Monday, August 19, 2019

வேதத்தின் சுருக்கம்


வேதத்தின் சுருக்கம்:



மாதவன் பேர் சொன்னாலே அது வேதத்தின் சுருக்கம்தான் என்கிறார் பூதத்தாழ்வார்; ஒத்து என்றால் வேதம் என்று பொருள்.



“ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்

எத்தும் திறம் அறிமின் ஏழைகாள், ஒத்து அதனை

எல்லீரேல் நன்று, அதை மாட்டீரேல் மாதவன் பேர்

சொல்லுவதே ஒத்தின் சுருக்கு.”



(வேதத்தின் அர்த்தமும் முடிவும் இவ்வளவுதான். அது உத்தமமான திருமாலின் பெயரை ஏற்றமாகச் சொல்கிறது. ஏழைகளே, வேதத்தைப் படிக்க முடிந்தால் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை. மாதவன் பேர் சொன்னால் போதும், அதுதான் வேதத்தின் சுருக்கம்.)

**

ஒருவனையே நோக்கும் உணர்வு


ஒருவனையே நோக்கும் உணர்வு

பொய்கையாழ்வாரின் பாடல்



“பெயரும் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ

உயரும் கதிரவனே நோக்கும், உயிரும்

தருமனையே நோக்கும், ஒண் தாமரையாள் கேள்வன்

ஒருவனையே நோக்கும் உணர்வு.”



நதியும் கடலையே நோக்கும்.

தாமரைப்பூவும் சூரியனையே நோக்கும்.

உயிரும் எமனை நோக்கியே செல்லும்.

உணர்வு மட்டும் தாமரையில் விற்றிருப்பவளின் கணவனான நாராயணன் ஒருவனையே சென்றடையும்.

சிவனும் விஷ்ணுவும் ஒன்றே!


சிவனும் விஷ்ணுவும் ஒன்றே!



பொய்கையாழ்வார், சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்று ஒரு பாடல் பாடியுள்ளார்.


“அரன் நாரணன் நாமம், ஆன்விடை புள் ஊர்தி,

உரைநூல் மறை, உறையும் கோயில் வரை நீர்,

கருமம் அழிப்பு அளிப்பு, கையது வேல் நேமி,

உருவம் எரி கார், மேனி ஒன்று.”



பெயர் – பரமசிவன், நாராயணன்.

வாகனம் – எருது, கருடன்.

பெருமை சொல்லும் நூல்கள் – ஆகமம், வேதம்.

இருக்கும் இடம் – கையாலயமலை, பாற்கடல்.

தொழில் – அழித்தல், காத்தல்.

ஆயுதம் – வேல், சக்கரம்.

உருவம் – நெருப்பின் சிவப்பு, மேகத்தின் கருப்பு.

உடல் – ஒன்றே!

**