குறிப்பு: இது மரணங்களைப் பற்றியது;
விரும்பாதவர் படிக்க வேண்டாம்.
“கிடைக்கும் நாளை வாழ்ந்துவிட்டுப்
போய்விட்டால், இறக்கும்நாளைப் பற்றிய கவலையில்லை.”
மரணங்களைப் பற்றிப் பேசும்போது பயமாகத்தான்
இருக்கும். அதை எதிர்கொள்ளும் துணிவும் நமக்கு இருப்பதில்லை.
ஆனால் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டதாம்.
இருந்தும் பயம்.
மரணத்துக்குப் பயப்படத் தேவையில்லை. மரணம்
நிச்சயிக்கப்பட்டது. இடையில் வராது. பயந்து வாழ்வது வீண். வரும்போது அது வரட்டும்
என இயல்பாக வாழவேண்டும்.
ஆனாலும் அது இயல்பானதாக இருக்கவேண்டும்
என்பதில் எல்லோருக்கும் ஆசையிருக்கும்.
சிலபேர் வயதாகி, இழுபட்டு,
மற்றவர்கள் திட்டும் அளவுக்கு சிரமப்பட்டு இவ்வுலகை விட்டுப் பிரிவார்கள்.
சிலருக்கு துன்பமான பிரிவு இருக்கும். சிலருக்கு அகால பிரிவு இருக்கும். சிலரின் உடல்
கிடைக்காமலேயே போகும். இவையெல்லாம் ஒருவகையில் கொடூரம் தானே!
சிலருக்கு இலகுவாக உயிர் பிரியும்.
இன்பமயமான பிரிவு.
ஆதிசங்கரர், 'ஆயுள்
பாவகம்' என்னும் ஜோதிடநூலை எழுதியுள்ளார்.
அதன் பாடல்களின்படி எப்போது ஒருவன் இவ்வுலகை
விட்டுப் பிரிவான் என்று ஜோதிடமாகச் சொல்லியுள்ளார். ஒவ்வொருவரின் ஆயுள்காலம்
எவ்வளவு என்று அறுதியிட்டுச் சொல்லியுள்ளார்.
இந்த இரகசியத்தை முதன்முதலில் ஆதிசங்கரன்
உமைக்கு உபதேசித்தாராம்.
அதை சித்தர்கள் பலவாறு சொல்லிச் சென்றுள்ளார்கள்.
அதைத்திரட்டி சாரதம்பாள் அருள்பெற்ற ஆதி
சங்கராச்சாரியார் “ஆயுள் பாவகம்” என 12,000 செய்யுட்களாக பாடியுள்ளார்.
இவரின் ஆயுட்பாவகத்தில் கடவுள் வணக்கமாக
முதல் பாடலாக உள்ளது, இது--
"ஓதிய பெரியோர் வாக்கா லுரைத்திடும்
நூல்கடன்னை
மேதினி தனிலே நன்றாய் விளங்கிடச் செய்யுளாகச்
சோதிடப் பலன்க ளெல்லாம் தொகுத்துயான் விளம்புதற்கு
ஆதியின் மூல மான வைங்கரன் காப்ப தாமே.
தனது குறிப்பு தவறாது என்று பாயிரத்தின்
கடைசி பாடல் இதோ ----
"பொன்னவ னிரவி செவ்வாய் புந்தியும்
பிறையுஞ் சுங்கன்
தன்னொடு காரி ராகு சனிமகன் கேதின் னோர்கள்
முன்னிவர் வேத நூலால் மொழிந்திடும் பலன்க
ளெல்லாஞ்
சொன்னது தவறா தென்று தொடங்கினான் சங்கரன்றான்."
யமன்: இவனே இந்த பயத்தைக் கொடுப்பவன்.
இவன் கசியப பிரஜாபதியின் மகனான விவசுவதன்
என்னும் சூரியனின் மகன்.
இவன் தென்திசை பாலகன்.
(அதனால்தானோ என்னவோ, ஊர்களில் பொதுவாக,
சுடுகாடு என்பது, ஊருக்குத் தென்திசையில் இருக்கிறது?)
இவனுக்குத் தருமன் என்றும் பெயர். இவன்
அருள் பெற்றவன்தான் பஞ்சபாண்டவர்களின் மூத்தவன் தர்மன் என்கிற யுதிர்ஷ்டன்.
யமன் என்றால் கூற்றுவன் எனப் பொருள்.
கூற்றுவன் என்றால் கூறுசெய்வோன்.
உயிரை உடலிலிருந்து பிரித்து கூறுசெய்து
கொண்டு செல்பவன். நடுநிலை தவறாதவன்.
யமுனாநதியை யமனின் சகோதரி என்பர். ஏனென்றால்
யமுனா சூரியனின் மகள்.
No comments:
Post a Comment