Friday, December 21, 2018

தந்தையே மகளுக்கு கார்டியன்


Madras High Court
G.Ponnaiah Asari v. Suppaiah Achari and others.
Citation: 158 Ind Cas 1 :: (1935) 68 MLJ 213
Judgment: Horace Owen Compton Beasley, Kt., C.J.
1935 காலக்கட்டங்களில் இராமநாதபுரம் மாவட்ட கோர்ட் மதுரையில் இருந்தது. மதுரையில் உள்ள இராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டுக்கு ஒரு வழக்கு வருகிறது. அதில், தன் மைனர் மகளைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி மைனர் பெண்ணின் தந்தையும், சகோதரனும் இந்த வழக்கை போடுகின்றனர்.
சுப்பையா ஆசாரிக்கு திருமணம் ஆகி, ஒரு மகனும் மகளும் இருக்கும் நிலையில் அவரின் மனைவி இறந்து விடுகிறார். பின்னர் சுப்பையா ஆசாரி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். மூத்த மனைவியின் மகள் ஒரு வயதாக இருக்கும்போது மூத்த மனைவி இறந்து விடுகிறாள். இப்போது அந்த மகளுக்கு 13 வயது ஆகிறது.
மூத்த மனைவியின் சகோதரர்கள், இந்த மைனர் பெண்ணை கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். அவளிடம் அவள் தாயின் நகைகளும் உள்ளன. பாட்டியைப் பார்க்க வேண்டும் என்று அந்தச் சிறுமியிடம் சொல்லி நகைகளுடன் அவளை கடத்திச் சென்றுள்ளனர். அங்கு கொண்டு போய் அந்த மைனர் பெண்ணின் மாமன் மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடும் செய்கிறார்கள். 13 வயதில் இருக்கும் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்வது Child Marriage Act, 1929 சட்டப்படி குற்றமும் ஆகும்.  தகப்பன் இருக்கும்போது, அவனே அந்த மைனர் பெண்ணுக்கு சட்டப்படியான கார்டியன். எனவே மகளைத் தன்னிடம் ஒப்படைக்கு உத்தரவு கேட்டு மாவட்ட கோர்ட்டில் வழக்கு மனு கொடுக்கிறார்.
அந்த மைனர் பெண்ணுக்கு கோர்ட் மூலம் எந்த கார்டியனும் நியமிக்கவில்லை. அவ்வாறு கோர்ட் கார்டியன் நியமித்து இருக்காத போது, அவளின் தந்தை மட்டுமே இயற்கையில் கார்டியனாக இருக்க தகுதி உடையவர் என்பது தந்தையின் வாதம்.
வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட், “அந்த மைனர் பெண்ணை, அவளின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆனாலும், அவளின் தந்தை, அந்த பெண்ணை, ஒரு நான்கு மாதங்களுக்கு, தன் மாமன்கள், தாய் வழிப் பாட்டி இவர்களுடன் இருக்கும்படி அனுமதிக்க வேண்டும்” என்று தீர்ப்பு கூறினார்.  அந்த பெண்ணுக்கு 9 வயதுதான் ஆகிறது என்று தாய் மாமன்கள் சொல்கிறார்கள். பெண் வயதுக்கு வரும்போது, தாய்வழிப் பாட்டியிடம் இருப்பதே சிறந்தது என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். இப்படிச் சொல்வதால், மேலும் சிலகாலம் அந்தப் பெண்ணைத் தங்களுடனே வைத்துக் கொள்ள முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. அவளுக்கு 13 வயதாகிறது.
தந்தை கூறுகிறார், “இந்த வழக்கைப் போடுவதற்கு 15 நாட்களுக்கு முன்புவரை, மகள் தன்னிடமே இருந்து வந்ததாகவும், அதற்குப் பின்னர் தான் அவளை பொய் சொல்லி, தாய் மாமன்கள் அவர்களின் வீட்டுக்கு கூட்டிச் சென்றார்கள்” என்றும் சொல்கிறார். ஆனால் மாவட்ட நீதிபதி அது பொய்யான தகவல் என்றும் தன் தீர்ப்பில் கூறி உள்ளார்.
ஆனால் உண்மையில் இப்படித்தான் நடந்து இருக்க முடியும் என்று மாவட்ட நீதிபதி தன் கருத்தைச் சொல்லி உள்ளார். “இந்தப் பெண்ணுக்கு ஒரு வயது இருக்கும்போது, அவளின் தாய் இறந்து விடுகிறாள். அப்போது, இவளின் தகப்பனின் சம்மதத்தின் பேரில், இந்தப் பெண்ணை, அவளின் தாய்வழிப் பாட்டியும், தாய் மாமன்களும் அவர்களின் குடும்பத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அவள் அங்குதான் வசித்து வருகிறாள். அப்போது அவளின் தாய்க்கு திருமணத்தின் போது, தாய்வீட்டில் கொடுத்த நகைகளையும் சேர்த்து எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்தச் சூழ்நிலையில்தான், இவளின் தந்தை வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொள்கிறார். இரண்டாவது திருமணத்தின் மூலம் அவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டாவது மனைவி, அவளுக்குக் குழந்தைகள் பிறக்கும்போது, அவர்களுடன் இந்தச் சிறுமியையும் அந்த மாற்றந்தாய் சரியாக கவனிக்க முடியாது என்று கருதியே இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம்,” என்று மாவட்ட நீதிபதி தன் கருத்தையும் சொல்லி உள்ளார்.
எனவே அந்தச் சிறுமி, தன் தாய்வழிப் பாட்டி வீட்டுக்கு தன் ஒரு வயதில் சென்றதில் இருந்தே அங்குதான் வளர்ந்து வருகிறார் என்றே கருத வேண்டும். அந்தச் சிறுமி, தன் தந்தையுடன் சேர்ந்து வசிக்கவில்லை. அந்தச் சிறுமியின் தாய்வழிப் பாட்டியும், தாய் மகன்களும் அவளை அன்புடனே வளர்த்து வருகிறார்கள். அவளுக்கு நகைகளும் செய்து கொடுத்துள்ளனர்.  அந்த சிறுமியைக் கோர்ட்டுக்கு வரவழைத்து அவளையும் ஒரு சாட்சியாக விசாரித்த போது, “நான் என் தந்தையுடன் சென்று வாழ விருப்பம் இல்லை” என்றும் சொல்லி உள்ளார். “எனக்கு, என் மாமன்கள், நகைகள் செய்து கொடுத்துள்ளார்கள், துணி மணிகள் வாங்கிக் கொடுக்கிறார்கள்”, என்றும் சொல்லி உள்ளாள். “நான், என் தந்தையை பார்த்தே இல்லை; அவரும் எப்போதும், நான் வசிக்கும் கிராமத்துக்கு என்னைப் பார்க்க வந்ததும் இல்லை; என் கூடப் பிறந்த என் சகோதரனும் என்னை வந்து பார்க்கவில்லை” என்று கூறுகிறாள்.
இவள் சிறுமிதான். ஏன் இவளின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது? ஏற்கக் கூடிய சாட்சியமாகவே இருக்கிறது என்று மாவட்ட நீதிபதி முடிவு செய்கிறார். சிறுமியின் தாய் இறந்தபோது, இரண்டு குடும்பத்துக்கும் சரியான உறவு முறை இருக்கவில்லை என்றே தெரிகிறது என்று மாவட்ட நீதிபதி கருத்து தெரிவிக்கிறார்.
மாவட்ட நீதிபதி, இரண்டு முன் வழக்குகளை மேற்கோள் காட்டுகிறார்.
Mohideen Ibrahim Nachi v. Mohamed Ibrahim Sahib, (1915) ILR 39 Mad.608 : 30 MLJ 21.
Kode Atchayya v. Kosaraju Narahari, (1958) 120 IC 474.
இந்த முன் வழக்குகளில், “தந்தையே தன் மைனர் குழந்தைகளுக்கு இயற்கை கார்டியன் ஆவார்; இதை நிலையையும் உரிமையையும் மாற்ற முடியாது;  ஆனால், தந்தை தகுதி இல்லாதவராக இருந்தால் மட்டுமே கார்டியனாக இயங்க முடியாது; மேலும், தந்தை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் கார்டியனாக இயங்கத் தகுதி இல்லாதவர் என்று கருதி விட முடியாது,” என்றும் அந்த தீர்ப்புகளில் சொல்லப் பட்டுள்ளது.
எனவே தந்தைதான் எப்போதும் கார்டியன் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை; ஆனாலும் இதில் ஒரு முக்கியமான விஷயத்தையும் பார்க்க வேண்டும்; அது அந்த மைனரின் எதிர்கால நன்மை.
மற்றொரு வழக்கான, Battara v. Mohanlal Lallubai, (1922) 68 IC 518 என்ற வழக்கில், தந்தை கார்டியனாக இயங்க அனுமதி கேட்டுப் போட்ட வழக்கு தள்ளுபடி ஆகிறது. அந்த வழக்கில், மைனர் மகன், தன் பிரிந்து சென்ற தாயிடமே கடந்த ஐந்து வருடங்களாக வசித்து வருகிறான். அதை மைனரின் தகப்பனும் ஆட்சேபனை செய்யாமல் இருந்து இருக்கிறார். இப்போது திடீரென்று, கார்டியன் உரிமை கேட்டு வழக்குப் போட்டுள்ளார். மைனர் மகனின் நன்மையைக் கருதி, மைனரை அவனின் தந்தையிடம் ஒப்படைக்கவில்லை.
மற்றொரு வழக்கான, Mrs. Annie Besant v. Narayaniah (1914) LR 41 I.A.314 : ILR 38 Mad 807 : 27 MLJ 30 (PC); (1913) 25 MLJ 661 என்ற பிரபலமான வழக்காகும். இந்த வழக்கில், நாராயணையா என்பவர், தன் இரண்டு மகன்களையும் (ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஜே.நித்தியானந்தா) வளர்க்க முடியாமல் அல்லது அவர்களுக்கு நல்ல கல்வி அறிவு கொடுக்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில், அன்னி பெசன்ட் அம்மையாரிடம் தன் இரண்டு குழந்தைகளையும் மதராஸ் பட்டிணத்தில் அடையாரில் உள்ள தியாசோபிகல் சொசைட்டியின் செகரட்டரியாக இருந்த அன்னி பெசன்ட் அம்மையாரிடம் ஒப்படைக்கிறார். அப்போது அந்தச் சிறுவர்களுக்கு முறைய 14, 11 வயதுகள். அந்த பெண்மணி அன்னி பெசன்ட் அந்தச் சிறுவர்கள் இருவரையும், லண்டனுக்கு அனுப்பி நல்ல கல்வியைக் கொடுக்கிறார். அப்போது, “இந்தக் குழந்தைகளை அன்னி பெசண்ட் அம்மணியே தத்து போல எடுத்துக் கொள்ளலாம் என்றும், தந்தை ஆகிய நான் எப்போதும் அதை கேள்வி கேட்கவோ, மகன்களின் மீது உரிமை கொண்டாடவோ மாட்டேன் என்றும், எனக்கு அவர்களின் கல்வி அறிவுதான் முக்கியம் என்றும் ஒரு பத்திரம் எழுதி அன்னி பெசன்ட் அம்மையாரிடம் ஏற்கனவே கொடுத்த இருக்கிறார். ஏனென்றால், தந்தையின் பாசத்தில், நன்றாக லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை திரும்ப கேட்டு விடுவார் என்று நினைத்தார் அந்த அம்மணி. ஆனால் அதுவே நடந்து விட்டது. சிறுவர்கள் இருவரும் லண்டனில் மிகச் சிறந்த படிப்பாளிகளாக ஆகி விட்டார்கள். (அதில் ஒருவரின் பெயர் தான், பிரபலமான ஜேகே என்று சொல்லும் ஜே.கிருஷ்ணமூர்த்தி. பின்னர் அவர் எழுதிய தத்துவ அறிவுப் புத்தகங்கள் ஏராளம்). என்னதான் தன் பிள்ளைகளை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டாலும், தந்தை பாசம் பொல்லாததுதான். அவர் செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில், தன் குழந்தைகளைத் தன்னுடன் ஒப்படைக்கும்படி வழக்கு போடுகிறார். அந்த வழக்கு, செங்கல்பட்டு கோர்ட்டில் நடந்து, மதராஸ் ஐகோர்ட்டில் நடந்து, பின்னர் லண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் வரை (உயர் அப்பீல் கோர்ட்) சென்றது. பிரைவி கவுன்சில் கோர்ட், அங்கு லண்டனில் படித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவர்களை நேரில் கோர்ட்டுக்கு அழைத்து விசாரித்தும் இருக்கிறார்கள். அவர்களின் அறிவுத் திறமையை வியத்தும் உள்ளனர்.
“ஏதோ தந்தையின் ஆசையில், குழந்தைகளை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பது இயல்புதான். அதற்காக பாசமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவரின் உரிமையை அதற்காக மறுக்கவும் முடியாது” என்று பிரைவி கவுன்சில் கருத்துச் சொல்லி உள்ளது. “A man may be in narrow circumstances, he may be negligent, injudicious and faulty as the father of minors; he may be a person from whom the discreet, the intelligent and the well disposed, exercising a private judgment, would wish his children to be, for their sakes and his own, removed; he may be all this without rendering himself liable to judicial interference, and in the main it is for obvious reasons well that it should be so.”
தந்தையிடம் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டுமா? இல்லையென்றால் அவர் கேபியஸ் கார்பஸ் ரிட் உரிமையை நாட முடியுமா? என்ற கேள்விகளுக்குப் பதிலாக, இங்கிலாந்து கோர்ட்டின் வேறு ஒரு வழக்கின் தீர்ப்பை பார்க்கிறார்கள். In re Agar Ellis, (1883) 24 Ch.D.317 at page 331. இது 1883-ல் நடந்த வழக்கு. இதில், குழந்தைகள், தன் முடிவை எடுக்கும் அறிவு வரும் வயதைத் தாண்டி விட்டால், அவர்களின் முடிவையும் கேட்க வேண்டும். அந்த வயதைத் தாண்டாத குழந்தையைப் பொருத்து, தந்தைதான் கார்டியன் என்ற சட்ட முடிவுக்கு கோர்ட் வர வேண்டும் என்று கூறி உள்ளது. தன் முடிவு எடுக்கும் அறிவு என்பது ஆண் குழந்தையாக இருந்தால் அவனுக்கு 14 வயதில் வரும்; அதே பெண் குழந்தையாக இருந்தால் அவளுக்கு 16 வயதில் வரும் என்று ஆங்கிலேய கோர்ட்டுகளின் முடிவு.
“But then there are cases where undoubtedly the Court declined to interfere on Habeas Corpus in order to interfere with it when it was of the age of discretion – the age of sixteen in the case of girls and the age of fourteen in the case of boys. For what reason is that? When an infant is so young as not to be able in the eyes of the law to exercise a discretion, then unless that infant is in the proper custody, that is to say the legal custody of the father or the guardian appointed, it is not in legal custody, and the very object of suing out a Habeas Corpus is to have it ascertained whether the person who is sought to be brought up is under duress or imprisonment; but nobody can be placed in the position of being under duress or imprisonment if he expresses a wish to remain where he is at the time the writ is issued, that is to say, provided the person is competent to express such a wish; and, if he does, it is the duty of law to regard it.”
இந்த அன்னி பெசன்ட் அம்மையாரின் வழக்கில், லண்டன் பிரைவி கவுன்சில் கோர்ட்டில் விசாரனை நடக்கும்போது, அந்த சிறுவர்கள் இருவரையும் அழைத்து நீதிபதிகள் பேசினார்கள். அப்போது பெரியவனுக்கு 18 வயதும், சின்னவனுக்கு 16 வயதும் ஆகிறது. பெரியவன் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படிக்கும் விருப்பத்தில் இருக்கிறான். சின்னவன், இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி இந்தியாவில் ஐசிஎஸ் அதிகாரி ஆகும் எண்ணத்தில் உள்ளான். அப்போது இரு சிறுவர்களும், Mr. G.S. அருண்டேல் என்பவரின் கண்காணிப்பில் உள்ளனர். அவர் கேம்பிரிட்ஜ் பட்டதாரி. மத்திய இந்து கல்லூரியில் பிரின்சிபலாக இருக்கிறார்.
எனவே கீழ்கோர்ட் கொடுத்த தீர்ப்பின் படியே, சிறுவர்கள் இருவரையும் தந்தையின் பொறுப்பிலேயே இருக்கும்படி பிரைவி கவுன்சில் உத்தரவு இட்டது.
**
இப்போது நாம் சுப்பையா ஆசாரியின் வழக்குக்கு வருவோம்.
மதுரையி்ல் உள்ள இராமநாதபுரம் மாவட்ட கோர்ட் தீர்ப்பு சரியே. தந்தையிடமே சிறுமி இருக்க வேண்டும். எனவே தாய் மாமன்கள் போட்ட அப்பீல் வழக்கு தள்ளுபடி ஆகிறது.
**



Thursday, December 20, 2018

ரயில்வே சீசன் டிக்கெட் வழக்கு 1956-ல்


In Re: B.Matameswara Rao v. Unknown (Judgment on 16 January 1956)
Citation: 1957 Crl.LJ 44
1954ம் வருடம். விஜயவாடா ரயில் நிலையம். அங்கு ரயில் பிரயாணியாக வந்து கொண்டிருந்த ஒரு பயணியிடம், ரயில்வே டிக்கெட் பரிசோதகர் பயண சீட்டைக் கேட்கிறார். அவர் தன்னிடம் இருந்த ஒரு சீசன் டிக்கெட்டை எடுத்துக் கொடுக்கிறார். அது அவர் பெயரில் வாங்கப்பட்ட சீட்டு இல்லை என்று தெரிகிறது. அந்த சீசன் டிக்கெட்டில் உள்ள பெயரே தன்னுடைய பெயர் என்று அந்தப் பயணி கூறுகிறார். உண்மையில் அந்த நபர் அவர் அல்ல என்று தெரிய வருகிறது. எனவே விஜயவாடாவில் உள்ள ரயில்வே 1-ம் வகுப்பு மாஜிஸ்டிரேட் முன்னர் நிறுத்தப் படுகிறார். அவர் மீது, “ஆள் மாறாட்டம் செய்து ரயில்வேயை ஏமாற்றி குற்றத்துக்காக” வழக்குப் போடப் படுகிறது. அந்த நபர் குற்றத்தை ஏற்க மறுத்து வழக்கு நடத்துகிறார். வழக்கில் அவரே (வக்கீல் வைக்காமல்) வாதம் செய்கிறார்.
வழக்கு விஜயவாடவின் சப்-மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு மாற்றி விசாரிக்கப் படுகிறது. இந்த பயணி மீது ரயில்வே சட்டம் பிரிவு 112 (பி) மற்றும் 114-ல் குற்றம் சுமத்தப்படுகிறது. பின்னர் இந்த வழக்கை, இந்தியன் பீனல் கோடு சட்டம் பிரிவு 419-ஆக திருத்தி குற்றம் சுமத்தப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு இந்தியன் ரயில்வே சட்டப்படியே சம்மன் அனுப்பப் பட்டது என்றும், ஐபிசி படி சம்மன் அனுப்பவில்லை என்றும், எனவே இந்த மாஜிஸ்டிரேட் கோர்ட் விசாரனை செய்யும் அதிகாரம் இல்லை என்றும் வாதம் செய்கிறார்.
ஐபிசி சட்டப்படி தன்னை விசாரிக்க முடியாது என்று அதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவரே ஆஜராகி அப்பீல் வழக்கை நடத்துகிறார்.
மேலும், ரயில்வே சட்டம் பிரிவு 137 மற்றும் ஐபிசி பிரிவு 21-ன்படி டிக்கெட் பரிசோதகர் ஒரு அரசு அதிகாரி இல்லை எனவும், எனவே அவர் ஐபிசி சட்டப்படி தன் மீது வழக்குத் தொடர முடியாது என்றும் வாதம் செய்கிறார்.
முதலில் சம்மன் அனுப்பும் போது ரயில்வே சட்டத்தை மட்டும் சொல்லி அனுப்பி இருந்தாலும், பின்னர் ஐபிசி சட்டப்படி வழக்கு தொடர்ந்தாலும், இதில் ஏதும் நடைமுறைத் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐகோர்ட் அவரது வாதத்தை ஏற்க மறுக்கிறது.
ரயில்வே டிக்கெட் பரிசோதகர் ஒரு அரசு அதிகாரியா என்ற கேள்வியை எழுப்புகிறார். அவர் அரசு அதிகாரி இல்லை என்றால், அவரே புகார் கொடுத்திருப்பதால், அவரை விசாரிக்காமல்  தீர்ப்பு வழங்கியது தவறு என்றும் வாதம் செய்கிறார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 21-ன்படி அவர் அரசு அதிகாரி இல்லை என்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட் சொல்கிறது. ரயில்வே சட்டம் பிரிவு 137-ன்படி ஒரு ரயில்வே ஊழியர் அரசு அதிகாரி இல்லை என்ற போதிலும், ஐபிசி சட்டம் அத்தியாயம் 9-ஐப் பொருத்தவரை அவர் ஒரு அரசு அதிகாரி தான். கிரிமினல் நடைமுறைச் சட்டத்தில் அரசு அதிகாரி யார் என்பதைப் பற்றி எந்த விளக்கமும் சொல்லவில்லை. இருந்தாலும், அந்த சட்டம் பிரிவு 4(2)-ல், ஐபிசியில் சொல்லப்பட்டுள்ள விளக்கங்களையே ரயில்வே சட்டங்களுக்கும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ளது என்று ஐகோர்ட் சொல்லி விட்டது. எனவே ஐபிசி சட்டப்படி ரயில்வே ஊழியர் அரசு அதிகாரிதான். ரயில்வே என்பது மத்திய அரசின் சொத்து. எனவே அதன் ஊழியர்கள் அரசு சம்பளம் பெறுபவர்கள்தான். எனவே ரயில்வே சட்டத்தில் குறிப்பிட்ட சொல்லா விட்டாலும், ஐபிசி-ல் சொல்லி உள்ளபடியே, ரயில்வே ஊழியர் அரசு ஊழியர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அவர் ஐபிசி சட்டப்படி வழக்குத் தொடுத்து இருப்பது சட்டப்படி சரியே என்று ஐகோர்ட் தீர்ப்பு கொடுத்து விட்டது.
மேலும், ஐபிசி சட்டப்படி வழக்கு தொடுத்தால், புகார் கொடுத்தவரை விசாரிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அந்த வழக்கில் அவ்வாறு புகார் கொடுத்தவரை விசாரிக்கவில்லை. இருந்தாலும், இது ஒரு நடைமுறை குறையே தவிர, சட்டக்குறை என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும் ஐகோர்ட் சொல்லி விட்டது.
சீசன் டிக்கெட் வைத்திருப்பவரேதான் பயணம் செய்ய வேண்டும், மற்றவர் அதை உபயோகப்படுத்தி ரயில் பயணம் செய்யக் கூடாது என்று ரயில்வே சட்டத்தில் எங்கும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் இவரின் வழக்கோ, மற்றவரின் பயணச் சீட்டை உபயோகித்தார் என்பதையும் தாண்டி, அவரே நான் என்று ஆள்மாறாட்டம் செய்து உள்ளார் என்பதே வழக்கு. ஆள்மாறாட்டம் செய்வது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றமே. எனவே ஐபிசி சட்டப்படி அவரைத் தண்டிப்பது சரியே என்று ஆந்திரா ஐகோர்ட் தீர்ப்பு கூறியது.
**

Wednesday, December 19, 2018

நதி நீர் அரசுக்குச் சொந்தமா?


நதி நீர் அரசுக்குச் சொந்தமா?
சின்னப்பன் செட்டி v. செக்ரட்டரி ஆப் ஸ்டேட் ஆப் இந்தியா
Chinnappan Chetty v. The Secretary of State for India. (1919) 36 MLJ 124
மதராஸ் ஐகோர்ட்டின் முன்பு ஒரு வழக்கு வருகிறது. மருதார் நதி என்பது அரசுக்குச் சொந்தமான மலையில் உருவாகி நிலப்பரப்புக்கு வந்து ரயத் நிலங்களின் வழியாக ஓடுகிறது. அது கன்னிவாடி ஜமின்தாரின் நிலங்கள் வழியாகச் செல்கிறது.
கன்னிவாடி ஜமின்தார் இந்த நதியின் நீரை தன் நிலங்களுக்கு எந்த வரியும் இல்லாமல் இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாமா என்பதே கேள்வி. ஜமின்தாரின் நிலங்களில் வழியாக நதி ஓடுவதால், அந்த பகுதியில் உள்ள மருதார் நதி நீரை அவர் உபயோகப் படுத்த அவருக்கு உரிமை உண்டு என்று ஜமின்தார் சொல்கிறார். அதற்கு அரசு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.
The Madras Irrigation Cess Act, VII of 1865 as amended by Act V of 1900. இந்த சட்டத்தின் படி, அரசுக்கு சொந்தமான நதி நீரை பாசனத்துக்கு உபயோகிக்கும் நிலத்தின் உரிமையாளர் நீர் வரி செலுத்த வேண்டும் என்று அரசு கேட்கிறது.  ஜமின்தார் மறுக்கிறார். “என் நிலத்திற்குள் ஓடும் நதியின் நீரை என் நிலத்துக்கு பாசனத்துக்கு பயன்படுத்த, நான் ஏன் அரசுக்கு நீர் வரி செலுத்த வேண்டும்?” என்பது அவரின் வாதம்.
மேற்படி சட்டப்படி, நதிகள், ஓடைகள், வாய்க்கால்கள், குளங்கள், இவைகளை அரசு ஏற்படுத்தி இருந்தால், அதன் நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் நில உரிமையாளர் நீர் வரி செலுத்த வேண்டும் என்பது சட்ட விதி.
எல்லா பொது ரோடுகளும், தெருக்களும், சந்துகளும், பாதை வழிகளும், பாலங்களும், மதகுகளும், கடலின் படுகைகளும், துறைமுக முகத்துவாரங்களும், நதிகளும், நீர் ஓடைகளும், நலா, ஏரி, குளம், குட்டை, இவைகளில் ஓடும் நீரும், கிடக்கும் நீரும்  - இவைகளை உபயோகப்படுத்தும் நில உரிமையாளர்  வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம்.
ஆனால் ஜமின்தாரின் ஆட்சேபனையைப் பொறுத்து இதுவரை சரியான சட்டம் ஏதும் இருப்பதாக தெரிவில்லை. ஜமின் சொத்துக்கு நடுவில் ஓடும் ஆறுகள் ஜமினுக்கு சொந்தம் என Kandukuri Mahalakshmamma Garu v. The Secretary of State for India, (1910) ILR 34 Mad. 295 என்ற வழக்கில் தீர்ப்பாகச் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் மற்றொரு வழக்கான The Secretary of State for India v. Ambalavana Pandara Sannadhi (1917) ILR 40 Mad 886 என்ற வழக்கில் இந்த கருத்துக்கு மாறாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
ஆறுகளும், நீரோடைகளும் அரசுக்கு சொந்தம் என Act VII of 1865 சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இயற்கையாக உள்ள நதிகளின் நீரை மக்களின் சமுதாய பணிகளுக்கு ஏற்ப பகிர்ந்து அளிக்க வேண்டியது அரசின் கடமை.
ஆங்கிலேயர் நாட்டில் உள்ள நதிகளின் நிலைமை வேறு. இந்தியாவில் உள்ள நதிகளின் நிலைமே வேறு. அங்குள்ள சட்டத்தை இங்கு அமல் படுத்த முடியாது. எனவே நதிகள் அரசுக்குச் சொந்தம் என ஏற்கமுடியாது. பாசனம் செய்பவர்களின் உரிமை மேலானதே.
ஒரு நதியை அரசு செலவில் உருவாக்காமல் இருந்தாலும், அதன் நீரை பயன்படுத்த நீர் வரி விதிக்க அரசுக்கு உரிமை உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் வேறு ஒரு வழக்கில், அரசு செலவு செய்து கட்டிய ஏரிகள் குளங்கள் இவைகளின் நீருக்கு மட்டுமே நீர் வரி விதிக்க முடியும் என்றும் சொல்லி உள்ளது. அரசு எந்தச் செலவும் செய்யாமல் தானே உருவாகி ஓடி வரும் நதியின் நீருக்கு அரசு நீர் வரி விதிக்க முடியாது என்று பொருள்.
நதியின் "நிலம்" வேண்டுமானால் அரசுக்கு சொந்தமாக இருக்கலாம். அதில் ஓடி வரும் நீர், அந்த அந்த நிலத்தின் பகுதியில் உள்ள நில உரிமையாளர்களுக்கு சொந்தம். அதாவது நதி ஓடும் "நிலம்" அரசுக்குச் சொந்தம். நதியில் "ஓடும் நீர்" அங்கு உள்ள நிலத்தின் உரிமையாளருக்குச் சொந்தம்.
நதியில் ஓடும் நீர், ஒரு மாதத்தில் ஒரு நேரத்தில் அதன் கரையில் மேல் எழும். மறு நேரத்தில் கரைக்கு உள் அடங்கிப் போகும். எப்போதெல்லாம் நீர் பெருக்கு இருக்கிறதோ அந்த நிலப்பகுதிவரை நதியின் நிலம் என்று கணக்கில் கொள்ள வேண்டும்.
நதிக்கரை வரை அதை ஒட்டி உள்ள நிலத்தின் உரிமையாளருக்குச் சொந்தம் என்பதே நியதி. அது நதியை ஒட்டி உள்ள நிலத்தின் உரிமையாளருக்கு உள்ள ஈஸ்மெண்டரி உரிமையும் ஆகும்.
ஆனாலும், நதியின் நீரை மட்டுமே அதை ஒட்டி உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் பாசனத்துக்கு பயன்படுத்திக் கொள்ள ஈஸ்மெண்டரி உரிமை உள்ளது. அந்த நதியின் நீர் அவருக்கு உரிமை இல்லை. அந்த நீர் "ஒரு சொத்து" என்று அவர் உரிமை கொண்டாட முடியாது.
எனவே ஓடும் நதி நீர் அரசுக்குச் சொந்தம் என்பதில் 1865 சட்டத்தின் படி சரியே. ஆனாலும் அந்த நதியின் படுகை என்னும் கரை பகுதி அதை ஒட்டி உள்ள நிலத்தின் உரிமையாளருக்கு உள்ள ஈஸ்மெண்டரி உரிமை ஆகும். அவரின் நிலத்தில் இருந்து நதிக்கு போக வரவும், நீர் இறைத்துக் கொள்ளவும் உள்ள ஈஸ்மெண்டரி உரிமை ஆகும்.
**

இரட்டைத் தேர்தல் வழக்கு 1959


இரட்டைத் தேர்தல் வழக்கு 1959
R.Narasimha Reddy and another v. Bhoomaji and another
AIR 1959 AP 111
பூமாஜி என்பவரும் மற்றும் ஐந்து பேர்களும் ஆந்திராவில் உள்ள காஜவெல் இரட்டை வேட்பாளர் தேர்தலில் நிற்கிறார்கள். அதாவது அந்த தொகுதியில் இரண்டு பேரை ஒரே நேரத்தில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்று பொது வேட்பாளர் பதவி. மற்றொன்று ரிசர்வடு வேட்பாளர் பதவி. தேர்தல் 1957-ல் நடக்கிறது. ஆறு பேரும் தேர்தலில் நிற்க மனு கொடுத்து விட்டார்கள். வாபஸ் வாங்கும் நேரம் முடிந்த பின்னர், பூமாஜி என்ற வேட்பாளர், போட்டிலிருந்து விலகுவதாக மனு கொடுக்கிறார். எனவே அவரது மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கிடையில், பூமாஜி பெயரும் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அச்சிடப்பட்டு விடுகிறது.
நரசிம்ம ரெட்டி என்பவர் பொது வேட்பாளராக தேர்வு ஆகிறார். ரிசர்வடு வேட்பாளராக முத்தியால் ராவ் தேர்வாகிறார்.
இதற்கிடையில் தேர்தல் நடப்பதற்கு முன்னர், ஒரு புரளியைக் கிளப்பி விடுகிறார்கள். பூமாஜி மாற்றுக் கட்சி வேட்பாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு விலகி விடுவதாக இருந்தது. அதனால்தான் பூமாஜி அவரின் மனுவை வாபஸ் பெற இருந்தார். பணம் கைக்கு வந்து சேராததால், மனுவை வாபஸ் வாங்கவில்லை என்று பொது வெளியில் பேச்சை கசிய விட்டார்கள்.
தேர்தல் நாளான 4.3.1957-ல் வேட்பாளர் நரசிம்ம ரெட்டி ஓட்டுப் போடும் இடத்தில் இரண்டு காளை மாடுகளை கொண்டு வந்து நிறுத்தி விட்டார். வரும் வாக்காளர்களை, அதன் நெற்றியில் குங்குமம் வைத்து சத்தியம் செய்து போக வேண்டும் என்று கட்டாயப் படுத்தினர் என்றும், அவ்வாறு மாட்டின் நெற்றியில் குங்குமம் (Vermilion) வைத்தால் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு அவருக்கே ஓட்டுப் போடுவார்கள் என்று நினைத்து இதைச் செய்தார் என்றும் நரசிம்ம ரெட்டி மீது குற்றச் சாட்டை பூமாஜி வைக்கிறார். மேலும், தேர்தல் முறைகேடாக, ஓட்டுப் போடுபவர்களை வண்டி வைத்து அழைத்து வந்ததாகவும் குற்றச் சாட்டு. மேலும் பூமாஜி தேர்தல் பிரச்சாரத்துக்கு மேடை அமைத்து பேசும்போது, கலவரம் செய்து அதைக் கலைத்து விட்டார்கள் என்றும் குற்றச்சாட்டு.
மேலும், வென்ற வேட்பாளர் நரசிம்ம ரெட்டி ஒரு துண்டு பிரசுரம் விநியோகித்தார் என்றும், அதில் மற்றொரு கம்னியூஸ்ட் வேட்பாளரான ராமச்சந்திர ரெட்டியின் மனைவி வெளியிட்டது போல செய்து, அதில்  அவர் கம்னியூஸ்ட் கட்சியில் இருந்து ராமச்சந்திர ரெட்டியின் மனைவி விலகி விட்டதாகவும், எனவே அவரின் கணவருக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்றும் கூறி அந்த துண்டு பிரசுரத்தை வெளியிட்டார்கள் என்றும் குற்றச் சாட்டு.
மேலும் வெற்றி கொண்ட நரசிம்ம ரெட்டி ஏற்கனவே அரசின் PWD கான்டிராக்ட்டில் வேலை எடுத்துச் செய்வதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு, தேர்தல் கோர்ட், வென்ற இருவரின் வெற்றியையும் ரத்து செய்கிறது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்கிறார்கள்.
அதில், மாடுகளை கொண்டு வந்து நிறுத்தியது தேர்தலுக்கு மறுநாள் தான். எனவே அது தேர்தல் முறைகேட்டில் வராது என்று வாதம். ஒரே ஒரு சாட்சி மட்டும், “தேர்தல் அன்று சுமார் 70 கெஜ தூரத்தில் இரண்டு மாடுகளை கட்டி இருந்தார்கள் என்றும், அதில் இரண்டு மூன்று பேர் வந்து குங்குமப் பொட்டு வைத்துவிட்டுச் சென்றார்கள்” என்றும் கூறி இருக்கிறார்.  அவ்வாறு மாட்டின் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டு, அதை மீறி நடந்தால் பாவம் வரும் என்று அங்குள்ளவர்கள் நம்பி வருகிறார்கள் என்றும் கூறினார்.
தேர்தல் முறைகேடு நடந்ததாக சொல்பவரே அதை நிரூபிக்க வேண்டும் என்பது சட்ட விதி. வண்டி வைத்து வாக்காளரை கூட்டிக் கொண்டு வந்தார் என்பதில், அதனால் அவருக்கு விழ வேண்டிய ஓட்டு பாதித்தது என்றும் நிரூபிக்க வேண்டும். அப்படி என்றால்தான், The Representation of the People Act, Sec.100(D)(i) ன்படி அது தேர்தல் முறைகேடு ஆகும்.
PWD கான்டிராக்ட் விஷயம் என்னவென்றால், அவர் தேர்தலில் நிற்கும் முன்பே, அந்த கான்டிராக்ட்டை ரத்து செய்யும்படி லெட்டர் கொடுத்து இருக்கிறார்.  அவர் பெயரும் எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அத்துடன் எழுதிக் கொடுத்த பவர் பத்திரம் இன்னும் நடைமுறையில் உள்ளது. அதைக் கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே தேர்தல் அதிகாரி மொத்தமாக இரண்டு வேட்பாளர்களின் வெற்றியையும் ரத்து செய்தது சரி இல்லை. நரசிம்ம ரெட்டி வெற்றியை மட்டும் ஐகோர்ட் ரத்து செய்தது. ரிசர்வ்டு வேட்பாளர் முத்தயாலு ராவ் எந்த தேர்தல் முறைகேடும் இல்லாததால், அவரின் தேர்வை ரத்து செய்தது செல்லாது என்று ஐகோர்ட் அறிவித்தது.
**

Tuesday, December 18, 2018

Committal proceedings in Criminal cases


Committal proceedings in Criminal cases
ஆந்திராவில் மகாபட்டிணம் என்ற இடத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர், 1956-ல் ஒருவரை அழைத்து வந்து கம்பால் தொடர்ந்து அடிக்கிறார். அதில் அவர் இறந்து விடுகிறார். சப்-இன்ஸ்பெக்டர் மீது ஐபிசி 304 வழக்கு போடப் படுகிறது.
ஐபிசி 304 என்பது ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், தன் செயலால் அவர் இறந்து விட்டால் அது கொலை குற்றம் ஆகும். Culpable homicide not amounting to murder.
Culpable homicide என்றால் மனிதனை சட்டத்துக்கு புறம்பாகக் கொல்வது. ஆனால் அது வேண்டுமென்றே செய்த மனிதக் கொலை அல்ல.
இந்த மாதிரி கொலை வழக்குகளை செசன்ஸ் கோர்ட்டே விசாரிக்கும். அதற்கு முன்னர் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் சாட்சிகளை விசாரித்து, தக்க ஆதாரம் இருந்தால், அந்த வழக்கு செசன்ஸ் நீதிமன்றத்தால் விசாரிக்க வேண்டிய வழக்காக இருந்தால், அதை அந்த மாஜிஸ்டிரேட், செசன்ஸ் நீதிமன்றத்துக்கு விசாரனைக்கு அனுப்பி வைப்பார். இதை கமிட்டல் புரசீடிங் Committal Proceeding என்பர். பழைய கால ஜூரி முறை போன்றது. குற்றம் இருந்தால் வழக்கு விசாரனைக்கு வரும்.
இந்த வழக்கில், சப்-இன்ஸ்பெக்டர் குற்றவாளி. மாஜிஸ்டிரேட் எந்த நேரடி சாட்சிகளையும் விசாரிக்கவில்லை. ஏற்கனவே போலீஸ் விசாரனையில் கொடுத்த அறிக்கையை வைத்தே, செசன்ஸ் நீதிமன்றத்துக்கு விசாரனைக்கு அனுப்பி விட்டார் மாஜிஸ்டிரேட்.
இதை தவறு என்று ஐகோர்ட்டில் வழக்கு போடுகிறார் சப்-இன்ஸ்பெக்டர்.
சிஆர்பிசி பிரிவு 207-ஏ என்ற பிரிவு புதிதாக திருத்தல் சட்டம் 1955ன்படி சேர்க்கப்பட்டது.
அதன்படி, மாஜிஸ்டிரேட் எல்லா சாட்சிகளையும் விசாரித்து, குற்றம் நடந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தால், அதை வழக்கு விசாரனைக்காக செசன்ஸ் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அரசு தரப்பு எந்த நேரடி சாட்சிகளையும் ஆஜர் படுத்தவில்லை. எனவே விசாரிக்கவில்லை என்று சொல்ல முடியாது. மாஜிஸ்டிரேட் தன் முடிவாகவே எல்லா சாட்சிகளையும் வரவழைத்து விசாரிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இருந்த போதிலும், அரசே சாட்சிகளை கோர்ட்டில் விசாரனைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும்.
இந்த வழக்கில், அரசு எந்த சாட்சிகளையும் பட்டியல் இட்டுக் கொடுக்கவில்லை. எனவே எந்த சாட்சியையும் விசாரிக்க முடியவில்லை.
எனவே சாட்சிகளை விசாரிக்காமல் விட்டது சட்டக் குறை என்று எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், அது சரியான அணுமுறை ஆகாது என்பதால், இந்த வழக்கை மறுபடியும் மாஜிஸ்டிரேட் கோர்ட் சாட்சி விசாரனைக்கு திரும்ப அனுப்பி விட்டது ஐகோர்ட்.
**

வழக்கில் பார்ட்டிகளா?


சிபிசி பிரிவு 47
Pentapati Venkata Suryaprakasa v. Abdullah Sahe and another
AIR 1959 AP 106
இந்து கூட்டுக் குடும்பம். அதில் உள்ள தந்தை மட்டும் ஒரு புரோ நோட்டுக் கடனை மேல் எழுத்துச் செய்து கொடுக்கிறார். பொதுவாக இது இந்து கூட்டுக் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களையும் (மகன்களை) கட்டுப்படுத்துகிறது.
புரோ நோட்டில் பணம் கடன் கொடுத்தவர் வழக்குப் போட்டு டிகிரி வாங்கி விடுகிறார். வழக்கில் அந்த கூட்டுக் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் பார்ட்டியாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, அந்த குடும்ப உறுப்பினர்களின் (மகன்களின்) பேரில் உள்ள வழக்கை மட்டும் வாபஸ் பெற்றுக் கொள்கிறார் கடன் கொடுத்தவர். பின்னர் வழக்கு தந்தை மீது மட்டும் டிகிரி ஆகிறது. அந்த சொத்தை ஜப்தி செய்து ஏலம் கொண்டு வருகிறார்.
இந்த பண வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இந்து கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்குள் பாக வழக்கு போடுகிறார்கள். 1950-ல் அந்த பாகவழக்கு டிகிரி ஆகிறது.
இந்த நிலையில் புரோ நோட்டு டிகிரிப்படி ஜப்தி செய்த இந்த சொத்தை ஏலத்துக்கு கொண்டு வந்து, அதை ஒருவர் வாங்கி விடுகிறார்.
இந்த நிலையில், இந்து கூட்டுக் குடும்ப மற்ற உறுப்பினர்களான மகன்கள், அந்த புரோ நோட்டு டிகிரி ஈபி (Execution Petition) வழக்கில் ஒரு மனு போடுகிறார்கள். அதில், அந்த சொத்தை ஏலம் கொண்டு வர ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால், புரோ நோட்டு டிகிரி தந்தை மீது மட்டுமே வாங்கப்பட்ட டிகிரி. மகன்களை இது கட்டுப் படுத்தாது என்பது அவர்களின் வாதம். மேலும் மகன்களுக்கு அந்தச் சொத்தில் மூன்றில் இரண்டு பாகம் உள்ளது என்று ஆட்சேபம் தெரிவித்து சிபிசி பிரிவு 47-ல் ஒரு மனு போடுகிறார்கள்.
கீழ்கோர்ட்டும், அதை அடுத்த அப்பீல் கோர்ட்டும் ஒரே முடிவை எடுக்கின்றன. அது, சொத்தை புரோ நோட்டு டிகிரியில் ஜப்தி செய்த பின்னரே, பாக வழக்கு வருகிறது. எனவே பாக வழக்கு, புரோ நோட்டு டிகிரியை கட்டுப்படுத்தாது என்று கோர்ட் சொல்லி விட்டது.
சிபிசி பிரிவு 47 என்ன சொல்கிறது? “வழக்கின் பார்ட்டிகளுக்கு இடையில் உள்ள பிரச்சனையை பிரிவு 47-ன் மூலம் வழக்காடி தீர்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லி உள்ளது. ஏற்கனவே புரோ நோட்டு வழக்கில் மகன்களை பார்ட்டிகளாகச் சேர்த்து பின்னர் வேண்டாம் என்று வாதியே நீக்கி விட்டார். எனவே அவர்கள் (அந்த மகன்கள்) வழக்கில் பார்ட்டிகள் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பது வாதம்.
ஆனால், Sannamma v. Radha Bhayi ILR 41 Mad 418 (AIR 1918 Mad 123) FB என்ற வழக்கில் ஏற்கனவே ஒரு வழக்கில் பார்ட்டிகளாக இருந்து, பின்னர் அவர்கள் புரோ நோட்டு வழக்கில் தேவையில்லாத பார்ட்டிகளாக இருந்து அவர்களைப் பொறுத்து வழக்கு தள்ளுபடியானால், அவர்களும் பார்ட்டிகளே. எனவே அவர்கள் பிரிவு 47ல் அந்த டிகிரியை ஈபி கோர்ட்டில் எதிர்க்கலாம் என்று சொல்லப் பட்டுள்ளது.
எனவே இந்த வழக்கில், தந்தை மட்டுமே புரோ நோட்டை எழுதிக் கொடுத்துள்ளார். மகன்கள் தேவையில்லாத பார்ட்டிகள். அவர்கள் மீது டிகிரி பெற முடியாது. எனவே மகன்களுக்கும் அந்த புரோ நோட்டு வழக்குக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனவே சிபிசி பிரிவு 47ன்படி அவர்கள் “வழக்கின் பார்ட்டிகள்” என்று எடுத்துக் கொள்ள முடியாது.
எனவே மகன்களின் அப்பீல் வழக்கு தள்ளுபடி ஆகிறது. மகன்கள் வழக்குக்கு வெளியே இருக்கும் நபர்கள். எனவே சிபிசி பிரிவு 47-ன் படி அவர்கள் வழக்கின் பார்ட்டிகள் இல்லை என்பதால், பிரிவு 47-ல் மனு செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை.
**

தேர்தல் வழக்கு


தேர்தல் வழக்கு
ஆந்திராவில் 1957-ல் தேர்தல் நடக்கிறது. அப்போது பேகம் பஜார் தொகுதிக்கு தேர்தல். மொத்தம் ஏழு பேர் தேர்தலில் போட்டியிட மனு அளிக்கிறார்கள். அதில் பத்ரிவிசால் பில்லி என்பவரும் ஒருவர். அவருடைய மனு நிராகரிக்கப் படுகிறது. அவர்களின் மனுவை தேர்தல் அதிகாரி பரிசீலிக்கும்போது, அவர்களின் ஏஜெண்டாக அவரவரின் வக்கீல்கள் உடன் இருக்கின்றனர்.
பொதுவாக தேர்தலில் நிற்பவர், அரசாங்கத்தில் எந்த வேலையிலும் இருக்க கூடாது. அரசாங்கத்தில் எந்த கான்டிராக்ட்டு வேலையும் அப்போது செய்து கொண்டு இருக்க கூடாது என்பதும் தேர்தல் விதிமுறை.
இங்கு, பத்ரிவிசால் பில்லி என்பவர், அரசு நிறுவனமான ஹிண்ட் டொபாக்கோ கம்பெனி என்ற நிறுவனத்தில் ஏஜெண்டாக இருக்கிறார் என்றும், அந்த நிறுவனம் அரசு நிறுவனத்துடன் தொழில் உடன்பாட்டில் உள்ளது என்றும் எதிர் பார்ட்டி ஆட்சேபம் தெரிவிக்கிறார். Section 7(d) of the Representation of the People Act ன்படி அவர் தேர்தலில் நிற்க தகுதி அற்றவர் என்று கூறுகின்றனர்.
தேர்தல் அதிகாரிக்கு ஒரு குழப்பம். இந்த நிறுவனம் மத்திய அரசிடம் கான்ட்ராக்ட்டில் உள்ளதா அல்லது மாநில அரசுடன் கான்டிராக்ட்டில் உள்ளதா என்று. அதை சரிபார்ப்பதற்காக விசாரனையை மறுநாளைக்கு ஒத்தி வைக்கிறார். அதற்குறிய கான்டிராக்ட் பத்திரங்களுடன் வரும்படி சொல்கிறார். மறுநாள் வேறு சில ஆட்சேபனைகளையும் எதிர்பார்ட்டி எடுக்கிறது. இதற்கிடையில் மற்ற போட்டியாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்று விட்டனர். பத்ரி விசால் பில்லி மனு தள்ளுபடி ஆகிறது. ஆக எதிர்பார்ட்டி நரசிங் ராவ் மட்டுமே போட்டியில் உள்ளார். எனவே அவர் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப் படுவதாக தேர்தல் அதிகாரி அறிவிக்கிறார். இது நடந்தது 1957-ல்.
பத்ரி விசால் பில்லி, தேர்தல் அதிகாரியின் நடவடிக்கை ஒருதலைப் பட்சமானது என்றும், அவர் வேண்டுமென்றே மறுநாள் விசாரனையை வைத்து விட்டார். அது சட்டப்படி தவறு என்றும் வாதம் செய்கிறார். எதிர்பார்ட்டியோ, இவர் அரசு சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் ஏஜெண்டாக இருப்பதால்தான் தேர்தல் அதிகாரி அவரின் மனுவை தள்ளுபடி செய்தார். எனவே அவரின் நடவடிக்கை சரியே என்று எதிர்வாதம் செய்தார். தேர்தல் நீதிமன்றம் பத்ரி விசால் பில்லியின் வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.
அதை எதிர்த்து ஆந்திரா ஐகோர்ட்டில் அப்பீல் போடுகிறார். அதில், தேர்தல் அதிகாரி மறுநாளைக்கு விசாரனையை ஒத்தி வைத்தது சட்டப்படி தவறு என்று வாதம் செய்கிறார் அவரின் வக்கீல் எம்.கே.நம்பியார்.
The Representation of the People Act, Section 36ன் படி தேர்தல் அதிகாரி, எந்தவித ஆட்சேபனைகளையும் அன்றே விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், தகுதி இல்லாதவர் என்றால் அப்போது அவரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறுவதாக வாதம் செய்தார்.
கலவரம் நடந்தால் ஒழிய, மற்ற காரணங்களுக்காக விசாரனையை தள்ளி வைக்க முடியாது என்றும் கூறினார்.
மேலும், சரியான காரணம் இல்லாமல், ஒரு மனுவைத் தள்ளுபடி செய்தால், தேர்தல் முடிவில் வெற்றி பெற்றவரின் வெற்றி செல்லாது என்றும் சட்டம் சொல்வதாக கூறினார்.
ஆந்திரா ஐகோர்ட் இந்த வாதங்களை ஏற்கவில்லை. அவர் அரசு நிறுவனத்துடன் ஏஜெண்ட் வேலையில் இருந்தார் என்பதால், அவரை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் முடிவு சரியே என்று தீர்ப்பு கூறியது.
இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. G.Raja Nainar v. NT Velusamy Thevar and others, (1958) 1 MLJ 124 என்ற வழக்கு:
1957-ல் சென்னை மாகாண தேர்தல் நடக்கிறது. ஆலங்குளம் தொகுதிக்கு வேட்பாளர்கள் போட்டி. ஆறு பேர் போட்டி. வேலுச்சாமி தேவர், ராஜா நயினார், செல்லபாண்டியன், அம்பலவான பிள்ளை, அருணாசலம். மற்றும் ஒருவர்.
அருணாசல நாடார் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அப்போது அவர் திருச்செந்தூர் தேசிய பயிற்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார்.  அந்த பள்ளி, அரசின் பண உதவியுடன் நடக்கும் பள்ளி என்றும், எனவே அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஆட்சேபனை செய்கிறார்கள். மனுவை பரிசீலனை செய்யும் சமயம், அருணாசலம் அங்கு வரவில்லை. ஏஜெண்டும் அனுப்பவில்லை. எனவே அவர் மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்கிறார்.
தேர்தலில் வேலுச்சாமி தேவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்கள்.
அருணாசலம், அதை எதிர்த்து தேர்தல் கோர்ட்டுக்குப் போகிறார். தேர்தல் கோர்ட் அவரின் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறது. அதை எதிர்த்து ஐகோர்ட் ரிட் வழக்காகப் போகிறார்.  அங்கும் வழக்கு நிற்கவில்லை.
**

தேவதாசியின் சொத்து வழக்கு


தேவதாசி சர்வீஸ் இனாம் சொத்து வழக்கு (1959-ல்):
ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் போலூர் கிராமத்தில் “ஶ்ரீ சென்ன கேசவ சுவாமி” கோயில் உள்ளது. இதை 1959 காலக் கட்டத்தில், அதன் டிரஸ்டிகள் நிர்வகித்து வந்தார்கள். அந்த கோயிலுக்காக நிறைய நிலங்கள் உள்ளன.
அதில், ஒரு 13 ஏக்கர் நிலத்தை, தேவதாசி சர்வீஸ் இனாமாக கொடுத்து இருந்தார்கள். (தேவதாசி என்பவர், கடவுளுக்கு திருமணம் செய்து கொடுத்த பெண் என்பர். அந்தக் காலத்தில், அப்படி கடவுளின் சேவைக்காக அர்பணிக்கப்பட்ட பெண்ணை மிகவும் மரியாதையுடன் சமுதாயம் பார்க்கும்).
1959 காலக் கட்டத்தில், இந்த தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு விட்டது. எனவே அந்த நிலம் அந்த தேவதாசி பெண்ணுக்கு, கோயில் சேவை செய்வதற்காக கொடுத்தது. இப்போது தேவதாசி முறை ஒழிக்கப் பட்டதால், அந்த சேவையை அவள் கோயிலுக்கு இனி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்பதால், அதற்காக அவளுக்குக் கொடுத்த நிலத்தை திரும்பவும் கோயிலுக்கே ஒப்படைக்க வேண்டும் என்று டிரஸ்டிகள் வழக்கு போட்டார்கள்.
கீழ்கோர்ட் அந்த வழக்கை ஏற்றுக் கொண்டு டிகிரி கொடுத்தது. அதை எதிர்த்து அந்த தேவதாசிப் பெண் அப்பீல் போனார். அங்கும் அவள் வழக்கை ஏற்றுக் கொள்ளவில்லை. அதை எதிர்த்து அவள் மதராஸ் ஐகோர்ட்டுக்கு அப்பீல் சென்றாள். ஐகோர்ட் அவள் வழக்கை ஏற்றுக் கொண்டது. இது சர்வீஸ் இனம் அல்ல; அவளுக்கே இனாமாக கொடுத்த நிலம் என்றும் எனவே அதை திரும்ப பெற முடியாது என்றும் தீர்ப்பு கொடுத்து, டிரஸ்டிகள் போட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்குகள் 1946 முதல் 1951 வரை நடந்தது. இடைப்பட்ட காலத்தில் கீழ்கோர்ட் தீர்ப்புப்படி, கோயில் டிரஸ்டிகள், அந்த நிலத்தை தேவதாசிப் பெண்ணிடமிருந்து சுவாதீனம் எடுத்துக் கொண்டனர். எனவே அந்தப் பெண், இப்போது வழக்கு அவளுக்குச் சாதகமாக வந்து விட்டால், நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படியும், அதில் வழக்கு காலத்தில் வந்த வருமானத்தையும் அவளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் மனு போடுகிறாள்.
கோயில் டிரஸ்டிகள் வசம் நிலம் போன பின்னர், அவர்கள் அந்த நிலத்தை குத்தகைக்கு விடுவதற்காக ஏலம் போட்டு, அதில் ஏலம் எடுத்தவர் வசம் நிலத்தை ஒப்படைத்து விட்டார்கள். பசவச்சாரி என்பவர் இந்த நிலத்தை ஏலம் எடுத்து இருந்தார். பின்னர் அவர் இன்சால்வன்ட் என்னும் கடன் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலைக்கு வந்து விட்டார். எனவே கோயில் நிர்வாகமும் அவரிடம் எந்த பணமும் நிலத்துக்காக வாங்கவில்லை என்று சொல்கிறார்கள். நிலத்தில் பணம் வாங்கி இருந்தால் மட்டுமே நாங்கள், தேவதாசிக்கு கொடுக்க கடமைப் பட்டவர்கள். நாங்கள் எந்த பணமும் வாங்கவில்லை. ஏலம் எடுத்தவரும் Insolvent ஆகி விட்டார். அப்படி இருக்கும்போது, நாங்கள் எப்படி தேவதாசி பெண்ணுக்கு நிலத்தின் வருமானமாக பணம் கொடுக்க முடியும் என்று வாதம் செய்கிறார்கள்.
Mesne profit மீன்-புராபிட் என்பது ஒருவர் ஒரு சொத்தை கைவசம் வைத்திருக்கும் காலத்தில், அதில் வரும் வருமானங்களை அடைந்து கொண்டிருந்தால், அந்த வருமானத்தை மீன்-புராபிட் என்று சட்டம் சொல்கிறது. இது சிவில் நடைமுறை சட்டம் பிரிவு 2(12)-ல் விளக்கி உள்ளது.
எனவே இந்த சொத்தில் வருமானம் வந்தால் மட்டுமே அது மீன்-புராபிட் ஆகும். வருமானம் வரவில்லை என்றால், அதை கேட்க முடியாது என்பதால், தேவதாசி கேட்ட வருமானத்தைக் கொடுக்க முடியாது என்று வழக்கு தள்ளுபடி ஆகி விட்டது.
**

நவாப் பாகப் பிரிவினை வழக்கு


நவாப் பாகப் பிரிவினை வழக்கு
நவாப் நிஜாம் உத் தௌலா என்பவர் ஆந்திராவில் உள்ள பந்தர் பகுதியில் நவாப் ஆக இருந்தார். இவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தன. இவர் 1898-ல் இறந்து விட்டார். இவருக்கு பல மனைவிகள் குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு மகன், நவாப்பின் சொத்துக்களில் பாகம் கேட்டு 1906-ல் வழக்குப் போட்டார்.  குன்டூர் சப் கோர்ட் அவருக்கு சாதமாக பைனல் டிகிரி கொடுத்தது. அந்த வழக்கு 1911-ல் முடிவுக்கு வந்தது. அதில் ஒரு பிரதிவாதியான உசேன் அலி கான் என்ற மகனுக்கு மட்டும் செருவு கிராமத்தில் 124 ஏக்கர் நிலங்கள் அவரின் பாகமாக வந்தன.
அந்த பாக வழக்கில், நவாப்பின் பல மனைவிகளை பார்ட்டிகளாகச் சேர்த்து இருந்தனர். அதில் ஒருவர் பெயர் சாகத் பேகம் என்பவர். ஆனாலும் அவர் முறைப்படி திருமணம் செய்த மனைவி இல்லை என்று கோர்ட்டில் வாதம் செய்தார்கள். அவர் நவாப்புக்கு மனைவியாக இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அந்த திருமணம் முட்டா முறைப்படியான உறவு என்றார்கள். முட்டா முறை என்பது தற்காலிமாக திருமணம் செய்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்வது. இது இஸ்லாமிய முறையில் நடந்த திருமணம் அல்ல. (இந்துக்களில் இந்த மாதிரியான முறையை வைப்பாட்டி என்று சொல்வார்கள்). எனவே சாகத் பேகத்தின் திருமணம் முட்டா முறைப்படி என்பதால், அவர் சட்டபூர்வ மனைவி இல்லை என்று கோர்ட் சொல்லி விட்டது. அவருக்கு பாகமும் ஒதுக்கவில்லை.
சாகத் பேகம் இதை எதிர்த்து மசூலிபட்டணம் சப்-கோர்ட்டில் 1914-ல் வழக்குப் போடுகிறார்.  “தான், முறைப்படி திருமணம் ஆன மனைவிதான்” என்றும், கோர்ட்டில் பொய்யான தகவலைச் சொல்லி, ஏமாற்றி டிகிரி வாங்கி விட்டார்கள் என்றும், அவரின் வழக்கில் சொல்கிறார். எனவே நவாப்பின் சொத்தில் முஸ்லீம் சட்ட முறைப்படி இவருக்கு 1/8 பங்கு ஒதுக்கித்தர வேண்டும் என்றும் கேட்கிறார். அவருக்கும் நவாப்புக்கும் பிறந்த ஒரு பெண் இருந்தாள் என்றும் இப்போது அவள் இறந்து விட்டால் என்றும், அவளுக்கு குழந்தைகள் உள்ளன என்றும், ஆக மொத்தம் நாவப் சொத்தில் எல்லோருக்குமாகச் சேர்த்து 103/768 பங்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்கிறார்.
சாகத் பேகம், வழக்கு கோர்ட்டில் நடந்து கொண்டிருந்த காலத்தில் இறந்து விட்டார். அவரின் மகன் சுலைமான் அலி கான் என்பவர் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி வந்தார். அவரும், வழக்கு நடந்து கொண்டிருக்கும் காலத்தில் இறந்து விடுகிறார். அவரின் மகன்கள் வாரிசுகளாக தொடர்கிறார்கள்.
வழக்கில், சாகத் பேகம் முறைப்படி திருமணம் ஆன மனைவி தான் என்றும், நவாப்பின் மனைவி என்பதால், அவருக்கும் பங்கு உண்டு என்றும், ஏற்கனவே நடந்த பாக வழக்கில் கொடுத்த தீர்ப்பில் இவருக்கு பங்கு கொடுக்கவில்லை என்றும், எனவே அந்த தீர்ப்பு இவரைப் பொருத்தவரை செல்லாது என்றும் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இறந்த சாகத் பேகத்துக்கு மனைவி என்ற முறையில் 1/8 பாகம் உண்டு என்றும், அவரின் இறந்த மகளுக்கு 7/768 பாகம் உண்டு என்றும், இரண்டையும் கூட்டினால் மொத்தம் 103/768 பாகம் இவர்கள் இருவருக்கும் உண்டு என்றும் தீர்ப்பு.
இதற்கிடையில் முந்தைய பாக வழக்கில், ஒரு பார்ட்டியான உசேன் அலிகானுக்கு 124 ஏக்கர் கிடைத்த நிலத்தில், ஒரு பகுதியான 112 ஏக்கர் நிலத்தை வெளி நபர்களுக்கு அவர் விற்று விட்டார். அப்போது அதன் விலை ரூ.45,000/-. அந்த கிரயப் பத்திரத்தில் இரண்டு பேர்கள் வாங்குபவர் என்று குறிப்பிட்டு இருந்தாலும், அதில் மேலும் ஐந்து பேர்களின் நன்மைக்காக அந்த நிலங்கள் வாங்கப் பட்டது என்று கண்டு உள்ளது.
இதற்கிடையில், சுப்பாராவ் என்பவர், இறந்த நவாப்புக்கும், அவரின் ஒரு மகனான இந்த உசேன் அலிகானுக்கும் புரோ நோட்டு கடன் கொடுத்திருந்தார். அவர்கள் பணத்தைக் கொடுக்காததால், அவர் ஒரு வழக்குப் போட்டு, 1910ல் டிகிரி வாங்கி, அதற்காக, இந்த உசேன் அலிகான் நிலங்களின் மேல் ஜப்தி உத்தரவு பெற்றிருந்தார். அந்த சொத்தைத் தான் வெளி நபர்கள் கிரயம் வாங்கி இருந்தனர்.
இப்போது அந்த நிலங்களை கிரயம் வாங்கியவர்கள், கோர்ட்டில் ஒரு மனுப் போட்டு, ஜப்தி உத்தரவுக்கு முன்னரே நாங்கள் கிரயம் வாங்கி விட்டோம் என்று வாதம் செய்தார்கள். கோர்ட் அதை ஏற்றுக் கொண்டது. ஜப்தி உத்தரவை ரத்து செய்து விட்டது.
இதற்கிடையில், சாகத் பேகத்துக்கும், அவரின் இறந்த மகளுக்கு கிடைத்த பங்கும், அதில் கிடைக்கும் வருமானங்களுக்கும் இந்த விற்பனை செய்த சொத்துக்களை ஜப்தி உத்தரவு பெற்றார்கள். அதிலும், சொத்தை கிரயம் வாங்கியவர்கள் போராடினார்கள். ஆனால் முடியவில்லை. அதை எதிர்த்து மதராஸ் ஐகோர்ட்டுக்கு அப்பீல் வழக்கு வந்தது. (அப்போது ஆந்திராவும் மதராஸ் மாகாண எல்லைக்கு உட்பட்டதே). அதில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கிரயம் செய்தது Lis pendense சட்டப்படி செல்லாது என்றும், சொத்தை கிரயம் வாங்கியவர்களுக்கு Adverse Possession என்னும் எதிரிடை அனுபவ பாத்தியம் உண்டு என்றும், வாதம் செய்தார்கள். இது எதையும் மதராஸ் ஐகோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. முடிவில் அப்பீல் வழக்கை 1953-ல் தள்ளுபடி செய்து விட்டது.
**







Saturday, October 27, 2018

Play ducks and drakes சில்லு விளையாட்டு


Play ducks and drakes
குளத்தில் விளையாடும்போது, ஒரு உடைந்த மண் பானை ஓடு அல்லது தட்டையான கல்லைக் கொண்டு, அந்த நீரின் மேலே, அது குதித்து குதித்து ஓடுவது போல எறிவார்கள் சிறுவர்கள். இது ஒரு வகை விளையாட்டு. “சில்லு விளையாட்டு” என்று ஒரு பகுதியில் உள்ள மக்கள் இதற்குப் பெயர் சொல்லுவார்கள். மற்ற பகுதிகளில் இதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.
ஐரோப்ப நாடுகளிலும் இந்த விளையாட்டு மிகவும் பிரபலம் என்கிறார்கள். இந்த விளையாட்டுக்குப் பெயர் “டக்ஸ் அண்டு டிராக்ஸ் விளையாட்டு” “Play ducks and drakes” என்கிறார்கள். இந்த விளையாட்டில், சிறுவர்கள், குளத்தின் நீரின் மேல் மட்டத்தில் இந்த சில்லு ஓட்டை லாவகமாக எறிந்தால், அந்த ஓடு, அதிகபட்சம் 10 முறை குதித்துத் துதித்து (தத்தி தத்தி) செல்லும். ஆனாலும், வெளிநாட்டுக்காரர் ஒருவரான Kurt Steiner குர்த் ஸ்டெய்னர் என்பவர் 40 முறை தத்திச் செல்வது போல உலக சாதனை படைத்துள்ளாராம். அது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளதாம்.
Duck and Drake என்பது பெண் வாத்தும் ஆண் வாத்தும் என்று பொருள். அவைகள் நீரில் தன் இறக்கைகளை விரித்து நீர் மட்டத்துக்கு மேலேயே தத்தி-தத்தி பறப்பதுபோலச் செல்லும். அதனால்தான் அதற்கு இந்தப் பெயரை வைத்துள்ளார்கள். அமெரிக்காவில் இந்த விளையாட்டுக்கு ஸ்டோன் ஸ்கிப்பிங் Stone Skipping என்கிறார்கள். இங்கிலாந்தில் இந்த விளையாட்டுக்கு ஸ்டோன் ஸ்ம்மிங் Stone Skimming என்கிறார்கள்.
ஒரு நிறுவனம், எந்த வரைமுறையும் இல்லாமல் பணத்தை அள்ளி அள்ளிச் செலவு செய்கிறது என்றால் அது டக்ஸ் அண்டு டிராக்ஸ் விளையாட்டு செய்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். அதேபோல ஒரு மாணவன் கவனம் செலுத்தி படிக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்தால் அவனையும் டக்ஸ் அண்ட் டிராக்ஸ் விளையாட்டு போல இருக்கிறான் என்கிறார்கள். கவனக்குறைவாக அல்லது ஏனோ தானோ என்று பொறுப்பில்லாமல் இருப்பவர்களை இப்படியான அடைமொழியில் குறிப்பிடுகிறார்கள்.
I don’t think you’ll ever achieve it if you keep playing ducks and drakes like you’re doing now.
I think you actually need to work harder. You’re always off playing ducks and drakes.
ஆக, ஒருவர் பொறுப்பில்லாமல் காரியங்களைச் செய்தாலும், பொறுப்பில்லாமல் செலவு செய்து வந்தாலும், இந்த பொருள்படும்படி இந்த வாக்கியமான Play ducks and drakes என்று குறிப்பிடுகிறார்கள்.
**


Friday, December 15, 2017

இந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்

EVM -VVPAT  (Electronic Voting Machine - Voter Verifiable Paper Audit Trail.
தேர்தல் என்பது மக்களாட்சி வந்த பின்னர் ஏற்பட்டதே! அதற்கு முன் காலங்களில் மன்னராட்சி முறையே!
மக்களாட்சியில் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் முறையை பல நாடுகள் அறிமுகப்படுத்தின. ஆரம்ப காலங்களில், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருந்தனர். எனவே கலர் பெட்டிகளை வைத்தனர். எந்தக் கலர்ப் பெட்டி யார் வேட்பாளர் என்று மட்டுமே பிரச்சாரம் செய்யப்பட்டது. பின்னர், சின்னங்கள் என்ற பெயரில் படங்களை அறிமுகப்படுத்தினர். பின்னர் சின்னங்களுடன், பெயர்களையும் எழுதி அவர்களுக்கு ஒரு எண்ணையும் குறிப்பிட்ட சீட்டுக்களை கொடுத்தனர்.
காலம் வேகமாக மாறிவிட்டது.
இப்போது பட்டனைத் தட்டினால், ஓட்டு விழும். ஆனாலும் பெயரும், சின்னமும், அடையாளத்துக்காகத் தேவைப்படுகிறது.
ஆனாலும், இது முழுக்க முழுக்க நம்பிக்கையுடன் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்து கொண்டேதான் இருக்கிறது.
குறிப்பாக, எதிர்கட்சிகள், "இயந்திர ஓட்டு முறையில் தில்லு முல்லுக்கு வாய்பிருக்கிறது" என்று கூறும். ஆளும் கட்சிகள் அதை மறுக்கும்.
அந்த இயந்திர ஓட்டிப் பெட்டியில் பட்டன் இருக்கிறது. அதைத் தட்டினால், அதற்குறிய சின்னத்துக்கு வாக்குப் போய் சேரும். அதைச் சரிபார்க்க வேறு வழி இல்லை என்பதால், ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தினர். அதுவே, ஓட்டுப் போட்டவருக்கு ஒரு சீட்டு வரும். அதில் அவர் நினைத்த சின்னத்துக்குத் தான் ஓட்டு விழுந்ததா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால், அந்தச் சீட்டை வெளியே எடுத்துக் கொண்டு வர முடியாது. வெளியே விட்டால், யாருக்கு ஓட்டுப் போட்டார் என்று தெரிந்துவிடும். அது குழப்பத்தை உண்டாக்கிவிடும்.
ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சி ஒரு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் வைத்தது. அதன்படி, ஓட்டு இயந்திரத்தில் வரும் சீட்டை சேகரித்து வைத்து, இயந்திரம் சொல்லும் ஓட்டு எண்ணிக்கையும், சீட்டில் காண்பிக்கும் ஓட்டு எண்ணிக்கையும் ஒத்துப் போகிறதா என்று சரி பார்க்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்று கேட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் அதை மறுத்து விட்டது. (அந்த வழக்கு இன்று நடந்தது).
VVPT என்றால் Voter Verifiable Paper Audit Trail என்று பெயர். ஒருவர் பட்டனில் போட்ட சின்னத்துக்குத் தான் அந்த ஓட்டு சேர்ந்தது என்பதை உறுதி செய்யும் சீட்டு அது.
இந்த முறையானது, இந்தியாவில் இப்போது இரண்டாவது தடவையாக குஜராத்திலும், ஹிமாசல பிரதேசத்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. முதன் முதலில், மகாராஷ்டிராவில் உள்ளூர் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கோவா மாநில தேர்தலில்  முதன் முதலாகப் பயன்படுத்தப் பட்டது.
இனி வரும் காலங்களில் இது போன்ற சீட்டுடன் கூடிய இயந்திர ஓட்டு முறையே இருக்கும் என தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளது.
பொதுவாக, எந்த முறையாக இருந்தாலும் அதனதன் பாதகங்கள் உண்டு. இந்த முறையிலும் பாதகங்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது. இயந்திரங்கள் தவறே செய்யாது என்றும் சொல்லமுடியாது. இயந்திரங்களை தயார் செய்யும் வல்லுனர்களும் தவறே செய்ய மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. இயல்பான தவறுகள் பராவாயில்லை. பெரும் அளவில் முறைகேடு இருந்தால், இந்த வகை ஓட்டு முறையும் தவறானதே என்பதை மறுப்பதற்கில்லை. சந்தேகம் என வந்துவிட்டால், சம்மந்தப்பட்டவர்கள் அதை தீர்க்க வேண்டும் என்பதே உலக நடைமுறை.

 **