வருகுவது
தானே வரும்!
ஔவையார்: சோழியப் பிராமணராகிய பகவனார்
என்பவருக்கு ஆதி என்பவள் வயிற்றிலே பிறந்து, காவிரிபூம்பட்டிணத்திலே பாணர்சேரியிலே
வளர்ந்து தமிழ் புலமை உடையவராக விளங்கியவர்.
பகவனாரும் அவர் மனைவி ஆதியும்
செய்து கொண்ட சங்கேதப்படி, அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளை எல்லாம் அவைகள்
பிறக்கும் இடத்திலேயே விட்டுவிட்டுச் சென்றுவிடுவர். ஔவையை பெற்றவுடன் இந்த சிசுவை
எவ்வாறு விட்டுச் செல்வேன் என்று ஆதி கலங்கினாள்.
உடனே ஔவையாராகிய அச்சிசு
‘எவ்வுயிரும் காப்பதற்கோ ஈசன் உண்டோவில்லையோ – அவ்வுயிரில் யானுமொன்றிங் கல்லேனோ–வவ்வி–அருகுவதுகொண்டிங்
கலைவானேனன்னாய் – வருகுவது தானே வரும்’ என்னும் பாடலை அற்புதமாகக் கூறக் கேட்ட
தாய் அவ்விடத்திலிருந்து சென்றாள்.
ஔவையாருக்கு அதிகமான்,
திருவள்ளுவர், கபிலர் என மூவர் சகோதரர்கள். உறுவை, உப்பை, வள்ளி என மூன்று
சகோதரிகள். ஔவையார் தமிழ் புலமையோடு மதிநுட்பமும் உடையவர். இல்லற ஒழுக்கத்தை
விரும்பாது தவத்தையே மேற்கொண்டொழுகினார். சிறிது காலம் மதுரையிலும், சிறிது காலம்
சோழ நாட்டிலும், சிறிது காலம் சேர நாட்டிலும், நெடுங்காலம் அதிகனிடத்திலும்,
எஞ்சிய காலம் முனிவர் வாசங்களிலும், வசித்தவர்.
அரசர்களையும் பிரபுக்களையும் பாடி
அவர்கள் கொடுக்கும் பரிசில்களை பெற்று வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்டோர் அதிகன்,
சேரமான் வெண்கோ, தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், உக்கிரப்பெருவழுதி, இராசசூயம்
வேட்ட பெருநற்கிள்ளி, முதலியோர்.
தமது தேகமெலிவைக்கண்டு இரங்கி
அதிகன் கொடுத்த கருநெல்லிக்கனியை வாங்கியுண்டவர். இக் கருநெல்லிக்கனி யாருக்கும்
எளிதில் கிடைக்கக் கூடியதன்று. இதை உண்டவர்க்கு திடகாத்திரமும் தீர்க்காயுளும்
தரும் இயல்புடையது. அத்தகைய அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாது ஔவைக்கு கொடுத்த
அதிகன் சிறப்புடையவன்.
‘பெருமலைவிடரகத் தருமிசைக்கொண்ட
சிறியிலைநெல்லித் தீங்கனிகுறியா
தாதனின்னகத் தடக்கிச் சாதனீங்க
வெமக்கீந்தனையே’
--என புறநானூறில் வரும் பாடல் தெளிவுறுத்தும்.
அதிகன் மீது கொண்ட அன்பினால்
அவனின் தூதுவராக தொண்டைமானிடம் சென்ற ஔவையிடம், தொண்டைமான் தனது வலிமையைக் காட்ட
நினைத்து தனது ஆயுத சாலையைத் திறந்து காட்ட, இவ்வாயுதங்களெல்லாம் நெய்யிட்டு
மாலைசாத்திப் பூசிக்கப்படுவனவாயக் கதிர்கான்று விளங்குகின்றன. அதிகனுடைய ஆயுதங்களோ
பகைவரைக் குத்தித் தினந்தோறும் பிடியும் நுதியுந்சிதைந்து கொல்லனுடைய கம்மிய
சாலையின்கண்ணவாம்’ என்று கூறி தொண்டைமான தலைகுனிவித்த ஔவை மதிநுட்பமுடையவர்.
திருமூலர், தினம் ஒன்றுக்கு, மனிதனிடம் எழும் 21,600 சுவாசங்களையும் 730 ஆக அடக்கி, மூவாயிரம் வருடம்
உயிரோடிருந்தார். அதுபோல, ஔவையும் நெல்லிக்கனியால் 800 வருடங்கள் உயிருடன்
இருந்தார். இந்த உண்மை யோகசாஸ்திரம் அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
மற்றவர்களுக்கு புலப்படாது.
No comments:
Post a Comment