Monday, January 20, 2014

துஞ்சலுந் துஞ்சலிலாத போழ்தினும்.....

துஞ்சலுந் துஞ்சலிலாத போழ்தினும்.....
பஞ்சாக்ஷர என்னும் ஐந்தெழுத்தே துணை!  (பஞ்சாட்சரம்)

திருஞான சம்மந்தருக்கு அவரின் இளம் வயதில் உபநயனம் செய்ய பிராமணர்கள் ஏற்பாடு செய்தனர். அவருக்கு அதில் விருப்பம் இல்லையாம். ஆனாலும் உலகப் பழக்கம் என்பதால் சம்மதிக்கிறார். அப்போது அவர் பல வேதங்களைப் பாடினாராம்.

ஆனாலும் சகல மந்திரங்களுக்கும் வேதங்களுக்கும் வித்தானது (அடிப்படையானது) "பஞ்சாக்ஷர" என்னும் ஐந்தெழுத்து மந்திரமே என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி உள்ளார்.
அப்போதுதான் இந்த "துஞ்சலுந் துஞ்சலிலாத போழ்தினும்.........." என்ற  பஞ்சாக்ஷர திருப்பதிகத்தைப் பாடினார்.

"துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாடொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்(று)
அஞ்சவு தைத்தன வஞ்செ ழுத்துமே."

துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் = தூக்கத்திலும், தூக்கமில்லாத நினைவு நிலையிலும்.
நெஞ்சகம் நைந்து நினைமின் = மனம் கசிந்து உருகி நினைத்து வேண்டி.
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த = உண்மையான அன்போடு சிவனை துதித்தால்
வந்த கூற்று = வந்த எமனும்
அஞ்சவு தைத்தன = பயந்து நடுங்குவான்.
அஞ்செழுத்துமே = பஞ்சாக்ஷர என்னும் ஐந்து எழுத்தான மந்திரத்தைச் சொன்னாலே போதும்., வேறு மந்திரங்கள் எதுவும் தேவையில்லை.

"தும்ம லிருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே."

தும்மல், இருமல் தொடர்ந்து வந்தபோதும்,
வெம்மை என்னும் கொடுமையான நரகம் வந்த போதும்,
இம்மை என்னும் இப்பிறவியினால் ஏற்படும் வினைகள் சூழ்ந்தாலும்,
அம்மை என்னும் மறுபிறவியிலும்,
இவை எல்லாப் பிறவியிலுமே துணையாக இருப்பது இந்த ஐந்தெழுத்தான பஞ்சாக்ஷர என்னும் மந்திரமே!


பாலன் இவனென பரிவெய்திடேல்

 பாலன் இவனென பரிவெய்திடேல்:
திருஞான சம்மந்தர் சிறு பிள்ளை. மதுரைக்கு வந்துள்ளார். பாண்டிய மன்னனின் வெப்புநோயைப் போக்குவதற்காக வந்தவர்.

ஆனால் அப்போது மதுரையில் சமண சமயம் தலைத்தோங்கி உள்ளது. மன்னர்கூட அந்த சமண மதத்தைச் சேர்ந்தவர்தான். சமணர்கள் எவ்வளவோ போராடியும் பாண்டிய மன்னனின் வெப்பு நோயைத் தீர்க்க முடியவில்லையாம். எனவே திருஞான சம்மந்தர் வந்துள்ளார். இவர் சைவ சமயம் சார்ந்தவர்.

இதைக் கண்ட சமணர்கள் கூட்டமாக வந்து மொய்த்துக் கொண்டனர். திருஞானசம்மந்தரோ சிறுபிள்ளை. சைவர். "எங்களாலேயே தீர்க்க முடியாத இந்த நோயை ஒரு சிறுவன் எப்படி தீர்க்க முடியும்; முதலில் எங்களுடன் மதம்பற்றி வாதம் செய்யட்டும்; பின்னர், நோய் நீக்குவதைப் பற்றி யோசிப்போம்" என்று கூறித் தடுத்தனர்.

இதைக் கண்ட பாண்டிய மன்னனின் மனைவி, "வாதமெல்லாம் வேண்டாம். பாவம், திருஞானசம்மந்தர் ஒரு சிறுவர். அதிலும் சைவரில் அவர் ஒருவரே இங்கு இருக்கிறார். அவருக்குத் துணைக்குக் கூட ஆளில்லை. முதலில் எனது கணவரின் நோயைத் தீர்க்கட்டும். பிறகு சமய வாதங்களை வைத்துக் கொள்ளலாம்" என்று தடுத்து விட்டார்.

ஆனால், திருஞான சம்மந்தர் பாண்டியன் மனைவியைப் பார்த்து, "பெருந்தேவியே! நான் பாலகன் என்று நீங்கள் வருந்தவேண்டாம். ஆலவாயன் (ஈசன்) இங்கு இருக்கும்போது நான் இந்த ஈனர்களுக்கு பயப்படமாட்டேன்" என்று அவருக்கு ஆறுதலாகக் கூறி இந்தப் பாடலை பாடினார்.

"மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவ னென்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே."

மானின் நேர்விழி = மானைப் போல மிரட்சியான பார்வையைக் கொண்ட
வழுதிக்கு மாபெருந்தேவி = பாண்டியனுக்கு பெருந்தேவியானவளே!
பால்நல்வாய் = பால்மணம் மாறாத வாயையுடை இந்தப் பாலகன் மீது
நீ பரிவெய்திடேல் = நீ பரிதாபப் பட வேண்டாம் தாயே!

ஆனைமாமலை அதியாய இடங்களில் பல இன்னல்களைச் சேர்க்கும் இந்த ஈனர்களுக்கு நான் எளியவன் அல்லன். 


தோடுடைய செவியன் . . .

திருஞானசம்மந்தமூர்த்தி
சீர்காழியிலே சிவபாதர்-பகவதி என்ற பிராமணத் தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை. அந்தக் குழந்தை மூன்று வயதாக இருக்கும்போதே தன் தந்தையுடன் கோயிலுக்குச் செல்லவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. வேறு வழியில்லாமல், அந்தக் குழந்தையைக் கூட்டிக் கொண்டு போய் குளக்கரையில் உட்கார வைத்துவிட்டு, தந்தை குளத்தில் இறங்கி குளிக்கிறார். 

அவர் தண்ணீருக்குள் தலையை மூழ்கியதும், தந்தையைக் காணத குழந்தை அழ ஆரம்பிக்கிறது.  அதன் அழுகையைக் கேட்டு சிவன் தன் தேவியுடன் வந்து சிறுவனிடன் அமர்ந்தார். பார்வதி பொற்கிண்ணத்தில் தன் பாலைக் சுரந்து அத்துடன் ஞானத்தையும் சேர்த்து அந்தச் சிறுவனுக்கு ஊட்டிவிட்டு இருவரும் மறைகின்றனர்.

ஞானப்பாலை உண்ட சிறுவனின் வாயிலிருந்து பால் வடிகிறது. குளித்துவிட்டு வந்த தந்தை இதை கண்டு திகைக்கிறார். 'வழியில் யார் கொடுத்தாலும் பாலைக் குடிப்பாயா?' என்று கண்டிக்கிறார்.  'யார் உனக்கு பால் கொடுத்தது?' என்று கண்டிப்புடன் கேட்கும் தந்தைக்கு அந்த மூன்று வயது சிறுவன், ஆகாயத்தை நோக்கி தன் கையைக் காட்டி, "தோடுடைய செவியன் . . .. " என்ற பதிகத்தைப் பாடுகிறார் அந்த மூன்றே வயதான சிறுவன், திருஞான சம்மந்தர்.

இதுதான் இவர் முதன் முதலில் பாடிய தேவாரப் பாடல்.

“தோடுடையசெவி யன் விடையேறியோர் தூவெண்மதிசூடி
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங் கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.”

தோடுடைய செவிகளை உடையவன்
விடை= தரும உருவமான ரிஷபத்தில் ஏறியவன்.
வெண்மையான சந்திர பிறை சூடி
உள்ளங்கவர் கள்வன் = மனதை வசப்படுத்தும் கள்வன்.
காடுடைய சுடலைப் பொடி பூசி = சர்வசங்காரம் என்னும் மயானத்தில் வெந்த திருநீறு பூசி
ஏடுடைய மலரான் முன்னைநாள் பணிந்தேத்த = ஏடுகளை உடைய மலரான தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவர் வழிபட்ட

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் = பெருமையுடைய சீர்காழியில் விளங்கும் பெம்மான் இவனே தான் அவன்!


Saturday, January 18, 2014

கணாதர் : (an Atomic Scientist)

கணாதர் : (an Atomic Scientist)
உலக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு பல்லாயிரம் வருடங்கள் முன்பே, நமது சாஸ்திரங்களில் அணுவை பிளந்து சோதித்த அறிவுடைய நுண்மதியாளர் இருந்துள்ளனர்.
வைதீக சாஸ்திரங்கள் ஆறில் “வைசேஷி சாஸ்திரத்தை” செய்தவர் கணாதர். இந்த வைசேஷிகம் என்பது நியாய சாஸ்திரம் போல தர்க்க விஷயத்தை கூறுவது.
கணாதருடைய இளமைப் பெயர் ‘காசியபர்’. இவரே, அணுவையும் பிளந்து சோதித்த நுண்மதி உடையவராதலினாலே “கணாதர்” என பெயர் பெற்றாராம்.
கணம்=அணு, அதம்=அழிவு.

இந்திய விஞ்ஞானிகள் இந்த “வைசேஷி” தர்க்க சாஸ்திரத்தை படிக்கலாமே! இந்தியருக்கு எது தடையாய் இருந்தது என்று தெரியவில்லை. இந்தியரை வழிநடத்த ஆளுமையுடன் கூடி ஆள் இல்லை போலும்!

ஊழ் வெல்லும் புத்திக் கடவுள் விநாயகர்:

ஊழ் வெல்லும் புத்திக் கடவுள் விநாயகர்:
தேவர்களும், ரிஷிகளும், தாங்கள் செய்யும் செயல்கள்  எல்லாவற்றிலும் இடையூறு ஏற்பட்டுக் கொண்டு தடையாகிக் கொண்டே வந்தது.
அவ்வாறு எந்தத் தடையும் ஏற்படாமல் இருக்க வழி ஏற்படுத்தும்படி தேவர்களும், ரிஷிகளும் சிவனிடம் சென்று முறையிட்டனர். அப்போது சிவனின் முகத்தில் ஒரு ஜோதி தோன்றியது. அந்த ஜோதியானது அருகிலிருந்த உமாதேவியரது கண்கள் கூசுமளவு இருந்ததாம். அது கண்ட உமாதேவியார், "அந்தப் புத்திரனுடைய திருமேனி, யானைத் தலையும், தேவ கரங்களும், பூத உடம்பும், பொருந்துவதாக" என கூற, அவ்வாறே விநாயகர் உருவானார். சிவபிரான் அவரைக் கணங்களுக்கு தலைவராய் இருந்து அவரை வழிபட்டுத் தொடங்கும் எந்தக் காரியமும்இடையூறு வராமல் இனிது முடியும் என்ற அதிகார தெய்வமாகும்" என்று உரைத்தார்.
அவர் கணங்களுக்குத் தலைவர் ஆனதால் "கணேசர், கணபதி" ஆனார். விக்கினங்களை காப்பதால் "விக்னேஷ்வரர்" ஆனார்.  இது வராக புராண வரலாறு.
செய்யும் தொழில் நடப்பதும், நடக்காமல் தோல்வி அடைவதும் ஊழ்வசத்தாலும், புத்தி வசத்தாலும் ஆனது. 
ஆகவே ஊழ் மூலம் வருவதையும், புத்தி மூலம் வருவதையும் முன்னரே நாடித் தெளிந்து, அதற்குறிய உபாயங்களால் (மாற்றுவழிகளால்) விலக்கிக் கொள்ளலாம். ஆதலால், இந்த புத்தி தத்துவத்துக்குத் தெய்வம் "கணேசர்". அவரே சகல உயிர்களிடத்தும் விளங்குகின்ற புத்தி எல்லவற்றுக்கும் ஆதார ஸ்தானமாக உள்ளவர். அவரைத் தியானிப்பதால், புத்தி விரிதல் அடையும், மற்றும் அதற்குறிய உபாயமும் தோன்றும். இல்லையென்றால் எடுத்து கருமங்கள் (செயல்கள்) கைகூடாது.
எனவே கணேசருடைய தலையை யானைத் தலையாகப் பாவித்து, யானை ஞாபக சக்தியில் மிகச் சிறந்தது என்றும்; யானை தான் கண்டது, கேட்டது, உற்றது எல்லவற்றையும் ஒரு சிறிதைக்கூட ஒரு காலத்திலும் மறக்காமல் இருக்கும் இயல்புடையது என்றும்; யானை மிக்க வலிமை உடையது என்றும்; அந்த அளவுக்கு மிகுந்த சாந்தமுடையது என்றும்; யானைக்கு இணக்கமாக நடப்பவர்களுக்கு யானையே வசப்படும் என்றும்; ஆகிய சிறந்த குணநலங்களை உடையது.
யானையின் நுதல் பிரணவ வடிவாக இருப்பதால் அதை அடையாளப் படுத்துகிறதாம்,
அதன் பாசம் வியாபகத்தையும், அங்குசம் அருளையும், ஐங்கரமும் தனித்தனி ஒவ்வொரு குறிப்பினையும், பாதம் இரண்டும் சித்தி, புத்தியையும், பரந்த செவிகள் சர்வ தத்துவத்தையும், ஒரே நந்தம் பரஞானத்தையும், ஒடிந்த தந்தம் அபயத்தையும், லம்போதரம் பொறையுடைமையையும் உணர்த்தி இருக்கிறதாம்.
கஜாசியன்:

விநாயகக் கடவுளுக்கு கஜாசியன் என்ற பெயரும் உண்டு. தக்ஷ யாக பங்க காலத்திலே வீரபத்திரராலே இவரின் தலை கொய்யப்பட்டபோது, தேவர்கள் சிவனை நோக்கி, விநாயகர் சர்வ காரியங்களுக்கும் விக்கினம் வராமல் காப்பவராதலால் அவரை எழுப்பித்தருள வேண்டும் என்று பிராத்திக்க, அவர் உத்திரதிசையிலே (வடக்கு திசையிலே) தலைவைத்து யார் உறங்குகின்றாரோ அவர் தலையை கொய்து கொண்டு வந்து பொருத்தினால் எழுவார் என்று சொல்ல, அவ்வாறே வேறு யாரையும் காணது, ஒரு யானை மட்டும் அங்ஙனம் நித்திரை செய்வதைக் கண்டு அதன் தலையைக் கொய்து கொண்டுபோய் பொருத்த, அன்று முதல் கஜாசியன் ஆனார். இதுபற்றி வேறு பல கதைகளும் உண்டு.

நரி கதையால் கெட்ட திருதராஷ்டிரன்:

நரி கதையால் கெட்ட திருதராஷ்டிரன்:
திருதராஷ்டிரனின் மந்திரிகளில் ஒருவன் கணிகன். இவன் அதர்மமான ராஜ்ஜிய தந்திர உபதேசம் பண்ணுவதிலும், அக்கிரமமான இழிதொழிலைச் செய்யும்படி தூண்டுவதிலும் வல்லவன்.
இவனின் துஷ்ட உபதேசத்தாலேயே திருதராஷ்டிரன் தன் மைந்தனுடைய வேண்டுகோளுக்கெல்லாம் தலையாட்டினார்.
இவனின் துஷ்ட உபதேசங்கள்;
"ஒருவன் தனக்கு மைந்தனே ஆனாலும், சகோதரனே ஆனாலும், நண்பனே ஆனாலும், தந்தையே ஆனாலும், குருவே ஆனாலும், அவர்கள், தன்னுடைய முன்னேற்றத்துக்கு எதிரியாக இருந்தால், அவர்களை கொன்று ஒழிப்பதில் தவறில்லை" என்ற கெட்ட உபதேசம் செய்தான்.
இவன் திருதராஷ்டிர மன்னருக்கு கூறிய நரிக்கதை;
"தன்னலமும், தந்திரமும் கொண்டவை நரிகள். அதில் ஒரு நரி, தனக்கு நண்பனாக ஒரு புலியையும், ஒரு எலியையும், ஒரு செந்நாயையும், ஒரு கீரியையும், சிநேகமாகக் கொண்டு ஒருகாட்டில் வாழ்ந்து வந்தது.
அக்காட்டிலே ஒரு மான் கூட்டமும் இருந்தது. இந்த மான் கூட்டத்திற்கு அதிலுள்ள ஒரு கலைமான் அரசரான இருந்தது. இந்த கலைமான் மீது இந்த நரிக்கு ஒரு ஆசை இருந்தது. பலநாள் பலவாறு முயன்றும் அதை எதிர்த்து நிற்க முடியவில்லை. எனவே இந்த நரி அதன் சூழ்ச்சியை ஆரம்பித்தது.
ஒருநாள், அந்த நரி, புலியிடம் சென்று "அந்த கலைமானை நீ கூட முயற்சித்து முடியாமல் போய்விட்டதல்லாவா? அதனால் உனக்கு ஒரு யோசனை சொல்கிறேன் கேள் புலியே! அந்த கலைமான் தூங்கும்போது, நம் நண்பன் எலியை விட்டு அந்த மானின் காலைக் கடித்துவிட்டு வரச் சொல்லுவோம். அவ்வாறு கடித்தால், அந்த கலைமானால் வேகமாக ஓடிவிட முடியாது. நீயும் அதை எளிதில் பாய்ந்து பிடித்து விடலாம். உன் ஆசையும் நிறைவேறும்" என்று தந்திர புத்தியுடன் யோசனை கூறியது.
அதன்படியே எலியை விட்டு மானைக் கடிக்கவைத்து அந்த காயத்தால் ஒடிவிட முடியாத மானை புலி அடித்துக் கொன்றது.
மான் இறந்த விபரம் தெரிந்தவுடன் நரியும் அதன் நண்பர்களும் ஆக ஐந்து பேரும் நமக்கும் இரை கிடைக்கும் என்ற ஆசையில் ஒன்று கூடி நின்றன.
ஆனால், நரி தந்திரம் வேறு மாதிரி இருந்தது. இவர்களைக் கண்டவுடன், "மான் இரையை சாப்பிடுவதற்குமுன், எல்லோரும் குளித்துவிட்டு வர வேண்டும். நான் ஏற்கனவே குளித்துவிட்டேன். எனவே நீங்கள் அனைவரும் சென்று ஆற்றில் குளித்துவிட்டு வாருங்கள். அதுவரை நான் இந்த இரைக்கு காவல் இருக்கிறேன்" என்றுகூறி மற்ற நான்கையும் அனுப்பிவிட்டது.
புலி குளித்துவிட்டு முதலில் வந்துவிட்டது. அப்போது நரி ஏதோ சோகத்தில் இருப்பதைப் போன்று முகத்தை வைத்துக் கொண்டது. ஏன் இப்படி இருக்கிறாய் என புலி கேட்டது. அதற்கு தந்திர நரி, "பராக்கிரமமிக்க புலியாரே! எலி உன்னைப்பற்றி என்னிடம் சொல்லிய சொற்கள் உன் காதில் விழுந்தால் நீ இந்த மான் இரையை புசிக்கக்கூட விரும்பமாட்டாய்" என்று  தந்திரமாகக் கூறியது.
என்னைப்பற்றி எலி என்ன கூறியது எனக் கோபமாக புலி கேட்டது,
அதற்கு, "எலி சொல்லிக் கொள்கிறது, முதலில் அதுபோய் மானைக் கடிக்காவிட்டால், இந்த புலிக்கு ஏது இரை? என்று எகத்தாளமாக கூறுகிறது" என்று பொய்யாகப் போட்டுக் கொடுத்தது. இதை கேட்ட புலி, ரோஷம் மிகுந்து, ‘அப்படி ஒரு இரை எனக்குத் தேவையில்லை’ என அந்த இடத்தை விட்டுப் போய்விட்டது.
அதற்குப் பின்னர், குளித்துவிட்டு, எலி வந்து சேர்ந்தது. அதனிடம் இந்த நரி மற்றொரு தந்திரத்தை தயாரித்து, "நான் சொல்வதைக் கேள். இந்த கீரி சொல்கிறது, இந்த மான் இரையை புலி அடித்துக் கொன்றது. அந்த புலி வாயில் உள்ள விஷம் இந்த மான் இரையில் கலந்திருக்கும். அதனால் நான் உண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டு கீரி போய்விட்டது" என்று ஒரு பொருத்தமான கதையை நரி, எலியிடம் கூறியது. அவ்வாறு போகும்போது, எலியாகிய உன்னை அதற்கு இரையாகத் தரும்படி என்னிடமே அனுமதி கேட்கிறது. இதைக் கேட்ட எலி, சிறிதுகூட நிற்காமல் அந்த இடத்தை விட்டு ஓடியது.
அதற்குப் பின்னர், குளிக்கப்போன செந்நாய் வந்து சேர்ந்தது. அந்தச் செந்நாயிடம், "நீ எனக்கு நண்பன் மாத்திரமல்ல; ஒருவகையில் உறவினனும் ஆவாய்; அதனால் உன்னைக் காப்பாற்றுவது எனது கடமையும்கூட; புலி உன்னிடத்தில் அதிக கோபமாய் இருக்கிறது; இந்த மான் இரையை புசிப்பதற்காக தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு இங்கே வருவதாகச் சொல்லிச் சென்றுள்ள புலி மீண்டும் இங்கே வரும்; எனவே நீ அப்போது இந்த இடத்தில் இருப்பது நல்லதல்ல" என்று நரி கூறியது. இதைக் கேட்ட செந்நாயும் ஒடிப்போனது.
கடைசியாக கீரி குளித்துவிட்டு வந்து சேர்ந்தது. நரி, அந்தக் கீரியைப் பார்த்து, "என்னுடைய உடல் பலத்தினால் நான், புலியையும், எலியையும், செந்நாயையும் வென்று விட்டேன்; அவர்கள் எல்லோரும் என் முன் நிற்க முடியாமல் ஓடிவிட்டார்கள். உண்மையில் இவர்களைக் காட்டிலும் என்னை எதிர்க்க உனக்கு அதிக உடல்பலம் இருந்தால் என்னுடன் சண்டையிட்டு இந்த மான் இரையை நீயே புசித்துக் கொள்ளலாம்" என்று மிகுந்த தைரியம் இருப்பதுபோல கூறியது. இதைக் கேட்ட கீரி, "புலியையே வென்ற நீ, என்னை வெல்வது எளிது" என்று எண்ணிக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஒடியது.
எல்லோரையும் விரட்டிய நரி, அந்த மான் இரையை தானே தின்று மகிழ்ந்தது.

இந்தக் கதையை திருதராஷ்டிர மன்னனுக்கு கூறி, 'பலமில்லாத போதும், எதிரியை வெல்லலாம்' என்ற துஷ்ட உபதேசத்தை சொல்லி இந்த கணிகன் அவரை நம்ப வைத்தான். இதுபோன்ற பல உபகதைகளை இந்த கணிகன் கூறி, பாண்டவர்கள்மேல், திருதராஷ்டிரனுக்கு பகையை உண்டாக்கினானாம்.

சர்ப்ப,சர்ப்ப

சர்ப்ப,சர்ப்ப
இந்திரனுக்கு அவன் வகித்து வந்த இந்திரபதவி பறிபோயிற்று. அவன் பிரமஹத்தி தோஷத்தில் மாட்டிக் கொண்டதால் அவனின் இந்திர பதவி பறிபோனது.
ஆனால் தேவர்கள், அந்தப் பதவிக்குறிய அடுத்த இந்திரனை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் கூடி முடிவு செய்து அதன்படி அந்தப் பதவிக்குத் தகுதியானவன் ‘நகுஷன்’ என முடிவுக்கு வந்து அவனுக்கே அந்த பதவியை அளித்தனர்.
பதவி கிடைத்தால் பதவிக்குறிய கர்வமும் சேர்ந்துவிடும் என்பது இயற்கைபோலும். அந்த பதவியில் புதிதாய் வந்த நகுஷன் கர்வம் கொண்டான்.  இவன் வெளியே செல்லும் போது, இந்திரபதவியின் முறைப்படி, இவனை ஒரு சிவிகையில் வைத்து ரிஷிகள் தூக்கிச் செல்லவேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம்.
ஒருசமயம் இவனை ரிஷிகள் சிவிகையில் தாங்கித் தூக்கிச் சென்றனர். அவ்வாறு தூக்கிச் சென்றவர்களில் அகத்தியரும் ஒருவர். நகுஷன் அவர்களை விரைவாகச் செல்லுங்கள் என்று விரட்டி, சீக்கிரம், சீக்கிரம் என்ற அர்த்தத்தில் சமஸ்கிருத வார்த்தையாகிய ‘சர்ப்ப, சர்ப்ப’ என்று கடிந்து கொண்டான்.
அதைச் சகிக்காத அகத்தியர் கோபம் கொண்டு, ‘அஜகரம் என்னும் சர்ப்பமாக பூமியிற் பிறக்குமாறு’ அவனைச் சபித்தார். அதனால் அவன் இந்திர பதவியை இழந்து மலைப்பாம்பாகத் திரிந்தான்.

அவ்வாறு மலைப்பாம்பாகச் சஞ்சரிக்கும்போது, பாண்டவர்களின் வனவாச காலத்தில், பீமனை விழுங்கினான். ஆனால் பீமன் அந்த மலைப்பாம்பின் வயிற்றை கிழித்துக்கொண்டு வெளியே வந்தான். அப்போது தருமன் அந்த மலைபாம்பான நகுஷனுக்குச் சில உபதேசம் செய்ததால் அவனின் சாபம் நீங்கினான்.

கைலை பாதி, காளத்தி பாதி

கைலை பாதி, காளத்தி பாதி
நக்கீரர் கடைச்சங்கத்திலே அதன் இறுதி காலத்திலே தலைமை பெற்றிருந்த தெய்வப் புலவர். சிவபெருமான் அருளிச் செய்த ஒரு கவியில் குற்றம் கற்பிக்கப் புகுந்த அஞ்சாச் சதுரர். இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரர் செய்த உரையால் அவருடைய அளப்பருங் கல்வித்திறமும், அக்காலத்திலே, தமிழ் மொழிக்கு உண்டாகியிருந்த அபிவிருத்தியும் ஆற்றலும் நன்கு புலப்படும்.
நக்கீரர் தமக்கு ஒரு காலத்தில் உண்டாகிய குஷ்டரோகத்தை, ‘கைலைபாதி, காளத்திபாதி’ என்னும் பிரபந்தம் பாடி நீக்கினார்.
திருமுருகாற்றுப்படை, கண்ணப்பதேவர் மறம், முதலியன இவரால் பாடப்பட்டனவே. இவர் மதுரை கணக்காயனார் மகனார்.
திருமுருகாற்றுப்படை பாடக் காரணம்:
கடவுள் பூஜையிலே மனம் செல்லாமல் சிறிது தடுமாறினாலும் தவறு என அவ்வாறு சிறிது தடுமாறிய 1000 பேரைத் தேடி ஒரு பூதமொன்று திரிந்தது. 999 பேரை கண்டுபிடித்து அவர்களை ஒரு மலைமுகட்டிலே கொண்டுபோய் வைத்துவிட்டு, கடைசி ஆளான ஆயிரமாவது ஆளைத் தேடித் திரிந்தது.

அவ்வியல்புடைய இன்னுமொருவரைத் தேடித் திரிந்த பூதமொன்று, நக்கீரர் ஒரு தடாகத்தருகே பூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டு, அவரின் தியானத்தை திசை திருப்ப நினைத்தது. அவர் முன்னே வீழ்ந்த ஒரு ஆலிலையைப் பாதி மீனாகவும் மற்ற பாதியை பறவையாகவும் ஆக்கி, அவர் மனத்தைக் கவரும்படி செய்து, அவரையும் கொண்டுபோய் சிறைசெய்து மலைமுகட்டி வைத்தது. இவர்கள் 1000 பேரையும் நான் நீராடி வந்து உண்பேன் என்று நீராடப் போயிற்று. இதைக் கண்ட நக்கீரர் திருமுருகாற்றுப்படையைப் பாடி அறுமுகன் அருளாலே தம்மையும் மற்றையோரையும் காத்தாரென்பது அந்நூல் வரலாறு. 

பொல்லாப்பிள்ளையாரும் நம்பியும்

பொல்லாப்பிள்ளையாரும் நம்பியும்
நம்பியாண்டார் நம்பி என்பவர் திருநாரையூரிலே அவதரித்த ஆதி சைவப் பிராமணர். இவரின் தந்தையார், அங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து வருவார்.
ஒருநாள் தந்தையார் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததாம். அவரின் மகன் நம்பியாண்டார் நம்பியோ மிகச் சிறுவன்.
இவர் சிறுவராக இருக்கும்போது ஒருநாள் இவருடைய தந்தையார் இவரையழைத்து, ‘இன்றைக்கு நான் ஓர் ஊருக்குப் போகவேண்டி இருத்தலால், பொல்லாப்பிள்ளையார் கோயில் பூஜையை நான் நடத்துவதுபோல் சென்று நீயே நடத்திவருவாய்’ என கட்டளையிட்டார்.
அவ்வாறே நம்பியாண்டார் விதிமுறைப்படி பூஜைசெய்து நைவேத்தியத்தைப் பிள்ளையார் திருவமுது செய்வார் (உண்பார்) என நினைத்து “எம்பெருமானே திருவமுது செய்தருள வேண்டும்” என வேண்டிநின்றார் சிறுவன் நம்பி.
ஆனால் பிள்ளையார் திருவமுது எடுத்துக் கொள்ளவில்லை. திருவமுது செய்யாதிருப்பதைக் கண்டு, நம்பியாண்டார் மனம் வெதும்பி, ‘எம்பெருமானே! அடியேன் யாது தவறு செய்தேன்’ என்று அழுதுகொண்டு தமது தலையைக் கல்லிலே மோதப் புகுந்தார்.
உடனே பிள்ளையார், “நம்பி, பொறு” என்று தடுத்து அந்த நைவேத்தியத்தை திருவமுது செய்தருளினார்.
பின்னொருநாள் சோழராஜன் முன்னிலையிலேயே இவ்வற்புதம் நிகழ்ந்தது.
இந்த நம்பியாண்டாரே திருத்தொண்டர் சரித்திரமாகிய ‘திருவந்தாதி’ பாடியவர். தேவாரத்திருமுறை கண்டவரும் இவரே.


பாவம் போக்கும் நதிகளின் பாவம் எங்கே போகும்?

பாவம் போக்கும் நதிகளின் பாவம் எங்கே போகும்?
நவநதிகள் என்பது ‘கங்கை, யமுனை, நருமதை, சரசுவதி, கோதாவரி, காவிரி, பயோஷ்ணி, சரயு, குமரி, என்னும் ஒன்பதும் நவநதி எனப்படும்.
தம்மில் படிவோர் பாவமெல்லாம் தான் கவர்ந்து சுமக்கும். அவ்வாறு பாவங்கள் அதிகமாகி சுமக்க முடியாமல் போனதால் அவைகள் ஒன்று சேர்ந்து பெண்ணுருக் கொண்டு கைலை (கயிலை) சென்று, சிவனை வழிபட்டுத் தமது குறையைத் தீர்த்தருளும்படி வேண்டின.
சிவன், அந்த நதிகளை நோக்கி, ‘கும்பகோணத்திலே அக்கினி திக்கிலே ஒரு தீர்த்தமுள்ளது. வியாழன் சிங்க ராசியில் வரும்போது, மகநக்ஷத்திரத்திலே நீங்கள் அந்த தீர்த்தத்தில் சென்று படிந்து (மூழ்கி) உங்கள் பாவத்தைப் போக்கக் கடவீரென’ அநுகிரகித்தார்.
(வியாழன் என்ற குரு, சிம்மராசிக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை வரும்)

கிருஷ்ணன் கட்டுண்ட உரல்

கிருஷ்ணன் கட்டுண்ட உரல்
குபேரனுக்கு இரண்டு புத்திரர்கள். நளகூர்பன் மற்றும் மணிக்கிரீவன். இவர்கள் அழகுக்கு இலக்கியமானவர்கள். 
இவ்விருவரும் கைலாசத்திற் நிர்வாணமாக ஜலகிரீடை செய்து கொண்டிருக்கையில் (குளிக்கும்போது) நாரதர் கண்டு, நீங்கள் நிர்வாணிகளாக நீராடி நிற்கும் தோஷத்திற்காக மருதவிருக்ஷங்களாகக் கடவீர்கள் என்று சபித்தார். அவர்கள் அவ்வாறே பூமியில் நந்தன் வீட்டருகே இரண்டு மருத மரங்களாகப் பிறந்து நின்றனர்.

கிருஷ்ணனின் தவறுக்கு தண்டனையாக, அவனின் தாயார் கிருஷ்ணனை ஒரு உரலில் சேர்த்து வைத்து கயிறுகொண்டு கட்டிவிட்டாள். கிருஷ்ணன், தான் கட்டுண்ட உரலை இழுத்துப் போகும்போது அந்த உரலால் இடறப் பெற்ற அந்த இரண்டு மருதமரங்கள் வேரோடு சாய்ந்து இந்த இருவரும் சாபவிமோசனம் பெற்று தங்களின் பழைய வடிவம் பெற்று சாபம் நீங்கினார்கள்.

நைஷதம்

நைஷதம்
நிஷத தேச ராஜனாகிய வீரசேனனுக்கு இரண்டு  மகன்கள். ஒருவன் புஷ்கரன் மற்றவன் நளன். இந்த நளனின் மனைவியே தமயந்தி. இவர்களின் மகன் இந்திரசேனன். மகள் இந்திரசேனை.
நளன், கொடையாலும் கல்வியாலும் நடையாலும் படையாலும் அழகாலும் ஆண்மையாலும் தன்னின் மிக்காரும் ஒப்பாரும் இல்லாத சக்கரவர்த்தி.
இவன் கீர்த்தியை ஓர் அன்னப்பட்சி சொல்லக் கேட்ட தமயந்தி தன் சுயம்வரத்துக்கு இந்திரன் முதலிய தேவர்கள் வந்திருந்த போதும், அவர்களை விரும்பாது நளனை விரும்பி அவனுக்கு மாலையிட்டு சிறிது காலம் காமனும் ரதியும் போல வாழ்ந்திருந்தனர்.  
இவர்கள் மீது கலிபுருஷன் பொறாமை கொண்டு, நளனின் தமையனான புஷ்கர ராஜனை ஏவி நளனோடு சூதாடி அவனை வென்று, ராச்சியத்தைக் கவர்ந்து கொண்டு, நளனையும் அவன் மனைவி தமயந்தியையும் உடுத்த ஆடையோடு காட்டுக்கு விரட்டினான்.
மெல்லியலாகிய தமயந்தி கல்லும் முள்ளும் கொண்ட காட்டில் வருந்தியதைக் கண்டு, ஒருநாள் இரவு நளன், அவளைத் தனியே விட்டுவிட்டு மறைந்தான். அவள் தமியளாக (தனியாக) தேடிப் புலம்பி அலைந்து தப்பிக் கடைசியில் தன் தந்தைவீடு சேர்ந்தாள்.
 பின்னர், நளன் தமயந்தியை தேடிக் கண்டு அவளை அழைத்துச் சென்று, புஷ்கரனை வென்று முன்னர் போல ராச்சியம் பெற்று வாழ்ந்திருந்தான்.

இவன் சரித்திரத்தை விரித்துரைக்கும் நூல் “நைஷதம்”. இது தமிழிலும் இப்பெயராலேயே விளங்கும். நைஷதம் = நிஷத நாட்டு சரித்திரம்.

சித்தின்றிச் சடமில்லை, சடமின்றி சித்துமில்லை

சித்தின்றிச் சடமில்லை, சடமின்றி சித்துமில்லை
திருமூலர் செய்தருளிய நூல் திருமந்திரம்.
இது, சரியை, கிரியை, யோகம், ஞானம், என்னும் நான்கு பாதங்களையும் எடுத்துக் கூறுவது.
வேத-ஆகமப் பொருளை ஆராய்ந்தவர்க்கே இந்நூல் நன்கு புலப்படும். இது மூவாயிரம் மந்திரங்களையுடையது.

‘சித்தின்றிச் சடமும், சடமின்றிச் சித்தும் இல்லை’ என்பது இதன் சித்தாந்தம்.

திருமூலநாயனார்:
நந்திதேவர் மாணக்கராகிய “சிவயோகியார்” என்பவர், அகத்தியரைக் காணும் பொருட்டுத் தெற்கு நோக்கிச் சென்றார்.

அவர் அவ்வாறு செல்லும் வழியிலே, திருவாவடுதுறையில் ‘மூலன்’ என்னும் ஓர் இடையன் காட்டுவழியில் இறந்துகிடந்தான். அவன் இறந்ததை அறிந்த அவன் மேய்த்த பசுக்கள் கதறி அழுதன. அவ்வாறு அவைகள் கதறி அழுவதைக் கண்டு பரிவுற்று, சிவயோகியார் அந்த இறந்த உடம்பில் பிரவேசித்து, அவனைப் போலவே அவைகளை மேய்த்து ஆற்றிவிட்டு வந்தார்.

அவர் திரும்பி வந்து தனது சரீரத்தைத் தேடியபோது, அவரின் சொந்த உடம்பைக் காணாததால், அந்த மூலன் உடம்பிலே இருந்துகொண்டே மூவாயிரம் வருடம் யோகம் சாதித்த இவர், வருடத்திற்கு ஒரு மந்திரமாக மூவாயிரம் மந்திரங்களை அருளிச் செய்தவர். அவற்றின் தொகுதியே ‘திருமந்திரம்’ எனப்படும்.

அண்ட-பிண்டங்களின் தத்துவ சொரூபத்தை அநுபவ பிரத்தியக்ஷமாக உணர்ந்து உலகத்துக்கு வெளியிட்ட மகா ஞானிகளுள்ளே இவர் தலைமை பெற்றவர். இவருடைய உபதேசமெல்லாம் பெரும்பாலும் ரூபகமும் (உருவகமும்) பரிபாஷையுமாகவே இருக்கும். ‘சித்தின்றிச் சடமும், சடமின்றிச் சித்தும் இல்லை’ என்பது இவரின் சித்தாந்தம்.

'அணுவுளவனுமவனுளணுவுங் (அணுவுள் அவனும், அவனுள் அணுவும்)
கணுவற நின்ற கலப்பஃதுணரா
இணையிலியீச னவங்குமாகித்
தணிவற நின்ற சராசரந்தானே’.

சீவனுக்கு வடிவம் கூறிய திருமந்திரம் இதோ;
‘மேவிய சீவன் வடிவது சொல்லிடிற் (சீவனின் வடிவு சொல்வதென்றால்)
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு (பசுவின் ஒரு முடியை நூறாக்கி)
மேவியகூறதுவாயிர மாயினா     (அதை ஆயிரம் ஆக்கி, அதை)
லாவியின் கூறு நூறாயிரத் தொன்றே’ (நூறாயிரம் ஆக்கி கிடைப்பதில் ஒன்று).

பஞ்சேந்திரியங்களையும் அடக்குதல் கூடாதென்பதும், அடக்குங்கால் அறிவில்லாத சடத்தின் கதியாம் என்பதும், அவை தாமே அடங்கும் உபாயமறிவதே அறிவு என்பதும், அவர் கூறிய திருமந்திரம். அது இதோ:
‘அஞ்சுமடக்கடக்கென்பரறிவிலார்
ரஞ்சு மடக்கும்மரமிங்கில்லை
யஞ்சுமடக்கிலசேதனமாமென்றிட்
டஞ்சுமடக்காவறிவறிந்தேனே’.

இவர் கூறும் ஞானபூஜை வருமாறு:
‘உள்ளம் பெருங்கோயிலூனுடம்பாலயம்
வள்ளற்பிரானார்க்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத்தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப்புலனைந்தும் காளாமணிவிளக்கே’.

திருமுருகாற்றுப்படை:

திருமுருகாற்றுப்படை:
நக்கீரர், சுப்பிரமணியக் கடவுளின் பராக்கிரமங்களையும் பெருமைகளையும் அமைத்துப் பாடி அவர் அருள்பெற்ற நூல்.
பத்துப்பாட்டு என்னும் நூலினுள்ளே முதல்பாட்டு இது.
முந்நூற்றுப்பதினேழு அடிகளைக் கொண்டது. நச்சினார்கினியரால் உரை எழுதப்பட்டது.

இந்த நூலை பக்தியுடன் படித்து வந்தால் சுப்பிரமணியக் கடவுள் விரைந்துவந்து அநுகிரகம் புரிவார் என்று கண்டு கொண்டதால் அநேகர் அங்ஙனம் செய்வது பண்டுதொட்டு நிலவிவருகிறது.

கடவுள், எவ்வளவு கீழும் இறங்கி வருவார்

கடவுள், எவ்வளவு கீழும் இறங்கி வருவார்
திருப்பனந்தாள் என்னும் ஊர் காவிரியின் வடகரையில் உள்ள ஒரு சிவஸ்தலம். 
சிவபக்தியில் சிறந்த ஒரு பெண்மணி, தாம் தொடுத்த மாலையை, இங்குள்ள சிவபெருமானுக்கு சாத்த சென்றபோது, தமது உடை நெகிழ, இதை தனது இரு முழங்கைகளாலும் இடுக்கிக் கொண்டு மாலையை இடமுடியாமல் வருந்தி நின்றார்.
இந்தப் பெண்மணியின் பக்தியை உணர்ந்த சிவன், தனது தலையை கவிழ்ந்து சாய்த்து அந்த மாலையை ஏற்றுக் கொண்டானாம்.

குங்கிலியக்கலய நாயனார்  தமது கழுத்தில் கயிறுபூட்டி இழுக்க நிமிர்ந்தது இந்த லிங்கமே. இந்தஸ்தலத்திலே புராதன மடாலயம் ஒன்றும் உள்ளது.

கடவுளுக்கு வேஷம் தேவையில்லை

கடவுளுக்கு வேஷம் தேவையில்லை
அகஸ்தியர் சிவபக்தர். அவர் சிவபக்திக்குறிய வழிபாட்டு முறைப்படி தன் உடலில் திருநீறு அணிந்து பொதிகைக்கு சென்றார். அங்கு உள்ள விஷ்ணுதலத்துக்கு சென்றார். இவர் சிவபக்தர் என அறிந்த அங்குள்ள வைஷ்ணவர்கள் இவரை விரட்டி அடித்துவிட்டனர். இவரோ வெளியே சென்று, விஷ்ணு வழிபாட்டு முறைப்படி வேறு ஒரு நபர்போல விஷ்ணுதலத்துக்கு வர, அவர்கள் அனுமதித்தனர்.
உள்ளே சென்ற அகஸ்தியர், தனது திருக்கரத்தாலேயே விஷ்ணுவை தழுவி, அவரைக் குழைத்து, சிவனாக ஆக்கி, சிவனை வழிபட்டுவிட்டு வெளியே வந்தாராம். விஷ்ணு, சிவனாக மாறியதைக் கண்ட அங்கிருந்த வைஷ்ணவர்கள் தங்கள் கர்வம் அடங்கினராம். இந்த தலம் பாண்டிநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலமான திருக்குற்றாலம். இந்த தலம் சம்மந்தரால் பாடல் பெற்ற தலமும்கூட.
கடவுளுக்கு வேஷம் தேவையில்லைபோலும். மனம்நிறைந்த பக்தியே அவரை ஈர்க்கும் ஈர்ப்புவிசை.

திரிசங்கு சொர்க்கம்

திரிசங்கு சொர்க்கம்

அரிச்சந்திரனின் தந்தையின் பெயர் தான் ‘திரிசங்கு’. சொர்க்கத்துக்கு தனது ஆன்மா மட்டுமே செல்லும். உடல் செல்லாது. ஆனால் இவரோ, தன்னுடைய உடம்போடு சொர்க்கத்துக்கு செல்ல ஆசைப்பட்டார்.
இதற்காக, தனது குல குருவாகிய வசிஷ்டரை தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அவரோ அவ்வாறு உடலோடு செல்லக்கூடாது என்று மறுத்துவிட்டார். குரு மறுத்தால் என்ன, அவரின் புத்திரர் நமக்கு உதவாமலா போய்விடுவார் என நினைத்து, அவரிடம் சென்றார். அவரோ, ‘நீர், உமது குருவின் சொல்லை மதிக்கவில்லை’ என்று கோபித்து அனுப்பிவிட்டார்.
கடைசியாக விசுவாமித்திரரிடம் சென்று தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது தவ-வலிமையால், இந்த பூமியிலும் இல்லாமல், உண்மையான சொர்க்கத்திலும் இல்லாமல், இரண்டுக்கும் இடைப்பட நிலையில் ‘அந்தர சொர்க்கம்’ என்றொரு சொர்க்கத்தை உண்டாக்கி, அதில் திரிசங்குவை அவரின் உடலோடு அனுப்பி வைத்தார். அது அவர் பெயராலேயே ‘திரிசங்கு சொர்க்கம்’ எனப்பட்டது.

‘வந்தவேளை’ முடிந்தவுடன், ஆன்மாக்கள் உடலைவிட்டுப் பிரிந்து தனியேதான் பயணிக்கிறது. உடல் அதற்கு தேவையில்லைபோலும்! உடலின் இயக்கத்துக்குத்தான் ‘உயிர்’ தேவை போலும். ஆன்மாவுக்கு, ஒரு உயிருள்ள உடல்தேவை அவ்வளவே. உடல் என்பது ஆன்மாவால் இயக்கி வைக்கப்படும் ஒரு பொருள், அவ்வளவே!

ஆன்மா, உயிர், மனம்

ஆன்மா, உயிர், மனம்


தாதாசாரியார் என்ற பண்டிதர் காஞ்சிபுரத்திலே அப்பைய தீக்ஷிதர் காலத்தில் இருந்து வந்த ஒரு பண்டிதர். இவர் ஒரு வைஷ்ணவ பிராமணர். அப்பைய தீக்ஷிதர் மீது பொறாமை உடையவராய் தமக்கு நட்பினனான அவ்வூர் அரசனை வசியம் பண்ணிக் கொண்டு, தீக்ஷிதரை அவன் சமூகத்தில் வரவழைத்து அவரோடு வாதம் புரிந்தும் அவர்முன் வாதத்தில் நிற்கமுடியாமல் தோற்றவர். 

தீக்ஷிதருக்கோ மத்தியான காலத்திலே வயிற்றுவலி வருவது இயல்பு. அவ்வேளையில் அவரோடு வாதம் புரிந்து வெல்லக் கருதி, அரசன் சபைக்கு வரவழைத்து வாதம் புரிய தலைப்பட்டபோது தீக்ஷிதர் தமது உத்திரீயத்தை எடுத்து அரசன் முன்னே வைத்துவிட்டு வாதம் புரிந்தார். வயிற்றுவலி அந்த உத்தரீயத்தைப் பற்றிநின்று அதனை முடக்கி அலைத்தது. 

அதுகண்ட அரசன் அதிசயித்து அதன் காரணத்தை வினவ, தீக்ஷிதர் தனது பழைய வினைப்பயனை தானே விரும்பி அநுபவித்து வருவதாகவும், அங்ஙனம் செய்யாதிருந்தால் அடுத்த பிறவியில் அது தொடரும் என்றும், அதனால் இந்த வயிற்றுவலியை நான் என்னைவிட்டு நீக்கிக் கொள்ளவில்லை என்றார். இதைக்கேட்ட அரசன் அவர் மீது பேரன்பு கொண்டு தாதாசாரியுடைய வஞ்சக எண்ணத்தை எடுத்துக்கூறி, தாதாசாரியைக் கண்டித்து அவனின் நட்பையும் துறந்தான்.

ஆன்மாக்கள் தனது முன்ஜென்ம கர்மாக்களை, அடுத்த பிறவியில் ஒரு உடலில் வந்து அனுபவித்து வருகின்றன. அவைகளை அனுபவிப்பதற்காகவே அவைகள் இந்த உடலைத் தேடி மறுபிறவிகளை எடுக்கின்றன. 

அப்படியானால் நம்மில் இருக்கும் இந்த ஆன்மாவும் அதுவாகவே தேர்ந்தெடுத்துக் கொண்ட உடல்தானோ இந்த உடலும்?

அப்படியானால், இப்போது நாம் வாழும் இந்த வாழ்வும் நமது முயற்சியால் ஏற்படவில்லையா? நமது ஆன்மாவின் வாழ்வுதானா? நான் வாழும் வாழ்வு அந்த ஆன்மா வாழும் வாழ்வுதானா?

அப்படியானால் இந்த நான், எனது என்பதே இந்த ஆன்மாதான் தன்னை அப்படி கூறிக் கொள்கிறதா? 

அப்படியானால் ஆன்மா மட்டுமேதான் இந்த பிரபஞ்சத்தில் நிலையானதா? ஆன்மாவுக்கும் இறைநிலைக்கும் மட்டுமேதான் இந்த தொடர்பு உண்டா? 

Saturday, January 4, 2014

பரதநாடு

பரதநாடு

இந்த பெயர் வந்தது மிக மிகப் பழமையான காலத்திலேயே.
மகாபாரதக் கதை ஏற்பட்ட காலத்துக்கு முன்னரே இந்த நாடு பரதநாடு என்ற பெயருடனேயே விளங்கியது. 

சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் பிறந்த புத்திரன் பெயர் பரதன். 

(இராமாயண காலத்திலும், இராமனின் தம்பிக்கும் இப் பெயரே). 

இவன் துஷ்யந்தனுக்குப் பின்னர் ஆரிய தேசம் முழுவதையும் கட்டி ஆண்டான். அப்போதே இந்த ஆரிய தேசமானது அவனின் பெயரைக் கொண்டே "பரதவருஷம் அதாவது பரதநாடு" என்று பெயர் சூட்டிக் கொண்டது.

துஷ்யந்தனின் புத்திரன் பரதனுக்குப் பின்னர் அவனின் சந்ததிகளில்,
பரதனின் ஒன்பதாம் சந்ததியின் பெயர் "குரு." 
இந்த குருவின் பதினான்காம் சந்ததி "சந்தனு. "

சந்தனுவுக்கு நான்காம் சந்ததிதான் பாண்டவர்கள், கௌரவர்கள்.
இவர்களே பாரதத்தை ஆண்டவர்கள்.  

Tuesday, December 31, 2013

மன்மதன்

மன்மதன்:

விஷ்ணுவின் மானச புத்திரன் மன்மதன். மன்மதனின் பாரி (மனைவி) ரதி. மன்மதன் என்பதன் பொருள் மனதுக்கு கிளர்ச்சியைக் கொடுப்பவன் என்பது. மன்மதனை பிரம்ம புத்திரன் என்று கூறுவாரும் உளர்.
ரிக் வேதம் பிரமசைத்தன்னியத்திலே முதலில் எழுந்தது ‘இச்சை’ என்று கூறியுள்ளது. காம-இச்சைக்கு அதிதேவதையாகிய மன்மதனே புராணங்களில் பெரும்பாலும் பேசப்படுபவன்.
மன்மதன் அழகோடு கூடிய யவ்வனத்தை (இளமையை) அதிகரித்து நின்று ஆண் பெண்ணைச் சேர்த்து பிரஜாவிருத்திக்கு (மக்கள் உற்பத்திக்கு) உபகாரம் செய்யும் அதிகாரமூர்த்தி. மன்மதன் அரூபியாய் (உருவம் இல்லாமல்) வசந்தகாலம், நிலாமணிமேடை, மணற்குன்று, பூஞ்சோலை, சந்திரோதயகாலம், புஷ்பம், வாசனை, அழகு இவைகளை தனக்கு பரிவாரமாகக் கொண்டிருப்பவன்.
தாரகாதி அசுரரால் வருந்திய தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி மன்மதன் சிவபெருமான் மீது காமபாணங்களைச் செலுத்தி அவர் நெற்றிக்கண்ணுக்கு இரையாகி அங்கமிழந்து அநங்கன் என்னும் பெயர் கொண்டான்.
மன்மதன் பாரியாகிய ரதிதேவி, பார்வதியை கெஞ்சி தன் குறைகளைக் கூறினாள். பார்வதி, ரதியைத் தேற்றி, “உன் கணவன், கிருஷ்ணனுக்கு பிரத்தியுமனன் என்னும் பெயரோடு புத்திரனாகப் பிறப்பான். அந்தச் சிசுவை சம்பராசுரன் கவர்ந்து போய் கடலில் போடுவான். அந்த சிசுவை ஒரு மீன் கவர்ந்து விழுங்கும். அந்த மீனை ஒரு வலைஞன் பிடிப்பான். அந்த மீனை பிடித்துவந்து சம்பரனுக்குக் கொடுப்பார்கள். நீ அப்போது சம்பரன் வீட்டு வேலைக்காரியாக இருப்பாய். அப்போது இந்த மீனை நீ அறுத்து அதில் உள்ள சிசிவை எடுத்து கொள்வாய் அவனே உன் கணவன் மன்மதன். நீ அவனுடன் வாழ்வாய்” என்று கூறியருளினார்.

இந்தச் சரித்திரம் “வாமன பாகவத விஷ்ணு புராணங்களில்” கூறப்பட்டுள்ளது. ஸ்காந்த புராணத்திலே கூறப்பட்ட இந்த சரித்திரம் சற்று விகற்பமானது.