Thursday, January 27, 2022

Pari delicto principle பேரி டெலிக்டோ கொள்கை

 Pari delicto principle

1961-ல் சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு.

ஒருவர், தனக்கு ஏற்கனவே ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் கேட்டு வழக்குப் போடுகிறார். 

அதை எதிர்பார்த்த கணவர், சிவில் கோர்ட்டில், அவருக்கும், 2-வது மனைவி என்று சொல்லப்படுவருக்கும் எந்த சட்டபூர்வ திருமணமும் நடக்கவில்லை என்று தீர்ப்புக் கேட்டு சிவில் வழக்குப் போடுகிறார்.

கீழ்கோர்ட், அவர் கேட்டபடி வழக்கை அவருக்கு சாதகமாக தீர்ப்புக் கொடுத்து விடுகிறது.

ஆனால், முதல் அப்பீல் கோர்ட்டில், அவரின் வழக்கை தள்ளுபடி ஆகி விட்டது. காரணம் - சட்ட முறைப்படி திருமணம் நடக்கவில்லை என்றாலும், இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். கணவன், இந்த திருமணத்தை சட்டப்படி நடத்திக் கொள்ளவில்லை. அவரும் தவறி விட்டார். தன் தவறையே தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதே சட்டவிதி. அதையே Pari delicto principle (பேரி டெலிக்டோ கொள்கை) என்று சட்டம் சொல்கிறது.

பேரி டெலிக்டோ (Pari delicto) என்ற வார்த்தை ஒரு லத்தீன் வார்த்தை. இதன்படி, இருவருமே தவறி இழைத்த நிலையில் இருக்கும் போது, அதில் ஒருவர் மட்டும் அந்த தவறை, தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியாது என்பதே அதன் சாரம்.

இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக சொல்லும் காலத்தில், இருதார மணத் தடை சட்டம் 1949 நடைமுறையில் இருந்த காலம். அந்த சட்டத்தின்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, மறு திருமணம் செய்ய முடியாது என்ற சட்டம் 1949-ல் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

பின்னர், 1955-ல் இந்து திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் வந்த பின்னர் 1949 சட்டம் ரத்து ஆகி விட்டது. 1955 சட்டத்தின்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, 2-வது மனைவியை திருமணம் செய்ய முடியாது. அப்படி செய்திருந்தால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்கிறது 1955 இந்து திருமணச் சட்டம்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, அவர் ஐகோர்ட்டுக்கு அப்பீல் வருகிறார்.

இங்கு, பேரி டெலிக்டோ கொள்கைப்படி, ஒருவர் தனது தவறை, தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், அந்தக் காரணத்துக்காகவே, அவர் இந்த 2-வது திருமணம் சட்டப்படி செல்லாது என்று கேட்பதை மறுத்து விடவும் முடியாது என்றும், 1955 இந்து திருமணச் சட்டம் பிரிவு 11-ல் அவ்வாறு நடந்த திருமணம் செல்லாது எனக் கேட்கும் உரிமை உள்ளது என்றும் சென்னை ஐகோர்ட் சொல்லி உள்ளது.

எனவே கணவர், தனது 2-வது திருமணத்தை செல்லாது எனக் கேட்கும் வழக்கை அனுமதித்து தீர்ப்பு கூறி விட்டது.

Refer: The Madras High Court in DKR Chinnaswamy Sah vs Rajamba Bai, AIR 1961 Mad 325 : (1961) 1 MLJ 381.

**


No comments:

Post a Comment