Tuesday, November 17, 2020

பவர் ஆப் அட்டார்னி பத்திரம் (தமிழ்நாட்டில்)

 பவர் ஆப் அட்டார்னி பத்திரம்


பவர் ஆப் அட்டார்னி பத்திரம் என்னும் பவர் பத்திரங்களைப் பற்றி இந்திய பதிவுச் சட்டம் 1908 (The Indian Registration Act 1908) ல் பிரிவு 33-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.


எந்த வகைப் பவர் பத்திரங்கள் எல்லாம் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் பத்திரம் என்று இந்த பிரிவு 33-ல் சொல்லப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. 

அதன் உட்பிரிவுகள் 33(1), 33(2), 33(3) & 33(4).


ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுக்கும் போது, அதை எழுதிக் கொடுப்பவரே கையெழுத்துச் செய்ய வேண்டும். அவரே நேரில் பதிவு அதிகாரி முன்பு சென்று, அதை எழுதிக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டு அதை பதிவு செய்து கொடுக்க வேண்டும். சில வேளைகளில் இது சாத்தியப்படாமல் இருக்கும். அப்போது, அவருக்காக அவரின் ஏஜென்ட் அந்த வேலையைச் செய்யும்படி அவர் ஒரு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுப்பார். அதையே பவர் பத்திரம் என்று இந்த சட்டப் பிரிவு சொல்கிறது.


பிரிவு 33(1)(ஏ):  (இந்தியாவில் வசிப்பவர் பவர் எழுதிக் கொடுத்தால்):

இந்தியாவுக்குள் வசிப்பவர் இப்படி ஒரு பவர் பத்திரம் எழுதி அவரின் ஏஜெண்டை நியமித்தால், அந்த பவர் பத்திரத்தை, அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளரிடம் சென்று அந்த பவர் பத்திரத்தை பதிவு செய்து கொடுத்து இருக்க வேண்டும். 


பிரிவு 33(1)(பி):  (இந்த சட்டம் அமலில் இல்லாத பகுதியான இந்தியாவுக்குள் வசிப்பவர் பவர் எழுதிக் கொடுத்தால்):

இந்த பதிவுச் சட்டம் அமலில் இல்லாத பகுதியான இந்தியாவுக்குள் வசிப்பவர், பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தால், அதை அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு கோர்ட் மாஜிஸ்டிரேட் முன்பு எழுதி கையெழுத்து செய்து, அதை அந்த மாஜிஸ்டிரேட் ஒப்புதல் அளித்து இருக்க வேண்டும். 


பிரிவு 33(1)(சி): (இந்தியாவுக்கு வெளியே வசித்து வருபவர் பவர் எழுதிக் கொடுத்தால்):

பவர் எழுதிக் கொடுப்பவர் இந்தியாவுக்கு வெளியே அதாவது வெளிநாடுகளில் வசித்து வந்தால், அவர் பவர் எழுதிக் கொடுப்பதாக இருந்தால், அவர் அந்த பவர் பத்திரத்தை அங்கேயே அவர் வசிக்கும் பகுதியில் எழுதி, அதை, அந்த நாட்டில் உள்ள நோட்டரி வக்கீல் அல்லது கோர்ட் நீதிபதி, அல்லது இந்திய தூதரக அதிகாரியான கான்சல் (Consul), அல்லது துணை தூதரக அதிகாரியான வைஸ்-கான்சல் (Vice-Consul) அதிகாரியிடம் ஒப்புதல் கையெழுத்தை பெற வேண்டும். அதை இந்தியாவுக்கு அனுப்பினால், அவர் நியமித்த பவர் பத்திரத்தை இந்தியாவில் உள்ள பவர் ஏஜென்ட் அதற்குரிய முத்திரை தீர்வை செலுத்தி பதிவு செய்து கொள்வார். அதை உபயோகித்துக் கொள்ளலாம்.


இப்படி வெளிநாட்டில் எழுதிக் கொள்ளும் பவர் பத்திரங்களை இரண்டு வகையாக சொல்லாம். ஒன்று - காமன்வெல்த் நாடுகளில் எழுதிக் கொள்ளும் பவர் பத்திரம். மற்றொன்று - காமன்வெல்த் நாடுகள் அல்லாத மன்னர் ஆட்சி அல்லது கம்யூனிஸ்ட் ஆட்சி போன்ற ஆட்சிகள் நடக்கும் நாடுகள். காமன்வெல்த் என்பது பழைய பிரிட்டிஷ் அரசாட்சி செய்த நாடுகளை இவ்வாறு சொல்லலாம். அங்கு, இந்தியாவில் இருப்பதை போன்றே வக்கீல்கள் கோர்ட் முறை இருக்கும். எனவே அந்த நாடுகளில் பவர் பத்திரம் எழுதினால், அதை அங்குள்ள நோட்டரி வக்கீல் முன்னர் அத்தாட்சி செய்து கொண்டால் போதுமானது. அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள். இங்கு காமன் லா என்னும் சட்ட முறை உள்ளது.


ஆனால், காமன்வெல்த் நாடுகள் அல்லாத மன்னர் ஆட்சி போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர் இந்த பவர் பத்திரத்தை எழுதினால், அதை அவர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் தான் சென்று அத்தாட்சி செய்து கொள்ள வேண்டும். அதற்கு சிறிய அலைச்சலும் இருக்கும். ஏனென்றால், அவர் வசிக்கும் பகுதியில் இந்திய தூதரகம் இல்லாமலும் இருக்கும். எனவே அவர் அங்குள்ள பெரிய நகரத்துக்கு சென்று அங்கு இருக்கும் இந்திய தூதரகத்தில் அதைச் செய்ய வேண்டி வரும். துபாய், யூ.ஏ.ஈ. (எமிரேட்), ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஜோர்டான், போன்ற நாடுகளில் காமன் லா சட்ட முறை இல்லை. 


விதிவிலக்கு:

இந்தியாவுக்குள் வசிப்பவர் ஒரு பவர் பத்திரத்தை எழுத நினைத்தால், அதை அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளரிடம் நேரில் சென்று எழுதி பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று பிரிவு 33(1)(ஏ) & 33(1)(பி) ல் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், அதற்கு விதிவிலக்கு உண்டு. உடல்நிலை சரியில்லாதவர், சிறையில் இருப்பவர், மற்றும் அரசு அதிகாரிகள் இவர்கள் ஒரு பவர் பத்திரத்தை எழுதினால், அதை அவர்கள் நேரில் பதிவாளரிடம் சென்று பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதாவது அந்த பவர் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பதிவு செய்யாமலேயே அவர்களின் பவர் பத்திரம் செல்லும். 


பிரிவு 33(2): மேற்சொன்னபடி எழுதிய பவர் பத்திரங்கள், (பிரிவு 33(1)(ஏ) & 33(1)(பி)-ல் சொல்லியுள்ளபடி, அவர்கள் தான் எழுதிக் கொடுத்து, பதிவாளர் முன்பு சென்று பதிவு செய்து கொடுத்துள்ளார்கள் என்று அதை பார்க்கும் வேறு பதிவாளர் கருதினால், அந்த பவர் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவரை நேரில் அழைக்காமல், அந்த பவர் பத்திரமே போதும் என்று ஏற்றுக் கொள்ள அடுத்த நடவடிக்கையை பதிவாளர் செய்ய வேண்டும். 


பிரிவு 33(3): பிரிவு 33 (1)(சி) ன்படி எழுதிக் கொடுத்த பவர் பத்திரங்கள், (அதாவது, உடல்நிலை சரியில்லாதவர், சிறையில் இருப்பவர், அரசு அதிகாரிகள் இவர்கள் எழுதிக் கொடுத்த பவர் பத்திரங்கள்) அவர்கள் தான் எழுதிக் கொடுத்துள்ளார்கள் என்று பதிவாளர் கருதினால், (நம்பினால்) அதை ஏற்றுக் கொண்ட அடுத்த நடவடிக்கையை தொடரலாம். சந்தேகமாக இருப்பதாக கருதினால், அந்த பதிவாளரே நேரி்ல், உடல்நிலை சரியில்லாதவரின் வீட்டுக்கோ, அல்லது சிறையில் இருப்பவராக இருந்தால் சிறைக்கோ, அல்லது அரசு அதிகாரியை நேரில் சந்தித்தோ, அது அவர் எழுதிக் கொடுத்தது தான் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பதிவாளரால் நேரில் செல்ல முடியவில்லை என்றால், அதற்கு ஒரு கமிஷன் அதிகாரியை நியமித்து அவரைக் கொண்டு சரி பார்த்துக் கொள்ளலாம்.  


பிரிவு 33(4): இவ்வாறு ஒரு பவர் பத்திரம் மேலே சொல்லியுள்ளபடி எழுதி பதிவாகி (அதாவது அத்தாட்சி செய்யப்பட்டு) இருந்தால், அதன் அசல் பத்திரத்தை ஒரு பதிவாளரிடம் கொடுக்கும்போது, அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு வேறு சாட்சியம் வேண்டும் என்று கேட்க கூடாது என்று இந்த உட்பிரிவு சொல்கிறது.

**

தமிழ்நாட்டில் திருத்தல் சட்டம்;

தமிழ்நாட்டில் இந்த பவர் பத்திரங்களை வியாபார நோக்கங்களுக்கு வாங்குவதால், அதிகமான தில்லு முல்லுகள் ஏற்பட்டன. எனவே அதை சரி செய்யும் பொருட்டு, 2012-ல் மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி, சொத்துக்களை விற்கும் அதிகாரம் கொண்ட பவர் பத்திரங்களை பதிவு அலுவலகத்தில் உள்ள புத்தகம் 1-ல் பதிவு செய்ய வேண்டும் என்றும், அந்த பவர் பத்திரத்தின் பதிவு விவரம் அந்த சொத்தின் வில்லங்கத்தின் அட்டவணையில் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. குடும்ப உறுப்பினரை ஏஜென்டாக நியமித்தால் அதற்கு ரூ.1000 பதிவுக் கட்டணம் என்றும், வெளி நபராக இருந்தால் அதற்கு ரூ.10,000 பதிவுக் கட்டணம் என்றும் திருத்தம் செய்துள்ளது. மேலும், 2012 முதல் எழுதிப் பெறப்படும் சொத்தின் விற்பனை செய்யும் அதிகாரம் கொண்ட பவர் பத்திரங்களை, அதை பதிவு செய்த ஒரு மாதத்துக்குள் அந்த வேலையை செய்ய வேண்டும் என்றும், ஒரு மாதத்துக்கு மேல் கடந்து விட்டால், அந்த பவர் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக ஒரு அரசு மருத்துவரிடம் LIfe Certificate என்னும் சான்றிதழ் பெற்று அந்த பவர் பத்திரத்தை உபயோகப்படுத்தலாம் என்று விளக்கம் சொல்லி உள்ளது.  


சொத்தின் விற்பனை சம்பந்தப்பட்ட பவர் பத்திரங்களை வேறு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் போது, சில நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. அது புத்தகம்-1ல் பதிவு செய்ய வேண்டிய பவர் ஆகி இருப்பதால், அந்த சொத்து இருக்கும் பதிவு அலுவலகத்துக்கு தகவல் அனுப்பி, அனுமதி பெற்றே பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே கிரயப் பத்திரத்தை நேரில் சென்று எழுதிக் கொடுப்பதே நல்லது என்றும், இப்படி வேறு பதிவு அலுவலகத்தில் இந்த பவர் பத்திரம் பதிவு செய்வது என்பது ஒரு பெரிய வேலையாக இருக்கிறது. இதை சுலபமாக செய்ய அரசு முன்வர வேண்டும்.

**


No comments:

Post a Comment