Sunday, January 2, 2022

கச்சிமேமன், கோஸா முகமதியர் வழக்கம்:

கச்சிமேமன், கோஸா முகமதியர் வழக்கம்:

கச்சி மேமன் என்பவர்கள் கட்ச் பகுதியில் வசித்த இந்துக்கள். இவர்கள் பல காலங்களுக்கு முன்னரே முகமதிய மதத்துக்கு மாறி விட்டார்கள். இருந்தாலும், பழைய இந்து பழக்க வழக்கங்கள் சிலவற்றைப் பின்பற்றி வருகின்றனர். இதில் சொத்தில் உரிமை கோருவது இந்து வழக்கப்படியே இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியென்றால், அவர்கள் இந்து கூட்டு குடும்ப முறைப்படி சொத்தை அடைய முடியுமா என்ற சட்டக் கேள்வி 1920-ல் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கில் ஏற்படுகிறது. கச்சு பகுதியில் இருந்த மேமன் வகை மக்கள், படிப்படியாக, பிரிந்து மேற்கு கடற்கரை வரை பரவி வாழ்ந்து வந்தனர். மலபார் பகுதியிலும், பெங்கால் பகுதியில் வாழ்ந்தனர். அவர்களின் முந்தைய வரலாற்றின் படி, அவர்கள் லோனாஸ் Loannas என்னும் இந்து வியாபார சாதியான வைசிய சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவைகளை எல்லாம் உறுதி செய்யப் போதுமான ஆவணங்களோ, பதிவுகளோ இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் குறிப்பிட்டுள்ளது. 

இதேபோலவே, கோசாஸ் Khojahs என்ற முகமதியர்களும் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தனர் என்றும், அவர்களும் அதே இந்து பழக்க வழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. எனவே கச்சு மேமன்ஸ் மற்றும் கோசாஸ் ஆகிய இரு பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான முறைகளே இருந்தன. ஆனால், இந்து சாஸ்திர சட்டமானது அவர்களுக்கு எவ்வளவு தூரம் பொருந்தி வரும் என்று தெரியவில்லை. 

ஆனால், இதைப் பற்றி முதன் முதலில் 1847-ல் ஒரு வழக்கு வந்துள்ளது. அது Hirbae vs Sonabae; Rahimatbae vs Haji Jussap; and the case of Khojas and Memons (1847) Perry’s O.C. 110 at pp 115, 128 : 4 Ind. Dec. (O.S.) 100 at p.105. இந்த வழக்கின் முடிவு 1847ல் சொல்லப்பட்டது. அதில் கோசாஸ், மற்றும் கச்சி மேமன் முகமதியர்களின் சொத்தின் வாரிசு உரிமைகளில், முகமதிய சட்டத்திலும் மாறுபட்டு உள்ளது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. Sir Erskine Perry C.J. என்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், கச்சி மேனன் மக்களில், இந்துக்களைப் போலவே, பெண்ணுக்கு சொத்துரிமை கொடுக்கவில்லை என்ற நிலை இருந்ததாகக் கூறுகிறார். ஆனாலும், குரானுக்கு எதிராக ஒரு வழக்கம் (custom) இருக்குமானால், அது செல்லாது என்பது குரானில் சொல்லி உள்ளது. ஆனாலும், அவர் ஒரு முடிவுக்க வருகிறார். “ஒரு வழக்கத்தை, கிழக்கத்திய நாட்டினர் (பிரிட்டீஸ் அல்லாதவர்) தொடர்ந்து கடைப்பிடிக்கப் பட்டு வந்தால், பிரிட்டீஸ் கோர்ட் ஆப் ஜஸ்டிஸ் அதை ஏற்றுக் கொள்கிறது” என்கிறார். ஆனால் அது சட்டத்தை மீறியதாக இருக்க கூடாது என்கிறார். எனவே அந்த வழக்கில் ஒரு முகமதியப் பெண், சொத்துரிமை கேட்பதை மறுத்து விடுகிறார். அவ்வாறு பெண்களுக்கு சொத்துரிமை இல்லாமல், கச்சு மேமன், கோசாஸ் மக்களிடம் இருக்கும் வழக்கமானது பல காலமாக பின்பற்றி வரும் வழக்கம் என்பதால், அதை மறுக்கிறார். 

மற்றொரு வழக்கான Gangbai vs Tavar Mulla, 1 BHCR 71 என்ற வழக்கில், ஒரு கோஸா முகமதியப் பெண் தனது சொத்துக்களை சாரிட்டியாக (தர்மமாக) தனது உயிலில் எழுதி வைத்ததை சட்டப்படி செல்லாது எனத் தீர்ப்பு கூறி உள்ளது. தலைமை நீதிபதி Sausse CJ தனது தீர்ப்பில், “கோஜா சாதியினர், முகமதிய மதத்தை பின்பற்றி வந்தாலும், சொத்துரிமையைப் பொருத்து அவர்கள் இந்து மதச் சொத்து வாரிசுரிமையையே பின்பற்றி வந்துள்ளனர்” என்று குறிப்பிடுகிறார். 

மற்றொரு வழக்கான, Mulbai BHCR 276 page 284 என்ற வழக்கில், 1866-ல் கூறியுள்ள தீர்ப்பில், ஒரு கோஷா பெண்மணி வாரிசு இல்லாமல் இறந்து விடுகிறார். அவரின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை அவளின் சகோதரன், கோர்ட்டில் Letters of Administration கேட்கிறார். அதில், அந்த இறந்த பெண்மணி, அந்த சொத்தை, அவளின் இறந்த கணவரிடமிருந்து வாரிசாகப் பெற்று இருப்பதால், அவளின் இறப்புக்குப் பின்னர் அந்தச் சொத்து அவளின் கணவரின் வாரிசுகளையே சேரும் என்றும், அவளின் உறவுகளான அவளின் சகோதரனுக்குப் போகாது என்றும் தீர்ப்பு உள்ளது. இது குரானுக்கு எதிரானதாக இருந்த போதும், தொடர் பழக்க வழக்கத்தின் அடிப்படையில் இருப்பதால், அதுவும் சட்டத்துக்கு புறம்பாக இல்லாததால் கோர்ட் அதை ஏற்கிறது என்று சொல்லி உள்ளது. 

எனவே, கோசாஸ் இனத்தவர், இந்து சட்ட திட்டங்களின்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஏற்க முடியாது. ஆனால், அவர்கள் தானாகவே ஒரு பழக்க வழக்கத்தை ஏற்படுத்தி அதன்படி நடந்து வருகின்றனர். எனவே அவர்களை இந்துக்கள் என்றோ, இந்து சட்டப்படி நடக்கின்றனர் என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. கோசாஸ் இன மக்கள், இந்துக்கள் கடைப்பிடிக்கும் நடை முறைகளை, அவர்களும் கடைப்பிடிக்கிறார்கள் அவ்வளவே. மற்ற விஷயங்களில் அவர்கள் முகமதியர்களாகவே இருந்து வருகின்றனர். 

மற்றொரு வழக்கான Shivaji Hasam vs Datu Mavji Kohja 12 BHCR 281 pp.202 என்ற வழக்கானது 1847-ல் நடந்த வழக்கு. இதில், பழக்க வழக்கத்தை நிரூபிக்க போதிய சாட்சியம் இல்லை என்றாலும், அவர்கள்/ கோஸா முகமதியர்கள், இந்துக்களின் பழக்க வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சொத்துரிமை வைத்துள்ளனர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்புச் சொல்லி உள்ளனர். கோஸா முகமதிய குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருக்க, அதில் மூத்தவர் மற்றவர்களுக்கு கார்டியனாக இருந்தது செல்லும் என்று சொல்லி உள்ளது. இது இந்து முறைப்படியான கூட்டுக் குடும்பத்தில் அவ்வாறு மூத்தவர் குடும்பத் தலைவராக இருப்பார் என்பதை ஒத்து இருக்கிறது. 

எனவே மதராஸ் பிரசிடென்சியில் அதுவரை கோர்ட்டுகள், கோஸா முகதியர்கள், இந்து வாரிசு உரிமை முறையை பின்பற்றி அதே போன்ற பழக்க வழக்கத்தை கொண்டிருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். 

மற்றொரு வழக்கான Rahimbhai Allubhai Hirabhai vs Gorbai, 12 BHCR 294 at page 304, என்ற வழக்கு 1875-ல் நடந்த வழக்கு. இதில், ஒரு கோஸா வியாபாரி சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். அவருக்கு ஒரு மனைவி, தாய், மற்றும் திருமணம் ஆன ஒரு சகோதரி இருந்தனர். தீர்ப்பில், கோஸா பழக்க வழக்கப்படி, தாய் இந்த சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை பெறுவார் என்றும், அவர், இறந்தவரின் மனைவி, சகோதரி, இவர்களை விடவும் முன்னுரிமை பெற்றவர் என்றும் தீர்ப்பு உள்ளது. 

மற்றொரு வழக்கான Rahmatbai vs Hirbai, 3 B.34 : Ind. Dec.(N.S.) 23 என்ற வழக்கில் தீர்ப்பு 1877-ல் வந்தது. அதில், குழந்தை இல்லாமல் இறந்த கோஸா முகமதியருக்கு, அவரின் விதவை மனைவி, மற்றும் சகோதரி வாரிசாக வர முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அதில், பழக்க வழக்கம் ஏதும் இல்லாதபோது, இந்து வாரிசு உரிமையை இங்கு கொண்டு வரலாமா என்ற கேள்வி எழுந்தது. 
**

No comments:

Post a Comment