Friday, August 15, 2014

நினைவுகள்-33

முன்கோபம் பொல்லாதது: (ஒரு லண்டன் வழக்கு)

லீட்ஸ் (Leeds) என்பது இங்கிலாந்தில் உள்ள ஒரு பெரிய நகரம். அந்த நகரில் சாமுவேல் என்றொரு அரசாங்க வெட்னரி டாக்டர். அவருக்கு ஒரு வீடு சொந்தம். அதை அவர் வாடகைக்கு விட்டிருக்கிறார். 2011ல் ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. டாக்டர் , காமராவையும், அதன் கம்யூட்டர் சிப்பையும் திருடிவிட்டார் என்று குற்றச்சாட்டு. அங்குள்ள மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதனால் அவருக்கு 12 வார சிறைதண்டனை கொடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக 140 மணி நேரம் சம்பளம் இல்லாமல் வேலைசெய்ய வேண்டும் என்று கோர்ட் உத்திரவு இட்டது. இது இல்லாமல் 700 டாலர் அபராதமும் கட்ட வேண்டும். (நம்ம ஊரிலும் இதுபோலக் கொண்டுவரலாம்.)

ஆனால், அரசாங்கமோ, இவருக்கு மெமோ கொடுத்து அலுவலக விசாரனை Domestic Enquiry நடத்தி விசாரிக்க வேண்டும் என்று கேட்டது. விசாரனையில் இவர் செய்தது குற்றம்தான் என்று நிரூபிக்கப் பட்டால், இவர் இந்த அரசாங்க வேலையான வெட்னரி டாக்டராகத் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. வேலையை விட்டு நீக்கி விடுவார்கள். அந்த விசாரனையில் இவர் குற்றம் செய்தார் என அவர்கள் முடிவுக்கு வந்தால், அதாவது if the committee is satisfied …. என்ற வார்த்தை உள்ளதால், ஒரு குழப்பம் வந்துவிட்டது.

உண்மையில் அந்த திருட்டு சம்பவம் என்னவென்றால்:
டாக்டரின் பக்கத்து வீட்டுக்காரர்கள் மாலை நேரம் வீட்டுக்கு வருகிறார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு பெண்ணும் ஒரு ஆணும். அவர்கள் வந்து பார்க்கும்போது, டாக்டரின் கட்டிட மேஸ்திரி பின்பக்கத்தில் உள்ள சுவரில் வேலை செய்து கொண்டிருக்கிறார். பக்கத்து வீட்டின் பக்கம் வரக்கூடாது என்று ஏற்கனவே அந்த மேஸ்திரிக்கு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கண்டிப்பாக சொல்லி இருந்தார்கள். இருந்தும், அந்த மேஸ்திரி இவர்கள் வீட்டிற்குள் வந்து வேலை பார்த்தார். அதை அந்த பக்கத்துவீட்டுப் பெண்மணி போட்டோ எடுத்தார். சாட்சி வேண்டுமல்லவா அதற்காக. அப்போதே அந்த டாக்டரையும் போட்டா எடுத்தார். அதைப் பார்த்த டாக்டர் அந்தப் பெண்ணைத் திட்டிக் கொண்டே வந்தார். டாக்டர் பிளான் வாங்காமல் அந்த கட்டிட வேலையை செய்கிறாராம். திடீரென்று பாய்ந்த டாக்டர், அவளின் காமராவை பறித்துக் கொண்டார். ரொம்ப வேலை காண்பித்தால், உன்னை அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று டாக்டர் மிரட்டினார். அந்தப் பெண்ணுக்கு துணைக்கு வந்த அடுத்த வீட்டுக்காரரையும், ஒரு கட்டையை வைத்துக் கொண்டு மிரட்டினார், அந்த டாக்டர். உடனே 999 எண்ணுக்கு போலீஸை கூப்பிடுகிறார்கள். (நம்ம ஊரில் போலீஸூக்கு 100). 999 வேகமாக வந்தது.டாக்டரை அரெஸ்ட் செய்தது. பின்னர் நடந்ததெல்லாம் கோர்ட்டில்.

டாக்டர் சொல்கிறார், பக்கத்துவீட்டுக்காரி என்மேல் ஏற்கனவே கடுப்பாக இருந்தவர். எனவே பொய் சொல்கிறார் என்கிறார். வெகுகாலப் பகை. நாங்கள் அந்த பெண்மணி வீட்டுப் பக்கம் போகவில்லை. அவர்தான் எங்களைப் போட்டோ எடுத்தார். நான் எடுக்கவேண்டாம் என்று சொன்னேன். அவர் கேமராவில் உள்ள சிம்-கார்டை கழற்றி எடுத்து என்னைப் பார்த்து, அந்த சிம்கார்டு கையை ஆட்டிக் கொண்டு, "This is my evidence you black bastard." இதுதான் சாட்சி, கருப்பனே! என்று கத்தினார். அந்த நேரத்தில்தான் நான் உணர்ச்சி வசப்பட்டு, அந்த சிம் கார்டை அந்த பெண்ணின் கையிலிருந்து பறித்து விட்டேன். மற்றபடி நான் அவரை மிரட்டவில்லை. இந்த விஷயத்துக்கும் நான் டாக்டராக இருப்பதற்கும் என்ன சம்மந்தம். நான் டாக்டர் தொழிலில் ஏதாவது தவறு செய்தால், என்னை வேலையை விட்டு நீக்கலாம். ஆனால், இது என் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். இதற்காக, என்மீது தொழில் சார்ந்த குற்றம் Professional misconduct செய்ததாகச்  சொல்வது ஏற்கமுடியாது. சிம் கார்டை திருடிவிட்டேன் என்று சொல்கிறார்களே! அதை நான் என்ன பணத்துக்காகவா திருடினேன், அதைத் திருட்டு என்று சொல்வதற்கு?

டாக்டர் தொழிலில் இதுவரை அவர்மீது ஒரு குறையும் இல்லை. மிகநல்ல டாக்டர் என்று பெயர் எடுத்தவர். இந்த ஒரு சம்பவம் அவரை உணர்ச்சிவசப் படுத்திவிட்டது, அவ்வளவே! இனிமேல் இதுபோன்று நடக்காது என்று டாக்டரும் உறுதி கூறி இருந்தாலும், அவர் பொதுச்சேவை செய்பவர், இப்படி நடப்பது பொதுநலனைக் கருதிப்பார்த்தால் அவரின் செயல் சரியல்ல. எனவே வேலையை விட்டு தூக்குகிறோம் என்று கூறிவிட்டனர்.

டாக்டர், அந்த முடிவை எதிர்த்து அப்பீல் போகிறார். அந்த அப்பீலில், டாக்டரின் வக்கீல், இனத்தைப் பற்றி (racial abuse) இருந்ததை, விசாரனை கமிட்டி கண்டுகொள்ளவில்லை என்று வாதாடினார். அப்பீல் கோர்டோ, 'டாக்டர் உணர்ச்சி வசப்பட்டது ஞாயமாக இருந்தாலும், அவர் நடந்து கொண்ட முறை சரியல்ல' என்று கருதியது. அதற்காக அவரை டாக்டர் வேலையை விட்டே தூக்கியது சட்டபூர்வமாக இல்லை. எனவே வழக்கை அந்த விசாரனைக் கமிட்டிக்கு திருப்பி அனுப்புகிறோம். மறுபடியும் விசாரித்து வேலையை தூக்காமல் வேறு தண்டனை வழங்க விசாரிக்க வேண்டும் என்று அப்பீல் கோர்ட் தீர்பளித்தது.
[Courtesy: www.Bailii.org case reference [2014] UKPC 13].

.

No comments:

Post a Comment