Friday, October 28, 2016

கந்தரலங்காரம் (காப்பு)

கந்தரலங்காரம் (காப்பு)

அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வடவருகில் சென்று கண்டு கொண்டேன்: வருவார் தலையில்
தட பட எனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்
கட தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றிணையே!

(அடல் என்னும் வலிமை பொருந்திய அருணைத் திருக்கோபுரம் என்னும் திருவண்ணாமலைக் கோபுரத்திலே, அந்த வாயிலுக்கு வடக்கில் சென்று கண்டு கொண்டேன்; அங்கு வருபவர்கள் தலையில் தட பட என்று ஓசை எழும்படி தலையில் குட்டிக் கொண்டு, சர்க்கரையை வாயில் மொக்கிக் கொண்டு, அதன் கையோடு, கடதடக் கும்பக் களிறு என்னும் மதம் பொருந்திய அகன்ற மத்தகத்தை உடைய யானை முகக் கடவுளான விநாயகருக்கு  இளையவரான  யானை போன்ற சுப்பிரமணியக் கடவுளை கண்டு கொண்டேன்.)

(அருணகிரிநாதர் அருளியது)
**



Tuesday, October 25, 2016

திருவாரூர் மூலஸ்தானம்

திருவாரூர் மூலஸ்தானம் (தியாகராயப் பெருமான்)

“திருவாரூர் பிறந்தவர்களுக்கு எல்லாம் நான் அடியேன்” என்று சுந்தரர் உறுதி எடுத்து துதிக்கப்பட்ட தலமே இந்த திருவாரூர் மூலஸ்தானம்;

இந்திரனிடமிருந்து முசுகுந்த சக்கரவர்த்தி இந்த தியாகராயப் பெருமானைப் பெற்று ஸ்தாபித்த தலமாம்! சப்த ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாம்!

இந்த திருவாரூர் என்னும் நகர், சோழ மன்னர்களுக்கு வெகுகாலம் ராஜதானியாக (தலைநகராக) இருந்து வந்ததாம்; மனுநீதி சோழன் அரசு செய்யும் காலத்தில், தன் மகன் தேரில் செல்லும்போது ஒரு பசுவின் கன்றை, அவனின் தேர் சக்கரம் தெரியாமல் ஏற்றிக் கொன்றதால், அவனை அதே தேர்காலில் இட்டுக் கொன்று, அந்தப் பசுவின் துயர் தீர்த்தவன் மனுநீதிசோழன்;

அவனின் நேர்மைக்கண்டு இறந்த அந்த பசுவின் கன்றையும், சோழனின் மகனையும் உயிர்பித்தார் சிவன்; அத்தகைய கீர்த்தி பெற்ற தலமே திருவாரூர் மூலஸ்தானம்;

இங்கு குடிகொண்டிருக்கும் சுவாமியின் பெயர்: சுவாமி வன்மீகநாதர்: அம்மையின் பெயர்: அல்லியங்கோதை;



Friday, October 21, 2016

துர்க்கை

துர்க்கை:

துர்க்கை என்றால் துர்க்காதேவி; பார்வதி தேவிக்குக்குத்தான் இந்தப் ப
பெயர்;  துர்க்கன் என்னும் ஒரு பெரிய அசுரனைக் கொன்றதால் பார்வதி தேவிக்கு துர்க்கை என்று பெயர் ஏற்பட்டது;

துர்க்கன் என்னும் இந்த மகா அசுரன், தேவ லோகத்தில் அட்டகாசம் செய்கிறான்; இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களும்  தங்கள் பதவிகளை விட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டனர்; அந்த அளவுக்கு அவனின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது; தேவர்கள் எல்லோரும் சிவபெருமானிடம் முறையிடுகிறார்கள்; சிவனோ, பார்வதி தேவியைப் பார்க்கிறார்; பார்வதி தேவி, தானே அந்த அசுரனைக் கொல்வதாக  உறுதி கொள்கிறார்;

பார்வதிதேவி, தன்னிடம் இருக்கும்  “காலராத்திரி” என்னும் பாங்கிப் பெண்ணை ஏவுகிறார்; அவள் சென்று, அந்த அசுரனின் சேனைகளைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி விடுகிறாள்;
பார்வதிதேவி, தானே போருக்கு போகிறார்: அந்த அசுரனின் சேனைகளை அழித்துவிட்டார்; அந்த அசுரன் மட்டும் மிஞ்சி இருக்கிறான்; அவன் ஒரு பெரிய மலையைப் போல உருவம் கொண்டு  சண்டைக்கு வருகிறான்; பார்வதிதேவி, அவனை, தன் நகங்களால் கீறி கிழித்து சிதைக்கிறார்; ஆனாலும், அவன் ஒரு பெரிய மகிஷம் (எருமைமாடு) போன்று உருவம் எடுத்து சண்டைக்கு வருகிறான்; அதையும் பார்வதிதேவி சிதைக்கிறார்;

பின்னர் அந்த அசுரன் தன் சுய உருவத்தில், பெரிய பெரிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சண்டைக்கு வருகிறான்; பார்வதிதேவியோ, ஒரு கணையை விட்டு (ஒரு ஆயுதம்) அவனின் மார்பை பிளக்கிறார்; அத்துடன் அவனின் கதை முடிகிறது;
தேவர்கள் மகிழ்கிறார்கள்! அந்த துர்க்கன் என்னும் அசுரனைக் கொன்றதால், பார்வதிதேவிக்கு “துர்க்கை அல்லது துர்க்காதேவி” என்று பெயர் ஏற்பட்டது;

போருக்குப் போகும் பார்வதிதேவி, எட்டு தோள்களுடனும், பதினெட்டு கைகளுடனும், சூலம், சக்கரம், கரகம் முதலிய ஆயுதங்களுடன், போருக்கு போனார்; இவருக்கு சிங்கவாகினி என்றும், கலையூர்தி என்றும் பலவாறு பெயர்கள் உண்டு; காளிதேவியும் இவர்தான் என்று சொல்பவர்களும் உண்டு;

“கெட்டவர்களை அழிக்க, கடவுளே நேரில் தோன்றி தீர்ப்பை எழுதுவான்போல!”

**

பிறங்குமால் மருகன் காக்க

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”5

உறுதியாய் முன் கை தன்னை உமை இள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என் கைத் தலத்தை மா முருகன் காக்க
புறங்கையை அயிலோன் காக்க பொறிக் கர விரல்கள் பத்தும்
பிறங்குமால் மருகன் காக்க, பின் முதுகைச் சேய் காக்க!—(5)







துரோணாச்சாரியன்

துரோணாச்சாரியன்:

இவர் பரத்துவாச முனிவரின் புத்திரன்; அசுவத்தாமனின் தந்தை; இந்த துரோணாச்சாரியாருக்கு “கும்பன்” என்ற பட்டப் பெயரும் உண்டு; துரோணம் என்றால் கும்பம் என்று பொருள்;

பரத்துவாச முனிவர் பெரிய தவத்தில் இருக்கிறார்; அவர் தவத்தை அழிக்க நினைக்கிறான் இந்திரன்; இந்திர லோகத்தில் இருக்கும் பேரழகி மேனகையை அங்கு அனுப்பி வைத்து, பரத்துவாச முனிவரின் தவத்தை கலைக்க சொல்கிறான் இந்திரன்;

மேனகையின் அழகில் மயங்காதவர் யாருமில்லை! பரத்துவாசர் உட்பட! மயங்கி விட்டார்; அவள் வருவதைப் பார்த்தவுடனேயே மயங்கம் கொண்டார்; அவரின் விந்து ஒரு கும்பத்தில் விழுகிறது; அதுவே குழந்தையாகப் பிறக்கிறது; அவரே துரோணர் என்னும் துரோணாச்சாரியார்;

இந்த துரோணாச்சாரியாரிடம்தான், கௌரவர்கள், பாண்டவர்கள் இரு கூட்டத்தாரும், தங்களின் இளமை காலத்தில் வில் வித்தை கற்றனர்;
பாரதப்போரில், இந்த துரோணாச்சாரியார், திருஷ்டியுமன் என்பவனால் கொல்லப்படுகிறார்;

பாரதப்போரில், அசுவத்தாமன் என்று ஒரு யானையும் போர்களத்தில் உள்ளது; துரோணரின் மகன் பெயரும் அசுவத்தாமன்; அங்கு இருப்பவர்கள் (பாண்டவர்கள்) அசுவத்தாமன் இறந்தான் என்று சொல்லி சங்கை ஊதுகிறார்கள்;

பெற்றமனம் பித்துதானே! துரோணர் என்னும் அறிவுஜீவி, பாசத்தின் பிடியில் சிக்கிவிட்டார்; அசுவத்தாமன் என்றால் என் மகன்தானே என்று கருதிக் கொண்டு, வில்லை கீழே போட்டு மயங்கி விழுகிறார்; அப்போது அவரை கொன்றனர்;

“சுத்த வீரனைக் கொல்ல மாற்று வழியே சிறந்தபோல!”
(ஆம் என்கிறான் ஸ்ரீகிருஷ்ணன்).


எழில் குறிஞ்சிக் கோன் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”--4

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க என் தன்
ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக் கோன் காக்க! –(4)



திருவுடன் பிடரி தன்னை சிவசுப்பிரமணியன் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”--3

இரு செவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க
வாயை முருகவேள் காக்க, நா பல் முழுதும் நல் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க

திருவுடன் பிடரி தன்னை சிவசுப்பிரமணியன் காக்க! –(3) 



நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”

ஆதியாம் கயிலைச் செல்வன்  அணி நெற்றி தன்னைக் காக்க
தாது அவிழ் கடப்பந் தாரான் தான் இரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசிலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க! –(2)



பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”

அண்டமாய் அவனி ஆகி அறிய வொணாப்
பொருள் அதாகித் தொண்டர்கள் குருவும் ஆகித்
துகள் அறு தெய்வம் ஆகி, எண் திசை போற்ற நின்ற
என் அருள் ஈசன் ஆன திண் திறல் சரவணன் தான்
தினமும் என் சிரசைக் காக்க! –(1)


Sunday, October 9, 2016

“I am not a baby killer”

“I am not a baby killer”--  mother cries.

அமெரிக்காவில், ஆறு வயது சிறுவன், தாயின் கொடுமையால் இறந்து விட்டதாக அல்லது கொலை செய்யப்பட்டதாக அந்த தாயை சட்டம் சிறையில் தள்ளுகிறது;

இந்த நிகழ்வு பெண்களின் வாழ்க்கைச் சோகத்தை விவரிப்பதால், இங்கு எழுத வேண்டிய முக்கியத்துவம் பெறுகிறது;

அவளின் 20 வயதில் அவளுக்குத் திருமணம் ஆகிறது; அவள் பெயர் பெர்கின்ஸ்; ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிறாள்; என்ன பிரச்சனையோ தெரியவில்லை, அவசரப்பட்டு அந்தக் கணவனை விட்டு விலகி விடுகிறாள்; அவளும், மகனுமாக தனியே வசிக்கிறார்கள்; இந்த உலகில் பெண்கள் தனியே வசிப்பது என்பது கொஞ்சம் கடினமாக விஷயம்தான்; அதாவது தனது சொந்த பந்தங்கள் இல்லாமல், ஆதரவு இல்லாமல் தனியே வசிப்பது சிரமம்;

எப்படியோ, ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன; அங்கு ஒரு "வீடு-இல்லாதவர் வசிக்கும் அரசு இல்லத்துக்குச்" செல்கிறாள்; அங்கு ஒரு வாலிபனைப் பார்க்கிறாள்; அவன் பெயர் ஸ்மித்; ஏதோ ஒரு ஈர்ப்பு; என்றாலும் அவனிடம் உறுதி கேட்கிறாள்; என்னையும் என் மகனையும் நன்றாகப் பாத்துக் கொள்வாய் என்ற உறுதி தெரிந்தால்தான் நான் உன்னுடன் வாழ்வேன் என்கிறாள்; அவன் சத்தியம் செய்கிறான்; “பொய் உலகில், சத்தியங்கள் பொய்யாகிவிடும்!”

அவளும் மகனும் அவனுடன் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள்; அவனை முன்னே பின்னே தெரியாது; அவன் குணம் தெரியாது; குலம் தெரியாது; வாழ்க்கை முறை தெரியாது; ஆண் என்ற ஒரு அடையாளத்தைத் தவிர!

ஒருநாள் இவளின் அன்பு மகன் இறக்கிறான் அல்லது கொலை செய்யப் படுகிறான்; இவளை போலீஸ் அள்ளிக் கொண்டு போகிறது; விசாரனை, விசாரனை; தானே தன் மகனை விளக்குமாற்றால் (துடைப்பத்தால்) அடித்ததாகவும் அதில் அவன் இறந்து விட்டான் என்றும் வாக்குமூலம் கொடுக்கிறாள்; இப்போது சிறையில் வாழ்க்கை!

உண்மை வேறுவிதமாக இருக்கிறது; கொடுமைக்கார காதலனிடமிருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் இருந்திருக்கிறாள்; இப்போது கதறுகிறாள், “என் அன்பு மகனை நான் கொலை செய்யவில்லை” I am not a baby killer: “ஒருவேளை, நான் ஏற்கனவே என் காதலனிடமிருந்து தப்பிச் சென்றிருந்தால், என் குழந்தை இன்று உயிரோடு இருந்திருப்பான்என்று கதறல்!

என் காதலன் கெட்டவன் என்று முன்னரே தெரிந்தும் அவனுடன் தொடர்ந்து வசித்து வந்தது என் தவறுதான்! அப்போதே அவனை விட்டு வெளியேறி வந்திருந்தால், என் மகனை நான் இழந்திருக்க மாட்டேன் என்கிறாள்;

“இந்த ஒரு வருடமாக என் காதலனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தபோதே தெரிந்து கொண்டேன் அவன் நல்லவன் இல்லை என்று; எனக்கு அவனிடமிருந்து தப்பிச் செல்ல வழி தெரியவில்லை; வேறு வழியின்றி அவனுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்; ஒரு நாள் என் மகனை, என் காதலன் அடித்து பாத்ரூமில் உள்ள கதவில் தலைகீழாக தொங்க விட்டிருந்தான்; என் உயிரே போய் விட்டது; அவனை திட்டி, என் மகனை இறக்கி விடும்படி கெஞ்சினேன்: அவன் என்னை மிரட்டினான்; பேசாமல் போய் சோபாவில் உட்கார்ந்து டிவியைப் பார்; அல்லது பைபிளைப் படி; உன் மகன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு பக்கெட்டில் கக்கூஸ் போய் இருக்கிறான்; அவனுக்கு எவ்வளவு கொழுப்பு? என்று உறுமுகிறான்; பெத்த மனம் கேட்கவில்லை; ஒருவாறு கெஞ்சி, தொங்க விடப் பட்டிருந்த என் ஆறு வயது மகனை இறக்கி, என்னுடன் கட்டிலில் படுக்க வைத்திருந்தேன்; மயங்கித் தூங்குகிறான் என்றுதான் நினைத்திருந்தேன்; கொஞ்ச நேரத்துக்குப் பின்னரே தெரிந்தது அவன் மூச்சு நின்றுவிட்டது என்பது; தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்; காப்பாற்ற முடியவில்லை;

என் மகனை இழந்து விட்டேன்; என்னைக் காப்பாற்றிக் கொள்ள, நானே கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு சிறையில் இருக்கிறேன்; ஆனாலும் போலீஸ் என் வாக்குமூலத்தை நம்பவில்லை; என் மகன் நோஞ்சானைப் போல இருப்பான்; அவனின் தகப்பனும் அப்படித்தான் இருந்தான்; நான் ஏதோ என் குழந்தையை சரியாக சாப்பாடு போட்டு கவனிக்கவில்லை என்றும் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் காண்பிக்கவில்லை என்றும், அப்படி ஒரு வசதி இருந்தபோதும் அதை நான் உபயோகிக்காதது என் தவறு என்றும், என் அஜாக்கிரதையால் குழந்தை உடல்நலம் இல்லாமல் இருந்து வந்திருக்கிறது என்றும், சுகாதாரத்துறை குற்றம் சாட்டியது; மேலும் விசாரனையில் என் கம்யூட்டரை ஆராய்ந்து பார்த்தது; அதில் நான் ஏதோ போதை மருந்து உபயோகிப்பதாகவும் சந்தேகித்தது; என்ன சொல்வேன்? எல்லாக் கேள்விகளுக்கும் மௌனமே என்னிடமிருந்த பதில்கள்!
வீணாகப் போய்விட்டேன்; ஒரு "வீணாப் போனவனைத்" தேடி நானே என் தலையில் மண்ணை வாரிக் கொட்டிக் கொண்டேன்; இப்போது சிறையில்!

என் பிரச்சனையை அதில் உள்ள நியாயத்தை நீங்கள் என் நாற்காலியில் உட்கார்ந்து பார்த்தால் மட்டுமே, என் மீதுள்ள நியாயம் உங்களுக்கு விளங்கும்” என்று கதறுகிறாள்;
“Until you walk a mile in my shoes, you have no right to judge me.”

(எல்லோருக்கும் ஒரு நியாயம் கண்டிப்பாக இருக்கும்; ஆனால்  ஆரம்பத்தில் நீ முடிவெடுத்த தவறான செயலே மற்ற பின்விளைவுகளுக்கு அடிப்படைக் காரணம் என்பது உனக்கு புரியாதுதானே!)
**

Friday, October 7, 2016

Juan Manuel Santos

Juan Manuel Santos

2016-ன் அமைதிக்கான நோபல் பரிசு சுவான் மனுவேல் சந்தோஷ்-க்கு கொடுக்கப் பட்டுள்ளது; வாழ்த்துக்கள்!

ஆல்பர்ட் நோபல் அவர்கள் இந்த நோபல் பரிசை ஏற்படுத்தி வைத்துள்ளார்; மொத்தம் ஐந்து துறைக்கான நோபல் பரிசுகள் கொடுக்கப்படுகிறது;

அதில் ஒன்றுதான் “அமைதிக்கான நோபல் பரிசு”; இது இருநாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்துவது; போர்ப்படைகளை குறைத்துக் கொள்ள வழிகாண்பது, போன்ற அமைதி சேவைகளுக்கு வழங்கப்படுகிறது;

கொலம்பியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் அல்லது கலவரத்தில் சுமார் 2,20,000 பேர்கள் கொல்லப் பட்டனர்; 60 லட்சம் பேர் இருப்பிடத்தை விட்டு வெளியேறி விட்டனர்; இந்த உள்நாட்டுக் கலவரங்கள் சுமார் 52 வருடங்களாக நடந்து வருகிறது:
இந்த சுவான் மனுவேல் சந்தோஷ் என்னும் கொலம்பியா நாட்டு அதிபர், உள்நாட்டு எதிர் கோஷ்டியிடம் பேச்சு வார்த்தை நடத்தி பார்த்தார்; மக்கள் ஓட்டெடுப்புக்கும் விடப்பட்டது; அதில் சந்தோஷ் வகையறாவுக்கு 50%க்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன; தோல்விதான்!

இருந்தும், சந்தோஷின் இந்த அமைதி முயற்சிக்கு இந்த நோபல் பரிசு கொடுத்துள்ளதாக நார்வே நோபல் கமிட்டி சொல்லி உள்ளது:

கொலம்பிய மக்களின் பொறுமைக்கு கிடைத்த பரிசு எனலாம்; 50 வருட தொடர் கலவரங்கள்: மக்களின் உயிர் போய் இருக்கிறது; நிம்மதி இல்லை; இருந்தபோதிலும் அமைதிக்கான பேச்சு தொடர்கிறது; அதற்கு அதிபர் சந்தோஷ் உறுதுணையாக உள்ளார்;  கொலம்பியன் அரசாங்கத்துக்கும் பார்க் என்னும் கொரில்லா கூட்டத்துக்கும் உள்நாட்டுக் கலவரம்; பேச்சு வார்த்தை வேண்டாம் என்று 50%க்கும் மேலான (சுமார் 13 மில்லியன் பேர்) ஓட்டளித்துள்ளனர்; இது அதிபர் சந்தோஷூக்கு வருத்தமாக இருந்தாலும், அவரின் விடாத அமைதிப் பேச்சுக்கு கிடைத்த வெற்றி என்றே கருதுகின்றனர், நோபல் கமிட்டி உறுப்பினர்கள்;


இந்த கொலம்பியன் மக்கள் நிம்மதியாக வாழ இறைவனை பிராத்திப்போம்!

Thursday, October 6, 2016

1-வது திருவிளையாடல்

1-வது திருவிளையாடல்:
துவஷ்டாவின் மகனை இந்திரன் கொன்று விடுகிறான்; எனவே துவஷ்டா, இந்திரனைப் பழிவாங்க நினைத்து, ஒரு யாகம் வளர்க்கிறார்; அந்த யாகத்தில் விருத்திகாசுரன் என்னும் ஒரு அசுரனை வரவழைக்கிறார்; இந்திரனைக் கொல்லும்படி அந்த அசுரனிடம் துவஷ்டா கேட்கிறார்; மகனைக் கொன்ற இந்திரனை பழிவாங்க வேண்டுமாம்!
இந்திரனுக்கும் விருத்திகாசுரனுக்கும் பெரிய சண்டை நடக்கிறது; அதில் அந்த விருத்திகாசுரனை, இந்திரன் கொன்று விடுகிறான். தேவர்கள், யாரையாவது கொன்று விட்டால், அவர்களுக்கு “பிரம்மஹத்தி தோஷம்” எற்பட்டுவிடும்; எனவே, அரசுனைக் கொன்ற இந்திரனுக்கும் இந்த “பிரம்மஹத்தி தோஷம்” பிடித்துக் கொண்டது; இந்த தோஷத்திற்கு பரிகாரம் செய்து கொள்ள வேண்டுமாம்; சிவனை வழிபட்டால் அந்த தோஷம் போய்விடுமாம்!
ஆனால், இந்திரனுக்கு இந்தப் பாவம் வந்ததால் அவன் ஒளி இழந்து தெளிவின்றி இருக்கிறான்; எனவே அவ்வாறு தெளிவில்லாமல், சிவனைத் தேடி அலைந்து திரிந்தபோது, வழிதவறி கடம்பவனம் என்னும் பகுதியை அடைகிறான். (இந்தக் கடம்பவனம் தான், பழைய மதுரை என்று பெயர்); அங்கு சிவனை கண்டு அவரிடம் தனக்கு அருள் புரியுமாறு வேண்டுகிறான் இந்திரன்;
சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்காக பூக்களைத் தேடுகிறான் இந்திரன்; ஒரு பூச்செடியைக்கூட அங்கு பார்க்க முடியவில்லை; எல்லாமே கடம்ப-மரங்களாகவே உள்ளன; சிவனை வணங்க பூக்கள் கிடைக்கவில்லையே என்று வருந்துகிறான்;
ஆனால், ஆச்சரியமாக, அங்குள்ள ஒரு குளத்தில் மட்டும் பொன்னால் செய்யப்பட்ட தாமரை மலர்கள் (பொற்றாமரை) பூத்திருக்கின்றன. அதைக் கொண்டு இந்திரன், சிவனுக்கு பூஜை செய்து மகிழ்கிறான்; அவனின் பிரம்மஹத்தி தோஷம் விலகி விடுகிறது; அந்த பொன்னால் ஆன தாமரை மலர்களை, சிவனே அங்கு அப்போது தோற்றுவித்து, இந்திரனின் கவலை போக்கி இருக்கிறார்;
இப்படி, அந்த பொற்றாமரை மலர்களை சிவனே தோற்றுவித்து, இந்திரனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவன் தனது முதல் திருவிளையாடலை நடத்தி இருக்கிறார்;
(இந்திரனுக்கும் விருத்திகாசுரனுக்கும் நடந்த சண்டையின் விபரம்):-
இந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் பெரும் சண்டை நடக்கிறது; இருவரும் மற்போர் புரிகிறார்கள். இந்திரன் தோற்று விட்டான்; எனவே இந்திரன் தப்பித்து ஓடி, விஷ்ணுவிடம் தஞ்சம் புகுந்து விட்டான்; அவரிடம் தன்னை காப்பாற்றும்படி வேண்டுகிறான். ஆனால், விஷ்ணுவோ, “இந்திரா! நீ, கடலில் தவம் செய்யும் ஒரு முனிவரை போய்ப் பார்த்து அவரிடம் வேண்டிக் கேட்டுக் கொள்; உன் உடம்பையும் உயிரையும் காப்பாற்ற அவரால்தான் முடியும்” என்று கூறுகிறார்.
உடனே, கடலுக்கு அடியில் தவம் செய்யும் அந்த முனிவரைச் சென்று இந்திரன் சந்திக்கிறான்; தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறான் இந்திரன்;
முனிவரோ-- "இந்திரா! இந்த உடம்பைக் காப்பாற்றி என்ன செய்யப் போகிறாய்? எதற்காக இப்படி பயந்து சாகிறாய்? இந்த உடம்பில் இருந்து உயிர் பிரிந்து போன பின்னர், இந்த உடலை யாரும் தேடமாட்டார்கள்;”
“இந்த உடல் வீட்டில் கிடந்தால் உன்னைப் பெற்றவர்கள் (தாய், தகப்பன்) இந்த உடல் தங்களுக்குத்தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுவர்; இந்த உடல் காட்டில் கிடந்தால், நாய், நரிகள் தங்களுக்குத்தான் சொந்தம் என சொந்தம் கொண்டாடும்; இந்த உடல், பிணியால் கிடந்தால் (நோய்வாய்ப்பட்டு கிடந்தால்) யமனும், பேயும் தங்களுக்குச் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுவர்;
இப்படிப்பட்ட இந்த உடம்பை, நீ உனக்குச் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடி அதைக் காப்பாற்ற என்னிடம் வருகிறாயே? உண்மையில் இந்த உடம்பு யாருக்குச் சொந்தம்? சொல் பார்க்கலாம்? என்று கேள்வியை எழுப்புகிறார்.
உண்மையில் இந்த உடம்பானது, துன்பப்படுபவர்களுக்கு உதவுவதற்காக இறைவன் படைத்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்!
எனவே என்னிடம் உள்ள இந்த என் உடம்பும் எதற்கும் பிரயோசனப்படாது; எனவே என் உடம்பை எடுத்துக் கொள்; அதிலுள்ள எலும்புகளைக் கொண்டு சண்டையிட்டு உன் எதிரி விருத்திராசுரனைக் கொன்றுவிடு” என்று முனிவர் இந்திரனிடம் கூறுகிறார்;
அவ்வாறே இந்திரனும் அந்த முனிவரைக் கொன்று, அவரின் உடம்பில் உள்ள எலும்புகளை வைத்துக் கொண்டு, எதிரியான விருத்திகாசுரனை கொன்று அழிக்கிறான். அதனால்தான் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. அதற்குப் பரிகாரம் தேடிய போதுதான் சிவன் பொற்றாமரை மலர்களை உருவாக்கி, அதைக் கொண்டே, இந்திரன், சிவனை அர்ச்சனை செய்து, வழிபட்டு, அவனின் பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்கிறான்;
(மதுரையில் சிவன் செய்த விளையாட்டுக்கள் “திருவிளையாடல்” எனப்படும்.)
**

Sunday, October 2, 2016

போதைக்காரனா, சுட்டுத்தள்ளு!

போதைக்காரனா, சுட்டுத்தள்ளு!

செசன்யா நாட்டின் தலைவர் “ரம்ஜான் காட்டிரோவ்”; இது ரஷ்ய கூட்டாச்சியில் உள்ள நாடு; இங்குள்ள மக்கள் மிக அதிகமாக போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டார்களாம்!  நடுரோட்டில் மிரட்டல் விடுக்கிறார்கள்; போதையுடனேயே கார்களை ஓட்டிச் சென்று மோதுகிறார்கள்; நிறைய உயிர் இழப்பு ஏற்படுகிறது; போதையுடன் வண்டி ஓட்டினால், டிரைவர் லைசென்ஸ் கேன்சல் ஆகும் எனச் சட்டமும் உள்ளது; அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லையாம்; எனவே கார்களை பறிமுதல் செய்தும் பார்த்து விட்டனர்; அதற்கும் பலன் இல்லையாம்!

இங்கு மதுவிற்பனையை காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் வைத்துப் பார்த்தனர்; மதுவுக்கு கட்டுப்பாடா என்று போதை மருந்துகளை வாங்கி உபயோகிக்க ஆரம்பித்து விட்டனராம்! இது கிடைக்கவில்லை என்றால் அது!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் செசன்யா தலைவர்; பொறுமைக்கு ஒரு எல்லை உண்டல்லவா? இனி யாராவது போதை மருந்து உட்கொண்டு திரிந்தால் துப்பாக்கியால் சுட்டுவிடும்படி போலீஸூக்கு உத்தரவு போட்டுவிட்டார்;

போதைக்கு எதிரான போர் என்கிறார்! ஒரு டஜன் பக்கத்து நாடுகளில் இருந்து போதை பொருள்கள் உள்ளே வருகிறதாம்!

ஒரு கெட்டதை ஒழிக்க சட்டம் துப்பாக்கியை எடுக்கச் சொல்லிவிட்டது தவறில்லை என்கிறார் அந்த நாட்டின் தலைவர்.

**