Showing posts with label கிருஷ்ணன். Show all posts
Showing posts with label கிருஷ்ணன். Show all posts

Saturday, October 18, 2014

நினைவுகள்-51

நம்பிக்கை என்பது முழுஅர்பணிப்பு.
நம்புகிறேன் என்பதே, ஏதோ ஒரளவு நம்புகிறேன் என்றுதான் நம்புகிறோம். முழுநம்பிக்கைதான் நம்பிக்கை என்பதன் முழுவடிவம்.

கடவுள், தனக்கு ஏதாவது அதிசயத்தைச் செய்தால், அந்தக்கடவுளையும், அவர் இருக்கிறார் என்பதையும் நம்புவதாகவும், இல்லையென்றால், நம்ப வாய்பில்லை என்றும் நினைக்கிறோம்.

கடவுள் நம்மிடம் அதிசயம் நிகழ்த்திக் காட்டித்தான் அவர் இருப்பதைச் சொல்ல வேண்டுமா? நிகழ்த்திக்காட்டுவதால் அவருக்கு இதில் என்ன லாபம்? கடவுள் இருக்கிறார் என்று அப்போதுதான் நான் நம்புவேன். உன்னை நம்ப வைத்து காசு பார்ப்பதற்கு அவர் என்ன மோடி மஸ்தான் வேலை செய்பவரா?
எல்லா மதங்களின் புனித நூல்களுமே, கொஞ்சம் அதிகமாகவே மிரட்டும் தொனியில் இதைச் சொல்லியுள்ளது.
“நீ என்னை நம்பு. என்னைத் தவிர வேறு எதையும் நம்பாதே.
“நான் உன்னை முழுவதுமாகக் காப்பாற்றும் ஒரே கடவுள்.
“நீ என்னிடம் முழுமையாகச் சரணடைய வேண்டும்.

இது ஏதோ பிசினஸ் அக்ரிமெண்ட் போல உள்ளதே?
ஆம் பிசினஸ் அக்ரிமெண்ட் தான்.
நாம் ஒரு பெரிய மனிதரைப் பார்க்கப் போனால், அவரிடம் நாம் காட்டும் மரியாதையே நம்மை அவரிடம் நெருங்கவிடும். அவரும் நெருங்குவார். இந்த மரியாதையை நாம் நம்பிக்கையுடன் செய்தால் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம்.
கடவுளுக்கு எதுக்கு இந்த ஆசை?
யார் மதித்தாலென்ன, மதிக்காவிட்டாலென்ன?
விருப்பு வெறுப்பு அற்றவனுக்கு மரியாதை அவசியமில்லைதான்.
அவன் மரியாதையை ‘நம்மிடம்’ கேட்கவில்லை.
நீ, நம்பி என்னிடம் சேர் என்கிறார்.
ஏன் நம்ப வேண்டும்?
பிரபஞ்ச முழுவதையும் என் ஆளுமையில் வைத்திருக்கிறேன். எல்லா அணுவில் என் இயக்கம் உள்ளது. முதலில் நீ அதை நம்பு. பின்னர், அதில் நான் இருப்பதை நம்பு. அதனுடன் உன் இயல்பை சேர்த்துக் கொள். உன் காரியம் நடந்துவிடும்.
ஒரு அணுவுக்குள் நீ வராமல், நான் வெளியேறி வந்து உனக்கு செயலாற்றுவது இயற்கைக்கு எதிரானது. நான் மந்திரவாதி போல உனக்கு அதிசயங்களை நிகழ்த்த மாட்டேன். ஆனால், என்னுள் நீ ஐக்கியமானால், நீ நானாவாய், நானும் நீயாவேன். இருவரும் Synchronize ஆகிவிடுவோம்.

ஸ்ரீகிருஷ்ணனுடன் விளையாடித் திரிந்த கோபிகைகள் (பெண்கள்) 16,000 பேர். இவர்களுடன் வேறு வேறு இடத்தில் தனித்தனியே கிருஷ்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அது எப்படி முடியும் என்று கேட்கத் தோன்றும். ஆம், கிருஷ்ணன் ஒரே நேரத்தில் பல இடங்களில் பல கோபிகைகளுடன் வேறு வேறு விளையாட்டை விளையாடி இருக்கிறான். அவர்களுக்குத் தெரியாது. கிருஷ்ணன் நம்முடன் மட்டும்தான் விளையாடிக் கொண்டிருக்கிறான் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அது மனித இயல்பு.

இதை வேறு ஒரு விளையாட்டு மூலம் விளக்கப்படுகிறது. யமுனை நதியில் குளிக்கும் கோபிகைகளின் உடைகளை எடுத்து மரத்தின் மீது வைத்து விடுகிறான் கிருஷ்ணன். அவர்கள் கெஞ்சியும் கொடுக்கவில்லை. என்னைக் கையெடுத்து தொழுது கொண்டு வந்தால் தருவேன் என்கிறான். அவர்களும் அப்படியே வந்து வாங்கியதாக கதை. கொஞ்சம் விரசமான கதையாகச் சொல்லப் பட்டுள்ளது. பூர்வ ஜென்மத்தில், இந்தக் கோபிகைகள் விஷ்ணுவின் அடியார்கள்.
இதில் நம்பிக்கையைப் பற்றி சொல்வதற்காக இந்தக் கதை சொல்லப் பட்டுள்ளது.
‘முழுவதுமாக என்னைச் சரணடை’ என்கிறார். யோசிக்காதே.
இங்கு கிருஷ்ணன் எதை உணர்த்தினான்?
“நீ எப்படி என்னைக் கருதிக் கொண்டு வழிபடுகிறாயோ அவ்வாறே நான் வருவேன்.
சிலர் என்னை மகன் என்கிறார்கள்.
சிலர் என்னை நண்பன் என்கிறார்கள்.
சிலர் என்னை எதிரி என்கிறார்கள்.
சிலர் என்னை காதலன் என்கிறார்கள்."

அவர்களின் மன ஓட்டத்துக்கு நான் ஈடுகொடுத்தால்தான் அவர்களின் ஆசையை நான் நிறைவேற்ற முடியும். எனவே நானும் அவ்வாறே ஆகிறேன்.
இதைத்தான் கோபிகைகளின் உடையை மறைத்து, பின் கொடுத்த விஷயத்திலும் சொல்லி உள்ளார். கிருஷ்ணன் பெண்களை அவ்வாறு பார்க்க ஆசைப்படவில்லை.
உன் விருப்பம் எதுவோ அதுவாக நான் மாறுவேன் என்கிறார்.
அப்படியென்றால், நாம் என்ன ஆசைப் படுகிறோமே அதுவாகவே கிருஷ்ணன் நம்மை நெருங்குகிறான்.
நாமும் கடவுளிடம் நம்பிக்கை வைப்போம், அதை தெளிவாக வைப்போம், அதையும் முழுவதுமாக வைப்போம்.
நிச்சயம் நம் கடவுள் நாம் நினைத்த்\தை, கேட்டதைக் கொடுப்பான். கொடுத்தாக வேண்டும்.
இதிலும் ஏதோ விஞ்ஞானம் இருப்பதாகவே தெரிகிறது.

இதுவும் வாழும் வழிதான்.

Monday, October 6, 2014

நினைவுகள்-43

யசோதை நந்தனின் மனைவி.
இவள்தான் கிருஷ்ணனை வளர்த்தவள். வளர்ப்புத்தாய். வளர்ப்புத்தாய் என்று ஒற்றைவரியில் சொல்லக்கூடாது. அவளுக்குக் கோபம் வந்துவிடும். அவள்.... தாய்.....தான்.....

சிறையில் வசுதேவன் மனைவி தேவகிக்கு கிருஷ்ணன் பிறந்த நேரத்திலேயே, இந்த யசோதைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவள் மயக்கமுற்ற நிலையில், அந்தப் பெண் குழந்தையை எடுத்துவிட்டு, கிருஷ்ணனை கொண்டுவந்து போட்டு விட்டார்கள். மயக்கத்தில் இருந்ததால், யசோதைக்கு இந்த விபரம் தெரியாது. கிருஷ்ணன் தன் மகன்தான் என்றே வளர்க்கிறார்.
இவன் தன் மகன் இல்லை என்னும் விபரம் வெகுகாலம் கழித்து யசோதைக்குத் தெரிந்தபின்னரும் அதே அன்போடு வளர்த்து வந்தாளாம்.

பெற்ற தாயிடம் வளரும் குழந்தைகள் பாசத்தால் மழுங்கி விடுமாம்.
ஆனால் வளர்ப்பு தாயிடம் வளரும் குழந்தைகள் அறிவில் சிறந்து இருக்குமாம்; அதில்லாமல் உலக சாதனைகள் செய்யுமாம்.

பெரும்பாலும் உலக சாதனை செய்த குழந்தைகள் எல்லாம் அவர்களின் பெற்ற தாயிடம் வளர்ந்திருக்காது. வளர்ப்புத்தாய் அல்லது பெற்றதாயின் தாயாரிடம் (பாட்டியிடம்) வளர்ந்திருப்பர். இதற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளதால் தனித்தனியே குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

அலெக்ஸாண்டரிலிருந்தே சொல்லலாம். மன்னர் பிலிப்-2க்கும் பல மனைவிகளில் ஒரு மனைவியான ஒலிம்பஸ்க்கும் அலெக்ஸாண்டர் பிறந்தார். ஆனால் வளர்ந்தது என்னவோ நர்ஸ் லனிக் (Lanike) என்ற வளர்ப்புத்தாயிடம்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன், தன் வளர்ப்புத்தாயிடம் வளர்ந்தவர் (லிங்கனின் 9வது வயதில் அவரின் தாய் இறக்கிறார். எனவே அவர் அப்பா வேறு திருமணம் செய்கிறார்). அந்தப் பெண்மணிக்கும் மூன்று குழந்தைகள் இருந்தபோதும் இவரைப் பாசமாகவே வளர்த்து படிக்க வைத்தாராம்.

அமெரிக்க அதிபர் ஒபாமா தன் தாயின் தாயான பாட்டியிடம் வளர்ந்தவர்.
இப்படியாக பலபேர்........ இந்தியாவிலும்........



Saturday, March 29, 2014

ஜராசந்தன்

ஜராசந்தன்:

ஜராசந்தன் என்பவன் பிருகத்திரதன் புத்திரன்.

பிருகத்திரதன் மன்னன், தனக்கு புத்திரர் இல்லாமையால், தனது நாட்டை தனது மந்திரியிடம் ஒப்படைத்து விட்டு, காட்டுக்குச் சென்று தவம் செய்தான். சண்டகௌசிக முனிவரை வேண்டினான்.

முனிவரும் மனம் இரங்கி, இவனுக்கு ஒரு மாங்கனியை கொடுத்து, இதை மன்னனின் மனைவியை உண்ணுமாறு சொன்னார். அதை அவன் தன் மனைவியிடம் கொடுக்க, அவளோ, அந்த மாங்கனியை இரு கூறுகளாக வெட்டி, அதில் ஒரு துண்டை இவளை உண்டாள். மற்ற துண்டை இவளின் சக்களத்திக்கு கொடுத்து உண்ணச் செய்தாள். இவ்வாறு செய்ததால், அந்த கரு பாதி பாதியாக வளர்ந்து இருவர் வயிற்றிலும் பாதி பாதி குழந்தையாக வளர்ந்து பிறந்தது.

அந்த குறையுடன் பிறந்த இரு குழந்தைகளையும் ஜரை என்னும் ஒரு ராட்ச்சி திருடிச் சென்று ஒரு இடத்தில் வைத்திருந்தாள். அவை இரண்டும் ஒட்டிக் கொண்டு இருந்ததால், ஒரே குழந்தையாக மாறி விட்டது. இந்த அதியசத்தை கண்ட ராட்சசி அந்த குழந்தையை பிருகத்திரதனிடம் கொண்டு போய் கொடுத்தாள். இந்த குழந்தைக்கு 'ஜராசந்தன்' என பெயரிட்டான். சந்தி என்பது கூடுதல் என்பது பொருள்.

கஞ்சனை, கிருஷ்ணன் கொன்றதால், இந்த சராசந்தன், தன் மருகன் கஞ்சனைக் கொன்ற கோபத்தில், கிருஷ்ணனின் மதுராபுரிக்கு படையெடுத்துச் சென்றான். இவ்வாறு 18 முறை படையெடுத்தான். கடைசியாக கிருஷ்ணனை வென்றான்.

பின்னர், தருமர் ராச்சூய யாகம் செய்த போது இவன் வீனமால் கொல்லப்பட்டான். (கிருஷ்ணனின் தூண்டுதலால்). அது ஒரு தனிக்கதை.