Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Sunday, March 2, 2014

புராணம்:


புராணம்:

உலகத்தினது தோற்றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்களும், மனுவந்தரங்களும், பாரம்பரிய கதைகளும், ஆகிய இவ்வைந்தையும் கூறலால் பஞ்சலக்ஷணம் எனப்படுவது. புராணம் பதினெட்டு. அவை வேதங்களுக்கு வியாக்கியா ரூபமாய் உள்ளன. 

அவை: பிரமம், பத்மம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பவிஷியம், பிரமகைவர்த்தம், லிங்கம், வராகம், ஸ்காந்தம், வாமனம், கூர்மம், மற்சம், கருடபுராணம், பிரமாண்டம், என பதினெண் புராணங்களாம். புராணம் என்பதன் பொருள் பண்டைய வரலாறு. 

அவற்றை வகுத்தவர் வியாசர். அவற்றுள் சிவபுராணம் பத்து, விஷ்ணுபுராணம் ஆறு, பிரமபுராணம் ஒன்று, சூரியபுராணம் ஒன்று;  (விஷ்ணுபுராணம் நான்கு, பிரம புராணம் இரண்டு, அக்கினி புராணம் ஒன்று என்றும் கூறுவர் சிலர்). 

புராணமாவது சாஸ்திரங்களிலே தலைமை பெற்றது. அது கிருத யுகத்திலே நூறு கோடி கிரந்தங்களினாலே பிரமாவினால் செய்யப்பட்டதால் ‘பிராமம்’ என்னும் பெயருடையாதாய் ஒன்றாய் இருந்தது. திரேத யுகத்திலே ஒரு கோடி கிரந்தங்களால் 118 சங்கிதைகளை உடைய 18 பாகங்களாக அது மகரிஷிகளால் வகுக்கப் பட்டது. 

அதனைத் துவாபர யுகத்திலே வியாசர் நான்கு லக்ஷம் கிரந்தங்களாக பதினெண் (18) புராணமாக்கினார். அப்பதினெட்டையும் ரோமகர்ஷணர் என்னும் முனிவர், வியாசரிடம் கேட்டார். அவர் சுமதி, அக்கினி வர்ச்சன் முதலியோருக்கு உபதேசித்தார். இப்படி குரு-சிஷ்ய பரம்பரையாக வெளிவந்தன. இறந்துபோன பல கற்பத்துச் (ஒரு பிரபஞ்சம் தோன்றி பின்னர் இது ஒடுங்குவதை ஒரு கற்பம் என்பர்) செய்திகளை எடுத்துக் கூறப்படுதலாலும் இறந்துபோன சிருஷ்டிகளும் ஒருவாறின்றிப் பேதப்படுதலும், கற்பந்தோறும் அநுகிரக மூர்த்திகளும் வேறாதலாலும், அந்த அந்தக் கற்பத்து வரலாற்றைக் கூறும் போது, அந்த கற்பத்துக்கு அதிகார மூர்த்திகளை விஷேடித்து துதிக்கப்படுதலாலும், புராணங்கள் ஒன்றுக்கொன்று மாறுபாடு கொண்டுள்ளதுபோலத் தோன்றினாலும், உண்மையில் அவை ஒற்றுமை உடையனவே. 

பிருகு ரிஷி


பிருகு ரிஷி: 
மகா ரிஷி. இவர் வம்சத்தில் பரசுராமர் பிறந்தார். பிருகு ரிஷி ஒருகாலத்தில் சிவனைத் தரிசிக்குமாறு சென்றபோது, அவர் தரிசனம் கொடாமையால் கோபித்துச் சிவனை லிங்காகாரமாகுக என்று சபித்துவிட்டுப் பிரமாவைக் காணச் சென்றார்.  அவரும் இவரை மதிக்காததைக் கண்டு அவர்க்கு ஆலயமும் பூஜையும் இல்லாது போகுக என்றும் சபித்து, பின் விஷ்ணுவிடம் செல்ல, அவரும் நித்திரை செய்திருந்தார். அதுகண்டு மார்பிலே காலால் உதைத்தார். விஷ்ணு விழித்து கோபம் செய்யாது உமது திருவடி என் மார்பில்பட நான் செய்த புண்ணியமே என்று உபசரிக்க விஷ்ணுவே யாவராலும் வழிபடத்தக்க கடவுள் என அநுகிரகித்துப் போனார். அடிமுடி தேடப் புகுந்தபோது பிரமா சொன்ன பொய்யுரைக்காக சிவன் அவருக்கு ஆலயம் இல்லாது சபித்தார் என்றும் கந்தபுராணம் கூறும்.

பிரம்மா:

பிரம்மா:

சிருஷ்டி கிருத்தியத்தை நடத்தும் அதிகாரமூர்த்தி. இவர் விஷ்ணுவினது நாபிக் கமலத்தில் உதித்தவர். இவர் சக்தி சரஸ்வதி தேவி. இவருக்கு வாகனம் அன்னம். இவர்தான் சர்வ லோகங்களையும் சிருஷ்டிக்கு மாற்ற அதிகாரம் உள்ளவர் என கர்வித்து சிவனை மதியாதிருந்து சிவன் கோபாக்கினியில் தோன்றிய வைரவக் கடவுளாலே ஒரு தலை கொய்யப்பட்டு, நான்கு முகங்களை உடையவர் ஆனதால், நான்முகன், சதுர்முகன் என்னும் பெயரெடுத்தார். இவர் சிருஷ்டி முறை அறியாது மயங்கிச் சிவனை வழிபட்டு அவரைத் தமக்கு புத்திரராகப் பெற்றார் என்று சில புராணம் கூறும். இவருக்குப் புத்திரராக அமைந்ததால் இவருக்கு பிதாமகன் என்னும் பெயரும் உண்டாம். பிரமாவைச் சுப்பிரமணியக் கடவுள் சிறையிலிட்டு சிருஷ்டி கிருத்தியத்தை ஒரு காலத்தில் நடத்தினார் என்பது கந்தபுராணம். பிரம்மாவானவர் மகா பிரளய காலத்தில் ஒடுங்கி, சிருஷ்டி காலத்திலே தோன்றுதலின் அக்காலந் தோறும் அழிகின்ற பிரமாக்களின் கபாலங்களைச் சிவன் மாலையாக அணிவார் என்பதினால் தேவரெல்லோரும் அழியவும், அழியாது எஞ்சி நிற்பவர் சிவன் ஒருவரே என்பதும் பொருளாம்.

பிரபோத சந்திரோதயம்:

பிரபோத சந்திரோதயம்:

வடமொழியிலே கிருஷ்ணமிசிர பண்டிதரால் செய்யப்பட்ட ஓர் அற்புத வேதாந்த நாடகம். இதனைத் தமிழிலே விருத்தப்பாவால் மொழிபெயர்த்தவர் மாதை வேங்கடேச பண்டிதர். ஆன்மாக்களிடத்தில் இருப்பதாகிய காமக் குரோதாதிகளையும், விவேகம், சாந்தம், முதலியவைகளையும் ரூபகாரம் பண்ணி (உருவகம் பண்ணி), பாரதக் கதையைப் போல நாடுகவர்தல், காட்டுக்கோட்டல், தூதுபோக்கல், போர்புரிதல், வாகைசூடல், ஞானமுடிச்சூட்டு, எனக் கட்டி அமைத்துரைப்பது. 1300 வருடங்களுக்கு முன்னர் வடமொழியில் செய்யப்பட்டது. 

பிதிர்கணம்

பிதிர்கணம்:

அங்கிரச பிரசாபதிக்குச் சுவதையிடத்துப் பிறந்தவர்கள். இவர்களே உலகத்து பிரஜவிருத்திக்கு வித்தாய் இருப்பவர்கள். இவர்களே பிதிர் தேவதைகள். வசு, ருத்திரர், ஆதித்தியர், என்னும் இவர்களுடையு ரூபங்கள் உடையவர்களாய் சந்திர லோகத்தில் இருப்பவர்கள். பிதிர் லோகத்தை அடைபவர்கள் மீளும்போது, சந்திரனை விட்டு ஆகாசம், காற்று, புகை, மேகம், மழை, வித்து, இவற்றின் வழியாக ஸ்திரிபுருஷர்களை அடைந்து பிறப்பார்கள். 

பாண்டிதேசம்:

பாண்டிதேசம்:
சோழ தேசத்துக்கு தென்மேற்கிலே கன்னியாகுமரி வரை உள்ள தேசம். இதற்கு ராஜதானி மதுரை. பாண்டியர் அரசு செய்தமையின் இஃது இப்பெயர் பெற்றது. இதுவே தமிழ் பிறந்த நாடு. இது மிக்க பழமையும் பெருங்கீர்த்தியும் அநேக சரித்திரங்களும், புண்ணிய க்ஷேத்திரங்களும், நதிகளும் மலைகளும் உடைய நாடு. முச்சங்கம் இருந்ததும், அநேக புலவர்களைத் தந்ததும் இந்நாடே.
பாண்டியனின் பூர்வீகம்
துஷ்யந்தன் தம்பி திஷ்யந்தன்.
திஷ்யந்தனின் பேரன் ஆசிரதன்.
ஆசிரதன் புத்திரன் பாண்டியன்.
இவனே பாண்டி நாட்டின் ஸ்தாபகன்.
இவனது வம்சத்தில் வந்தவர்கள் பல்லாயிரம் பாண்டியர்.

பாண்டியன்:

துஷ்யந்தன் தம்பியாகிய திஷ்யந்தனுக்கு பௌத்திரனாகிய ஆசிரதன் புத்திரன். இவனே பாண்டி தேசத்தின் ஸ்தாபகன். இவன் வம்சத்தில் வந்தோர் பல்லாயிரம் பாண்டியர். இவனே குலசேகர பாண்டியன் போலும். இவன் தென்மதுரையை (தற்போதுள்ள மதுரை அல்ல, கடல்கொண்ட தென்மதுரை) நகராக்கி நான்கு வருணத்து ஜனங்களையும் ஸ்தாபனம் செய்து காசியிலிருந்து ஆதி-சைவர்களையும் கோயிற் பூசைக்காகக் கொணர்ந்து இருத்தி, அகஸ்தியர் அனுமதிப்படி அரசு புரிந்தவன். இவன் மகன் மலையத்துவச பாண்டியன். மலயமலையை தனது கொடியில் தீட்டிக் கொண்டமையால் மலயத்துவசன் என்னும் பெயர் அவனுக்கு உண்டாயிற்று. இவன் அகஸ்தியரை உசாவியே எக்கருமமும் செய்பவன் என்பது அக்கொடியின் குறிப்புப் பொருள். இப்பாண்டியன் காலம் துவாபர காலம்.

Wednesday, January 29, 2014

கடவுளின் பெயர்கள்

சிவனுக்குச் சூட்டியுள்ள பெயர்கள்:
சங்கரன், இறையோன், சம்பு,
சதாசிவன், பேயோடி, அரவணிந்தமூர்த்தி,
பராந்தகன், பூதநாதன், கங்கைவேணியன்,
கங்காளன், கடுங்கையங்கண்ணிசூடி,
மங்கையோர்பாகன், முன்னோன், மகேச்சுரன்,
வாமதேவன், நீலகண்டன், மாதேவன்,
நிருமலன், குன்றவில்லி, சூலபாணியன்,
ஈசானன், பசுபதி, சுடலையாடி, காலகாலன்,
கபாலி, உருத்திரன், கைலையாளி,
ஆலமர்கடவுள், நித்தன், ஐம்முகன், பரசுபாணி,
அந்திவண்ணன், முக்கண்ணன், அழலாடி,
பாண்டரங்கன், சந்திரசேகரன், ஆனந்தன்,
அனந்தன், ஆதி, தந்தியுரியோன், நம்பன்,
தற்பரன், நீறணிந்தோன்,  நந்தி, ஈச்சுரன்,
ஏறூர்தந்தோன், நக்கன், ஞானமூர்த்தி,
வரன், மறைமுதலி, ஈசன், மானிடமேந்தி,
சோதி, பிரமன் மாற்கரியோன், தாணு,
பிஞ்சகன், பினாகபாணி, பரமன்,
எண்டோளன், பர்க்கன், பவன், யோகி,
பகவான், ஏகன், அரன், உமாபதி.

உமையின் பெயர்கள்:
அரனிடத்தவள், காமக்கோட்டத்தி,
அம்பிகை, மாதா, தருமத்தின்செல்வி,
தேவி, சாம்பவி, மலைமடந்தை,
பரை, சிவை, கௌரி, பார்ப்பதி, பவானி,
சத்தி, நாரி.

விநாயகன் பெயர்கள்:
அங்குசபாமேந்தி, அம்பிகைதனயன்,
முன்னான், ஐங்கரன், மூத்தோன்,
ஒற்றைமருப்பினன், ஏரம்பன்,
கங்கைபெற்றோன், முக்கண்ணன்,
கணபதி, ஈசன்மைந்தன், கயமுகன்,
ஆகுவாகனன்.

கந்தன் பெயர்கள்:
முருகன், வேள், சாமி, ஆறுமகன்,
குகன், குழகன், மாயோன்மருகன்,
சேய், கார்த்திகேயன், வரைபகவெறிந்தோன்,
செட்டி, அரன்மகன், கங்கைமைந்தன்,
ஆண்டலைக் கொடியுயர்த்தோன்,
சரவணபவன், கடம்பன், தாரகற்செற்றோன்,
ஆசான், குறிஞ்சிவேந்தன், வேலினுக்கிறை,
விசாகன், சேந்தன், காங்கேயன், செவ்வேள்,
சிலம்பன், மஞ்ஞையூர்தி, சூர்ப்பகைவன்,
வள்ளிமணாவாளன், தெய்வானைகாந்தன்,

குமரன், புலவன்.

Wednesday, January 22, 2014

தமிழ் அறிவோம் – மனிதரின் பெயர்கள்

தமிழ் அறிவோம் மனிதரின் பெயர்கள்

தூதர் பெயர் = வித்தகர், வினை உரைப்போர், வழி உரைப்போர், பண்புரைப்போர்.

அடிமையின் பெயர் = தொத்து, கிணகர், தாசர், தொழும்பு, தொறு, விருத்தி, தொண்டு, சேடர், ஆள்.

தோழன் பெயர் = சிலதன், நண்பன், பாங்கன், சேடன், துணைவன், எலுவன்.

தோழி பெயர் = சிலதி,சகி, பாங்கி, சேடி, இகுளை.

குருடன் பெயர் = அந்தகன், சிதடன்.

கூனின் பெயர் = கோணல்.

செவிட்டின் பெயர் = வதிர்.

முடத்தின் பெயர் = பங்கு, குணி.

ஊமையின் பெயர் = மூகை, மூங்கை.

அலியின் பெயர் = பெண்டகன், பேடி, நபுஞ்சகன், சண்டன்.

பெண்ணின் பெயர் = அரிவை, அங்கனை, மடந்தை, ஆடவள், ஆட்டி, மாயோன், கரிகுழல், மகடூஉ, காந்தை, சுந்தரி, வனிதை, மாது, தெரிவை, மானினி, நல்லாள், சிறுமி, தையல், நாரி, பிரியை, காரிகை, அணங்கு, பிணா, பெண்டு, பேதை.

ஆணின் பெயர் = ஆடவன், மைந்தன், காளை, ஆடூஉ , மகன், புமான், குமரன்.

பெண்ணின் பருவங்கள் = பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்.

கைம்மை பெற்றோன் (Widower)பெயர்  =கோளகன்.

அமங்கலையின் பெயர் = கைம்மை, கைனி, கலன்கழிமடந்தை, விதவை.

மலடியின் பெய்ர = மைம்மை, வந்தி.

வேசையின் பெயர் = பரத்தை, கணிகை, சூளை, பயனிலாள், வரைவின்மாது, பொருட்பெண்டு, விலைமகள்.



தமிழ்க் கொடை வள்ளல்கள் பெயர்கள்

தமிழ்க் கொடை வள்ளல்கள் பெயர்கள்

வரையறையின்றி யாவர்க்கும் கொடுக்கும் முதல் ஏழு வள்ளல்கள் பெயர்கள்:
செம்பியன், காரி, விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன்.

இரப்போர்க்குக் கொடுக்கும் இடை ஏழு வள்ளல்கள் பெயர்கள்:
அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், வக்கிரன், கன்னன், சந்தன்.

புகழ்வோர்க்குக் கொடுக்கும் கடை ஏழு வள்ளல்கள் பெயர்கள்:

பாரி, ஆய், எழிலி, நள்ளி, மலயன், பேகன், ஓரி.

மழையின் தமிழ்ப் பெயர்கள்

தமிழ் அறிவோம்!

 மழை

மழையின் பெயர்கள் = துளி, திவலை, தூவல், சீகரம், தூறல், மாரி, வருடம், உறை, ஆலி, வானம்.

பெருமழையின் பெயர் = ஆசாரம்.

விடா மழையின் பெயர் = பனித்தல், சோனை.

மழைத் துளியின் பெயர் = திவலை, தூவல், சிதர், சீகரம், ஆலி, தளி, உறை.

ஆலங்கட்டி மழையின் பெயர் = ஆலி, கரகம், கனோபலம்.

இடியின் பெயர் = வெடி, ஒலி, அசனி, செல், விண்ணேறு, மடங்கல், உரும், அனலேறு.

மின்னல் என்னும் மின்னின் பெயர் = வித்துத்து, தடித்து, சம்பை, சபலை, சஞ்சலை, மின்னல், கனருசி.

பனியின் பெயர் = இமம், துகினம்.

வானவில்லின் பெயர் = இந்திரதனு.

மேகத்தின் பெயர் = மங்குல், சீதம், பயோதரம், தாராதரம், குயின், மழை, எழிலி, மஞ்சு, கொண்டல், சீமூதம், கொண்மூ, முகில், விண், விசும்பு, மால், சலதரம், செல், புயல், கனம், கந்தரம், கார், மை, மாரி.




தமிழ் அறிவோம்! பருவகாலம்

தமிழ் அறிவோம்! பருவகாலம்

பருவ காலம்

ஆவணி தொடங்கி இரண்டிரண்டு மாதமாக வருகிற ஆறுவகைப் பருவங்கள், கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்.

ஆவணி, புரட்டாசி = கார் காலம்.
ஐப்பசி, கார்த்திகை = கூதிர்காலம்.
மார்கழி, தை = முன்பனி காலம்.
மாசி, பங்குனி = பின்பனி காலம்.
சித்திரை, வைகாசி = இளவேனில் காலம்.
ஆனி, ஆடி = முதுவேனில் காலம்.

(பொதுவாக, பருவத்தின் மற்றொரு பெயர் = ஆனியம், ரிது (இருது).
வருடத்தின் பெயர் = வற்சரம், ஆண்டு, சமை, ஆயனம்.
பாதி ஆண்டின் பெயர் = அயனம்.
ஊழிகாலத்தின் பெயர் = யுகமுடிவு, மடங்கல்.

வாழ்நாளின் பெயர் = ஆயுள்.

ஆள் இல்லை எம்பெருமானே!

ஆள் இல்லை எம்பெருமானே!
சுந்தரமூர்த்தி நாயனார் அவர் மனைவி பரவையாருடன் திருவாரூரில் குடியிருந்தார்.

பக்கத்தில் உள்ள குண்டையூரில் வசிக்கும் குண்டையூர் கிழார் என்பவர் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சாப்பாட்டுக்குத் தேவையான நெல் மணிகளை தினந்தோறும் அனுப்பி வைப்பாராம்.

ஒரு வருடம் மழையில்லாமல், விளைச்சல் இல்லையாம். எனவே நெல் விளையவில்லை. எனவே சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெல் அனுப்ப முடியவில்லையாம். அதனால் குண்டையூர் கிழார் மிகுந்த வருத்தப்பட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்.

அன்றைய இரவு, சிவபெருமான், இந்தக் குண்டையூர் கிழார் கனவில் தோன்றி, "ஆரூரனுக்கு நெல்லு தந்தோம்" என்று கூறி மறைந்தார். (ஆரூரன் = இந்தத் திருவாரூர்காரனுக்கு);

காலையில் எழுத்து பார்த்தால், குண்டையூர் முழுவதும் நெல் குவியலாக உள்ளது. உடனே குண்டையூர் கிழார், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு செய்தியைச் சொல்லி, நெல் இருப்பதாகவும் வந்து எடுத்துச் செல்லும்படி சேதி சொல்லி அனுப்பினார்.

சுந்தரமூர்த்தி நாயனாரும் குண்டையூருக்கு வந்து பார்த்தார். மலைபோல குவிந்துள்ளது நெல்.

உடனே பக்கத்தில் உள்ள திருக்கோளிலி ஊரில் உள்ள சிவனின் கோயிலுக்குச் சென்று ஒரு பதிகம் பாடினார்.
"இவ்வளவு நெல்லை எனக்குக் கொடுத்திருக்கிறாயே! இதை நான் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல என்னிடம் ஆட்கள் இல்லையே! நீயே ஆட்களையும் அனுப்புவாயாக! என்று பாடுகிறார்.

"நீள நினைந்தடியேன் உமை நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி யெம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை யெம்பெருமா னேவை யட்டித்தரப் பணியே"


(நீள நினைந்து அடியேன், உம்மை நித்தலும் கை தொழுவேன்; வாள் என கண் மடவாள் (வாள் போன்ற கண்களை உடைய) என் மனைவி பரவை வாடி வருந்தாமே (வாடிப் போய்விடுவாளோ என்று நீ வருந்தி) கோளிலி எம் பெருமான் குண்டையூர்ச் சில நெல் பெற்றேன். (he acknowledges the receipt of paddy); எம்பெருமானே! இந்த நெல்லைக் கொண்டு செல்ல ஆள் இல்லையே! அட்டித்தர பணியே = கொண்டுபோய்ச் சேர்க்க கட்டளையிடுவாயாக)


கபால சல்லிய சிகிச்சை (Cranial Surgery)

கபால சல்லிய சிகிச்சை (Cranial Surgery)
மகாகவி காளிதாசன் காலத்திலே, மாளவ தேசத்து அரசனாக தாரா நகரத்திலிருந்த ஒரு அரசனின் பெயர் போஜராஜன். இவன் 1200 வருடங்களுக்கு முன் இருந்தவன். இந்த போஜன் அரசனின் காலத்தில்தான் கல்வி நிலை வெகுவாக வளர்ந்துள்ளது. அதனால்தான், சரித்திர ஆசிரியர்கள், இவனை “சரஸ்வதியின் தந்தை” என்கிறார்கள். இந்த போஜராஜனே செய்த வைத்திய நூல் ஒன்றும் உள்ளது. இவன் சமஸ்தானத்தில்தான் மகாகவி காளிதாசன் முதலிய கவிரத்தினங்கள் உருவாகியதும். “போஜபிரபந்தம்” என்பது இந்த போஜராஜனைப் பற்றி எடுத்துக் கூறும் நூல்.

போஜன் ஒருகாலத்தில் அவனின் தலையில் ஏற்பட்ட ஒரு பெருந்தலைவலியால் வருந்தினான். வைத்தியர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்தும் தகுந்த மருத்துவம் செய்ய முடியவில்லை. மருந்து மருத்துவத்தில் (ஔஷதம்) குணப்படுத்த முடியாததால், சல்லிய சாஸ்திர மருத்துவர்கள் (Surgeons) இருவர் போஜனின் அரண்மனைக்கு வந்து, அவனின் தலைவலியை குணப்படுத்த முடியும் என்று கூறி, அரசனுக்கு, ‘சம்மோகனி’ என்னும் ஔஷதமான மயக்க மருந்து (a kind of Chloroform) கொடுத்து, அவனின் மண்டையோட்டை பிரித்து, மூளையில் இருந்த விஷத்தை நீக்கி, மறுபடியும் அதேபோல மண்டையோட்டை சேர்த்தனர். தையலுக்குப்பின் ‘சந்தானகரணி’யிட்டு ‘சஞ்சீவி’ என்னும் மருந்தை உள்ளுக்குள் கொடுத்து, அவனின் உயிரும், அறிவும் உதிக்கும்படி செய்தனர். இவ்வாறு போஜபிரபந்தத்தில் சொல்லப் பட்டுள்ளது.

‘சம்மோகனி’ என்பது தற்போதைய ஆங்கில மருத்துவத்தில் குளோரபாம் (Chloroform) போல மயக்கமுண்டாக்கும் மருந்து. இது குளோரோபாம் என்ற தற்கால மயக்க மருந்தைக் காட்டிலும் மிகச் சிறந்ததாம். தற்கால குளோரோபாம் அபாயமுள்ளது. ஆனால் சம்மோகனி ஒரு பகல்காலம் வரை அபாயம் ஏதும் செய்யாதாம். வேண்டியபோது சஞ்சீவினியைப் கொடுத்தால் சம்மோகனி தன் பலத்தை இழந்துவிடுமாம். ஆனால், குளோரோபாம் அதிகமானால் உயிருக்கும் ஆபத்து ஏற்பட அதிகவாய்ப்புகள் உண்டு. கபால சல்லியம் என்னும் மண்டையோட்டை பிளந்து அறுவைச் சிகிச்சை (Cranial Surgery) செய்வதை ஐரோப்பியர்கள்  தாங்களே தற்காலத்தில் கண்டுபிடித்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு 1200 வருடங்களுக்கு முன்னரே அது நடைமுறையில் இருந்திருக்கிறது.

Cranial surgery = Craniotomy is a surgery involving opening the skull temporarily, allowing an operation to be performed on or around the underlying brain.


இதேபோல் மற்றொரு சம்பவமும் உண்டு. கௌதம புத்திரருடைய வைத்திய பண்டிதனாக விளங்கிய ஜீவகனும் அநேக கபால சல்லிய சிகிச்சைகளைச் (Cranial Surgery) செய்துள்ளான் என பௌத்த நூல்கள் கூறுகின்றன. 

பித்தா! பிறைசூடி பெருமானே.......

பித்தா! பிறைசூடி பெருமானே.......
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அவரின் திருமணத்தன்று சிவன் காட்சி அளிப்பதாக வாக்குக் கொடுத்தார். அவ்வாறு சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமண நாளன்று, சிவன் ஒரு வயதான பிராமணர் வேடத்தில் வந்து சேர்ந்தார்.

திருவெண்ணெய் நல்லூரில் சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் திருமணம் நடக்கிறது. அப்போது அந்த வயதான பிராமணர் அங்கு வந்து திருமணத்தை நிறுத்தும்படி கட்டளையிடுகிறார். ஏன் என்று கேட்டதற்கு, 'இந்த சுந்தரமூர்த்தி நாயனார் எனது அடிமை' என்று கூறுகிறார். எல்லோரும் திகைத்து நிற்க, வயதான பிராமணரோ 'இதோ பாரும், அவர் எனக்கு எழுதிக் கொடுத்த அடிமை சாசனத்தை' என்று ஓலையைக் காண்பிக்கிறார். ஆம், அதில் அவ்வாறே எழுதப்பட்டுள்ளது.

ஆனால் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. 'பிராமணரே! நீர் யாரென்றே எனக்குத் தெரியாது; இதற்கு முன், உன்னை நான் எங்குமே பார்த்ததே இல்லையே, பின் எப்படி, நான் உமக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திருக்க முடியும்?' என்று புலம்புகிறார். என்னைத் தெரியாதா? நீதான் என்னை வரச் சொன்னாய் என்று கூறினார்.

சரி அதைவிடு. “நீ என்னைப் புகழ்ந்து ஒரு தமிழ்ப் பாடல்பாடு, நான் உன்னை விடுதலை செய்கிறேன்” என்று வயதானவர் கேட்டார்.
“உம்மை யாரென்றே எனக்குத் தெரியாதே! பின் எப்படி, நான் உம்மைப் புகழ்ந்து பாடுவது?” என்று சுந்தரமூர்த்தி நாயனார் பெரியவரை பரிதாபமாப் பார்க்கிறார்.

“என்னைத் தெரியாதா உமக்கு?” 
“நீதான், ஏற்கனவே என்னைப் ‘பித்தன்’ என்று சொல்லித் திரிகிறாயே! அப்படியே, பித்தனென்றே பாடு” என்று சொல்லிவிட்டு, அந்த வயதான பிராமண வேடத்தில் இருந்த சிவன், உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார்.
"சுந்தரா! இப்போது என்மீது ஒரு தமிழ்ப்பாட்டுப் பாடு" என்று கேட்கிறார்.

சுந்தரமூர்த்தி நாயனாரும் மகிழ்ந்து அது சிவன்தான் எனத் தெளிந்து, ‘பித்தா பிறைசூடி பெருமானே . .. ..  என்ற திருப்பதிகத்தை பாடினார்.

(இதுதான் சுந்தரமூர்த்தி நாயனார் முதன்முதலில் பாடிய தேவாரம்)

"பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருடுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே.

(பித்தா பிறைசூடிய பெருமானே, அருளாளா, எத்தான்=எந்தவகையிலும் மறவாமல் நினைக்கிறேன் மனத்தில் உன்னை வைத்தேன். பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூரில் உறையும் அத்தா (தந்தையே) உனக்கு ஆளாய் அல்லேன் (அடிமை இல்லை என) இனி நான் கூறமுடியுமோ?)


Tuesday, January 21, 2014

புலமையும் வறுமையும்:

புலமையும் வறுமையும்:
பெருஞ்சித்திரனார் ஓர் அற்புதக் கவிஞர். ஆனால் இவர் மிக்க வறுமையில் வாடினார்.
வள்ளல் குமணன் பெருமையை ஒரு புலவர் மூலம் கேள்விப்பட்டார்.
அந்தப் புலவரோ, குமணனிடம் சென்று தனது வறுமை நிலையை எடுத்துக்கூறி அவனிடம் செல்வத்தைப் பெற்று, அதைக் கொண்டு குபேரனைப் போல வாழ்கிறார்.

பெருஞ்சித்தினாரோ, மிகுந்த வறுமையில் உள்ளார். வள்ளல் குமணனைக் கேள்விப் பட்டவுடன் அவரிடம் சென்று, தன் வறுமையை தன் கவிப் புலமையால் தெரிவித்து, தனக்கு உடனடியாக செல்வம் கொடுக்கும்படி வேண்டுகிறார்.

அவரின் குடும்ப வறுமை நிலையை எடுத்துரைத்த விதம் இருக்கிறதே, அது கேட்போர் மனதை உருக்காமற் போகாது.

“பெரும்புகழ் படைத்த குமணா கேள்!
உனது வண்மையையும் அளப்பில் (அளவில்லாத) செல்வத்தினையும் ஒரு புலவர் மூலம் கேட்டு விரைந்து உன்னை வந்து அடைந்தேன்.

எனது வீட்டில் சாப்பிடுவதற்கு ஒரு உணவுப் பொருள் கூட இல்லை. அப்படி எந்த உணவும் இல்லாதபோதிலும், என் மனைவி என்னை விட்டு நீங்காமல் (விட்டுவிட்டுச் செல்லாமல்) என்னுடனேயே அந்த வீட்டிலேயே இருந்து வருகிறாள்.

என் மகன் பாலகன். அவன் குடுமியோ வெகுகாலம் எண்ணெயைக் காணாததால், குதிரைப் பிடர் மயிர் போல எப்போதும் பறந்து கொண்டிருக்கும்.

அந்தப் பாலகன் தாயிடம் பால்குடிக்க வேண்டிய வயதில் இருக்கிறான். அவன் தாய்பாலின்றித் திரங்கிய (சூம்பிய) தாய் முலையைப் வெகுநேரமாகச் சுவைத்துச் சுவைத்துக் கொண்டே இருப்பான். ஆனால் பாலே வராது. பால் வராவிட்டாலும், வரும் என்ற ஆசையால் அதை விடமாட்டான்.

கடைசியாக, பால் வாயில் வராததால் அதனை விடுவித்துவிட்டு வறுமையில் மூடிக் கிடக்கும் சோறடுகலத்தைத் (சோறு இருக்கும் பாத்திரத்தை) திறந்து பார்ப்பான். அங்கும் தன் பசிக்கு ஒன்றும் கிடைக்காது.

பின்னர் அவனின் தாயை அடைந்து அழுது அழுது வாடுவான்.
இவனின் அழுகையை நிறுத்த எண்ணிய தாயோ, “புலிவருகின்றது” என்று அச்சுறுத்துவாள். தணியாமை கண்டு (அவளுடைய இயலாமையால்) அப்புலியைக் காட்டுவாள். உன் தந்தைக்கு காணாதுகுன்றிய உன் மேனியினது அழகை எனக்குக் காட்டுவாய் என்று வினவுவாள்.

இத்தகைய என் கடும் வறுமைத் துன்பத்துக்கு முடிவு காணவே, வள்ளலாகிய உன்னை வந்து அடைந்தேன். நீ கொடுக்கும் பரிசை தந்து என்னைக் கடிது விடுப்பாயாக (விரைவாக அனுப்பி வைப்பாயாக)" என்று தன் வறுமையைக் கவியாகப் பாடினார்.



ஓர் இரவில் ஏழு முழம் வளர்ந்த போதிமரம்

ஓர் இரவில் ஏழு முழம் வளர்ந்த போதிமரம்
1400 வருடங்களுக்கு முன்னர் மகத நாட்டை ஆட்சி செய்த மன்னனின் பெயர் பூரணவர்ணன். இவன் பௌத்த சமயத்தின் மீது தீராத பற்றுக் கொண்டவன்.
பௌத்தர்களின் புனித மரமான போதிமரம் கயாவில் உள்ளது. இந்த மரத்தை சசாங்கன் என்பவன் வெட்டி வீழ்த்திவிட்டுப் போய்விட்டான்.
இந்தப் போதி மரம் வெட்டப்பட்டது என்று கேள்விப்பட்ட மன்னன் பூரணவர்ணன் தன் துக்கம் தாளாமல் அழுது புலம்பி விட்டான். தரையில் விழுந்து கதறிக் கதறி அழுதான்.

பின்னர் ஒருவாறு தெளிவுக்கு வந்து, பால் கறக்கும் ஆயிரம் பசுக்களை அங்கு கொண்டு சென்று, அவைகளின் பாலை எல்லாம் இந்த வெட்டுப்பட்ட போதிமரத்தின் அடியில் உற்றி அபிஷேகம் செய்திருக்கிறான்.
அந்த வெட்டுப்பட்ட போதிமரம், அந்த இரவிலேயே ‘ஏழு முழ உயரம்’ வளர்ந்து விட்டதாம்.
இதைக் கண்ட மன்னன் பூரணவர்ணன் மிகுந்த மகிழ்ச்சி உடையவனாகி, ஆனந்தம் அடைந்தான். மீண்டும் யாராவது இந்த மரத்துக்கு ஏதேனும் தீங்கு செய்துவிடக்கூடாது என்று நினைத்த அவன், அந்த மரத்தைச் சுற்றி பதினாறு முழ உயரமுள்ள ஒரு மதில்ச் சுவரை எழுப்பி காத்தான்.


ஆசை மனங் கொடுத்து இதழ்கொடுத்தும்........

 ஆசை மனங் கொடுத்து இதழ்கொடுத்தும்........
200 வருடங்களுக்கு முன் உள்ள கதை.
பூங்கோதை என்பவள் மதுரையிலே இருந்த ஒரு தாசி.
இவள் சீதக்காதி என்னும் சோனகபிரபுவுக்கு காமக்கிழத்தியாம் (வைப்பாட்டி).

இவள் சார்ந்த இனம் இவளின் நடத்தையால் இவளின் சமூகத்திலிருந்து இவளைத் தள்ளி வைத்தது.
இவளோ தமிழ்ப் புலமையில் மிகச் சிறந்தவள். கவி பாடுவதில் வல்லவள். (வைப்பாட்டியாக இருந்த தமிழ்ப் பெண் கவி இவள் ஒருத்தியாகத்தான் இருக்கும்!)

சீதக்காதியின் கொடைபற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிதில்லை. ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்ற பழமொழியே உள்ளது.

இவள், அவருடன் நட்புடன்(!) இருந்து, அதனால் கிடைத்த பெரும் செல்வத்தை, அதாவது காயற்பட்டினத்திலே அந்த சீதக்காதி கொடுத்த பெரும் நிதியை எடுத்துக் கொண்டு, ஆசையாசையாய், தன்னந்தனியே தன் ஊருக்கு திரும்பி வருகிறாள்.

அவ்வாறு வரும் வழியிலே கள்வர் (திருடர்கள்) வந்து அவள் கொண்டுவந்த அனைத்து செல்வங்களையும் கவர்ந்து கொண்டார்கள்.

இவளோ, தான் சேர்த்த செல்வமெல்லாம் பறிபோனதை எண்ணி, கதி கலங்கி, கதியற்றவளாகி, வருத்தப்பட்டு பாடிய பாடல் இதோ!!!
(எப்படியெல்லாம் நான் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த காசை, கள்வர்களிடம் பறி கொடுத்துத் தவிக்கின்றேன்  பாருங்கள்! என்று புலம்புகிறாள். அவ்வளவு உருக்கமான கவிதை!!!)

“தினங்கொடுக்கும் கொடையானே
தென்காயற்பதியானே சீதக்காதி
இனம் கொடுத்த உடைமையல்ல
தாய் கொடுத்த உடைமையல்ல வெளியாளாசை
மனங் கொடுத்து இதழ்கொடுத்தும்
அபிமானம் தனைக் கொடுத்தும்
மருவிரண்டு தனம் கொடுத்த உடைமை யெல்லாம்
கள்வர் கையில் பறிகொடுத்துத் தவிக்கின்றேனே”.


பூகோளம்: (இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கவனத்துக்கு:)

பூகோளம்: (இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கவனத்துக்கு:)
ஆரிய சாஸ்திரம், பூமத்தியிலே சுமேருவும், சமுத்திர மத்தியிலே வடவாமுகமும் இருக்கின்றன என்று கூறும். இவை முறையே வடதுருவம் என்றும், தென்துருவம் என்றும் கூறப்படும்.

பூமத்தி என்று ஆரிய சாஸ்திரத்திலே சொல்லப்பட்ட இடம் வடதுருவமுனை.
ஆரிய சாஸ்திரம் பூமியை, மேகலா ரேகையை எல்லையாக வைத்து வடகோளர்த்தம், தென்கோளர்த்தம் என இரு கூறாகப் பிரித்து, வடகோளர்த்தம் முழுவதும் நிலம் (land) என்றும், தென்கோளர்த்தம் முழுவதும் ஜலம் (நீர்) என்றும் கூறும்.

வடகோளர்த்தம் முழுவதும் நிலமானதால் அதன் மத்திய ஸ்தானம் வடதுருவத்தின் அருகிலுள்ள சுமேரு. வடகோளர்த்தம் முழுவதையும் ஜம்புதீவென்று சொல்வர். இந்தச் ம்பு தீவு என்னும் வடகோளர்த்தம் நவ-வர்ஷங்களாக (9 தேசங்களாக) சொல்வர். அவை:
(1) மேருவை சூழ்ந்திருப்பது – இளாவிருத வர்ஷம்.
(2) அதற்கு தெற்கேயுள்ளது – ஹரிவர்ஷம். 
(3)அதற்கு தெற்கேயுள்ளது – கிம்புருஷ வர்ஷம். 
(4) அதற்கு தெற்கேயுள்ளது – பாரத வர்ஷம்.
(5) இனி, இளாவிருத வர்ஷத்துக்கு வடக்கே – இரண்மய வர்ஷம்.
(6) அதற்குத் வடக்கே – ரம்மியக வர்ஷம்.
(7) அதற்கு வடக்கே – குரு வர்ஷம்.
(8)  இந்த இளாவிருத வர்ஷத்துக்கு வடக்கேயும் தெற்கேயுமுள்ள ஆறு வர்ஷங்களுக்கும் இடையே, இளாவிருத வர்ஷத்துக்கு கிழக்கில் பத்திராசுவ வர்ஷம்,
(9)  மேற்கில், கேதுமால வர்ஷம் உள்ளன.

பாரதவர்ஷம், கேதுமாலவர்ஷம், குருவர்ஷம், பத்திராசுவ வர்ஷம், என்னும் நான்கும் மேகலா ரேகையை அடுத்துள்ள வர்ஷங்கள்.
இந்த நான்கு வர்ஷங்களிலும் மேகலா ரேகையிலே ஒன்றுக்கொன்று சமதூரத்தில் நான்கு பட்டணங்கள் (Cities) உள்ளன. அவை, இலங்காபுரி, ரோமாபுரி, சித்தபுரி, யவகோடி என்பன.

வருஷம் என்பது மழைப்பெயல் வேறுபாட்டால் வந்த பெயர். வருடத்தில் மழைபெய்யும் அளவு வேறுபாட்டால் வந்த பெயர்கள்.

இலங்காபுரிக்கு நேர்கீழே அதாவது அதோபாகத்தில் சித்தபுரி இருக்கிறதென்றும், இலங்காபுரிக்கும் சித்தபுரிக்கும் இடையே சமதூரத்தில் கிழக்கே யவகோடி இருக்கிறதென்றும், இலங்காபுரிக்கும் சித்தபுரிக்கும் இடையே சமதூரத்தில் மேற்கே ரோமாபுரி இருக்கிறதென்றும், ஆரிய சாஸ்திரம் கூறுகிறது.

இலங்காபுரி முதல் தொண்ணூறு பாகையில் கிழக்கே யவகோடி இருக்கிறது. இதிலிருந்து தொண்ணூறு பாகையில் சித்தபுரியும், இதிலிருந்து தொண்ணூறு பாகையில் ரோமாபுரி இருக்கிறதாம்.

மற்றைய ஆறு தீவுகளும் மேகலா ரேகைக்குத் தெற்கே சமுத்திரத்தில் ஆங்காங்கு உள்ளன. அவைகள் தனித்தனியே ஒவ்வொரு சமுத்திரம் சூழ்ந்துள்ளனவாம்.