Satwat Singh Sawheny case
January 28, 2021
சத்வத்சிங் சானே வழக்கு 1967 AIR 1836 : 1967 SCR (2) 525
சத்வத்சிங் சானே என்பவர் இந்திய குடிமகன். இவர் ஆட்டோமோபைல் பாகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். எனவே வியாபார விஷயமாக அடிக்கடி வெளிநாடு செல்வது வழக்கம். 1958ல் இருந்து இவர் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். 1965-ல் வேறு ஒரு பார்ஸ்போர்ட் வாங்கி உள்ளார். அது 1967 வரை செல்லுபடியாகும் நிலையில் உள்ளது. ஆனால் 1966-ல் இவரின் இரண்டு பாஸ்பர்ட்டுகளையும் அரசிடம் ஒப்படைக்கும்படி பாஸ்போர்ட் அதிகாரி இவருக்கு கடிதம் அனுப்புகிறார்.
இப்படி பாஸ்பர்ட்டை முடக்குவது அவரின் அடிப்படை உரிமைகளை மீறிவதாகும் என்றும், இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவுகள் 21, 14 இவைகளை மீறுவதாகவும் உள்ளதாக வழக்குப் போடுகிறார். அவரின் வக்கீல் சோலி சொராப்ஜி.
ஆனால் அரசு வக்கீல், “பாஸ்போர்ட் என்பது அரசின் பத்திரம். அது அரசு கொடுக்கும் சலுகை. அதை ஒரு உரிமையாக எடுத்துக் கொள்ள முடியாது. பிரயாணம் செய்வது அடிப்படை உரிமை ஆகாது” என்கிறார்.
இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1920 பிரிவு 3-ன்படி இதை முறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் உண்டு. இந்தியாவை விட்டு வெளியேறுபவர் முறையான பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவரை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு.
இந்த பாஸ்போர்ட் முறையே 20-ம் நூற்றாண்டில்தான் ஆரம்பம் ஆனது. அதுவும் முதலாம் உலகப்போர் முடிந்த காலத்தில்தான் இந்த பாஸ்போர்ட் முறையை பல நாடுகள் கொண்டு வந்தன. யாராவது வேற்று நாட்டவர் அவர் நாட்டுக்கள் நுழைந்தால், அவரின் நாட்டின் அரசு கொடுத்த பாஸ்போர்ட் பத்திரம் கட்டாயம் என்று முறைப்படுத்தியது. அதைக் கொண்டு அவர் எந்த நாட்டின் குடிமகன் என்ற கண்டுகொள்ள முடியும் என்பதற்காக ஏற்படுத்திய முறையாகும். அந்த பாஸ்போர்ட்டை கொடுத்த நாடு, “எங்களின் குடிமகனுக்கு உங்கள் நாட்டில் தகுந்த பாதுகாப்பை கொடுக்கவும்” என்று மற்ற நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட அனுமதிச் சீட்டுத்தான் இந்த பாஸ்போர்ட் என்று இங்கிலாந்து சட்டம் சொல்கிறது. அதே போலவே மற்ற நாடுகளின் பாஸ்போர்ட் விதிமுறைகளும் இருக்கும். எனவேதான் பாஸ்போர்ட்டை “ஒரு அரசியல் பத்திரம்” (Political Document) என்பர்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் Kent vs Dulles என்ற வழக்கில், இருவர் பாஸ்போர்ட் கேட்கும்போது, அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்கள் இல்லை என்று உறுதிமொழி கொடுக்கத் தவறினார்கள் என்பதால் அவர்களுக்கு அமெரிக்க அரசு பாஸ்போர்ட் கொடுக்க மறுத்தது. அதை எதிர்த்து அந்த வழக்கு. அதில், பாஸ்போர்ட் என்பது ஒரு நாட்டின் குடிமகன் என்றும், அவர் வேறு நாட்டுக்கு சென்று தன் நாட்டுக்கு திரும்பும் போது, அவர் இந்த நாட்டின் குடிமகன் என்பதை உறுதி செய்து கொள்ளவும் வழங்கும் அரசு பத்திரம் என்று விளக்கம் சொல்லி உள்ளது.
ஆக, இந்த வழக்கில், ஒரு இந்திய குடிமகன் வெளிநாட்டுக்குச் செல்வது என்பது அவரின் அடிப்படை உரிமையா (Is it a Fundamental right to travel abroad?) என்ற கேள்வி மட்டுமே உள்ளது.
இந்திய சுப்ரீம் கோர்ட் கோபாலன் வழக்கில், ஒரு இந்திய குடிமகன் வெளிநாட்டுக்கு செல்வதை தடை செய்யும் சட்டம் எதுவும் இந்திய அரசு அதுவரை ஏற்படுத்தி வைக்கவில்லை என்று சொல்லியுள்ளது.
தனிமனித சுதந்திரம் என்பது அவன் எங்கு வேண்டுமானாலும் போய் வருவது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில், “வெளிநாடு செல்வது என்பது உரிமை இல்லை என்றும், அது ஒரு சலுகை” என்றும் சொல்லியுள்ளது. ஆனாலும் அவ்வாறு செல்வதை சட்டத்தின் மூலமே தடை செய்ய முடியும் என்றும் சொல்லியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில், “வெளிநாடு செல்வது என்பது தனிமனிதனின் சுதந்திரமும் கூட” என்று சொல்லியுள்ளது. இதை 1915 முதல் மேக்ன கார்ட்டா சட்டம் பிரிவு 42 ஐ காட்டி சொல்லியுள்ளது.
தனி மனித சுதந்திரம் என்றால் என்ன? அவன் விருப்பம்போல எந்த திசையிலும் திரும்பலாம், செல்லலாம். அதில் அவனின் விருப்பம் இருக்க வேண்டும். அதற்கு தடை இருக்க கூடாது. ஆனால் இது வெளிநாடு செல்வதையும் குறிக்குமா என்பதும் ஒரு கேள்வி. உள்நாட்டில் வேண்டுமானால் தடையில்லாமல் சென்று வரலாம். இதுதான் அரசியல் சாசனம் கொடுத்த அடிப்படை உரிமை.
சென்னை ஐகோர்ட் வி.ஜி.ராவ் என்ற வழக்கில் (நீதிபதி ராஜமன்னார் மற்றும் நீதிபதி வெங்கட்ராம ஐயர்) மனுதாரரின் பாஸ்போர்ட்டில் ரஷ்யா செல்வதற்கும் சேர்த்த அனுமதி வழங்கும்படி கேட்கிறார். மறுப்பது அவரின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்கிறார். அவ்வாறு அவரை தடை செய்ய முடியாது என்று தீர்ப்பு உள்ளது.
டில்லி ஐகோர்ட் ரவீந்திரநாத் மாலிக் என்ற வழக்கில், வெளிநாடு செல்வதும், திரும்பி வருவதும், அரசியல் சாசன சட்டம் பிரிவு 21-ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமை இல்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்த மட்டில், முதலாம் உலகப் போருக்கு முன்னர் இந்த பாஸ்போர்ட் முறை இருக்கவில்லை. இந்திய பாஸ்போர்ட் விதிமுறைகள் 1917 கொண்டு வரப்பட்டது. அதன்படி, பாஸ்போர்ட் என்பது இந்தியாவை விட்டு வெளியே செல்வதற்கும், வெளியே சென்றவர் இந்தியாவுக்குள் நுழைவதற்க்கும் ஆக இரண்டுக்கும் ஆன அனுமதி பத்திரம் என்று சொல்லியுள்ளது. இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1920 மட்டும் தான் அப்போதைய சட்டமாக இருந்தது. பின்னர் இந்திய பாஸ்போர்ட் விதிமுறைகள் 1950 கொண்டுவரப் பட்டது. அதில் பாஸ்போர்ட் கொடுப்பது, விசா கொடுப்பது போன்ற விதிமுறைகள் கொண்டுவரப் பட்டன. இந்தியாவை விட்டு வெளியேற பாஸ்போர்ட் அவசியம். வேறு நாட்டில் நுழைய விசா அவசியம். மறுபடியும் இந்தியாவுக்கு திரும்பி வர பாஸ்போர்ட் அவசியம்.
எனவே இந்த வழக்கில், வெளிநாடு செல்வது என்பது தனிமனித அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று ஏற்க முடியாது என்றும் அது ஒரு வகை சலுகையே என்றும் தீர்ப்பு கூறி விட்டது.
**