Saturday, October 31, 2015

வாழ்க சென்னை ஐகோர்ட்!

சென்னை ஐகோர்ட்டின் வக்கீல் சங்கத்தின் 125-ம் ஆண்டு விழா:

100 ஆண்டுகளைக் கடந்தால் நூற்றாண்டுவிழா அல்லது சென்டனியல்-Centennial; அதுபோல், 125 ஆண்டுகள் ஆனதால் அதற்கு குவாஸ்க்வி சென்டினியல் விழா Quasquicentennial என்கிறார்கள்; சென்னை ஐகோர்ட்டின் வக்கீல்கள் சங்கத்துக்கு பெயர் The Madras High Court Advocates Association or MHAA. அது தனது 125-வது பிறந்த தினத்தை குவாஸ்க்வி சென்டினியல் விழாவாக இன்று கொண்டாடியது. அதில், இந்த வக்கீல் சங்கத்தைச் சேர்ந்த 50 வருட வக்கீல் அனுபவம் கொண்டவர்களையும், அடுத்து 25 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்ட வக்கீல்களையும் அழைத்து சால்வை அணிவித்து பட்டயமும் கொடுத்து கௌரவப்படுத்தியது. பாரம்பரியமிக்க இந்த சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருப்பதுவே ஒரு சமுதாய மரியாதைதான் என்பதையும் மறுக்க முடியாது என்று பல மூத்த வக்கீல்கள் கூறி பெருமைப்பட்டுக் கொண்டனர். 


நமது சென்னை ஐகோர்ட் ஒரு பாரம்பரியமிக்க ஐகோர்ட்; அதை இன்னும் மெட்ராஸ் ஐகோர்ட் என்றே அழைக்கிறார்கள்-Madras High Court. சென்னை ஐகோர்ட்டுக்கு என்ன சிறப்பு என்றால், பழைய பரந்த இந்தியாவை, பிரிட்டீஸ் மன்னர்கள், ராணிகள் ஆண்ட காலத்தில், இந்தியா ஒரு காலனி நாடாக அவர்களின் ஆளுமையின் கீழ் இருந்து வந்தது; 

1862ல் இந்தியாவில் வாழும் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கடமையில், விக்டோரியா மகாராணி ஒரு "உரிமை சாசனத்தை" எழுதிக் கொடுக்கிறார். உரிமை சாசனம் என்பதுதான் Charter. அந்த சார்ட்டரின் படி, இங்கு மூன்று ஐகோர்ட்டுகளை உருவாக்கி அதற்கு நீதிபதிகளையும் நியமித்து அவர்கள், விக்டோரியா மகாராணிக்காக இந்தியாவில் நீதி பரிபாலனம் செய்ய முழு உரிமையும் கொடுக்கப்பட்டது; அப்படி ஒரு சார்ட்டர் மூலம் உருவாக்கப்பட்டதுதான் சென்னை ஐகோர்ட்டும்; இது உருவாகிய நாள்: 26 ஜூன் 1862ல். இதேபோல் பம்பாய் ஐகோர்ட்டும், கல்கத்தா ஐகோர்ட்டும் உருவாக்கப்பட்டது; எனவேதான் இந்த மூன்று ஐகோர்ட்டுகளையும் "சார்ட்டர்டு ஐகோர்ட்டுகள்" என்கிறார்கள்; இந்தியாவில் உள்ள மற்ற ஐகோர்ட்டுகள் எல்லாம், ஒரு "சட்டம்" ஏற்படுத்தி அதன் மூலம் உருவானவை. ஆனால் சார்ட்டர்டு ஐகோர்ட்டுகள் மட்டும் ராணியால் "உரிமை சாசனம்" எழுதிக் கொடுத்து உருவானவை. இதனால்தான் இந்த ஐகோர்ட்டுகளுக்கு ஒரு சில தனி சிறப்பு உரிமைகளும் இன்றும் உண்டு. மற்ற ஐகோர்ட்டுகளுக்கு அந்த சிறப்பு உரிமை ஏதும் இல்லை; உதாரணமாக, கடல்வழி கப்பல் விவகாரங்களை இந்த சார்ட்டர்டு ஐகோர்ட்டு மட்டுமே விசாரிக்கும் உரிமை கொண்டது; சென்னை ஐகோர்ட், தன் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் (சென்னை மாநகராட்சி பகுதிகளில்) தனது ஒரிஜினல் அதிகாரவரம்பை Original Jurisdiction வைத்துள்ளது. மற்ற ஐகோர்ட்டுகளுக்கு இப்படியில்லை; பெங்களூரில் உள்ள ஐகோர்ட்டுக்கு, பெங்களூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிவில் வழக்கை "நேரடியாக" விசாரிக்கும் உரிமை கொடுக்கப்படவில்லை. உள்ளூர் மாவட்ட கோர்ட்டில்தான் அப்படிப்பட்ட வழக்குகளை போடமுடியும், விசாரிக்க முடியும். 

மற்றொரு சிறப்பு;- உயில் சம்மந்தப்பட்ட வழக்குகளை சார்ட்டர்டு ஐகோர்ட் என்னும் சென்னை ஐகோர்ட் போன்றவைகள்தான் விசாரிக்கும் தனி அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஆனால் மற்ற ஐகோர்ட்டுகள் இப்படிப்பட்ட அதிகாரத்தை வைத்திருக்கவில்லை; ஏனென்றால், அந்த ஐகோர்ட்டுகள் எல்லாம் "சட்டத்தால் உருவாக்கப்பட்டவை". எனவே அதற்கு அத்தகைய அதிகாரங்களை கொடுக்காமல் அதற்கு கீழ் உள்ள கோர்ட்டுகளுக்கு கொடுத்து விட்டார்கள்; ஆனால் சார்ட்டர்டு ஐகோர்ட்டுகள் பிரிட்டீஸ் விக்டோரியா மகாராணியின் உரிமை சாசனத்தால் உருவாக்கப்பட்ட கோர்ட்டுகள் ஆகும். எனவே அப்போதே, ராணி, இத்தகைய மிதமிஞ்சிய சில அதிகாரங்களை இந்த ஐகோர்ட்டுகளுக்கு வழங்கிவிட்டார்; அதனால்தான், நமது மெட்ராஸ் ஐகோர்ட் என்பது பழம்பெருமை வாய்ந்தது என்று நாம் அடிக்கடி சொல்லிக் கொள்கிறோம். வாழ்க சென்னை ஐகோர்ட்!

No comments:

Post a Comment