இந்து விதவைகள் மறுமணச் சட்டம் 1856
(The HIndu Widows’ Remarriage Act XV of 1856).
கோவிந்த படையாச்சி என்பவர் சொத்தை விட்டு விட்டு இறந்து விடுகிறார். அவருக்கு ஒரு மனைவியும், ஒரு மகளும் உண்டு. இந்து கணவரின் சொத்தில் மனைவிக்கு ஆயுட்கால உரிமை உண்டு என்பதாலும், மகனும் இல்லை என்பதாலும், மனைவிக்கு அந்த சொத்துக் கிடைக்கிறது. ஆனால், அவள் அந்த சொத்தை வேறு ஒருவருக்கு கிரயத்துக்கு விற்று விடுகிறாள். பின்னர் சில காலம் கழித்து, வேறு ஒரு ஆடவரைத் திருமணம் செய்து கொள்கிறார்.
இப்போது, படையாச்சியின் மகள், “தந்தையின் சொத்தில், தாய்க்குப் பின்னர் தனக்கு கிடைக்க வேண்டிய சொத்துரிமை உள்ளது. ஆனால் அதை அவளின் தாய் விற்று விடுவதால், அந்த கிரயம் செல்லாது என்றும், தனக்கு உரிமை உள்ளது என்றும், தாய் வேறு திருமணம் செய்து கொண்டதால், அவளுக்கு கணவர் சொத்தி்ல் கிடைக்கும் உரிமையை இழந்து விடுகிறார் என்றும் சொல்லி, 1955-ல் சிவில் வழக்குப் போடுகிறார்.
அதை ஏற்றுக் கொண்ட முன்சீப் கோர்ட், மகளுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்குகிறது. சொத்தை கிரயம் வாங்கியவர் அந்த தீ்ர்ப்பை எதிர்த்து 1957-ல் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்கிறார். அதுவும் கீழ்கோர்ட், தாய் கிரயம் செல்லாது என தீர்ப்பு கொடுத்தது சரியே என்றும், ஆனால், அவரின் தாய், மறு திருமணம் செய்தது Madras Act VI of 1949 படி செல்லாத திருமணம் என்றும் எனவே, மகள், அந்த சொத்தை திரும்ப கேட்க முடியாது என்றும் தீர்ப்புச் சொல்லி விட்டது.
அதை எதிர்த்து, மகள், சென்னை ஐகோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார். Madras Act VI of 1949 நடைமுறைக்கு வந்த தேதி 23-3-1949. 1949 சட்டம் என்பது இருதார தடை சட்டம். அப்போது புதுக் கணவருக்கு ஏற்கனவே மனைவி உயிருடன் இருக்கிறாள். ஆனால், தாயும், அவளின் புதுக் கணவரும் மறு திருமணம் செய்து கொண்டது ஏப்ரல் 1949-ல். அதாவது 1949 சட்டம் வந்த பின்னர். ஆனாலும், சாட்சிகள் யாரும் சரியான தேதியைச் சொல்லவில்லை. இருந்தாலும், 1949 சட்டம் வந்தபின்னரே இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்றே கீழ்கோர்டுகள் முடிவுக்கு வந்துவிட்டன.
எனவே, இறந்தவரின் மனைவி மறுதிருமணம் செய்து கொண்டால், கணவரின் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது. அதிலும், மனைவிக்கு கணவரின் சொத்தில் ஆயுட்கால உரிமை மட்டுமே இருக்கிறது. அதை அவள் கிரயம் செய்தாலும், அந்தக் கிரயம் அவளின் ஆயுட்காலம் வரை மட்டும் செல்லுபடியாகும். மனைவிக்கு கணவரின் சொத்தில் முழு உரிமை கிடையாது. எனவே மனைவியின் ஆயுட்காலத்துக்குப் பின்னர் அந்த சொத்து கணவரின் வாரிசுகளுக்குத் திரும்ப வந்து விடும்.
ஆனால் இந்த வழக்கில், தாய், மறுதிருமணம் செய்த போது, அவளின் புதுக் கணவருக்கு ஏற்கனவே ஒரு மனைவி உயிருடன் இருக்கிறாள். எனவே 1949 சட்டப்படி, இந்த மறுதிருமணம் செல்லாது. 1856 சட்டமான விதவைகள் மறு திருமணச் சட்டம் என்பது சட்டபூர்வமாக நடந்த விதவைகள் திருமணம் மட்டுமே. இங்கு அவ்வாறு நடக்கவில்லை.
எனவே, மகள் அவளின் சொத்துரிமையை கேட்க முடியாது என்று சென்னை ஐகோரட் தீர்ப்பு சொல்லி விட்டது.
Refer: Madanavalli alias Sowbagyammal vs. Thangavelu Padayachi and others, AIR 1961 Mad 298 : (1961) 1 MLJ 140.
**
No comments:
Post a Comment