Friday, May 29, 2020

வாழிய முருகா!

கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த

பறியாக் குவளை மலரொடு காந்தள்

குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,

பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்

அருவி இன் இயத்து ஆடும் நாடன்

மார்பு தர வந்த படர் மலி அரு நோய்

நின் அணங்கு அன்மை அறிந்தும்,

அண்ணாந்து, கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி,

வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்!

கடவுள் ஆயினும் ஆக, மடவை மன்ற, வாழிய முருகே!

(நற்றிணை)

 

பெண் கடவுள் வசிக்கும் குன்றில் இருந்து விழும் கற்சுனை நீர், இலைகளால் சூழப்பட்ட (அடை இறந்து), மலர்ந்த பறிக்கப்படாத குவளை மலர்களையும், காந்தள் மலர்களையும், இரத்தச் சிவப்பு மலர்களையும் ஒன்றாகச் சேர்த்து மாலை போலக் கட்டி அணிந்து, நீண்ட மலைமுகடுகளை கொண்ட (பெரு வரை) அடுக்கிலிருந்து ஒளியூட்டும் (பொற்ப) சூர் மகளிரான தேவதைகளைப் போல விழுகிறது. அப்படிப்பட்ட மலையை கொண்டது அந்தப் பகுதியான அவன் வாழும் நிலம். அவன் மார்பைக் கட்டி அனைத்து இருந்தவள் இப்போது அவன் இல்லாமல் நோயால் வாடுகிறாள். முருகா! இதற்கு காரணம் நீ இல்லை என்பது உனக்கே தெரியும். இருந்தாலும், கடம்ப மலர்களை சூடியுள்ள இந்த வைத்தியன், உன்னால்தான் இது ஏற்பட்டது என்று வானத்தைப் பார்த்து உன்னை அழைக்கிறான். நீயும் இறங்கி வந்து அவளுக்கு மேலும் துன்பம் தருகிறாய். நீ, கடவுளே ஆனாலும் ஆகுக, முட்டாள் கடவுளே முருகா நீ வாழ்க!

(அவள் காதல் பைத்தியத்தில் இருக்கிறாள். பேய் ஓட்டும் வைத்தியனோ அது உன்னால் முடியும் என்று முருகனான உன்னை அழைக்கிறான். முட்டாள் கடவுளே, அவளோ அவள் காதலன் மேல் பைத்தியமாக இருக்கிறாள் என்பது உனக்குத் தெரியாதா? தெரிந்தும் அதை நம்பி நீயும் வந்திருக்கிறாயே முருகா!).


No comments:

Post a Comment