Saturday, June 4, 2016

Global Entry Programme

விசா
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கும், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கும் வந்து போகிறவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியன் பேர் இருக்குமாம்;
இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் வசிப்பவர்கள், இந்தியாவில் ஆழ வேரூன்றி இருப்பவர்கள் சுமார் மூன்று மில்லியன்கள் இருக்கலாமாம்;
இவர்கள் போவதற்குறிய விசா நடைமுறைகள் சற்று சிரமமாக இருந்தது; அதை, இப்போது எளிதாக்கி உள்ளனராம்; அமெரிக்காவில் குறிப்பிட்ட 40 விமான நிலையங்களில் இது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனராம்; அமெரிக்காவில் இப்படி எளிய முறை விசா வசதியை பெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா ஒன்பதாவது நாடாகச் சேர்ந்துள்ளது;
இதன்படி செக்யூரிட்டி கிளியரன்ஸ் நடைமுறை வெகு சீக்கிரம் முடிந்து விடும் வாய்ப்பு உள்ளது; இதற்கான உடன்படிக்கையை (எம்.ஓ.யு) இரு நாட்டின் அதிகாரிகளும் கையெழுத்துச் செய்துள்ளனராம்; இந்தியாவின் அமெரிக்க அம்பாசிடர் அருண் கே. சிங் அவர்களும், யு.எஸ். கஸ்டம்ஸ் டெபுடி கமிஷனர் கெல்வின் கே. மெக்அலீனன் இருவரும் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளனர்;
இனி அமெரிக்க விசா நடைமுறைகள் எளிதாகிவிடும் என்கிறார்கள்.

*

இந்திய ஐகோர்ட்டுகள்

இந்தியாவில் மொத்தம் 24 ஐகோர்ட்டுகள் உள்ளன; இதில் இருக்கவேண்டிய மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1079 ஆக இருக்க வேண்டும்; ஆனால் இப்போதோ, 621 நீதிபதிகள் மட்டும் தான் பணியில் உள்ளனர்; மீதி 458 நீதிபதிகள் இன்னும் நியமிக்கப்பட வேண்டும்; அந்த இடங்கள் காலியாக உள்ளன;
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன், மூத்த நான்கு நீதிபதிகள் கொண்ட அமைப்பை “கொலீஜியம்” என்பர்; இந்த அமைப்புதான், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளை நியமனம் செய்யும் அமைப்பு; அந்த அமைப்பு புதிய நீதிபதிகளை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது; ஆனால் அதை மத்திய அரசு, தேசத்தின் நன்மை என்ற காரணத்தால் சுப்ரீம் கோர்ட்டுக்கே மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பி உள்ளதாம்;
அலகாபாத் ஐகோர்ட்டில் மட்டுமே, 160 ஐகோர்ட் நீதிபதிகள் இருக்க வேண்டிய இடத்தில், 81 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்;
சென்னை ஐகோர்ட்டில் 37 நீதிபதிகள் இடம் காலியாக உள்ளது; மொத்தம் 75 நீதிபதிகள் கொண்ட அமைப்பு சென்னை ஐகோர்ட்;
ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த நேஷனல் ஜூடிசியல் அப்பாய்ண்ட்மெண்ட் கமிஷன் என்னும் என்.ஜே.ஏ.சி அமைப்பு சட்டத்தை சுப்ரீம்கோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை; அதில் அரசியல் தலையீடு இருப்பதுபோல உள்ளதாம்;
இந்த என்.ஜே.ஏ.சி. சட்டத்தை 2014 ஆகஸ்டு 13ல் மக்கள் சபையிலும், 2014 ஆகஸ்டு 14ல் மேல்சபையிலும் கொண்டு வந்து சட்டமாகியது; இது 99வது அரசியல் திருத்தச் சட்டம் ஆனது; அதை ஜனாதிபதியும் 2013 டிசம்பர் 31ல் ஒப்புதல் கொடுத்து சட்டத்தை நடைமுறை ஆக்கினார்; இது 2015 ஏப்ரல் 13லிருந்து நடைமுறைக்கு வரும் என்றது;
இந்த புதிய சட்டப்படி, இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி, அதன் இரண்டு மூத்த நீதிபதிகள், சட்ட அமைச்சர், இரண்டு எமினென்ட் நபர்கள் (முக்கியஸ்தர்கள்), இவர்கள் கொண்ட அமைப்பாக அது இருக்க வேண்டும்; இந்த முக்கியஸ்தர்களை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை, தலைமை நீதிபதியும், பிரதம மந்திரியும், எதிர்கட்சி தலைவரும் கொண்ட குழுவே தேர்ந்தெடுக்க வேண்டும்;
ஆனால், இதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொள்ளாமல், இந்த கொலீஜியம் நடைமுறையே தொடரலாம் என்றும், புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று சொல்லிவிட்டது;
ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும்போது, ஐகோர்ட் கொலியம் அமைப்பு, புதிய நிதிபதிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து, மத்திய அரசுக்கு அனுப்பும்; அது அதை சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் அமைப்புக்கு அனுப்பும்; சுப்ரீம் கோர்ட் கொலிஜயம் அந்த புதிய நீதிபதிகளின் பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்புவர்; ஜனாதிபதிதான் புதிய நீதிபதிகளை சட்டபூர்வமாக நியமிப்பார்;

**

Friday, June 3, 2016

நாலாவது குண்டு யாருடையது?

மும்பாய் ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு;
1948 ஜனவரியில் நடந்த மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய விசாரனை வேண்டுமாம்; புதிய கமிஷன் நியமித்து, அதில் உள்ள சதியை மீண்டும் விசாரிக்க வேண்டுமாம்; டாக்டர் பங்கஜ் பாண்டிஸ் என்பவர் இந்த பொதுநல மனுவை மும்பாய் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்; இவர் அபினவ் பாரத் என்ற அமைப்பின் டிரஸ்டி ஆவார்; ஏற்கனவே மகாத்மா காந்தி கொலை பற்றி விசாரனை செய்த ஜே.எல்.கபூர் கமிஷன், கொலை சதியை முழுமையாக வெளிக் கொண்டுவரவில்லை என்று கூறுகிறார்;
ஏற்கனவே நடந்த அந்த வழக்கில் அரசு தரப்பில், “காந்தியை, ஒரு கொலையாளி, தன் ரிவால்வார் மூலம் சுட்டான் என்றும், அந்த ரிவால்வார் மொத்தம் ஏழு குண்டுகள் கொண்ட துப்பாக்கி என்றும், அதில் மூன்று குண்டுகள் காந்தியின் உடம்பில் பாய்ந்தது என்றும், மீதி நான்கு குண்டுகளுடன் அந்த ரிவால்வாரை போலீஸ் பறிமுதல் செய்தது” என்றும் சொல்லப் பட்டுள்ளது;
ஆனால், இந்த பொதுநல வழக்கின் கூற்றுப்படி, “1948 ஜனவரி 30ல், காந்தியின் உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளது என்றும், அதற்கு ஆதாரமாக அன்றைய தின செய்தித் தாள்களிலும் அவ்வாறே நான்கு குண்டுகள் பாய்ந்து இறந்ததாகவே சொல்லப்பட்டுள்ளது” என்றும் கூறி உள்ளார்;
அப்படி என்றால், அந்த நான்காவது புல்லட் எங்கிருந்து வந்தது, யார் சுட்டது என்றும் கேள்வி எழுப்பி, அதனால் புதிய விசாரனைக் கமிஷன் கேட்டுள்ளார்;
இது மும்பாய் ஐகோர்ட்டில் ஜூன் 6ம் தேதி மும்பாய் ஐகோர்ட் தலைமை நீதிபதி DH வகேலா தலைமை தாங்கும் பெஞ்சில் வர இருக்கிறது;
நாத்துராம் கோட்சே சுட்டதில் மூன்று புல்லட்டுகள் மட்டுமே காந்தி உடலில் பாய்ந்தது, மீதி நான்கு புல்லட்டுகள் அவன் ரிவால்வாரிலேயே இருந்துள்ளது என்றால், காந்தி உடலில் பாய்ந்த நான்காவது புல்லட் யாருடையது என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்; நாத்துராம் கோட்சே தவிர, வேறு கொலையாளி இருக்கிறானா என்று கேட்கிறார்;
காந்தி கொலையில் வேறு சதி உள்ளதா என்றும், இந்த கொலைக்கும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கும் சம்மந்தம் உள்ளதா என்றும் கேட்கிறார்; காந்தி-ஜின்னா பேச்சு, காந்தி பாகிஸ்தான் சென்று மக்களை நேருக்கு நேர் சந்திக்க முடிவு செய்திருந்தது, அதற்கு முன்பே காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணி, இவைகளும் விசாரிக்கபட வேண்டியதே என்கிறார்;
காந்தி கொலை வழக்கில் வீரசவர்க்கர் சேர்க்கப்பட்டு, முடிவில் அவர் விடுதலை ஆனார்; இந்த வீரசவர்க்கர்கருக்கு எதிராக, கபூர் கமிஷன் விசாரனையில் சில விரும்பத்தகாத சொற்கள் சொல்லப்பட்டுள்ளன என்றும் அதையும் நீக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்; வீரசவர்க்கர் மீது இந்த மனுவை தாக்கல் செய்த டாக்டர் பங்கஜ் அபிமானம் உள்ளவராம்;
**