Monday, August 4, 2014

நினைவுகள்-25

கனவும் நினைவுதானோ?

கனவுகள் நிஜம்போலவே இருக்கின்றன. ஒரேயொரு வித்தியாசம் மட்டுமே. கனவில் நம் கண்கள் மூடியிருக்கின்றன. நினைவில் கண்கள் மூடவில்லை. நினைவு தப்பி இருக்கிறோம். நினைவு தப்பி இருந்தாலும் கனவு நிஜம் போலவே எல்லாவற்றையும் நமக்கு காண்பிக்கிறது. கண்விழித்தால் அது நிஜம் அல்ல.

விழித்திருந்தால் அது நினைவு. கண்மூடி நினைவு தப்பியிருந்தால் அது கனவு. நினைவில் இருந்தால் அது நினைவு. நினைவு தப்பியிருந்தால் அது கனவு. நினைவு உண்மை. கனவு உண்மையில்லை.

இல்லையில்லை, கனவும் உண்மைதான். கனவில் கண்ட உணர்வுகள், விழித்தவுடன் நினைவில் சிலமணிநேரம் நிலைத்திருக்கிறது. உடலும் அதை அனுபவித்ததாக உணர்கிறது. உணர்வதென்ன, அனுபவித்தேயிருக்கிறது. பின்னென்ன, கனவும் நினைவுதானே!

அப்படியென்றால், நினைவுகள் மட்டுமேதான் வாழ்வோ?
எது நிஜம்? எது நினைவு? எது கனவு?
கனவும் ஒரு நினைவுதான். நினைவும் ஒரு கனவு போலத்தான். நினைவும் கனவும் நிஜமில்லை என்றால், நிஜம் எது?

ஞானிகளின் விளக்கமோ வேறு. நிஜவாழ்க்கையில் நீ நினைவு என நினைப்பதும் கனவே என்கின்றனர். பிரபஞ்ச  வாழ்க்கையும் கனவு என்றால், நிஜம் எது?
ஞானிகள், நிரந்தரமான நிஜத்தை பேசுகிறார்கள் போல! ஆன்மா மட்டுமே நிஜம் என்ற அர்த்தத்தில். இந்த பிரபஞ்சபத்தில் நாம் இருக்கும்போது, நினைவுகள் நிஜம் என்றால், ஞானிகள் அதையும் கனவு என்கின்றனர். அதுபோலவே நாம் கண்ட கனவும் நமக்கு நினைவே; அந்த நினைவும் ஒரு நிஜமே.

ஒரு சிறு கணமேனும் நம் நினைவில் இருக்கும் எது ஒன்றும் நினைவுதான். அப்படிப் பார்த்தால், கனவும் ஒரு நினைவே, நினைவு நிஜமென்றால், கனவும் நிஜமே!


இந்த பிரபஞ்ச வாழ்வில், உணர்ந்தவை உண்மை; மற்றவை பொய்; கண்டதை, தொட்டதைக் காட்டிலும் உணர்ந்தவை உண்மை. கண்டு, தொட்டு, உணர்ந்தவை உண்மையென்றால், கனவிலும் இவை நிகழ்ந்தனவே! ஆனால் ஏதோவொரு வித்தியாசம் மட்டும் இருக்கிறது, சொல்லத் தெரியவில்லை!!!
.

No comments:

Post a Comment