Sunday, July 5, 2020

இது கலிகாலம்

இது கலிகாலம்

கலியுகம் பிறந்ததிலிருந்தே இந்த உலகம் தில்லு-முல்லுடன் தான் பிறந்து வந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

எடை அளவான lb என்றால் புவுண்ட் (Pound). அந்த lb யை லத்தீன் மொழியில் libra என்பர். லிப்ரா என்றால் தராசு. ரோமானிய கலாச்சாரத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் பவுண்ட் என்றே எடை அளவையே பழக்கத்தில் வைத்திருந்தனர். கணக்கி்ல் 2.2 பவுண்ட் என்பது சுமார் ஒரு கிலோ எடை கொண்டது.

1882-ம் வருடத்தில், திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பாம்பே ரயில் நிலையத்திற்கு ஒரு பார்சல் அனுப்புவதற்காக திருச்சிராப்பள்ளி ரயில் நிலைய ரயில்வே புக்கிங் கிளாக்கை அணுகுகிறார். இவர் 128 பவுண்ட் (128 lbs) எடையுள்ள வெள்ளிக் கட்டிகளை பார்சல் அனுப்ப வருகிறார்.  அப்போது அதன் மதிப்பு ரூ.4,300/-.  அதாவது 128 பவுண்ட் அல்லது 58 கிலோ எடை கொண்ட வெள்ளியின் அப்போதைய விலை ரூ. 4,300/- என்றால், ஒரு கிலோ வெள்ளி ரூ.74 இருக்க வேண்டும். இது ஒரு சுமார் மதிப்புத்தான். ஏனென்றால், இந்த வெள்ளி கட்டி பார்சலை அனுப்பும் போது அதன் உண்மையான விலையைச் சொல்லியிருக்க மாட்டார்கள்.

திருச்சிராப்பள்ளி ரயில்வே புக்கிங் கிளார்க் இந்த பார்சலை வாங்கிக் கொண்டு, 128 பவுண்ட் எடை எனச் சரிபார்த்து, அதை ஏற்றுக் கொண்டார்.

பார்சல் பாம்பே ரயில்வே நிலையத்தை வந்து அடைகிறது. அதை வாங்கிக் கொள்ள ஒருவர் வருகிறார். அங்குள்ள ரயில்வே கிளார்க் அந்த பார்சலை எடை போட்டுப் பார்க்கிறார். எடை 78 பவுண்ட் தான் உள்ளது. 78 பவுண்ட் என்றால் கிலோக் கணக்கில் சுமார் 35 கிலோ. உடனடியாக பாம்பே ரயில்வே கிளார்க், திருச்சிராப்பள்ளி ரயில்வே கிளார்க்குக்கு ஒரு தந்தி அடித்து விபரம் தெரிவிக்கிறார். ஆனால் அவரோ அந்தப் பார்சல் 128 பவுண்ட் தான் என்று சொல்லி விட்டார்.

இந்த பார்சலை திருச்சிராப்பள்ளியில் அனுப்பும்போது, அது வெள்ளிக் கட்டிகள் கொண்டது என்றோ, அதன் மதிப்பு எவ்வளவு என்றோ கூறி இருந்தால், அதிக மதிப்புடைய பொருள்களுக்கு அதிக சரக்குக் கட்டணம் வசூலித்து அதை அதே அக்கறையுடன் கொண்டு வந்து சேர்த்திருப்பார்கள். ஆனால் இதை சாதாரண புக்கிங்கில் பதிவு செய்ததால், குறைவான சரக்குக் கட்டணத்துடன் வந்து சேர்ந்து விட்டது.

எனவே பம்பாய் ரயில்வே கிளார்க், அதற்குறிய அதிக கட்டணத்தைக் கேட்கிறார். வந்தவர் அப்போது பணம் கொண்டு வராததால், வீட்டுக்குப் போய் கொடுத்து விடுகிறேன் என்கிறார். அந்த பார்சலுடன், ரயில்வே ஊழியர் ஒருவரும் அவரின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு அவர் பார்சலை பிரித்துப் பார்க்கிறார்.

அந்த பார்சலில் 128 பவுண்ட் எடையில் ஏழு வெள்ளிக் கட்டிகள் இருக்க வேண்டும்.  (ஒவ்வொரு கட்டியும் எட்டுக் கிலோ). ஆனால் உள்ளே இருந்ததோ இரண்டு வெள்ளிக் கட்டிகள் மட்டுமே, மீதி உள்ள இடத்தில் கற்களை வைத்துள்ளார்கள். இதை ரயில்வே ஊழியரும் பார்த்து இருக்கிறார்.  

எனவே அப்போது இருந்த South Indian Railway Company (தென்னிந்திய ரயில்வே கம்பெனி) மீது வழக்குப் போடுகிறார். பார்சலில் காணாமல் போன பொருளுக்கு நஷ்ட ஈடு கேட்கிறார். இந்த ரயில்வே கம்பெனியின் பொறுப்பின்மையால் தான் இந்த இழப்பு ஏற்பட்டதாகச் சொல்கிறார்.

ரயில்வே கம்பெனியோ, இந்த பார்சல் வெள்ளிக் கட்டிகள் கொண்டது என்றோ, அதன் உண்மையான மதிப்பு எவ்வளவு என்றோ, இந்த பார்சலை அனுப்பியவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி இருந்தால் அதற்கு அதிக கட்டணம் வாங்கி இருப்போம். சரக்கையும் பத்திரமாகப் பார்த்துச் சேர்த்திருப்போம். இங்கு, சாதாரணக் கட்டணம் மட்டுமே செலுத்தப்பட்டதால், அதற்குறிய சாதாரண நஷ்ட ஈடுதான் கொடுக்க முடியும். வெள்ளியின் விலை கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டது.

ரயில்வேயில் பார்சல் அனுப்பும்போது, சாதாரண பார்சல் என்றால், அதற்கு விலை சொல்லத் தேவையில்லை. எடைக்கு கட்டணம் கட்டினால் போதும், ஆனால், வழியில் அந்தப் பொருள் திருடு போய் விட்டால், அதற்காக ஒரு சாதாரண தொகை மட்டுமே பொறுப்பு என்று அந்த பில்லில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டும் நஷ்ட ஈடாகக் கொடுக்கும்.

அப்போதைய ரயில்வே சட்டமான Act XVIII of 1854-ல் மேலே சொன்னபடிதான் சட்டமும் உள்ளது.

கோர்ட்டில் வாதம் என்னவென்றால்: இந்த பொருள் களவு போய் விட்டது என்பதல்ல. ரயில்வே ஊழியர்களே திட்டமிட்டு திருடி எடுத்துக் கொண்டார்கள் என்றும், அதன் ஊழியர்கள் செய்த குற்றத்துக்கு ரயில்வே கம்பெனி தான் பொறுப்பு என்றும், அதனால் நஷ்ட ஈட்டை ரயில்வே கம்பெனி “முதலாளி” என்ற வகையில் கொடுக்க வேண்டும். ஆனால் ரயில்வே கம்பெனியோ, அதை மறுத்து, இங்கு ரயில்வே சரக்கு கொண்டு போய் சேர்ப்பதால், Carrier சரக்கு ஊர்தி என்றே கணக்கில் கொள்ள வேண்டும் என்று வாதம் செய்கிறது.

இங்கிலாந்தில் கேரியர் சட்டம் 1854 என்பது தான், இந்தியாவில் இந்தியன் கேரியர் சட்டம் III of 1865 என்று உள்ளது. ஆனால் அவற்றில் உள்ள சில பிரிவுகள் மட்டும் இங்கு மாற்றத்துடன் உள்ளது.

மற்ற கேரியர்கள் (லாரி, கப்பல், விமானம்) வேறு விதமான சரக்கு அனுப்பும் முறைகள். ஆனால் ரயில்வே சரக்கு கேரியர்கள் வேறு முறையில் அனுப்புவர். இங்கு ஒரு சரக்கு பல இடங்களில் மாறி மாறிச் செல்லும்.

The Indian Carriers Act 1865 presumes the general liability of common carriers of the safe conveyance and due delivery of goods delivered to them to be carried for hire. இதன்படி இந்த கேரியர்கள் கொண்டு செல்லும் பொருள் சேதம் ஆகி விட்டால், ஒரு குறைந்த அளவுக்குத் தான் அதன் நஷ்டத்தைக் கொடுக்க முடியும் என்று இந்த சட்டம் வரைமுறை வைத்துள்ளது. அது கேரியர்களுக்கு ஒரு பாதுகாப்பு ஆகும்.

ஆனால் ரயில்வே கேரியர், “ரயில்வே சட்டம் 1854” ன்படி ஒரு சாதாரண சரக்கு என்று புக்கிங் செய்யப்பட்டால் அதற்கு சாதாரண நஷ்ட ஈடுதான் கொடுக்க முடியும், அதே நேரம், அந்த சரக்கின் விலை விபரம் குறிப்பிட்டு, அதற்கும் சேர்த்து அதிக கட்டணம் செலுத்தி இருந்தால், அந்த பொருள் சேதம் அடைந்து விட்டால், அதன் விலையை நஷ்ட ஈடாக கொடுக்க முடியும் என்று சொல்லி உள்ளது.

இந்த வழக்கில் அந்த வெள்ளிக் கட்டிகளின் விலைக்கு சரக்குக் கட்டணம் செலுத்தவில்லை. எனவே ரயில்வே நிர்வாகம் வெள்ளி விலையை நஷ்ட ஈடாக கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டது.

இந்த வழக்கில் அவ்வாறு நடந்துள்ளதால், வெள்ளி விலையை நஷ்ட ஈடாக ரயில்வே கொடுக்கத் தேவையில்லை என்று சென்னை ஐகோர்ட் 1882-ல் தீர்ப்புக் கூறி விட்டது.

Muthayalu Venkatachala Chetti v. South Indian Railway Company (1882 ILR 5 Mad 208)

 ஏழு வெள்ளிக் கட்டிகளில் இரண்டு தான் பம்பாய் போய்ச் சேர்ந்திருக்கிறது. உண்மையில் ஏழு கட்டிகள்தான் அனுப்பினார்களா? அல்லது இரண்டு கட்டிகள்தான் அனுப்பினார்களா? அல்லது ரயில்வே ஊழியர் யாராவது திறமையாகத் திருடி விட்டார்களா? அல்லது அப்போதே இப்படிப்பட்ட திருட்டு கும்பல் ஊடுறுவி உள்ளதா? என்ற பல கேள்விகள் எழுகிறது.

ஐகோர்ட், நஷ்டத்துக்கு யார் பொறுப்பு என்ற அளவில் தீர்ப்புக் கொடுத்து விட்டது. ஆனால், இதில் எது உண்மை என்று கடைசிவரை தெரியாமலேயே போய் விட்டது. கலிகாலம் என்பது சரிதானே!

**


No comments:

Post a Comment