கோபார்சனரி (Coparcenary) என்னும் பூர்வீகச் சொத்துக்களில் வாரிசு உரிமை:
1956 சட்டத்தின் பிரிவு 6ஐ – 2005ல் திருத்தி விட்டார்கள். (இந்த திருத்தல் சட்டத்தின்படி மகன்களைப் போலவே மகள்களுக்கும் சரி சம பங்கு உண்டு என்று திருத்தப்பட்டுள்ளது).
2005 திருத்தல் சட்டத்தின் படி புதிய பிரிவு 6:
(1) இந்து மித்தாக்சரா கூட்டு குடும்பத்தில், 2005 திருத்தல் சட்டம் வந்த பின்னர், மகனைப் போலவே மகளுக்கு பிறப்பால் சம பங்கு உண்டு.
இந்த 2005 சட்டத்துக்குப் பின்னர், இந்து மித்தாச்சரா கூட்டுக் குடும்பம் என்பது மகனையும், மகளையும் சேர்த்தே குறிக்கும்.
ஆனால், 20.12.2004 தேதிக்கு முன்னர், அந்த கூட்டுக் குடும்பச் சொத்தை அப்போது உள்ள கோபார்சனர்கள் பாகம் செய்து கொண்டிருந்தாலும், விற்பனை செய்து இருந்தாலும், மகள் அதில் பங்கு கேட்க முடியாது.
(2) அவ்வாறு மகளுக்கு கூட்டுக் குடும்பச் சொத்தில் உள்ள அவளின் பாகத்தை, அவள் தன் வாழ்நாளில் உயில் போன்றவைகள் மூலம் எழுதி வைக்கும் அதிகாரம் அவளுக்கு உண்டு.
(3) 2005 திருத்தல் சட்டம் வந்த பின்னர், ஒரு இந்து ஆண் தனது கூட்டுக் குடும்ப சொத்தை விட்டு விட்டு இறந்திருந்தால், அதில் இறந்த அவருக்கு உள்ள பங்கு மட்டும், அவரின் வாரிசுகளுக்கு இன்டஸ்டேட் அல்லது டெஸ்டமெண்டரி வழி மூலம் கிடைக்கும். (அவரின் பங்கு, மீதி இருக்கும் கோபார்சனர்களுக்கு போய் சேராது).
இந்த கோபார்சனர் இறந்த விட்ட நிலையில், அங்கு ஒரு கற்பனை பாகம் நடத்தி, அந்த பாகப்பிரிவினையில், இறந்த கோபார்சனருக்கு ஒரு பங்கும், உயிருடன் இருக்கும் மற்ற கோபார்சனர்களுக்கு தலைக்கு ஒரு பங்கும் பிரித்துக் கொள்ள வேண்டும். இறந்த கோபார்சனரின் பங்கு மட்டும், அவரின் வாரிசுகளுக்கு இன்டஸ்டேட் அல்லது டெஸ்டமெண்டரி முறையில் கிடைக்கும். அதாவது இறந்தவரின் கோபார்சனரி பங்கு, மற்ற கோபார்சனர்களுக்கு போகாது; (1956-க்கு முன்னர் இறந்தவரின் கோபார்சனரி பங்கு, உயிருடன் இருக்கும் மற்ற கோபார்சனர்களுக்கே போய் சேரும், மாறாக இறந்தவரின் வாரிசுகளுக்குப் போகாது என்ற நிலை இருந்தது).
எனவே 2005 திருத்தல் சட்டத்துக்குப் பின்னர், ஒரு கோபார்சனர் இறந்து விட்டால், கற்பனை பாகப் பிரிவினையில், இறந்த கோபார்சனருக்கும், அவரின் மகன்கள், மகள்கள் எல்லாரும் தலைக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்வர். 1956 சட்டப்படி, இறந்த கோபார்சனரும், அவரின் மகன்களும் மட்டுமே எடுத்துக் கொண்டனர். (2005 திருத்தல் சட்டப்படி, அதில் மகளையும் இப்போது சேர்த்துக் கொண்டனர்).
எனவே, மகனைப் போலவே மகளும் ஒரு கோபார்சனர் பங்குதாரர் ஆகி விட்டார்.
இறந்தவருக்கு மகனோ, மகளோ ஏற்கனவே இறந்து விட்டால், அவரின் பிள்ளைகள், கோபார்சனரி முறைப்படி அந்த தகப்பனின்/தாயின் பங்கை பெற்றுக் கொள்வார்கள்.
இதேபோல், இறந்தவரின் மகன்/மகள் இறந்து, அவரின் பிள்ளைகள் இருந்தால், அவர்களும், அதேபோல கோபார்சனரி முறைப்படி அந்த பாட்டன்/பாட்டி பங்கைப் பெறுவார்கள்.
(4) 2005 திருத்தல் சட்டத்துக்குப் பின்னர், பாயஸ் ஆப்ளிகேஷன் (Pious obligation) என்ற முறை ஒழிக்கப்பட்டது. அதாவது, தந்தையின்/பாட்டனின்/ பூட்டனின் கடனை அவரின் மகன்/ பேரன்/ கொள்ளுப் பேரன் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. 2005க்கு பின்னர் ஏற்பட்ட இந்த வகையான கடனை, அவரின் மகன்/பேரன்/கொள்ளுப்பேரன் கொடுக்க வேண்டிய சட்டக் கட்டாயம் இல்லை.
ஆனாலும், 2005 சட்டம் வருவதற்கு முன்னர் ஏற்பட்ட கடனை, கொடுத்தாக வேண்டும்.
(5) 2005 சட்டம் வருவதற்கு முன்னர், அதாவது 20.12.2004 தேதிக்கு முன்னர், ஒரு கோபார்சனர் இறந்து விட்டிருந்தால், அப்போது ஒரு கற்பனை பாகப் பிரிவினை நடந்து, அவரின் மகன், பேரன் இவர்களுக்கு கோபார்சனரி சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு இருப்பார்கள். அப்படி பாகம் நடந்து இருந்தால், அந்த சொத்தில் மகளுக்கு பங்கு என்ற இந்த திருத்தல் சட்டம் செல்லாது.
பாகப்பிரிவினை என்று இங்கு சொல்வது – பதிவு செய்யப்பட்ட பாகப் பிரிவினைப் பத்திரங்கள் மட்டுமே. (வாய்மொழி பாகப் பிரிவினை செல்லாது; கூர்சீட்டு முறையில் பாகம் பிரித்துக் கொண்டாலும் செல்லாது; கோர்ட்டில் பாக வழக்குப் போட்டிருந்தாலும் செல்லாது; கோர்ட் வழக்கில் பைனல் டிகிரி கொடுத்திருந்தால் மட்டுமே அந்த பாகம் செல்லும்).
குறிப்பு: இந்த 2005 திருத்தல் சட்டம் வருவதற்கு முன்பே, ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு இவைகள் ஒரு திருத்தல் சட்டம் கொண்டு வந்து, அதன்படி மகள்களுக்கும் கோபார்சனரி கூட்டுக் குடும்பச் சொத்தில் சம பங்கு கொடுத்து விட்டது.
அதன்படி தமிழ்நாடு திருத்தல் சட்டம் 1989ல் கொண்டு வந்தது. அதன்படி, ஒரு ஆண் கோபார்சனர் (தகப்பன் என்று வைத்துக் கொள்வோம்) இறந்து விட்டால், அவர் இறக்கும் போது, மகனை மட்டும் கோபார்சனர் என்று நினைக்காமல், மகளையும் ஒரு கோபார்சனர் என்று நினைத்து, அவளுக்கும் ஒரு கோபார்சனரி பங்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு திருத்தல் சட்டம் சொல்கிறது. அதில், 1989-க்கு முன்னர் திருமணம் நடந்து கணவர் வீடு சென்ற பெண்ணை கோபார்சனர் என்று ஏற்றுக் கொள்ளவில்லை; திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டிலேயே இருக்கும் பெண்ணை மட்டுமே கோபார்சனர் என்று ஏற்றுக் கொண்டது; இதை ஒட்டியேதான் 2005 மத்திய அரசின் திருத்தல் சட்டம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது).
கோபார்சனரி சொத்தும், மகளின் உரிமையும் – ஒரு விளக்கம்:
1956-க்கு முன்னர், பழைய இந்து தர்ம சட்டமே அமலில் இருந்து வந்தது. அதன்படி பெண்களுக்கு சொத்தில் எந்த உரிமையும் கொடுக்கவில்லை. அதாவது, வாரிசு முறைப்படி ஒரு பெண்ணுக்கு சொத்தே கிடைக்காது. அவளாகவே தன் சேமிப்பைக் கொண்டு சொத்து வாங்கி வைத்துக் கொள்ளலாம். யாராவது உறவினர் அவளின் திருமணத்தின் போதோ, பின்னரோ, ஒரு சொத்தை அவளுக்கு சீதனமாக (செட்டில்மெண்டாக) கொடுக்கலாம். அதை சீதனச் சொத்து என்பர். அதன்படி, 1956-க்கு முன்னர் ஒரு பெண்ணுக்கு அவள் கிரயம் வாங்கிய சொத்தும், சீதனமாகக் கிடைத்த சொத்தும் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அவளின் தகப்பன், தாய், பாட்டன், பாட்டி சொத்துக்கள் எப்போதும் வாரிசு முறைப்படி கிடைக்காது. (ஏனென்றால், அவள் பிறந்த வீட்டிலேயே வாழும் பெண் இல்லை; புகுந்த வீட்டில் வாழும் பெண்). இதுதான் 1956-க்கு முன்னர் இருந்த பெண்களின் நிலை.
ஒரு ஆணின் சொத்தை அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் மட்டுமே சர்வைவர்ஷிப் (Survivorship) என்ற முறையில் அடைந்து கொள்வர். (அதாவது உயிருடன் இருக்கும் மகன், பேரன், இறந்த ஆணின் சொத்தை அடைவதை சர்வைவர்ஷிப் என்பர்). இதைத்தான் கோபார்சனரி சொத்து என்பர். இதில் அந்த ஆண்களின் மனைவி, மகள் போன்ற எந்தப் பெண்ணுக்கும் பங்கு கொடுக்க மாட்டார்கள். அதாவது சர்வைவர்ஷிப் முறைபடி பங்கு கொடுக்க மாட்டார்கள். அப்படி இறந்த ஒரு கோபார்சனரின் விதவை மனைவியை மற்ற கோபார்சனர்கள் பாதுகாத்து (உணவு, உடை, இருப்பிடம் கொடுத்து) வர வேண்டும். அது அவர்களின் சட்டக் கடமை. இப்படி இருந்த நிலையில், ஒரு கோபார்சனர் இறந்து விட்டால், அவரின் விதவை மனைவி, மற்ற கோபார்சனர்களை (பங்காளிகளை) நம்பியே இருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. 1937-ல் இதை மாற்ற நினைத்து ஒரு புது சட்டத்தை கொண்டு வருகிறார்கள். அது கோபார்சனரி சொத்துக்களில் விதவையின் பங்கு உரிமைச் சட்டம் 1937 என்று கொண்டு வந்தார்கள். அதன்படி, ஒரு கோபார்சனரி ஆண் இறந்து விட்டால், அவரின் விதவை மனைவி, அந்த இறந்த கணவரின் கோபார்சனரி பங்கை எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதை அவள், அவளின் வாழ் நாள் வரை ஆண்டு அனுபவித்து வரலாம் என்றும், ஆனாலும் அவள் அந்தப் பங்கை விற்பனை செய்ய முடியாது என்றும், (அப்படியே விற்பனை செய்தாலும், அது அவளின் வாழ்நாள் வரைதான் செல்லும் என்றும்), அவள் வாழ்நாளுக்குப் பின்னர், அந்தப் பங்கு சொத்தானது, அவளின் இறந்த கணவனின் மற்ற தாயாதிகள் என்னும் பங்காளிகளுக்குப் போய் சேரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இப்படியாக, விதவைகளை மட்டும் ஓரளவு பாதுகாத்தார்கள். முழுவதுமாக சொத்து உரிமை கொடுக்கவில்லை.
பின்னர், 1956-ல் பழைய இந்து சட்டத்தையே மாற்றி, பழைய பழக்க வழக்கங்களையும் மாற்றி, புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன்படி, 1956-க்கு பின்னர் ஒரு ஆண் சம்பாதித்த சொத்தில், அவரின் இறப்புக்குப் பின்னர், அவரின் எல்லா வாரிசுகளுக்கும் (மகன், மகள் உட்பட, மனைவி, தாய் இவர்களுக்கும்) சம பங்கு கொடுத்து விட்டார்கள். பெண் சம்பாதித்த சொத்தில், அவள் இறப்புக்குப்பின்னர், அவளின் கணவர், மகன், மகள் இவர்களுக்கு சம பங்கு கொடுத்து விட்டார்கள்). ஆனால், பூர்வீக சொத்து என்று சொல்லும் கோபார்சனரி சொத்துக்களில் ஒரளவு சீர்திருத்தம் செய்தார்கள். அதை முழுமையாகச் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். 1956 இந்து வாரிசு உரிமை சட்டம், பழைய பிரிவு 6 இப்படியான கோபார்சனரி சொத்துக்களைப் பற்றிச் சொல்கிறது.
1956 சட்டத்தின் பழைய பிரிவு 6-ல் கோபார்சனரி சொத்துக்கள்:
1956 சட்டம் வருவதற்கு முன்னர், ஒரு ஆணின் கையில் இருந்த சொத்துக்கள் அனைத்தும் கோபார்சனரி சொத்துக்களே. ஒரு ஆண் 1956-க்கு முன்னர் இறந்து விட்டால், அது அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களுக்கு மட்டுமே கோபார்சனர்கள் என்ற முறையில் பிறப்பால் பங்கு உரிமை அவர்களுக்கே போய் சேர்ந்து விடும். அதில் பெண்களுக்கு (மனைவிகள், மகள்கள், தாய்கள்) இவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது. இந்த நிலையை 1956 சட்டம் பிரிவு 6 ஒரளவு மாற்றியது. அதன்படி, ஒரு கோபார்சனர் ஆண் இறந்து விட்டால், அப்போது இறந்தவருக்கும் அவரின் மகன், பேரன் இவர்களுக்குள் ஒரு கற்பனை பாகப் பிரிவினை செய்து கொள்ளவேண்டும் என்றும், அதில் இறந்த கோபார்சனருக்கு ஒரு பங்கு கிடைக்கும். அந்தப் பங்கை அவரின் தனிச் சொத்தாகக் கருதி, அவரின் மனைவி, மகள், மகன், இறந்த மகன், மகள் இவர்களின் குழந்தைகள் இவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளது. இதில் இறந்த கோபார்சனரி ஆணின் பங்கு மட்டுமே அவரின் மனைவி, மகள் இவர்களுக்குக் கிடைக்கும். அது ஒரு சிறு பங்குதான். ஆனால் மற்ற கோபார்சனர்கள் என்று சொல்லும் இறந்தவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் இவர்களுக்கு பெரிய பங்கு கிடைத்துவிடும் நிலை இருந்தது.
இதை மாற்றி, ஆந்திரா மாநிலம் 1987-ல் மகளையும் ஒரு கோபார்சனர் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பெண் என்ற காரணத்துக்காக அவளை ஒதுக்கி விடக்கூடாது என்று 1956 சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது. இது சரியான அணுகுமுறை என்று நினைத்த தமிழ்நாடு அரசும் அதையே அப்படியே ஏற்றுக் கொண்டு 1989-ல் தமிழ்நாடு திருத்தல் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, மகளையும் கோபார்சனர் என்று ஏற்றுக் கொண்டு அவளுக்கும் கோபார்சனரி என்னும் பூர்வீகச் சொத்தில், மகனைப் போலவே சரி சம பங்கு கொடுத்தது. ஆனாலும், திருமணம் ஆகி கணவர் வீட்டுக்குச் சென்றவரை எப்படி கோபார்சனர் என்று ஏற்றுக் கொள்ளமுடியும் என்ற தர்க்கவாதம் காரணமாக, திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டில் இருக்கும் பெண்ணையே கோபார்சனர் என்று ஏற்றுக் கொண்டு, அவளுக்கும் மகனைப் போலவே சரிசம பங்கு கொடுத்தது.
இதற்குப்பின்னர், இந்த முறை சரியாக இருப்பதைக் கண்ட மத்திய அரசு, இந்து வாரிசு உரிமை திருத்தல் சட்டம் 2005ஐ கொண்டு வந்தது. அதில் மகளும் கோபார்சனர் என்றும், அவள் க்கும் மகனைப் போலவே சம பங்கு உண்டு என்று சட்டத்தை திருத்தியது.
**
No comments:
Post a Comment