வக்கீலும்
வாய்தாவும்:
பொதுவாகவே
வக்கீலும் வாய்தாவும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று சொல்வர். வாய்தா
இல்லாத வழக்கே இல்லை. ஒரு வழக்கை நடத்துவதைக் காட்டிலும், அதை வாய்தா வாங்குவதற்கு
ஒரு வக்கீலுக்கு மிகுந்த திறமை வேண்டும். நீதிபதி அவ்வளவு எளிதில் வாய்தா கொடுக்க
மாட்டார். ஆனாலும் சில வக்கீல்கள் இதில் கைதேர்ந்தவர்கள். திறமையாகப் பொய்சொல்லி
வாய்தா வாங்கி விடுவார்கள்.
(வாய்தா என்பது ஒரு வழக்கை அன்றைய தேதியில் நடத்தாமல்,
வேறு ஒரு நாளுக்கு விசாரித்துக் கொள்ளலாம் என நாளை நீட்டிப்பது. இதனால் வழக்கு
நடக்காமல் இழுத்துக் கொண்டே போகும்.).
இந்த
வாய்தாவைப் பற்றி பழங்கதை ஒன்றும் உள்ளது. மிகச் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
"ஒரு
வயதான வக்கீல் இருந்தார். அவருக்கு ஒரு சில வழக்குகளே இருந்தன. தினமும்
கோர்ட்டுக்குப் போவார். அவரின் வழக்குகளை வாய்தா வாங்கிக் கொண்டு வந்துவிடுவார்.
வழக்கை நடத்தி முடிக்கமாட்டார். ஒருநாள், அவருக்கு உடல்நலம் இல்லை. எனவே அவரின்
மகனை கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தார். அவரின் மகனும் புதிதாக வக்கீல்
ஆகியிருந்தான். கோர்ட்டுக்குச் சென்ற
மகன், கேஸ் கட்டை பிரித்து, தந்தை நடத்தும் வழக்கைப் படித்துப் பார்த்தான். மிகச்
சுலபமான வழக்காக இருந்தது. இதை சுலபமாகச் ஜெயித்து விடலாமே என்று நினைத்து,
நீதிபதியிடம், 'இன்றே இந்த வழக்கை நடத்துக்கிறேன் என்று கூறினான்.' அவரும் ஒப்புக்
கொண்டு வழக்கை நடத்தினார்கள். வழக்கில் இவன் வெற்றியும் பெற்று விட்டான். ஜெயித்த
சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்தான்.
இங்கு,
வீட்டில், அப்பா-வக்கீல் இருக்கிறார். மகன் -வக்கீல் வந்தவுடன், 'கேஸ் என்னவாச்சு,
வாய்தா வாங்கி விட்டாயா?' என்று கேட்கிறார். அவனும் நடந்ததை கூறி, இந்த வழக்கை
நான் மிகச் சுலபமாக ஜெயித்து விட்டேன் அப்பா' என்று சந்தோஷமாகக் கூறுகிறான்.
அப்பாவுக்கோ,
கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. 'உன்னை யார், இந்த கேஸை நடத்தச் சொன்னது? நான் சொன்னேனா? ஏன் இப்படி
முட்டாள்தனமாக நடந்து கொண்டாய்? நீ போய் வாய்தா மட்டும்தானே உன்னை வாங்கி வரச்
சொன்னேன்? இப்படி மோசம் பண்ணிவிட்டாயே? இந்த வழக்கு வெகுகாலமாக நடந்து கொண்டு
வருகிறது. நீ பிறந்தபோது இந்த வழக்கு என்னிடம் வந்தது. இதில் கிடைக்கும் வக்கீல்
பீஸை வைத்துத்தான் உன்னை வளர்த்து, பள்ளியில் படிக்கவைத்து, வக்கீலுக்கும் படிக்க
வைத்தேன். இதை இப்படி ஒரேநாளில் பாழ்பண்ணி விட்டாயே. இனி நான் எதைக் கொண்டு
வருமானம் பண்ணுவது?' போடா முட்டாளே' என்று கத்திவிட்டார்.
அவனுக்கு
ஒன்றுமே விளங்கவில்லை. இளம் கன்று. அனுபவம் இல்லை. தெரிந்திருந்தால், வாய்தாவை
மட்டும் வாங்கி வந்திருப்பான். பாவம். (இது ஒரு உதாரணத்துக்காகச் சொல்லப்படுகிற
ஒரு வேடிக்கைக் கதையே!)
.
No comments:
Post a Comment