Showing posts with label துர்க்கை. Show all posts
Showing posts with label துர்க்கை. Show all posts

Friday, October 21, 2016

துர்க்கை

துர்க்கை:

துர்க்கை என்றால் துர்க்காதேவி; பார்வதி தேவிக்குக்குத்தான் இந்தப் ப
பெயர்;  துர்க்கன் என்னும் ஒரு பெரிய அசுரனைக் கொன்றதால் பார்வதி தேவிக்கு துர்க்கை என்று பெயர் ஏற்பட்டது;

துர்க்கன் என்னும் இந்த மகா அசுரன், தேவ லோகத்தில் அட்டகாசம் செய்கிறான்; இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களும்  தங்கள் பதவிகளை விட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டனர்; அந்த அளவுக்கு அவனின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது; தேவர்கள் எல்லோரும் சிவபெருமானிடம் முறையிடுகிறார்கள்; சிவனோ, பார்வதி தேவியைப் பார்க்கிறார்; பார்வதி தேவி, தானே அந்த அசுரனைக் கொல்வதாக  உறுதி கொள்கிறார்;

பார்வதிதேவி, தன்னிடம் இருக்கும்  “காலராத்திரி” என்னும் பாங்கிப் பெண்ணை ஏவுகிறார்; அவள் சென்று, அந்த அசுரனின் சேனைகளைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி விடுகிறாள்;
பார்வதிதேவி, தானே போருக்கு போகிறார்: அந்த அசுரனின் சேனைகளை அழித்துவிட்டார்; அந்த அசுரன் மட்டும் மிஞ்சி இருக்கிறான்; அவன் ஒரு பெரிய மலையைப் போல உருவம் கொண்டு  சண்டைக்கு வருகிறான்; பார்வதிதேவி, அவனை, தன் நகங்களால் கீறி கிழித்து சிதைக்கிறார்; ஆனாலும், அவன் ஒரு பெரிய மகிஷம் (எருமைமாடு) போன்று உருவம் எடுத்து சண்டைக்கு வருகிறான்; அதையும் பார்வதிதேவி சிதைக்கிறார்;

பின்னர் அந்த அசுரன் தன் சுய உருவத்தில், பெரிய பெரிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சண்டைக்கு வருகிறான்; பார்வதிதேவியோ, ஒரு கணையை விட்டு (ஒரு ஆயுதம்) அவனின் மார்பை பிளக்கிறார்; அத்துடன் அவனின் கதை முடிகிறது;
தேவர்கள் மகிழ்கிறார்கள்! அந்த துர்க்கன் என்னும் அசுரனைக் கொன்றதால், பார்வதிதேவிக்கு “துர்க்கை அல்லது துர்க்காதேவி” என்று பெயர் ஏற்பட்டது;

போருக்குப் போகும் பார்வதிதேவி, எட்டு தோள்களுடனும், பதினெட்டு கைகளுடனும், சூலம், சக்கரம், கரகம் முதலிய ஆயுதங்களுடன், போருக்கு போனார்; இவருக்கு சிங்கவாகினி என்றும், கலையூர்தி என்றும் பலவாறு பெயர்கள் உண்டு; காளிதேவியும் இவர்தான் என்று சொல்பவர்களும் உண்டு;

“கெட்டவர்களை அழிக்க, கடவுளே நேரில் தோன்றி தீர்ப்பை எழுதுவான்போல!”

**

Wednesday, April 23, 2014

நவராத்திரி

நவராத்திரி:
ஆஸ்வயுஜ மாதத்தில் (ஐப்பசி) சுக்கில பிரதமை நாள் முதலாக ஒன்பது ராத்திரிகளை 'நவராத்திரி' என்பர்.

கிருதயுகத்திலிருந்து இது நடந்துவருகிறதாம். கிருதயுகத்தில் வாழ்ந்த சுகேதன் என்னும் ஓர் அரசன் தனது அரச பதவியை இழந்து தனது மனைவிகளுடன் காட்டுக்குச் சென்றான். அங்கே அங்கிரசன் என்னும் ரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். அவரைச் சந்தித்து தான் இராச்சியத்தை இழந்ததை வருத்தத்துடன் தெரிவித்தான்.

அந்த ரிஷி, சுகேதன் அரசனுக்கு சில பூஜை முறைகளை சொல்லிக் கொடுத்து உபதேசித்தார். அவர் சொல்லிய அந்த பூஜா முறைகள் நவராத்திரி பூஜை எனப்படும். இந்த பூஜையை பக்தியோடு செய்து வந்தால் தனது இழந்த ராச்சியத்தையும், இழந்த செல்வங்களையும் திரும்பப் பெறலாம் என்று அந்த ரிஷி உபதேசித்து அதை செய்யும் முறையையும் சொல்லிதந்தார்.  அந்த அரசனும் அவ்வாறே செய்து இழந்தவைகளை அனைத்தையும் திரும்பப் பெற்றான்.

அதனால், அரசன் கட்டளைப்படி, அப்போதிலிருந்து வருடந்தோறும் இதை கொண்டாடி வருகின்றனர்.


துர்க்கை, லக்ஷூமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் முறையே ஒருவருக்கு மூன்று நாட்கள் வீதம் மூவருக்கும் ஒன்பது நாட்களும் பூசித்து, ஒன்பதாம் நாள் ஆயுதங்களையும், பூஜை புத்தகங்களையும் ஆராதித்தும், அடுத்த பத்தாவது நாளில் தஜமி திதியை வெற்றிக்காக விஜயதசமியாக கொண்டாடுகின்றனர்.