Showing posts with label மகாபாரதம். Show all posts
Showing posts with label மகாபாரதம். Show all posts

Friday, May 9, 2014

வில்லிபுத்தூராரின் பாரதம்:

வில்லிபுத்தூராரின் பாரதம்:
வில்லிபுத்தூராழ்வாரின் மகன் 'வரந்தருவான்' என்றுபெயர்.

இவர் தன் தந்தை வில்லிபுத்தூராழ்வாரிடமே பாடம் கற்றுக் கொண்டு வந்தார். ஒருநாள் தன் தந்தை சொன்ன பொருளை விட்டு வேறு பொருள் உள்ளது என மறுப்புச் சொன்னதால், அவரின் தந்தைக்கு கோபம் வந்து மகனை விரட்டி விட்டார். மகன் வரந்தருவான் வேறு ஊருக்குச் சென்று வேறு ஒரு ஆசிரியரைக் கொண்டு பாடம் கேட்டு வந்தார். தன் தந்தையின் கண்ணில்படாமல் வாழ்ந்து வந்தார்.

ஒருநாள், தந்தையான வில்லிபுத்தூராழ்வார் தான் இயற்றிய பாரதத்தை சபையில் அரங்கேற்றினார். அப்போது அந்த நூலின் முதல் வார்த்தையான 'ஆக்குமாறயனாம்' என்னும் கவியைக் காப்பாக எடுத்து பாடினார்.

அரங்கேற்ற சபையில் இருந்தவர்கள், வில்லிபுத்தூராரை நோக்கி, 'நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு பின்னர் உங்களின் அரங்கேற்றத்தை தொடங்குங்கள்' என்றனர். என்ன கேள்வி என்றதற்கு, 'நீங்கள் அரங்கேற்றுவதோ வியாசரின் பாரதம்; அந்த நூலில் முதலில் விநாயகரை வணங்கும் பாடலை முதலில் பாடியே ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது; அப்படி இருக்க, நீங்களோ, பொதுவான வணக்கம் மட்டுமே சொல்லி கவியை தொடங்குகிறீர்கள்; ஏன் விநாயகரை வணங்கும் கவியை சொல்லவில்லை' என்று கேட்டனர்.
அப்போது வில்லிபுத்தூரார் பதில் சொல்ல முடியாமல் தவித்தபோது, அவரின் மகன் வரந்தருவான் எழுந்து சபையோரைப் பார்த்து, 'இங்கு பல சமயத்தை சேர்ந்தவர்கள் கூடி இருக்கிறார்கள்; எனவே பொதுவணக்கம் செய்வதே முறை; மேலும் விநாயகர் வணக்கத்தை, கவி தனக்குத்தானே கூறிவிட்ட பின்னரே, இந்த பொதுவணக்கத்தை  சபையில் கூறினார்' என்று கூறி சமாளித்தார்.

சபையில் இருந்தவர்கள், 'நீ யார்? என்று கேட்க, அவனும், நானே வில்லிபுத்தூராரின் புத்திரன் என்று கூறினார். அப்போதுதான் வில்லிபுத்தூராரும், வந்தது தன் மகன்தான் என்று தெரிந்து மகிழ்ச்சி கொண்டார்.

சபையில் இருந்தவர்கள், 'அதுசரி, உனக்கு உன் தகப்பன் மனதுக்குள், விநாயகர் துதி பாடினார் என்று எப்படித் தெரியும் என்று கேட்டனர்.
இவர் பாடிய விநாயகர் காப்பு இதுதான் என்று கூறி இந்த கவியை பாடினார்.

'நீடாழி யுலகத்து மறைநாலொடைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக மேமேரு வெற்பாகங் கூரெழுத்தாணி தன்
கோடாக வெழுதும்பிரானைப் பணிந்தன்புகூர்வாமரோ'


பின்னர், வில்லிபுத்தூரார் பாரதத்தை அரங்கேற்றி, தன் மகனை அதற்கு சிறப்பாயிரம் செய்யும்படி பணித்தார்.


Thursday, April 3, 2014

விதுரன்

விதுரன்

திருதராஷ்டிரனின் மந்திரி விதுரன். (திருதராஷ்டிரனுக்கு விதுரன் தம்பியும் கூட). அம்பிகையினது தோழியினிடத்து வியாசருக்குப் பிறந்த புத்திரன். இவன் மாண்வியர் சாபத்தால் சூத்திரனாக பிறந்த யமன். இவன் மகா தரும சீலன். திருதராஷ்டிரன் பாண்டவர்களை வஞ்சிக்கத் துணிந்தபோது, அது கூடாது என்று வாதாடியவன். திருதராஷ்டிரன் செய்த வஞ்சனைகளை எல்லாம் பாண்டவர்களுக்கு உணர்த்தி அவர்களை அவ்வப்போது தப்பிக்க உதவியவனும், அரக்கு மாளிகையை தீவைத்து பாண்டவர்களை அழிக்க எத்தனித்தபோது, இந்த விதுரனே அங்கு இரகசியமாக சென்று பாண்டவர்கள் தப்பிக்க உதவினான்.

இவன் யவன பாஷையிலும் வல்லவன்.  உதிஷ்ரிரனும் யவன பாஷையில் வல்லவன். ஆதலால், திருதராஷ்டிரன் சபையில் நடந்த ரகசியங்களை எல்லாம் இந்த விதுரன் யவன பாஷையில், வேறு யாரும் அறியமுடியாதபடி, உதிஷ்டிரனுக்கு வாய்மோழியாகவும், எழுத்து மூலமும் தெரிவித்து உதவி உள்ளான்.


Wednesday, April 2, 2014

வியாசர்

வியாசர்
இவரின் பெயர் கிருஷ்ணத்துவைபாயனர்.

பரசுராமருக்கும் சத்தியவதிக்கும் பிறந்த புத்திரன்.

இவர், வேதங்களை வகுத்ததால் 'வியாசர்' எனப் பெயர் பெற்றவர். இவர் கங்கையில் உள்ள ஒரு தீவில் பிறந்ததால் 'துவைபாயனர்' என்றும் பெயர் பெற்றவர். (துவீபம்=தீவு; அயனர்=அதில் பிறந்தவர்).

வேதாந்த சூத்திரம் செய்தவரும், மகாபாரதத்தை விநாயகரைக் கொண்டு எழுதுவித்தவரும் இவரே.

இவர் புராணங்களை பதினெட்டாக வகுத்தவர்.

இவரே, பாண்டு, திருதராஷ்டிரன் இவர்களுக்கு இயற்கை தந்தையும் ஆவார்.


ஹஸ்தினாபுரம்

ஹஸ்தினாபுரம்
மகாபாரத காலத்தில், கௌரவர்களின் ராஜதானி இதுதான். இதை ஹஸ்திகன் உருவாக்கியதால் இந்தப் பெயர் ஏற்பட்டதாம். பின்னர் இந்த நகரம் கங்கையால் அழிந்தது. தற்போதுள்ள டில்லி நகருக்கு அருகமையில் இந்த ஹஸ்தினாபுரம் இருந்ததாம்.