Tuesday, October 7, 2014

நினைவுகள்-45

உயில் என்பது “ஒருவரின் உயிர் போனபின்பு, அவரின்ஆசை.”

உயிரே போய்விட்டது; ஆனாலும் இறந்தவரின் ஆசை போகவில்லை!
இனி இந்த உலகத்தில் நமக்கென்று ஏதுமில்லை;
அதன்பின் என்ன ஆசை வேண்டிக்கிடக்கிறது;
மனிதன் பேராசைக்காரன் என்பதால், இந்த உயில் ஏற்பாடு.
தன் உயிருக்குப்பின், தனது விருப்பம் என்ன என்று சொல்லிச் செல்வது.
பொதுவாக, வேறு ஆசைகளைக் காட்டிலும், தன் சொத்துக்களை தனது வாரிசுகள் எப்படி பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பதிலேயே இவர்கள் உயில் எழுதி வைத்தார்கள். சொத்தைப் பற்றிய உயில்கள்தான் அதிகம்.
The Last Will and Testament என்று ஆரம்பித்து எழுதினாலும் ‘கடைசி ஆசை’ என்று சொத்தைத் தவிர வேறு எதையும் சொல்லிவிட்டுச் செல்லவில்லை.
வாரிசு இல்லாதவர்கள், அதைக்கொடுக்காத கடவுளுக்கு கொடுத்துவிடுவர்.
வெளிநாடுகளில் தான் வளர்த்த நாய், பூனை, கிளி இவைகளுக்கு கொடுப்பர்.

உயிலை எழுதி வைத்துவிட்டால், அவரின் வாழ்நாளுக்குப்பின், அவரின் சொத்தைப் பங்கு பிரிப்பதில் பிரச்சனை குறையும் என்று இவர் நினைப்பார். ஆனால் உண்மையில் மிக அதிகமாக உயில்களில் பிரச்சனை அதிகமாகித்தான் உள்ளது.

இந்த உயிலில் உள்ள வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் சில சமயங்களில் மண்டையை குழப்பி விட்டுவிடும்.

நானும் ஒரு உயிலில் குழம்பிவிட்டேன்.
சொத்தின் சொந்தக்காரர் ஒரு உயில் எழுதி பதிவு செய்துவிட்டு இறந்துவிட்டார்.
அசல் உயில் கிடைக்கவில்லை. பதிவு செய்த நகல் கிடைத்தது. (Certified copy from the Registrar’s office). அதில் ஒரு எழுத்து சரியாகத் தெரியவில்லை. அந்த ஒரு எழுத்துதான், இந்தச் சொத்து யாருக்கு போகவேண்டும் என்று முடிவெடுக்கும் எழுத்து.
அதாவது, அவரின் மகனுக்குச் சொல்கிறார்....
‘இந்தச் சொத்தை, என் ஆயுளுக்குப்பின், (எ)(உ)னது பேரப்பிள்ளைகள் அடைய வேண்டியது.’
பேரப்பிள்ளைகள் யார்? என் பேரப்பிள்ளைகளா? அல்லது உன் பேரப்பிள்ளைகளா?
குழம்பித்தான் போய்விட்டோம். ஒருவழியாக அவர்களே சமாதானமாக முடிவெடுத்துக் கொண்டார்கள். கோர்ட்டுக்குப் போகவில்லை.

நீதி சொல்வதற்கென்றே தனிப் புத்திசாலித்தனமும் வேண்டும்.

பழைய காலத்தில் உயில் எழுதி வைத்துவிட்டப் போவதற்குப் பதிலாக, வேறு ஒரு குறிப்பை சொல்லி விட்டு அல்லது செய்துவிட்டுப் போவார்கள். அதுமாதிரி ஒரு செல்வந்தர், தன் நான்கு மகன்களுக்கும் நான்கு பைகளில் ஏதோ ஒன்றை வைத்துவிட்டு மரணமடைந்தார்.

முதல் பையில் மண்.
இரண்டாவது பையில் உமி.
மூன்றாவது பையில் மாட்டுச் சாணம்.
நான்காவது பையில் பொன் (தங்கம்).

இதைக் கொண்டு எப்படி சொத்துக்களை பங்கு பிரித்துக் கொள்வது என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள். பல ஊர் பெரியவர்கள், பஞ்சாயத்துதார்கள், மந்திரிகள், அரசர் எல்லோருக்கும் ஒன்றுமே விளங்கவில்லை. இறந்தவர் எதைச் சூசகமாகச் சொல்லியுள்ளார் என்று தெரியாமல் குழம்பினார்கள். எல்லோரும் பதில் சொல்ல முடியாமல் தோற்றபோது, ஒரு சிறுவன் மட்டும் மிக எளிதாக அதற்கு விடை  சொல்லிவிட்டான். அரசருக்கே ஆச்சரியம்!

அவன்தான் சாலிவாகனன்.
அவனின் தீர்ப்பு;
மண் பையை எடுத்தவன் நிலத்தை வைத்துக்கொள்;
உமி பையை எடுத்தவன் தானியங்களை வைத்துக்கொள்;
சாணப் பையை எடுத்தவன் மாடுகளை வைத்துக்கொள்;
பொன் பையை எடுத்தவன் தங்கத்தை வைத்துக்கொள்;
இதுதான் உங்களின் இறந்த தகப்பனின் எண்ணம் என்று மிக எளிதாகச் சொல்லிவிட்டானாம்.

யார் இந்த சாலிவாகனன்?
விக்கிரமார்கனை கொன்று சகநாட்டை நிறுவினவன் இவனே!
சுலோச்சனன் என்பவருக்கு ஒரு பெண். அவள் மணப் பருவத்தில் இருக்கும்போது, வேறு ஒரு ஆண்மகனைப் பார்த்து மயங்கி அவளிடம் கற்பைப்பறி கொடுத்து விட்டாள். ஆகா, என் குலத்துக்கு பலியைக் கொண்டுவந்துவிட்டேன் என்று அவனிடம் கதறியபோது, அவன் சொன்னான், 'நான் ஆதிசேஷன்; எனவே உனக்கு ஒரு திறமையான மகன் பிறப்பான்; கவலைப் படாதே!' என்று அவன் ஆறுதல் கூறிச்சென்றுவிட்டான்.

ஆனாலும், இந்த களங்கம் அரசனின் காதுக்கு எட்டியது. அவளை நாட்டைவிட்டு விரட்டி விட்டார். வேறு நாட்டில் அவளுக்கு இந்த சாலிவாகனன் பிறக்கிறான். சிறு வயதிலேயே அரசருக்குறிய விளையாட்டுத்தான் விளையாடுவானாம். அப்போதே கொடையும் கொடுப்பானாம். இவனைக் கண்டுதான் சாணக்கியர் வியந்து தன்னுடன் கூட்டிச் சென்று பெரிய அரசனாக்கினான் என்பர்.

இவன் மீது பொறாமை கொண்டு எதிர்த்த விக்கிரமார்க்கனை கொன்று தனி அரசை நிறுவினான்.
இவன் பின்னாளில், வைத்தியசாஸ்திரம், அசுவசாஸ்திரம், அலங்காரசாஸ்திரம் என்ற நூல்களை இயற்றினான்.

இவன் ஆண்ட வருடத்தைக் கொண்ட காலண்டர் கணக்கும் உள்ளது.
இவனை மைசூர் அரசன் என்றும் கூறுவர்.




No comments:

Post a Comment