Friday, July 17, 2020

நம்பிக்கைத் துரோகம்

நம்பிக்கை துரோகம் என்ற வழக்கு

Criminal Breach of Trust under Sec.409 of IPC

ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டாலை என்று ஒரு நீதிபதி சென்னை ஐகோர்ட்டில் 1930களில் பதவியில் இருந்தார். இவர் சென்னை தண்டையார் பேட்டையில் வசித்தார். இவர் பெயரில் இப்போதும் சென்னை தண்டையார் பேட்டையில் “ஜஸ்டிஸ் பண்டாலை தெரு” என்று ஒரு தெரு பெயரிடப் பட்டுள்ளது. இன்றும் இருக்கிறது.

இவர் 1930-ல் ஒரு கிரிமினல் வழக்கில் தீர்ப்புக் கூறி உள்ளார். அதைப் பற்றி:

தென்னார்காடு மாவட்டம், சிறுகடம்பூர் என்ற ஊரில் முனுசாமி நைனார் என்ற ஒரு முன்சீப் (அந்தக் காலத்தில் குறிப்பிடும் Headman) என்பவர் இருந்தார். அங்குள்ள சிறு விவசாயிகளுக்கு பயிர் விளைவிக்க பொருள்கள் வாங்குவதற்காக கடன் கொடுக்கும் வழக்கம் இருந்தது. (முகலாய மன்னர்கள் காலத்திலிருந்து இருக்கிறது). அப்படிக் கடன் கொடுப்பதை தக்கவி கடன் (Takkavi Loan) என்று பெயர் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு கடனை ஒரு விவசாயி அரசாங்கத்திடம் வாங்கி இருந்தார். அவரின் பாக்கி ரூ.17/- இருந்திருக்கிறது. அந்த கடனை அவர் 10-4-1925-ல் கொண்டு வந்து, இந்த முன்சீப் முனுசாமி நைனாரிடம் கொடுத்திருக்கிறார். இந்த முன்சீப் தான் அப்படிப்பட்ட கடனை வசூல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.  ஆனால் அவர் அதை காலதாமதமாக 20-7-1925-ல் அரசு கஜானாவில் செலுத்தி இருக்கிறார். அவர் செலுத்தும் போது, கடன் தொகை ரூ.17 உடன் சேர்த்து வட்டி ரூ.1 சேர்த்து மொத்தம் ரூ.18 செலுத்தி உள்ளார்.

அந்த விவசாயி, தான் ஏற்கனவே கடனை அந்த மூன்சீப் வசம் கொடுத்து விட்டதாகவும், அதை அவர் இரண்டு மாதங்கள் கையாடல் செய்து அவர் உபயோகித்துக் கொண்டு காலதாமதமாக அரசுக்கு செலுத்தி உள்ளார். எனவே அவர் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 409ன்படி குற்றம் செய்திருக்கிறார். பிரிவு 409ன்படி ஒரு அரசு ஊழியர், அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளார் என்று வழக்கு வருகிறது.

இதை விசாரித்த திருக்கோயிலூர் மாஜிஸ்டிரேட், இது குற்றம்தான் என்று தீர்ப்புக் கூறி, அதற்குறிய தண்டனையாக அன்று மட்டும் கோர்ட்டிலேயே அமர்ந்து இருக்கும் ஒரு நாள் தண்டனையும், அபராதமாக ரூ.60ம், அதைக் கட்டத் தவறினால் 15 நாட்கள் சிறை தண்டனையும் கொடுத்தார். அதை எதிர்த்து அவர் செசன்ஸ் கோர்ட்டுக்கு அப்பீல் சென்றார். அங்கும் இதே தண்டனை உறுதி செய்யப்பட்டது.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டுக்கு அப்பீல் வந்தார். இங்கு நீதிபதி கிருஷ்ணன் பண்டாலை அவர்கள் தனது தீர்ப்பில் கீழ்கண்டவாறு கூறி உள்ளார்.

புகார்தாரரான அந்த கடன் பணத்தை கட்டிய சாட்சி, “ஏற்கனவே இந்த முன்சீப் இப்படி ஒரு தப்பைச் செய்து கிரிமினல் கோர்ட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அந்த வழக்கில் விடுதலை ஆகி விட்டார். அந்த வழக்கில் தண்டனை கொடுத்திருந்தால், இந்த பதவியில் அவர் இருந்திருக்க மாட்டார் என்றும்; இந்த தவறு மீண்டும் நடந்திருக்காது” என்றும் கூறி உள்ளதைப் பார்க்கும்போது, அந்த சாட்சி (புகார்தாரர்) இந்த முன்சிப் மீது எவ்வளவு குரோதம் வைத்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

அந்த புகார்தாரரான சாட்சி, “தான் கடன் பாக்கியை மட்டும் தான் கொடுத்தேன். முன்சீப் தான் மேலும் ரூ.1 வட்டி சேர்த்து கட்டி உள்ளார். அவர் பணத்தைப் போட்டு வட்டி கட்டி உள்ளார். அவர் பணத்தை கையாடி விட்டதால்தான் வட்டியும் சேர்த்து அவரே கட்டி உள்ளார்” என்று சாட்சியம் கூறி உள்ளார்.

ஆனால், அரசு வக்கீலிடம் கேட்கும்போது, “இந்த கடன் பணத்தை வசூல் செய்த எவ்வளவு காலத்துக்குள் அரசு கஜானாவில் கட்டி விட வேண்டும் என்ற விதி ஏதும் உள்ளதா என்ற கேள்விக்கு, அரசு வக்கீல் அப்படி ஒன்றும் காலக்கெடு இல்லை” என்று கூறியுள்ளார்.

எனவே காலம் தாழ்த்திக் கட்டியது உண்மைதான் என்றாலும், அது கையாடல் செய்ததாக ஆகுமா என்ற கேள்வி வரும்போது, அவர் அதை தன் சொந்த செலவுகள் எதற்காகவாவது உபயோகித்துக் கொண்டாரா என்ற கேள்விக்கு பதில் இல்லை. அதற்கு சாட்சியமும் இல்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

எனவே If authority were necessary for the proposition, that mere dealy in payment of money entrusted to a person, when there is no particular obligation to pay it at a certain date, does not amount to and does not furnish by itself a sufficient proof of misappropriation. என்று ஏற்கனவே கல்கத்தா ஐகோர்ட் ஒரு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. (Gunanada Dhone v. Lala Santi Prakash Nandy, AIR 1925 Cal 613).

எனவே இந்த வழக்கில், அவர் தவறு செய்யவில்லை என்றும், அரசு பணத்தை கையாடல் செய்து நம்பிக்கைத் துரோகமாக நடந்து கொண்டார் என்று சொல்ல முடியாது என்றும், எனவே அவருக்கு கொடுத்த ஒருநாள் தண்டனையை ரத்து செய்தும், அவர் செலுத்திய அபராதப் பணம் ரூ.60ம் அவரிடமே திருப்பிக் கொடுத்து விடும்படியும் தீர்ப்புக் கூறி இருந்தார்.

ஒரு வழக்கில் ஒருவரை சிக்க வைக்கும் கெட்ட எண்ணமானது 100 ஆண்டுகளுக்கு முன்னும் இதே மனநிலைதான் மக்களிடம் இருந்திருக்கிறது. வஞ்சகம் என்பது ஒரு கொடிய விஷம். எதிரியை உருவாக்கிக் கொண்டு, அவனை வஞ்சகத்தால் வீழ்த்துவது என்பது ஒரு வகை மன நோய்தான். தவறுகளைத் தட்டிக் கேட்கத்தான் வேண்டும். அதை வஞ்சகத்தால் செய்வது அதைவிடத் துரோகமானதே!

**

 


No comments:

Post a Comment