Saturday, June 21, 2014

கங்கையாடிலென் காவிரியாடிலென்....

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகடல் ஓதநீ ராடிலென்
எங்கும் ஈசன்என் னாதவர்க்கு இல்லையே.

ஆடில் என் = தீர்த்தமாடுவதால் என்ன பிரயோசனம்?
கொங்குதண் = மணமுள்ள குளிர்ந்த.
குமரித்துறை = கன்னியாகுமரித்துறை.
ஓங்குமா கடல் = அலைகள் ஓங்குகின்ற பெரியகடல்.
ஓதநீர் = வெள்ளப் பெருக்கான நீர்.

என்னாதவர்க்கு இல்லையே = என்று சொல்லி வணங்காதவர்களுக்குப் பயன் இல்லை.


விரவாடும் பெருமானை...


கரவாடும் வன்நெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனல்ஏந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
--திருநாவுக்கரசு நாயனார் தேவராம்:

கரவு = வஞ்சனை
ஆடும் = பொருந்திய
வன்னெஞ்சர் = கொடிய மனத்தை உடையவர்.
அரியான் = அடையமுடியாதவர்.
கரவார்பால் = வஞ்சகம் இல்லாதவனிடத்து.
விரவாடும் = கலந்திருக்கும்.
விடை = இடபம்.
வித்தகன் = அறிஞர்.
அரவு = பாம்பு.
அங்கை = உள்ளங்கை.
 அனல் = தீ.

 இரவாடும் = ஊழிக்காலத்து இருளில் கூத்தாடும். 


Saturday, June 14, 2014

நட்சத்திர பல்லக்கு


நட்சத்திரங்கள் கூட்டமாகவே நகர்கின்றன. ஒவ்வொரு கூட்டமும் ஒரு வகையான உருவத்தில் இருக்கும். அந்த உருவத்தை வைத்து அவைகளுக்கு பெயரும் இடப்பட்டுள்ளன. அவ்வாறு 27 வகை கூட்டங்கள் உள்ளன. அவையே 27 நட்சத்திரங்கள் அல்லது நட்சத்திர கூட்டங்கள். ஒன்பது கிரகங்களையும் தாண்டி இந்த நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. அந்தந்த கிரகங்கள் அந்தந்த நட்சத்திர கூட்டங்கள் வழியாகச் செல்லும்போது, அவைகளின் கதிர்வீச்சால் பூமியில் உள்ள உயிர்களுக்கு (மனிதர்கள் உட்பட) சில வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. எது நமக்கு நன்மை செய்கிறதோ இல்லையோ, தீமை செய்யும் எதுவாக இருந்தாலும் மனிதனாகிய நாம் வணங்கி பணிந்து விடுவோம். அவ்வாறே இந்த நட்சத்திர கூட்டங்களை கடவுளாக கருதி நாம் வழிபாடு செய்கிறோம். அதேபோன்றே நவகிரகங்களயும் வழிபாடு செய்கிறோம். இறைநிலை என்பது நாம் அல்லது நாம் என்கிற ஆன்மா கடைசியில் சேரும் முக்திநிலை. அதைப்பற்றி நாம் அவ்வளவாக கவலைப் படுவதில்லை. ஏனென்றால், அது இப்பிறவியின் பிரச்சனை அல்ல. எனவே இப்பிறவியில் வாழ்வியல் மாற்றங்களை நமக்கு ஏற்படுத்தும் நட்சத்திர கூட்டங்கள், நவகிரகங்கள், இவைகளை இயக்குவதாக கருதப்படும் சிறுதேவதைகள் இவைகளை ஆதிமனிதன் அறிந்தவுடனேயே வழிபட ஆரம்பித்துவிட்டான். இன்றுவரை நாமும் தொடர்கிறோம். வளர்ந்தவனோ, இந்த வழிபாடுதான் அவனின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என திடமாக கருதுகிறான். தாழ்ந்தவனோ, தனக்கு அந்த கொடுப்பினை இல்லை என தேறுகிறான் அல்லது புலம்பி அரற்றுகிறான். முன்னர் வாழ்ந்த கிரேக்கர், எகிப்தியர், பாபிலோனியர், சீனர், இந்தியர், இதில் தீவிரமாக ஆராய்தறிந்து பல விஞ்ஞான உண்மைகளையும் வெளியிட்டுள்ளனர். இவைகளில் ஜோதிடம் மட்டும் இன்னும் நூறு சதம் பிடிகொடுக்காத விஞ்ஞானமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் பெரும்பாலோர்க்கு இது வருமானம் தேடித்தரும் மிகச்சிறந்த தொழில். வயிற்றுவலி இருக்கும்வரை அதற்கான மாத்திரை விலைபோகத்தான் செய்யும். இரண்டு எண்களைக் கொண்டு வேறு இரண்டு எண்களை உருவாக்கலாம். மூன்று எண்களைக் கொண்டு ஆறு எண்களை உருவாக்கலாம். நான்கு எண்களைக் கொண்டு பதினாறு எண்களை உருவாக்கலாம். இந்தவகையில் கற்பனை செய்து கொண்டால், இருபத்தேழு நட்சத்திரங்கள், அதன் நான்கு பாதங்கள், ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு அடைப்பு வீடுகள், என வரும் எண்ணிக்கை எத்தனை மாற்று எண்ணிக்கைகளில் வரும் என்று இதுவரை எந்த கம்யூட்டரும் கணக்கிடவில்லை என்றே கருதுகிறேன். ஒவ்வொரு எண்ணிக்கையும் ஒரு மனித ஆன்மாவின் விசித்திர வாழ்க்கை. எனவே எந்த ஜோதிடமும் ஒரு மனிதனின் வாழ்க்கை நிலையை குறிப்பிட்டு சொல்ல இயலாது. ஒரளவு பொதுவான வாழ்க்கை முறையை சொல்ல்லாம். அவையும் சுமார் அறுபது சதம் சரியாக இருக்கலாம் அல்லது 60 சதம் தவறாகவும் இருக்கலாம். எனவே மனிதன் ஜோதிடத்தை முன்வைத்து வாழமுடியாது. அப்படியொரு தெரிந்த வாழ்க்கையை வாழவும் மனிதன் தயாரில்லை. ஆனாலும் நான் என்னவாக ஆவேன் என்பதை தெரிந்து கொள்ள மனிதன் துடியாய் துடிக்கிறான். அந்த துடிதுடிக்கும் மனிதனுக்கு ஜோதிடம் ஆறுதல் கூறுகிறது. ‘அவனின் வயதான காலத்தில் பல்லக்கில் போவானாம்.’ எந்தப் பல்லக்கு என்பதை மட்டும் ஜோதிடம் சொல்லாமல் மறைத்தது.