Showing posts with label Philosophy. Show all posts
Showing posts with label Philosophy. Show all posts

Saturday, January 18, 2014

கடவுளுக்கு வேஷம் தேவையில்லை

கடவுளுக்கு வேஷம் தேவையில்லை
அகஸ்தியர் சிவபக்தர். அவர் சிவபக்திக்குறிய வழிபாட்டு முறைப்படி தன் உடலில் திருநீறு அணிந்து பொதிகைக்கு சென்றார். அங்கு உள்ள விஷ்ணுதலத்துக்கு சென்றார். இவர் சிவபக்தர் என அறிந்த அங்குள்ள வைஷ்ணவர்கள் இவரை விரட்டி அடித்துவிட்டனர். இவரோ வெளியே சென்று, விஷ்ணு வழிபாட்டு முறைப்படி வேறு ஒரு நபர்போல விஷ்ணுதலத்துக்கு வர, அவர்கள் அனுமதித்தனர்.
உள்ளே சென்ற அகஸ்தியர், தனது திருக்கரத்தாலேயே விஷ்ணுவை தழுவி, அவரைக் குழைத்து, சிவனாக ஆக்கி, சிவனை வழிபட்டுவிட்டு வெளியே வந்தாராம். விஷ்ணு, சிவனாக மாறியதைக் கண்ட அங்கிருந்த வைஷ்ணவர்கள் தங்கள் கர்வம் அடங்கினராம். இந்த தலம் பாண்டிநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலமான திருக்குற்றாலம். இந்த தலம் சம்மந்தரால் பாடல் பெற்ற தலமும்கூட.
கடவுளுக்கு வேஷம் தேவையில்லைபோலும். மனம்நிறைந்த பக்தியே அவரை ஈர்க்கும் ஈர்ப்புவிசை.

திரிசங்கு சொர்க்கம்

திரிசங்கு சொர்க்கம்

அரிச்சந்திரனின் தந்தையின் பெயர் தான் ‘திரிசங்கு’. சொர்க்கத்துக்கு தனது ஆன்மா மட்டுமே செல்லும். உடல் செல்லாது. ஆனால் இவரோ, தன்னுடைய உடம்போடு சொர்க்கத்துக்கு செல்ல ஆசைப்பட்டார்.
இதற்காக, தனது குல குருவாகிய வசிஷ்டரை தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அவரோ அவ்வாறு உடலோடு செல்லக்கூடாது என்று மறுத்துவிட்டார். குரு மறுத்தால் என்ன, அவரின் புத்திரர் நமக்கு உதவாமலா போய்விடுவார் என நினைத்து, அவரிடம் சென்றார். அவரோ, ‘நீர், உமது குருவின் சொல்லை மதிக்கவில்லை’ என்று கோபித்து அனுப்பிவிட்டார்.
கடைசியாக விசுவாமித்திரரிடம் சென்று தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது தவ-வலிமையால், இந்த பூமியிலும் இல்லாமல், உண்மையான சொர்க்கத்திலும் இல்லாமல், இரண்டுக்கும் இடைப்பட நிலையில் ‘அந்தர சொர்க்கம்’ என்றொரு சொர்க்கத்தை உண்டாக்கி, அதில் திரிசங்குவை அவரின் உடலோடு அனுப்பி வைத்தார். அது அவர் பெயராலேயே ‘திரிசங்கு சொர்க்கம்’ எனப்பட்டது.

‘வந்தவேளை’ முடிந்தவுடன், ஆன்மாக்கள் உடலைவிட்டுப் பிரிந்து தனியேதான் பயணிக்கிறது. உடல் அதற்கு தேவையில்லைபோலும்! உடலின் இயக்கத்துக்குத்தான் ‘உயிர்’ தேவை போலும். ஆன்மாவுக்கு, ஒரு உயிருள்ள உடல்தேவை அவ்வளவே. உடல் என்பது ஆன்மாவால் இயக்கி வைக்கப்படும் ஒரு பொருள், அவ்வளவே!