் ஆகிச் சென்ற மகளுக்கும் பங்கு உண்டு என்றும் விளக்கம் சொல்லப்பட்டது.
2015 இந்து வாரிசுரிமை திருத்தல் சட்டம் (மத்திய அரசு):
தென்னிந்திய மாநிலங்களில் எல்லாம் இந்த இந்து வாரிசு சட்டத்தை திருத்தி, மகளுக்கும் பூர்வீகச் சொத்தில் பங்கு உண்டு என்று (திருமணம் ஆகாத மகளுக்கு) சொல்லி விட்டார்கள். எனவே மத்திய அரசு, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இந்த திருத்தல் சட்டத்தை கொண்டு வரலாம் என்று நினைத்து, 2015-ல் ஒரு திருத்தல் சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, ஒரு இந்து பெண், திருமணம் ஆகி இருந்தாலும், திருமணம் ஆகாமல் இருந்தாலும், (எப்படி இருந்தாலும், அவள் மகள் என்று முறையில்) அவளுக்கு பூர்வீக சொத்தில், ஒரு மகனைப் போலவே, பங்கு உண்டு என்று அந்த திருத்தல் சட்டம் சொல்கிறது.
அதிலும், ஒரு சில குழப்பம் வருகிறது. எப்போதிலிருந்து மகளுக்கு பங்கு கொடுக்கலாம் என்ற கேள்வி வருகிறது. 1956 இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 6-ல் ஒரு தந்தை இறந்து விட்டால், அப்போதே இந்த கூட்டுக் குடும்ப பங்கு சட்டப்படி பிரிந்து விடும். உண்மையில் பங்கு பிரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, கற்பனையாக யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்று பிரித்து, அதில் இறந்த தந்தைக்கு ஒரு பங்கு ஒதுக்கி, அந்த பங்கை அவரின் வாரிசுகளுக்கு வாரிசு முறைப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது.
எனவே அப்படி கற்பனை பாகப்பிரிவினை நடந்து, அதில் தந்தையின் பங்கை பிரித்துக் கொண்டால், பூர்வீகச் சொத்து ஏற்கனவே பாகம் பிரிந்து சொத்தாகவே ஆகி விடுகிறது. இதில் எப்படி மகளுக்கு ஒரு பங்கு கொடுக்க முடியும். பாகம் நடந்த முடிந்த சொத்தில், திரும்பவும் பாகம் பிரிக்க முடியுமா? முடியாது என்ற கருதி, ஏற்கனவே இவ்வாறு பாகம் பிரிந்து கொண்டது என்றால் அதில் மகளுக்கு பங்கு இல்லை. மாறாக, தந்தை, இந்த 2005 சட்டம் அமலுக்கு வந்த பின்னர், அதாவது, 20-12-2004 க்கு பின்னர் தந்தை இறந்த விட்டால், அந்த பூர்வீகச் சொத்தில், மகளுக்கும் மகனைப் போலவே பங்கு கொடுக்கலாம் என்று விளக்கம் சொல்லப்பட்டது.
குழப்பம்: ஆனாலும், இந்த 2005 திருத்தல் சட்டத்தைப் பொறுத்து, இந்தியாவில் உள்ள பல ஐகோர்ட்டுகள், பலவாறு தீர்ப்புகளைச் சொல்லி விட்டது. 1956 சட்டப்படி, 1956-க்கு பிறகு பிறந்த மகள்களுக்கு பங்கு என்றும்; 2005 சட்டம் வந்த பின்னர் பிறந்த மகளுக்கு மட்டுமே பங்கு என்றும்; தந்தை உயிருடன் இருக்கும் போது (20-12-2004-ல்) மகளுக்கு பங்கு என்றும்; பல குழப்பமான தீர்ப்புகள் வந்து விட்டன.
பொதுவாக ஒரு சிவில் சட்டம் அமலுக்கு வந்தால், அந்த சட்டம் வந்த தேதியில் இருந்து தான் அது நடைமுறைக்கு வரும். சில நேரங்களில், அது முன் தேதியிட்டு அமலுக்கு வருவதாக குறிப்பிட்டு அந்த சட்டத்தில் சொல்லி இருந்தால், அப்படி முன் தேதியில் இருந்தே அமலுக்கு வரும். கிரிமினல் சட்டங்கள் அப்படியில்லை. சட்டம் வந்த தேதியில் இருந்து தான் அமலுக்கு வரவேண்டும். ஏனென்றால், நேற்று வரை, நேற்று வரை தலைப்பாகை கட்டிக் கொள்வது குற்றம் இல்லை என்று இருந்தால், இன்று தலைப்பாகை கட்டிக் கொள்வது குற்றம் என்று சட்டம் வந்தால், அந்த புது சட்டத்தைக் கொண்டு, நேற்று தலைப்பாகை கட்டி இருந்தவரை தண்டிக்க முடியாது. ஆனால் சிவில் சட்டங்களில் அப்படி முன் தேதியிட்டு அந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வரலாம்.
அப்படிப் பார்த்தால், 2005 இந்து வாரிசுரிமை திருத்தல் சட்டம் (மத்திய அரசு), எந்த தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதாவது, எந்த தேதியில் இருந்து மகளுக்கும் பூர்வீகச் சொத்தில் பங்கு உரிமை கேட்க முடியும்?
இந்த 2005 சட்டம் வந்ததே மகளுக்கும் பூர்வீகச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் தான். எனவே அதில் சட்ட சிக்கல்களை உண்டாக்குவது நியாமில்லை. 20-12-2004 க்கு பின்னர் தந்தை இறந்த பூர்வீகச் சொத்துக்களில்தான் மகளுக்கு பங்கு உண்டு என்பது நியாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்புச் சொல்லி உள்ளது. அதன்படி தந்தை உயிருடன் இருந்தாலும், இறந்து விட்டாலும், கற்பனை பாகப்பிரிவினை நடந்து விட்டது என்றாலும், எப்படி இருந்த போதிலும், பூர்வீகச் சொத்து இருந்தால், அதில் மகளுக்கு ஒரு பங்கு உண்டு என்று தீர்ப்பு கூறியது. இது ஒரு வரலாற்றுத் தீர்ப்பு என்றும் சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தீர்ப்பு:
Vineeta Sharma v. Rakesh Sharma and ors. Civil Appeal No.32601 of 2018.
இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட், 11-08-2020-ல் வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பைக் கொடுத்தது.
“Irrespective of a coparcener father being alive or not on or before the Hindu Succession (Amendment) Act 2005, a daughter would be entitled to a share in coparcenary property in the same manner as a son simply by virtue of - (i) her birth, and (ii) her being alive as on the date of coming into force of the 2005 Amendment Act.
இந்த 2005 திருத்தல் சட்டம் 9-9-2005 முதல் அமலுக்கு வந்தது. ஆனாலும், இந்த திருத்தல் சட்டத்தில் சொல்லியுள்ள “மகளுக்கும் பூர்வீகச் சொத்தில் பங்கு” என்பது முன்நோக்கி (Retroactive) உரிமை வழங்குகிறது என்று சுப்ரீம் கோர்ட் சொல்லியுள்ளது.
அதாவது, இந்த சட்டத்தின் புதிய திருத்தல் சட்டப் பிரிவு 6-ன் படி, 20-12-2004 முன்னர் பாகம் நடந்து முடிந்த பூர்வீகச் சொத்துக்கள் தவிர, மற்ற பூர்வீகச் சொத்தில் மகளுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்பது அந்த தீர்ப்பின் முடிவு. முன்னர் நடந்த பாகப்பிரிவினை என்பது பாகப் பத்திரம் எழுதி அதை பதிவு செய்து இருக்க வேண்டும். கற்பனை பாகப்பிரிவினை நடந்தால் போதாது.
எனவே ஏற்கனவே (20-12-2014-க்கு முன்னர்) நடந்த பாகப்பிரிவினை சொத்துக்களைத் தவிர, இப்போது இருக்கும் பூர்வீகச் சொத்தில் மகளுக்கும் சம பங்கு என்று முடிவானது. 2005 சட்டம் வந்த பின்னர்தான் மகளுக்கு பங்கு என்று இல்லை. இந்த 2005 சட்டம் வந்ததால், சட்டப்படி பதிவு செய்யப்பட்டு பாகப்பிரிவினை ஆகாமல் இருக்கும் பூர்வீகச் சொத்துக்களில், மகளுக்கும் பங்கு உண்டு என்றுதான் இந்த தீர்ப்பு சொல்கிறது. எனவே பழைய பூர்வீகச் சொத்துக்கள், இதுவரை பாகம் ஆகாமல் இருந்தால், அதில் மகள் பங்கு கேட்கலாம் என்பதே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு.
**