இறந்தவர் மீது வாங்கிய கோர்ட் டிகிரி செல்லாது
வின்சென்ட் என்பவர், தாஸ் என்பவரிடம் புரோ நோட்டில் கடன் வாங்கி உள்ளார். பணத்தை திருப்பிக் கொடுக்காததால், தாஸ் என்பவர் வின்சென்ட் மீது ஏப்ரல் 1989-ல் சிவில் வழக்குப் போடுகிறார். இதில் கோர்ட் அனுப்பிய சம்மன் காப்பியை வின்சென்ட் மே மாதம் 1989-ல் பெற்றுக் கொள்கிறார். ஆனால் அவர் கோர்ட்டுக்கு வந்து ஆஜராகவில்லை. எனவே செப்டம்பர் 1989-ல் கோர்ட் எக்ஸ் பார்ட்டியாக டிகிரி கொடுத்து விடுகிறது. ஆனால், கடன் வாங்கிய வின்சென்ட் இதற்கிடையில் ஆகஸ்டு மாதம் 1989ல் இறந்து விடுகிறார். அதாவது அவர் ஆகஸ்டு மாதம் இறக்கிறார். கோர்ட் அதற்கு அடுத்த மாதமான செப்டம்பரில் அவர் மீது எக்ஸ் பார்ட்டியாக டிகிரி கொடுக்கிறது.
இப்படி கொடுத்த டிகிரி செல்லுமா அல்லது செல்லாதா என்பது கேள்வி. இதை சென்னை ஐகோர்ட் Elisa and others v. A.Doss, AIR 1992 Mad 159 என்ற வழக்கில் நீதிபதி சீனிவாசன் தீர்ப்பாக கொடுத்துள்ளார்.
பொதுவாக இறந்து போனவரின் பெயரில் கொடுக்கும் டிகிரி செல்லாத டிகிரி ஆகிவிடும் என்பது பொது விதி.
ஒரு சில வழக்குகளில், வழக்கை கோர்ட்டில் போடுவதற்கு முன்பே பிரதிவாதி இறந்து இருப்பார். ஆனால் வாதிக்கு அந்த விபரம் தெரியாமல், வழக்கை இறந்தவரின் பேரிலேயே போட்டு விடுவார்.
சில வழக்குகளில், வழக்கைப் போட்ட பின்னர், பிரதிவாதி இறந்து விடுவார். அந்த் விபரம் வாதிக்கு தெரிந்தவுடன், இறந்தவரின் வாரிசுகளை வழக்கில் பார்ட்டியாக சேர்த்து விடும்படி மனு கொடுப்பார். அப்படி இறந்தவரின் வாரிசுகளை வழக்கில் சேர்ப்பதற்கு 90 நாட்களுக்குள் (3 மாதங்களுக்குள்) சேர்த்து விட வேண்டும். இல்லையென்றால் அந்த வழக்கு Abate என்னும் ஆள் இல்லாத வழக்காக ஆகிவிடும். ஒருவேளை வாதிக்கு காலதாமதமாக இறந்த தகவல் தெரிந்தால், அந்த காலதாமதத்தை மன்னித்து மனுவை ஏற்றுக் கொள்ளும்படி Sec.5 Limitation Act 1963-ன் படி கேட்க உரிமையுண்டு.
ஆனால் இந்த வழக்கில், கோர்ட் சம்மன் வாங்கியபின்னர் பிரதிவாதி இறந்து விட்டார். ஆனாலும் கோர்ட் அவர்மீது எக்ஸ் பார்ட்டியாக டிகிரி கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த டிகிரி செல்லுமா செல்லாதா என்பதே கேள்வி.
வழக்கில் உள்ள பார்ட்டி இறந்து விட்டால், அவரின் வாரிசுகளை பார்ட்டியாக சேர்ப்பதைப் பற்றி சி.பி.சி (சிவில் நடைமுறைச் சட்டம்) 1905-ல் ஆர்டர் 22-ல் கீழ்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.
ஆர்டர் 22 ரூல் 1: ஒரு வழக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிவாதிகள் இருந்தால், அதில் ஒருவர் இறந்து விட்டால், இறந்தவரின் உரிமை மற்ற பிரதிவாதிகளுக்கு தொடரும் நிலையில் இருந்தால், அல்லது ஒரே பிரதிவாதி இருந்து அவர் இறந்து விட்டால், அவ்வாறு இறந்தவரின் வாரிசுகளை அதே வழக்கில் பார்ட்டியாக சேர்த்துக் கொண்டு வழக்கை தொடர்ந்து நடத்தலாம்.
ஆர்டர் 22 ரூல் 2: அவ்வாறு சேர்க்கப்பட்ட வாரிசுகள் இறந்தவரின் உரிமையைப் பொறுத்து வழக்கை நடத்த உரிமை உண்டு.
ஆர்டர் 22 ரூல் 3: அவ்வாறு வாரிசுகளை சேர்க்காமல் விட்டுவிட்டால், 90 நாட்களுக்குப் பிறகு இறந்தவரின் மீது போடப்பட்ட வழக்கு Abate என்னும் ஆள் இல்லாத வழக்காகி காலாவதி ஆகி விடும். அதாவது இறந்தவரின் மீது வழக்கு தள்ளுபடி ஆகி விடும்.
ஆர்டர் 22 ரூல் 4: கோர்ட் சம்மனை வாங்கிய பின்னர் ஒருவர் இறந்து விட்டால், அல்லது கோர்ட் சம்மன் வாங்கிய பின்னர் கோர்ட்டில் ஆஜராகி பதில் மனுக் கொடுத்த பின்னர், வழக்கு நடத்த வராமல் இறந்து விட்டால், அப்போது, அவரின் வாரிசுகளை பார்ட்டியாக சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், கோர்ட், "வாதி, அப்படி இறந்தவரின் வாரிசை வழக்கில் பார்ட்டியாக சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை" என்று சொல்லி ஒரு உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் இறந்தவரின் மீது டிகிரி கொடுக்க வேண்டும்.
ஆர்டர் 22 ரூல் 5: ஒருவேளை பிரதிவாதி இறந்த விபரம், வாதிக்கு தெரியாமல் போயிருந்தால், அதையே காரணமாகச் சொல்லி, ஒரு மனுப் போட்டு (Abate) அபேட் உத்தரவை ரத்து செய்து விட்டு, இறந்தவரின் வாரிசுகளை வழக்கில் பார்ட்டியாக சேர்த்துக் கொள்ளும்படி மனுச் செய்யலாம். காலம் கடந்து விட்டாலும், அதையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி துணை மனுவும் போடலாம்.
இவ்வாறு சி.பி.சி. என்னும் சிவில் நடைமுறைச் சட்டத்தில் ஆர்டர் 22-ல் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வழக்கில், ஆர்டர் 22 ரூல் 4-ல் சொல்லியுள்ளபடி, பிரதிவாதி, கோர்ட் சம்மனை வாங்கி கொண்ட பின்னர், கோர்ட்டுக்கு வரவில்லை என்பதால், வாதி, இறந்த பிரதிவாதியின் வாரிசுகளைச் சேர்க்க வேண்டிய அவசியம் இந்த வழக்கில் ஏற்படவில்லை என்று ஒரு உத்தரவை கீழ்கோர்ட் நீதிபதி பிறப்பித்து இருக்க வேண்டும்.
இந்த வழக்கில் அவ்வாறு ஒரு உத்தரவை கீழ் கோர்ட் நீதிபதி பிறப்பிக்காமலேயே, எக்ஸ்பார்ட்டியாக டிகிரி கொடுத்து விட்டார். எனவே கீழ்கோர்ட் நீதிபதியின் எக்ஸ்பார்ட் டிகிரி செல்லாது.
எனவே, இறந்தவரின் பெயரில் வாதி பெற்ற டிகிரியைக் கொண்டு, அவரின் வாரிசுகள் மீது பணத்தை வசூல் செய்ய முடியாது. ஏனென்றால், இது இறந்தவரின் மீது வாங்கப்பட்ட டிகிரி. இறந்தவரின் மீது வாங்கிய டிகிரி செல்லாது என்பது பொது விதி.
**
No comments:
Post a Comment