Sunday, July 20, 2014

நினைவுகள்-14

பூர்வீக சொத்தில் மகளுக்கும் சமபங்கு:
2005-ல் வந்த புதிய சட்டத் திருத்தம்:
இதுவரை குழப்பமாகவே இருந்துவந்த சட்டத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது.

சொத்துக்களில் 2 வகைகள்;
1)தனிச் சொத்து. (தானே கிரயம் வாங்கியது போன்றவை).
2)பூர்வீகச் சொத்து (அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா சொத்துக்கள்).
தனிசொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரிசமமான உரிமை உண்டு என 1956ல் வந்த இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்டத்தில், பூர்வீக சொத்துக்களில் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும், மகள், பேத்திகளுக்கு உரிமை கிடையாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதை ஒருவாறு சரிசெய்து, 1989-ல் தமிழ்நாடு அரசு தனியே ஒரு சட்டம் கொண்டுவந்தது. அதன்படி, இந்த சட்டம் வந்த நாளான 1989-வரை திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களை மட்டும் கூட்டுகுடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பூர்வீக சொத்தில் மகனைப்போலவே மகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்றும், திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்ற மகளுக்கு, தந்தையின் பூர்வீக சொத்தில் பங்கு கிடையாது என்றும் சட்டத் திருத்தம் வந்தது.

பின்னர், மத்திய அரசு, 2005 ல் இந்தியா முழுமைக்கும் உள்ள அந்த 1956ம்வருட இந்து வாரிசு உரிமைசட்டத்தை திருத்தி, அதன்படி மகள்கள் திருமணம் ஆகி இருந்தாலும், ஆகாமல் இருந்தாலும் எல்லோருமே கூட்டுக்குடும்ப உறுப்பினர்கள்தான் என்றும் எனவே மகனைப் போலவே, மகளுக்கும் பூர்வீக சொத்தில் சரிசம பங்கு உண்டு என்றும் புதிய சட்டத்தை இயற்றியது.

இந்த 2005 புதிய மத்திய திருத்தச் சட்டத்தின்படி கீழ்கண்ட புதிய விளக்கம் உள்ளது.
  1. இந்த திருத்தல் சட்டம் 9.9.2005 முதல் அமலுக்கு வந்தது.
  2. அதற்குபின் எல்லா மகள்களும், மகன்களைப் போலவே  பூர்வீக சொத்தில் சரிசமமான சொத்துரிமை பெறலாம்.
  3. மகள்கள் பிறந்தவுடனேயே, மகன்களைப்போலவே, பூர்வீக சொத்தில் பங்கு ஏற்கனவே வந்துவிட்டது என்றும், எனவே அவர்கள் திருமணம் செய்துகொண்டு கணவர் வீட்டுக்குச் சென்றிருந்தாலும், திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டில் இருந்தாலும், இந்த உரிமை உண்டு.
  1. ஆனால், 20.12.2004 க்கு முன், அவர்களின் பூர்வீகச் சொத்தை பழைய சட்டப்படி பாகப்பிரிவினை செய்து பிரித்துக் கொண்டிருந்தால், அல்லது வெளிநபர்களுக்கு விற்று விட்டிருந்தால் அவ்வாறு பத்திரம் எழுதிப் பதிவு செய்து கொண்ட சொத்தில் மகள்கள் பங்கு கேட்கமுடியாது.
  1. 20.12.2004 வரை பூர்வீக சொத்தானது அந்த குடும்பத்தில் இருந்தால், அந்த சொத்தில் மகள் சரிசம பங்கு கோரலாம்.
  1. பொதுவாக ஒரு சட்டமானது, அது அமலுக்கு வந்த தேதியிலிருந்துதான் உரிமைகள் வரும், (Prospective). ஆனால் இந்த சட்டம் (Retrospective) அதாவது, மகள் பிறந்த தேதியிலிருந்தே அவருக்கு உரிமை கொடுத்துவிட்டது. அதுதான் இந்த சட்டத் திருத்ததின் சிறப்பம்சம் என சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டுகளும் தீர்ப்புகள் வழங்கி வருகின்றன.
Bombay High Court, Nagpur Bench, in a Second Appeal.
Leelabai vs Bhikabai Shriram Pakhare, 2014(4) MHLJ 312 Bom.

**

Saturday, July 19, 2014

நினைவுகள்-13

சொல்வதெல்லாம் உண்மை!
ஒருவர், கோர்ட்டில் சாட்சி சொல்ல கூண்டில் ஏறியவுடன் சொல்லும் முதல் வார்த்தைகள், "நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை." இந்த வார்த்தைகளை சொன்னபிறகுதான் அவர் தன் வழக்கையோ, சாட்சியாக வந்ததையோ சொல்ல வேண்டும். இதை "சத்தியப் பிரமாணம்" என்கிறார்கள் கோர்ட்டில்.

பொய்யைச் சொல்பவர்களும், இதைத்தான் சொல்லி ஆரம்பிக்கிறார்கள். பிறகு எதற்கு இந்த சத்தியப்பிரமாணம் என கேட்கத் தோன்றும்!

ஆரம்ப காலத்தில், (பிரிட்டீஸ் நடைமுறையில்) அவரவரின் மதம்சார்ந்த சாஸ்திர புத்தகத்தின் மீது கையை வைத்து இவ்வாறு சொல்ல வேண்டுமாம். இந்துவாக இருந்தால் பகவத்கீதை புத்தகத்தின் மீது கைவைத்தும், கிறிஸ்தவராக இருந்தால் பைபிள் மீது கைவைத்தும், முகமதியராக இருந்தால் குரானின் மீது கைவைத்தும், இந்த சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அந்த முறை இல்லை. மத நம்பிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றோ அல்லது அந்த நம்பிக்கைக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்றோ தெரியவில்லை.

இன்றைய காலத்தில், நூறு பொய்களை கூசாமல் சொல்பவரும், இந்த சத்தியப் பிரமாணத்தை சர்க்கரைப் பொங்கலாக நினைத்து இனிக்க இனிக்க கூறிவிட்டு அவரின் முழு பொய்யையும் அவிழ்த்து விடுவார். அதுவும் சபை அறிய, சாட்சிக் கூண்டில் ஏறி.

இதனால் என்ன பயன் என்று சிலர் நினைப்பதுண்டு. சட்டம் அவ்வளவு எளிமையாக அவரை விட்டுவிடுவதில்லை. அதற்கு "எஸ்டபெல்" (Estoppel) என்று ஒரு முறை உண்டு. இந்திய சாட்சிய சட்டம் 1872, செக்ஷன் 115ல் உள்ளது (The Indian Evidence Act 1872, Sec.115). இது 1872 ல் இயற்றப்பட்ட சட்டம். சுமார் 145 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்ட பழைமையான சட்டம். இதன்படி ஒரு சாட்சி, ஒரு பொய்யை 'உண்மை என்று' கோர்ட்டில் சொன்னால், அதை வேறு ஒரு தருணத்தில் மாற்றிச் சொல்ல முடியாது. ஒருமுறை சொன்ன பொய்யானது உண்மை என்றே கருதப்படும். அதை மறுமுறை மாற்றிச் சொல்லமுடியாது. பிறண்டு பிறண்டு பேச முடியாது என்பதைத்தான் எஸ்டபெல் என்ற விதி கூறுகிறது.

உதாரணமாக: ஒருவர், ஒரு பத்திரத்தில் கையெழுத்துப் போடும்போது மேஜர் வயதில் இருந்தார். ஆனாலும், சாட்சியாக விசாரிக்கும் போது, அவர், அப்போது மைனராக இருந்தார் என பொய் சொல்கிறார். தனக்கு சாதகமான வேறு ஒரு தருணத்தில், இல்லையில்லை, நான் அப்போது மேஜராக இருந்தேன் என்று மாற்றிச் சொல்ல முடியாது. ஒருமுறை சொன்னது சொன்னதுதான். அதுவே கடைசிவரை உண்மையாகவே சட்டம் கருதும்.

மேலும் பொய்சாட்சி சொல்பவர் வெகுநேரம் சாட்சிக் கூண்டில், வக்கீலின் குறுக்கு விசாரணையில் தாக்குப்பிடிக்கவும் முடியாது. கைதேர்ந்த பொய் சாட்சியைத் தவிர மனச்சாட்சியுள்ள எந்த சாட்சியும் பொய்யை வெகுநேரம் காப்பாற்ற முடியாது.

திறமையான வக்கீல் குறுக்கு விசாரனை செய்யும் முறை பற்றி, ஆங்கிலேயர்கள் இதற்கு ஒரு யுக்தி வைத்துள்ளார்கள்.
(1)"படித்த, விபரம் தெரிந்த சாட்சியாக இருந்தால், அவரை முதலில் கண்டபடி கேள்வி கேட்டு அவருக்கு எரிச்சலை உண்டாக்க வேண்டுமாம். படிக்காத முட்டாளைப்போல பேசுகிறாயே என்று கூட கேட்கலாமாம். அந்த எரிச்சலில் அவரின் 'உஷார் நிலை' மாறிவிடும். வக்கீல் எதிர்பார்த்த பதில் அவரிடமிருந்து கிடைத்துவிடுமாம்." இது ஒரு தந்திரம்.
(2)"படிக்காத பாமர சாட்சியாக இருந்தால், அவரை மிகுந்த மரியாதையுடன் அணுக வேண்டுமாம். எந்தவிதத்திலும் மரியாதைக்குறைவாக இல்லாமல், பணிவாக கேள்விகளைக் கேட்டால், அவர் மனமிரங்கி உண்மையையே பேசுவாராம்." இது ஒரு தந்திரமாம்.
(இவைகள் காலங்காலமாக, கைதேர்ந்த ஆங்கிலேய வக்கீல்கள் கையாண்ட முறைகளாகும்.)

.

நினைவுகள்-12

சொத்துச் சுதந்திரம்.
நம்மை, கொஞ்சம் பின்னோக்கி கொண்டுசென்றால், நமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்வு கிட்டத்தட்ட அடிமை வாழ்வே!
அந்தக்காலத்தில் அரசர்கள் மக்களை ஆண்டார்கள். ஏதோவொரு அரசரின்கீழ் நமது மூதாதையர் வாழ்ந்திருப்பர். மொத்த நிலமும் அரசருக்கே சொந்தம். அதை விவசாயம் செய்பவர்கள், அனுபவிப்பவர்கள், அந்த நிலத்தில் வரும் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு 'வருமானத்தை' அரசருக்கு கொடுத்துவிட வேண்டும். அதை வசூலிக்க அதற்கென அரசரின் ஆட்கள் இருப்பார்கள்.

நம் நாட்டு அரசர்கள், அந்நிய அரசர்கள், இவர்களின் ஆட்சிமுறை முடிந்து, பிரிட்டீஸ் ஆட்சிமுறை வந்தது. அவர்களும் ஆரம்பத்தில் அரசர்களின் முறை வசூலையே செய்தனர். சில பகுதிகளை அந்தப் பகுதியில் உள்ள பிரபலமானவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். அவர்கள் அந்த நில வருமானங்களை வசூலித்துக் கொள்ளலாம். அதில் ஒரு பகுதியை அரசுக்கு செலுத்தி விட்டால் போதும். அந்த மாதிரியானவர்களுக்கு 'ஜமின்தாரர்கள்' என்று பெயர். (ஜமின்=நிலம்).
பிரிட்டீஸ் அரசானது, தன்னிடம் இராணுவத்தில், மற்ற அரசாங்க காரியங்களில் நம்பிக்கையுடன் ஈடுபட்டவர்களுக்கு பரிசாக சில கிராமங்களையே (அல்லது ஒருபகுதி கிராமத்தையே) வழங்கி இருந்தன. அவைகளுக்கு 'இனாம்கள்' எனப்பெயர் (இனாம்=இலவசம்). மொத்த கிராமத்தையும் கொடுத்திருந்தால் அதை 'மேஜர் இனாம்' என்றும், ஒருபகுதி கிராமத்தை வழங்கி இருந்தால், அதை 'மைனர் இனாம்' என்றும் சொல்லுவார்கள். இது அல்லாமல், பொது சமுதாய கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கு (அதாவது கோயில் பூஜாரி, அர்ச்சகர், வேதம் கற்பிக்கும் சமஸ்கிருத பண்டிதர்கள், முடிதிருத்துபவர், துணி வெளுப்பவர், போன்றவர்) இனாமாக நிலம் கொடுத்துள்ளார்கள். இதை 'மானியம்' என்பர். இந்த மானியங்களில் பலவகைகளும் உண்டு. அந்த சமுதாய வேலையை செய்யும்வரை அந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு, அதற்குபின் கிடைக்காது. மற்றொன்று, அந்த மானிய நிலத்தை முழுஉரிமையுடன் தலைமுறையாக அனுபவிக்கும் உரிமையும் கொடுத்திருந்தார்கள்.

பின்னர், இந்த பிரிட்டீஸ் அரசு, இதில் பெருத்த சீர்திருத்தத்தை செய்தது. அந்த அரசால், நில வருமானத்தை (Rent, profit) வசூலிக்க முடியவில்லை. எனவே இனி அரசுக்கு யாரும் 'வருமானமாக' ஆறில் ஒருபங்கு கொடுக்க வேண்டாம். நிலத்தை நீங்களே பூர்வீகமாக அனுபவித்துக் கொள்ளுங்கள், ஆனால் நிலத்தின் தரத்துக்கேற்ப வரி (Tax) மட்டும் கட்டிவிடுங்கள் என்று சட்டம் கொண்டுவந்தது. அதன்படி மிக அதிகமானவர்கள் நில உரிமையாளர்கள் ஆனார்கள். ஆனாலும், ஜமின் சொத்துக்கள் எல்லாம் ஜமின்தாரர்களிடமே உரிமை இருந்து வந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஜமின் ஒழிப்புச் சட்டமும் வந்தது. அதன்படி நிலத்தில் உழைப்பவர்களுக்கே (பயிர் செய்வர்களுக்கே) நிலம் முழு உரிமையுடன் சொந்தம் என்றும், ஜமின்தாரருக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது என்றும் சட்டம் விளக்கியது. தமிழ்நாட்டில் பல ஜமின் நிலங்கள் இருந்தன. சென்னையைச் சுற்றி பல ஜமின் கிராமசொத்துக்கள் இருந்தன. இனாம் ஒழிப்புச் சட்டமும் அவ்வாறே.

இப்போது எந்த நிலமும் இந்த கட்டுப்பாடுகளை கொண்டிருக்கவில்லை. ஒன்று, அது அரசாங்கத்துக்குச் சொந்தமான புறம்போக்கு நிலமாக இருக்கும்; அல்லது தனி நபருக்கு முழுஉரிமையுடன் சொந்தமான பட்டா நிலமாக இருக்கும். (பட்டா=அனுபவத்தில் இருப்பது; பட்டாதாரர் =நிலத்தை அனுபவத்தில் வைத்திருப்பவர்). எல்லா நிலங்களின் பட்டாதாரர்களின் பெயர்களை தயாரித்து அந்தந்த வருட கணக்கில் அரசாங்கம் எழுதிக் கொள்கிறது. இந்த பதிவேடு கிராம அதிகாரியிடம் உள்ளது. வரிவசூல் செய்வதற்காக அவர் வைத்துள்ளார். தற்போதைய கம்யூட்டரின் வழியிலும் அதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த நில ஒப்படைப்பு ஏற்பாட்டின்படி, நிலத்துக்கு அடியில் கிடைக்கும் தங்கம், அரிய உலோகங்கள், எரி எண்ணெய், புதையல், இவைகள் எல்லாம் அரசுக்கு சொந்தம். நிலத்தின் மேல் வரும் வருமானம் எல்லாம் பட்டாதாரருக்குச் சொந்தம்.

சுதந்திர இந்தியாவில், நாம் ஒரு சொத்தை, இந்தியாவில் எங்கிருந்தாலும், (காஷ்மீர் தவிர) வாங்கும் உரிமை பெற்றுள்ளோம். அதை அனுபவிக்கும் உரிமை பெற்றுள்ளோம். விற்கும் உரிமை பெற்றுள்ளோம். நம் வாரிசுகளுக்கு விட்டுச் செல்லும் உரிமை பெற்றுள்ளோம். நாம் அந்த சொத்தை அனுபவித்து வருவதில், நமது அரசு கூட தலையிடமுடியாது; (ஆனால், அவசியமாக பொது நன்மைக்குத் தேவைப்பட்டால், சட்டபூர்வ காரணத்துடன் எடுத்துக் கொள்ளலாம்).

இந்தச் 'சொத்துச் சுதந்திரமானது' சுதந்திர இந்தியாவில் கிடைத்ததே ஒரு சுதந்திரமே! இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் மூதாதையர் சொந்தம் கொண்டாட முடியாத இந்த மண், இப்போது நமக்கே சொந்தமாகி விட்டது. ஆனாலும், ஒவ்வொரு மண்-துகளும், தங்கத் துகளுக்கு நிகரான விலையாகியும் விட்டது விந்தையே!

.

நினைவுகள்-11

உயில் எழுதவேண்டாம்.

சொத்து இருப்பவர்தான் உயில் எழுதமுடியும்.
சொத்து இல்லாதவர்களுக்கு அதைப் பற்றிய கவலையே தேவையில்லை.

சொத்து இல்லாதவர்கள், "இந்த பிறவியில் அந்த கொடுப்பினை இல்லாமலேயே, வாழ்ந்து மறைய வேண்டியதுதான்" என்ற மனவருத்தம் இருந்தாலும், உயில் எழுதிவைக்க வேண்டுமே என்ற கவலை இருக்காது. (ஒன்று இருந்தால், இன்னொன்று இருக்காது என்பது பிரபஞ்ச விதி!)

சொத்து இருப்பவர், அவரின் வாழ்நாளின் கடைசி காலங்களில் உயில் எழுதி வைப்பது, அவரின் வாரிசுகளுக்குள் சண்டையில்லாமல் இருக்க வழிவகுக்கும் என சட்டமும், அதைப்படித்த வக்கீல்களும், அனுபவமிக்க பெரியவர்களும் சொல்லி வருகிறார்கள்.
ஆனால், எனக்கென்னவோ, அது சரி என்றுபடவில்லை. கட்டாயமாக உயில் எழுதிவைக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவரின் குடும்ப சூழ்நிலை, தேவை, இவைகளைப் பொறுத்து உயில் அவசியமா இல்லையா என்பதை அவரவரே முடிவு செய்ய வேண்டும்.
  1. சொத்து இருக்கிறது என்பதற்காகவே மட்டுமே உயில் எழுதி வைக்க வேண்டாம்.
  1. தனக்கு வயதாகிவிட்டது என்பதற்காகவே மட்டுமே உயில் எழுதி வைக்க வேண்டாம்.
  2. நாம் உயிருடன் இருக்கும்போதே, நம் சொத்துக்களை பிள்ளைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தால், நம் பிள்ளைகள் மகிழ்வார்கள் அல்லது சண்டையிருக்காது என்பதற்காக மட்டுமே உயில் எழுதவைக்க வேண்டாம்.
  3. பிள்ளைகள், நம்மைக் கட்டாயப் படுத்துகிறார்கள் என்பதற்காக மட்டும் உயில் எழுத வேண்டாம்.
  4. நமது ஒத்த வயதுடைய நண்பர்கள் அதுபோல உயில் எழுதி வைத்துள்ளார்கள் என்பதற்காகவோ, அவரைப்போலவே நாமும் எழுதி வைத்து விடுவோம் என்பதற்காகவோ மட்டும் உயில் எழுத வேண்டாம்.
  5. நாம் இந்த உலகைவிட்டு சென்றபின், நமது பிள்ளைகள், 'உயிருடன் இருக்கும்போதே, இந்தப்பாவி சொத்தை பங்கிட்டுக் கொடுத்திருக்கலாம்' என்று நம்மை திட்டிவிடுவார்கள் என்பதற்காக பயந்து கொண்டு உயில் எழுதி வைக்க வேண்டும்.
  6. ஒரு மகனோ/ மகளோ நம்மை நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வாஞ்சையால் உயில் எழுதி வைக்க வேண்டாம்.
  7. ஒரு மகனோ/ மகளோ நமது கொள்கைக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பதற்காக அவனுக்கு/அவளுக்கு மட்டும் சொத்து போய் சேரவே கூடாது என்பதற்காக மட்டும் ஒரு உயிலை எழுதி வைக்க வேண்டாம்.
  8. கோபப்பட்டுக் கொண்டு கோயிலுக்கும், தர்மத்துக்கும் எழுதி வைக்க வேண்டாம். (தர்மத்துக்கு எழுதிய சொத்துக்கள் எல்லாம், கோர்ட்டில் வழக்குகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.)

இதில் சொல்லியுள்ள எந்த காரணமும் உயில் எழுதுவதற்கு போதுமான காரணமாக கொள்ள முடியாது.

முடிந்தவரை நம் வாழ்நாள்வரை நாமே நமது சொத்தையும் பணத்தையும் 100 சதம் அனுபவித்து இறப்பதே சாலச் சிறந்த முடிவு. நமது வாழ்நாளுக்குப் பின்னர் நமது பிள்ளைகளுக்குத்தான் அந்த சொத்து போய்ச் சேரப் போகிறது. இதில் எந்த சட்டப் பிரச்சனையும் வராது. வேறு மூன்றாம் மனிதர்களுக்கு எந்தக்காலத்திலும் அவை போய் சேராது. எல்லா மதங்களிலும் இதற்கென தெளிவான தனித்தனி சட்டங்கள் உள்ளன. எனவே உயில் எழுதும் எண்ணத்தை உங்களின் வாழ்நாள் வரை ஒத்தி போடுங்கள்.

ஆனால், கீழ்கண்ட சூழ்நிலை இருந்தால் மட்டும் உயில் எழுதி வைக்க நீங்கள் முயற்சி எடுங்கள்.
  1. உங்களிடம் ஒரேயொரு சொத்து மட்டும் இருந்து, உங்கள் மனைவிக்கு வேறு எந்த ஆதரவும் இல்லாமல் இருந்தால், அந்த சொத்தை, உங்களின் காலத்துக்குப் பின், அந்த சொத்து முழுவதையும் உங்களின் மனைவிக்கே கொடுத்து விடுவதாய் உயில் எழுதி வைத்து விடுங்கள். (உங்களின் பிள்ளைகளிடமோ, மருமகளிடமோ கையேந்த வைக்காதீர்கள்.)
  2. உங்களிடம் பல சொத்துக்கள் இருந்து, உங்களுக்கும் நல்ல வசதி இருந்தால், ஆதரவற்ற உங்களின் உறவினர்கள் உங்களை எதிர்பார்த்து இருந்தால், (மகன், மகள் தவிர, அதாவது, உங்களின் இறந்த மகனின் மனைவி,  உங்களின் இறந்த சகோதரன்/ சகோதரி வாரிசுகள், உங்களின் மனைவியின் இறந்த சகோதர/சகோதரி வாரிசுகள் போன்றோர் இருந்தால்) உங்களிடம் அதிகப்படியாக உள்ள சொத்துக்களை அவர்களுக்கு பிரித்து உயில் எழுதி வைத்து விடுங்கள்.

நாம் இறந்தபின்னும், இந்த உலகம் எந்த சிக்கலும் இன்றி இயங்கத்தான் போகிறது. எல்லாச் சட்டங்களும் இருக்கத்தான் போகிறது. நாமே எல்லாவற்றையும் சரிசெய்து வைத்துவிட்டுப் போய்விடுவோம் என்றும், இல்லையென்றால் மற்றவர்களுக்கு அது சிக்கலை உண்டாக்கிவிடும் என்றும் எண்ணிக் கொண்டு எதையும் செய்ய வேண்டாம். நமது மறைவுக்குப் பின்னர், அவைகளை நிறைவேற்ற இறைவன் இருக்கிறான் என்பதை மறந்துவிட வேண்டாம். ஏனென்றால், உயிருடன் இருக்கும்போது எழுதி உயில்கள், செட்டில்மெண்ட் பத்திரங்கள் அதில் சொல்லியுள்ள நிபந்தனைகள் எல்லாம், அவர் மறைந்தபின்னர், அவசியமே இல்லாமல் போன பல நிகழ்வுகள் உண்டு; அதற்கு நேர்மாறாக நடந்த நிகழ்வுகள் பல உண்டு. "நாம் ஒன்று நினைத்தால், தெய்வம் வேறொன்றை நடத்தத்தான் செய்வார், சந்தேகமில்லை."

தன் வாழ்நாளிலேயே செட்டில்மெண்ட் பத்திரங்கள் மூலம் தனது வாரிசுகளுக்கு சொத்தை பங்கிட்டு கொடுத்துவிட்டு, அவரின் வாழ்நாளின் கடைசி காலங்களில் கண்ணீர் விட்டு அழுத சம்பவங்கள், அவைகளை எழுதிய வக்கீல் என்ற முறையில் ஏராளம்! ஏராளம்!! காரண-காரியங்கள் தேவையில்லை. பந்த-பாசங்கள் பொய் எனவும் சந்தேகிக்கும் சூழ்நிலைகள். ஏமாந்துவிட்டோம் என்ற ஏக்கங்கள். போக்கிடம் இல்லாத தனிமைத்துயரம்! வயதான காலத்தில் ஒருவர் தனக்கென சொத்தோ, பணமோ இல்லாமல் இருந்துவிடக் கூடாது. ஆனால், வறுமையில் இருந்தால், "ஏமாந்து, தனக்கு உதவிசெய்து காப்பாற்றும் பிள்ளையொன்று தனக்கு இருந்தால்", அவர் உண்மையில் அதிர்ஷ்டசாலியே!

நமது மறைவுக்குப் பின், இந்த உலகில் நமது பிள்ளைகள், 'நாம் சொல்லிச் சென்ற வார்த்தைகளை' எத்தனைபேர் மதித்துள்ளார்கள். மிகக் குறைவே. நமக்கு முகத்துக்குநேர், மரியாதை செய்யும் நம் பிள்ளைகள்கூட, நமது கண்ணுக்குப் பின், அலட்சியமாகத்தான் நடந்துகொள்கின்றன. நாம் அவர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை பொய்யாகத்தான் போகிறது.

2000 வருடங்களுக்குமுன் வாழ்ந்த கிழவி சொன்னதுபோல, "இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாய் வேண்டாள்......."
பணம் இல்லாவிட்டால் பெண்டாட்டி மதிக்கமாட்டாள், அது இயற்கை; ஆனால் பெற்றதாயும்கூடவா! ஆச்சரியமே!!!

.

Friday, July 18, 2014

நினைவுகள்-10

1956ல் நடந்த ஒரு சுவாரசியமான வழக்கு இது.
(Sadasivam vs State of Madras, in AIR 1957 Mad 144).
சதாசிவம் என்பவர் பழைய மெட்ராஸ் டவுனில் பெரிய அளவில் சலூன் கடை வைத்திருந்தார். அவரிடம் 12-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். அப்போது இருந்த சட்டப்படி, எந்த நிறுவனமாக இருந்தாலும் வாரத்தில் ஒருநாள் கண்டிப்பாக விடுமுறை விடவேண்டும், அதை அந்த நிறுவனத்தில் எல்லோருக்கும் தெரியும்படி எழுதியும் வைக்க வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. எனவே இவரும், தன் சலூன் கடைக்கு திங்கட்கிழமை விடுமுறை என்று போர்டு எழுதி தொங்க விட்டிருந்தார். ஆனால் அன்று திங்கட்கிழமையாக இருந்தபோதும் சலூன் கடையை திறந்திருந்தார். அவரின் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு முடிவெட்டிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த, அரசு தொழிலாளர் நல அதிகாரி, சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தி வழக்குப் போட்டார்.

மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் அவரின் வாதம் என்னவென்றால், (1) 'அவர் தவறே செய்யவில்லை என்றும், இதுவரை திங்கட்கிழமை விடுமுறை விட்டுவந்ததாகவும், பின்னர் ஷிப்ட் முறைக்கு  மாறிவிட்டதாகவும், எனவே தனக்கு அந்த விடுமுறை சட்டம் செல்லாது என்றும் வாதிட்டார். (2) "ஒரு இந்தியன் அவன் விரும்பும் தொழிலை விரும்பியபடி செய்து கொள்ள அடிப்படை உரிமையை இந்திய அரசியல் சாசனம் பிரிவு 19(1)(g)ல் வழங்கப் பட்டுள்ளது என்றும், எனவே அதில் அரசாங்கம், கட்டுப்பாடுகள், விதிகள் என்ற பெயரில் எனது அடிப்படை உரிமையில் மூக்கை நுழைக்க எந்த சட்டபூர்வ உரிமையும் கிடையாது" என்பது அவரின் சட்டபூர்வ வாதம்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொள்ளாத மாஜிஸ்டிரேட் தண்டனைத் தீர்ப்புக் கொடுத்தார். அதை எதிர்த்து சலூன் கடைகாரர், ஐகோர்ட்டுக்கு ரிவிஷன் மனு செய்தார். இந்த வழக்கானது ஐகோர்ட்டில், சலூன் கடைகாரரின் அடிப்படை உரிமையான அவரின் விருப்பம்போல வியாபாரம் செய்து கொள்ளும் உரிமை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதா என்பதை விசாரித்தது.

அந்த வழக்கில் வாதம் செய்யப்பட்ட விஷயங்கள்;
பழைய காலத்தில், யூதர்கள் (Jews) வாழும் பகுதியில் உள்ள சலூன் கடைகள் ஞாயிற்றுக் கிழமைகளில் திறந்திருக்கும். ஆனால் மதியம் 1.30 மணிக்கு மேல் கடையில் வேலை செய்யும் வேலைக்காரருக்கு விடுமுறை கொடுத்துவிட வேண்டுமாம். ஏனென்றால், யூதர்களுக்கு சனிக்கிழமைதான் வேலைசெய்யாத நாளாகும். வாரத்தில் ஒருநாள் முழுவதும் விடுமுறைவிட வேண்டும் என்ற சட்டம் இங்கிலாந்து நாட்டில் 1830களிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், முடிதிருத்தோவோரின் ஞாயிறு விடுமுறை சட்டம் 1830 இருந்தது. (Hairdressers' and Barbers' Shops (Sunday Closing) Act, 1830). யூதர்களாக இருந்தால் அவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் சனிக்கிழமை விடுமுறை விட்டுக் கொள்ளலாம் என்பது சட்டம்.

இந்தியாவில் இந்த விடுமுறை விடும் முறைகள் ஏதும் இல்லாமல்தான் இருந்ததாம். ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களின் சட்டத்தைப் போன்றே கடைகளுக்கு விடுமுறைவிடும் சட்டம் என்ற சட்டத்தை மதராஸ் மாகாணத்துக்கு 1942ல் கொண்டுவந்துள்ளார்கள். அந்த சட்டத்துக்கு பெயர் The Weekly Holidays Act, 1942 (Central Act XVIII of 1942). இந்த சட்டம் கடைகள் நடத்தும் நிறுவனத்துக்கு மட்டும் பொருந்தும். தொழிற்சாலைகள், சுரங்கத் தொழில்கள், கப்பல்துறை தொழில்கள் இவைகளுக்கு பொருந்தாது. சாதாரண கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும், கிளாக்குகளாக வேலைசெய்யும் நிறுவனங்களுக்கும் மட்டுமே இது பொருந்தும். இதே போன்ற சட்டத்தை பம்பாய் மாகாணத்துக்கும் கொண்டு வந்தார்கள். அதுவரை, கடைகளில் ஒருநாளைக்கு 11 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை வேலை செய்வார்களாம். காய்கறி, பழக்கடைகளில் வேலை செய்பவர்கள் ஒருநாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்தார்களாம்.
மதராஸ் மாகாணத்திலுள்ள கிராமப் புறபகுதியில் உள்ள கடைகள் வாரம் முழுவதும் திறந்திருக்குமாம். எனவே Weekly Holidays' Act 1942 என்ற சட்டம் அமலுக்கு வந்தது.

அரசாங்கமானது, தொழிலாளர்களின் நன்மையை கருத்தில் கொண்டு சில நிபந்தனைகளை விதிக்கலாம் என்பது நியதி. பொதுவாக வாரந்தோறும் விடுமுறையே இல்லாமல் வேலை செய்தால் சோம்பல் வந்துவிடுமாம். (All Work and No Play Makes Jack a Dull Boy. என்பது ஆங்கில பழமொழி). ஒருநாளாவது தான் செய்யும் வேலையை மறந்து இருக்கவேண்டும். அப்போதுதான் புத்துணர்ச்சி கிடைக்கும். எனவே கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களும், முதலாளிகளுமே, வாரத்தில் ஒருநாள் முழுவதுமாக கடையை மூடிவிடவேண்டும் என அரசாங்கம் நல்ல எண்ணத்தில் ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
**
இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 19(1)(g)ன்படி, இந்தியக்குடிமகன் அவன் விரும்பும் தொழிலை எந்த இடையூறும் இன்றி செய்யலாம். - என்று கூறுகிறது.

எந்தவொரு நியாமான தொழிலையும் ஒருவர் செய்யலாம், ஆனால் அது மற்றவர்களை பாதிக்கும்படி இருக்கக்கூடாது என்பது உலகளாவிய விதி. இந்த உரிமையானது சரியாக உபயோகிப்படுவதை அரசாங்கங்கள் சில விதிகளைக் கொண்டு கட்டுப்படுத்த அதிகாரம் உண்டு. எனவே இந்த அடிப்படை உரிமையானது 100 சதம் தடையில்லாத முழு உரிமைஇல்லை என்பதை ஆங்கிலேய சட்டம், அமெரிக்க சட்டம், இந்திய சட்டம் இவைகளும் அவ்வாறே வலியுறுத்துகின்றன.

14-வது அமெரிக்க சாசன சட்ட திருத்தம் -- "ஒரு குடிமகன் அவன் விரும்பும் தொழிலைச் செய்ய எந்த தடையும் இல்லை என்றாலும், அதை நியாயமான சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்துக்கு உண்டு" என்கிறது. அந்தக் கட்டுப்பாடானது, நியாயமான, பொதுவான மக்களின் நன்மையை கருதி இருக்க வேண்டும் என்றும் அந்த சட்டம் வரையறுக்கிறது.

இவைகளைக் கொண்டு பார்த்தால், ஒரு சலூன் கடையில் வேலைபார்க்கும் வேலையாளுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை கொடுத்தால்தான் அவன் மன விருப்பத்துடன் வாழ முடியும் என்பது பொதுமக்களின் (தொழிலாளர்களின்) நன்மையை கருதிய விஷயமாகவே கருதவேண்டும். எனவே வாரவிடுமுறை விடவேண்டும் என்று அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தது, தனிமனிதனின் தொழில் நடத்தும் உரிமையில் தலையிடுவதாகாது. எனவே சலூன் கடைகாரரின் அப்பீலை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

** 

Thursday, July 17, 2014

நினைவுகள்-9

மூன்று மணி நேர வாழ்வு!

நேற்று, ஒரு தெரிந்த பெண்ணுக்கு ஏழுமாதத்திலேயே குறைபிரசவமாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இயற்கை பிரசவம். ஆனால் ஒரு மூன்று மணிநேரத்துக்குப் பின் அது இறந்துவிட்டது.

அது அந்தப் பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை. மூத்த குழந்தை ஒரு மகள். அந்த தாய்க்கு, அந்தக் குழந்தை அவசர அவசரமாக பிறந்ததால் அது இறக்கும் என தெரியும்போலும். அழுகை இல்லை. மன சஞ்சலம் மட்டும் கண்ணில் இருந்தது. ஆனால் அவளின் கணவனுக்கோ இது பெரிய இழப்பு போல கண்ணீர் விட்டு அழுதான்.

எதிர்பார்ப்பு இருந்தால், ஏமாற்றமும் இருக்கும் போல! எதிர்பார்ப்பு இல்லாத விஷயங்களில் இந்த ஏமாற்றம் நிச்சயமாக இருக்காது!

அந்த இறந்த சிசுவை அப்படியே விட்டுவிட முடியாது என, அது ஒரு மனித உயிராகவே கருதி, அதற்கு, மயானக் கரையிலேயே, காதுகுத்தும் செய்து, எல்லாச் சடங்குகளுடன் அடக்கம் செய்யப் பட்டது.

பெற்றவளுக்கு அந்த சிசுவின் முகம் தெரியாது. அந்த சிசுவுக்கும் இவள்தான் என் தாய் என்றும் தெரியாது; அவளின் அந்த சிசு ஒரு சொட்டு பால்கூட அவளிடம் அருந்தவில்லை! ஆனால் குருதி பாசம்! மனித உறவுகளில் இந்த இழப்பும் ஒரு இழப்புதானோ!

நம்முடன் வாழ்ந்து, பின்னிப் பிணைந்தவர் மறைந்தால் துக்கம் தொண்டையை அடைக்கும். அறிமுகம் இல்லாதவர் இறந்து விட்டால், அது நிகழ்ச்சியாக மட்டுமே தெரியும்; நம்மை அவ்வளவு பாதிக்காது.

ஆனால், இந்த துக்கம், தன் மகன் தன்னிடம் வாழ வரவில்லையோ என்ற ஏக்கத்தின் வெளிப்பாடுதான் போல.

எத்தனையோ இளம் தாய்கள் இப்படியான இழப்புகளை அன்றாடம் சந்தித்து கொண்டுதானிருக்கிறார்கள். பாவப்பட்ட ஜீவன்கள் அவர்கள்! அவர்களின் மனநிலையை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதுதான்.


ஒரு குழந்தை கருவாக உருவாவதற்கு 2 மாதத்துக்கு முன்னரே, இறைவன் அவனுக்கு பெயர்சூட்டிவிடுவான் என்கிறது மதங்கள். அப்படிப்பார்த்தால், இங்கு, அந்த பெயர் சூட்டிய குழந்தையின் இறப்பு ஒரு பெரிய உயிரின் மரணமே!


.

Wednesday, July 16, 2014

நினைவுகள்-8

பொய் சொல்லுங்கள்!
ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அவனின் நடவடிக்கைகள், பேச்சு, செயல்பாடு இவைகளைக் கொண்டு, மொத்த கணிப்பாக, கணிக்கப்படுகிறது. நம் செயல்பாடு சிலருக்கு பிடித்தமாதிரி இருந்தாலும், வேறு சிலருக்கு பிடிக்காமலும் இருக்கிறது.

நம் கவனமெல்லாம், நமக்கு வேண்டியவர்களிடம், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும், நம்மைப் பற்றி அவர்கள் என்ன அபிப்பிராயம் கொள்ள வேண்டும் என்பதுமே!
நம்மைப் பற்றிய உண்மைகளை அவசரப்பட்டு அடுத்தவருக்குச் சொல்லிவிட வேண்டாம். அதைக் கொண்டு, அவர், நம்மைப்பற்றி அவசர அவசரமாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார். ஏற்கனவே அவருக்கு, நம்மைப் பற்றிய ஒரு தவறுதலான அபிப்பிராயம் இருந்தாலும்கூடப் பரவாயில்லை, மெதுவாக அதையும் மாற்றிவிட முடியும்.

இதற்காக நாம் சொல்ல வேண்டிய பொய்கள்:
  1. உங்களுக்கு 'விதி' (Fate) மீது நம்பிக்கை இருப்பதில் தப்பில்லை. ஆனால் அதை பூரணமாக நம்புவதாக வெளியில் சொல்லிக் கொள்ளாதீர்கள்.
  2. அதிஷ்டமே கைகொடுக்கும் என்று ஆணித்தரமாக சொல்லி திரியாதீர்கள். கடுமையான உழைப்பும், அறிவுமே கைகொடுப்பதாக சொல்லுங்கள்.
  3. வேறு ஒருவரின் வெற்றி, அவரின் உழைப்பால், முயற்சியால், அறிவால் வந்ததாக ஒப்புக் கொள்ளுங்கள். அது அவருக்கு வேறு வகையில் கிடைத்ததாக ஒருபோதும் பிறரிடமும் சொல்லாதீர்கள். அது உண்மையாய் இருந்தாலும்கூட, அவ்வாறு உங்களின் மனச்சாட்சியிடம்கூடச் சொல்லி வைக்காதீர்கள்.
  4. நீங்கள் ஜோதிடத்தை நன்றாகப் நம்புங்கள், பாருங்கள். ஆனால், வெளியில் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்றே சொல்லிக் கொள்ளுங்கள். ஜோதிடம் பார்ப்பதில்லை என்றும் சொல்லுங்கள்.
  5. உடல்நிலை சரியில்லை என ஒருபோதும் சொல்லாதீர்கள். சர்க்கரை நோய் இருந்தாலும், அது இப்போது தொந்தரவு இல்லை, சரியாகிவிட்டது என்றே சொல்லுங்கள்.
  6. உங்களிடம் பணம் கையிருப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை. மறந்தும், உங்களிடம் காசு இல்லை, சிரமத்தில் இருக்கிறேன் என்று பிறரிடம் சொல்லி விடாதீர்கள்.
  7. நீங்கள். சொத்து, கார், ஆடம்பரபொருள்கள் ஏதும் இப்போதைக்கு வாங்கும் உத்தேசம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அடுத்தவர்களிடம் அதன் விலை, அந்த பொருளின் தரம், எங்கு கிடைக்கும், என்பதைப் பற்றி இயல்பாக விசாரித்துக் கொண்டே இருங்கள்.
  8. உங்களிடம் பாஸ்போர்ட் இல்லை என்றாலும், அதை எடுக்கும்  எண்ணமே இல்லையென்றாலும், ஜப்பான் எவ்வளவு தூரம், அதற்கு விமானக் கட்டணம் எந்தெந்த விமான கம்பெனியில் எவ்வளவு என்று சரியான நபர் கிடைக்கும்போது விசாரித்துக் கொண்டிருங்கள்.
  9. மற்றவர்கள், உங்களிடம் ஏதாவது சந்தேகம் கேட்கும்போது, விபரம் கேட்கும்போது, (உங்களின் தொழில்பற்றிக்கூட) உங்களுக்குத் தெரிந்த முழு விபரத்தையும் நூறு சதம் சொல்லிவிடாதீர்கள். அவரின் பிரச்சனைக்கு முதல் பத்து சதம் மட்டுமே போதும். அது தவறுதலாக இருந்தால்கூட பரவாயில்லை.
  10. மற்றவரிடம் பேசும்போது, பதட்டப்படாதீர்கள். வேகமாக பேசாதீர்கள். இது, உங்களுக்கு விபரம் (அறிவு) குறைவு என்று அடுத்தவர் எண்ணும்படி செய்கிறது. அவசரமாகப் பேசும்போது, உண்மையை பேசவேண்டிய சூழ்நிலையும் வருகிறது.
  11. நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பதாகவே பிறரிடம் தெரிவித்துக் கொள்ளுங்கள்.
  1. ஒருபோதும் "ஒருகட்சி அரசியல்" பேசாதீர்கள். (நீங்கள் ஒரு கட்சியை சேர்ந்தவராய் இருந்தாலும் கூட, உங்கள் கட்சிக்காரரிடமே உண்மையான அரசியல் நிலையைப் பேசிவிடாதீர்கள்). நீங்கள் அரசியல் பேசாமல், அடுத்தவர் பேசும்போது 'அவர் சொல்வது சரி' என்றே ஒப்புக் கொள்ளும் முறையில் பேசுவிடுங்கள். உண்மையில் நீங்கள் அரசியலை பிறருடன் அலச வேண்டாம்.
  1. கட்டிய மனைவிதானே, பெற்ற பிள்ளைகள்தானே என்று அவர்கள் முன்னிலையில் தரம்குறைந்த வார்த்தைகளை (அசிங்கமான வார்த்தைகள்) உபயோகிக்காதீர்கள். எப்போதும், நீங்கள் உங்களின் கடவுளிடம் பேசுவதாகவே எண்ணிக்கொள்ளுங்கள்.
  1. வீட்டிலிருக்கும்போதும், சிறப்பாகவே உடுத்திக் கொள்ளுங்கள்; அரைகுறை ஆடையில் யாரையும் சந்திக்காதீர்கள். அது ஏற்கனவே உங்கள் மேல், அவர்கள் வைத்திருந்த அபிப்பிராயத்தை மாற்றிவிடும்.
  1. வெற்றி அடைந்தவர்கள் அனைவரும் இந்த பொய்களை நடைமுறைப் படுத்தியதாக ஒப்புக் கொள்கிறார்கள். 
**************
அதற்காக, பிறரை ஏமாற்றச் சொல்லவில்லை. பிறரிடம், நம்மைப் பற்றிய அபிப்பிராயம், நல்லவிதமாக சென்றிருக்க வேண்டும். இது ஒரு சைக்காலஷி, அவ்வளவே.  ஒருவரிடம் சென்று, 'நான் நல்லவன், நான் நல்லவன்' என்று சொல்லிக் கொள்ளமுடியாது. ஆனால், அவர், வேறுஒருவர் மூலம், 'நாம் நல்லவர்' என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டியது நமது கடமையும் அவசியமும் கூட!  "ஏன்  அவ்வாறு தெரிவிக்க வேண்டும்; நான் இயல்பில் நல்லவன்தானே; பிறகென்ன எனக்கு விளம்பரம்" என்று கேட்க வேண்டாம். நல்லவன் என்பது பிறர் விஷயங்களில் எதிலுமே தலையிடாத நல்லதனம், அதாவது முற்றும் துறந்த முனிநிலை. அந்த சாமியார்களுக்கு வேண்டுமானால் விளம்பரம் தேவையேயில்லை. சாதாரண மனிதனுக்கு இது அவசியமே!

வேறு ஒருவர், நம்மைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்களை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம், அவருக்கு இல்லை. மேலும், ஒருவரை மற்றவர் புகழ்வது என்பது குதிரைக் கொம்பே. நாம் மற்றவரை புகழ மாட்டோம். பின் எப்படி, நம்மை மற்றவர் புகழ்வார். நாம் மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

நம்மை புகழ்வதற்கு ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டால், அதற்குப் பெயர் "அல்லக்கைகள்" என்று இந்தக்காலத்தில் சொல்கிறார்கள். அது நமக்கும் கீழே உள்ள 'தரம் குறைந்த கூட்டமாக' இருந்தால், அந்தக் கூட்டத்திற்கு இந்தப் பெயர் பொருந்தும். அதற்கு, நாம்அவ்வப்போது செலவு செய்யவேண்டும். எனவே நமக்கும் கீழே உள்ள 'அந்த அல்லக்கைகள்' வேண்டாம்.
*************

நமக்கு நிகரான நண்பர்கள், வெளிநபர்கள் இவர்களிடம் மேற்சொன்ன பொய்களை நடைமுறைப்படுத்தி வந்தால், நீங்கள் நல்லவர் என்று இந்த உலகம் நம்பும். ஒரு நல்லவரே வெற்றியாளர் என்று உங்களை ஏற்றுக் கொள்வார். அது உங்களின் வாழ்வை உயர்த்தும்.
.


Sunday, July 13, 2014

நினைவுகள்-7

பத்து வருடத்தில் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
ஒரு அமெரிக்க கணக்குப்படி:
ஒரு பேரல் ஆயில் = 200 மடங்கு உயர்வு (அதாவது பத்து வருடத்துக்குமுன் 24 டாலராக இருந்தது, இப்போது 100 டாலராக உயர்ந்துள்ளது)
அதேபோல சில:
எரிபொருள் எண்ணெய் = 250 மடங்கு.
பெட்ரோல் = 175 மடங்கு
ஒரு டஜன் முட்டை = 100 மடங்கு
ஆஸ்பத்திரி செலவு = 100 மடங்கு.
கறி (மாமிசம்) = 100 மடங்கு
திரைபட டிக்கெட் = 100 மடங்கு
காலேஜ் கட்டணம் = 70 மடங்கு.(பாங்க் லோன் கொடுப்பதால் குறைவாக உள்ளது)
மின்சார செலவு = 60 மடங்கு (இது அமெரிக்காவில்)
புது கார் = 55 மடங்கு
காப்பி = 50 மடங்கு
வீட்டு எரிவாயு (கேஸ்) = 50 மடங்கு.
போஸ்டல் ஸ்டாம்பு = 48 மடங்கு
வீட்டுவாடகை = 40 மடங்கு.
வீடு வாங்கும் விலை (சாதாரணவீடு) = 50 மடங்கு.
**
அமெரிக்காவில் 2000த்தில் ஒரு டாலர் என்பது இப்போது 1.35 டாலராக பணவீக்கம் அடைந்துள்ளதாம்.
எல்லாவற்றுக்குமே அதிக விலை கொடுக்கவேண்டும்.
இந்த விலைஏற்றத்துடன் போட்டிபோட்டு வாழ முடியாதவன் ஏழையாக உணருகிறானாம்.
**

இந்தியாவில் நிலை எப்படி உள்ளது?

இங்கு கடந்த 20 வருடமாக ஒருவித திடீர் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன், மாதச் சம்பளத்தில் பெருத்த வித்தியாசம் இருந்ததில்லை. தனியார் கம்பெனிகள் கொடுக்கும் சம்பளம் குறைவே.

1990க்கு பின் உலகளாவிய பொருளாதார சந்தையாக இந்தியா மாறிவிட்டபின், நமது உழைப்பைக் கொடுத்து டாலரை சம்பளமாக பெறும் வழிமுறை வந்தது. வாங்கும் சக்தி பெருகியது. சம்பள வித்தியாசம் உள்நாட்டு வேலையை விட வெளிநாட்டு தொடர்புடைய வேலை செய்பவரின் வருமானம் மிதமிஞ்சி இருந்தது. ஆடம்பர பொருள்கள் இந்தியரின் வீட்டில் நுழைந்தன. 20 வருடங்களுக்கு முன் இந்தியாவில் எந்த வெளிநாடும் தனியாக உற்பத்தி கம்பெனி நடத்த முடியாமல் சட்டம் இருந்தது. அது மாறியவுடன், முதலில் கார் கம்பெனிகள் புகுந்தன. மோட்டார் வாகன கம்பெனிகள் புகுந்தன. பின், டிவி, செல்போன், வீட்டு உபயோக பொருள்கள் செய்யும் கம்பெனிகள் புகுந்தன. இவை எல்லாமே, இந்திய பொருளாதார சூழ்நிலையில், ஆடம்பர பொருள்களே. ஆனாலும் நாம் ஆடம்பர பொருள்களின் மீது காலம் காலமாக தீராத மோகத்திலேயே இருந்தவர்கள். அதை சரியாக வெளிநாட்டு வியாபார நிறுவனங்கள்  உபயோகப் படுத்திக் கொண்டன. நாம், வருமானம் இல்லாவிட்டாலும், கிரெடிட் கார்டு வைத்துக் கொள்வதில் பெருமை கொள்பவர்கள் என்று ஜரோப்பிய நாடுகள் நம்மை சரியாக படம்பிடித்து வைத்துள்ளன. நம்மைத் தவிர மற்றவர்கள் சிக்கனமாக இருக்கவேண்டும் என நாம் (இந்தியர்கள்) நினைக்கிறோமாம்.

ஒரு வெளிநாட்டு வங்கித் தொழில் நடத்தும் நிறுவனங்களின் அமைப்பு, இந்தியனைப் பற்றி எடுத்த கணக்கெடுப்பு இது:

பொதுவான கருத்து: "பொதுவாக இந்தியன் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்துவைக்க ஆசைப்படுவான். தனக்குத் தெரியாத தன் பேரன், அவன் வாரிசுகள் சுகமாக வாழ வழி செய்து வைப்பதற்காகவே பிறந்ததாக கருதி அவனின் வாழ்நாள் முழுவதும் உழைப்பதைத் தவிர அவனுக்கு வேறு ஏதும் தெரியாதாம். அவனின் வாழ்நாளில் அவனுக்காக வாழ மாட்டானாம். அவனின் வாழ்நாளில் ஒரு நல்ல உணவோ, உடையோ அவன் அணிந்து கொள்ள விரும்ப மாட்டானாம். ஆனாலும், அவன் குடும்பம் ஆடம்பர பொருள்களை அனுபவிக்க வேண்டும் என்று மிகுந்த ஆசை உடையாவனாக இருப்பானாம். அந்த பொருள்களை, காசு சேர்த்து வாங்கும் வரை காத்திருக்க மாட்டானாம். அது கடனாக கிடைக்கும் பட்சத்தில், "வட்டி எவ்வளவு கட்டவேண்டும்" என்று ஒருவார்த்தை கூட கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் முதலில் அந்த பொருளை வாங்கி வைத்துக் கொள்வதில் அளவில்லா பெருமையும் ஆசையும் கொண்டவனாம்."

அதனால்தான், இந்தியாவில் கிரெடிட் கார்டுகள் அதிக அளவில் விநியோகிக்கப்பட்டதாம்.

இந்தியாவில் பட்ஜெட்  போடுவதற்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும், மக்களிடம், சிக்கனத்தை வலியுறுத்தியும், சாதாரண வாழ்க்கை முறைக்கு மதிப்பு கொடுக்கவும், மக்களை பழக்க வேண்டும். பின்வரும் காலங்களில் இந்த ஏற்ற இறக்கம் இல்லாமல் வாழ்வது சமுதாய பிரச்சனைகளை உண்டாக்காது.

 .

நினைவுகள்-6

ஒரு எகிப்து பெண்ணின்  துணிச்சலான கடிதம்:

எகிப்தின் அதிபருக்கு வணக்கம்.
"நான் ஒரு எகிப்து தேசத்து பெண். நான் எகிப்து மண்ணின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த கடிதத்தில் நான் எந்தவித அரசியலையும் சொல்லவில்லை. இந்த கடிதம் மூலம் நான் நாட்டின் ஒற்றுமைக்கு எந்த குந்தகமும் விளைவிக்கவில்லை. ஒரு சாதாரண எகிப்து பெண் என்ற முறையில் இந்த நாட்டின் அதிபருக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளேன்.

அதிபர் அவர்களே!
ஒரு நாடு, அதன் நேர்மை, மரியாதை, நாட்டுப்பற்று (honesty, respect and patriotism) இந்த தூண்களைக் கொண்டே தாங்கப்பட்டிருக்கிறது. ஆனால்  என்னை இந்த சமுதாயம் நடத்தும் விதத்தில் நான் குழம்பிப்போய் உள்ளதோடு, தைரியத்தையும் இழந்துவிட்டேன்.

நான் தெருவில் நடந்து செல்லும்போது என்னை இந்த சமுதாயம் நடத்தும்விதம் மிகுந்த மனவலியைத் தருகிறுது. என்னை குறுகுறுப்பாக உற்றுபார்த்தல், மிக அசிங்கமான வார்த்தைகளால் பேசுதல், சில நேரங்களில் பலவந்தப்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகளால் நான் மன நொந்துபோகிறேன்.

நான் அவ்வாறான மனவலியுடனும், ஒடுக்கப்பட்டும், இரண்டாம்தர குடிமகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் தினமும் அவ்வாறான மன உழைச்சலுடனேயே தினமும் எழுந்து, படிப்புக்கும், வேலைக்கும் செல்வதுடன், அன்றாட கடமைகளையும் செய்ய வேண்டியுள்ளது. நான் தெருவில் நடக்கும்போது என்னையே நான் கீழாக நினைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. பாதுகாப்பாக உணர முடியவில்லை. நமது எகிப்து நாட்டில், பத்தில் எட்டுபெண்கள் தெருவில் பாதுகாப்பு இல்லாமலேயே இருப்பதாக உணர்கிறார்கள். இதையும் காட்டிலும், பொது பிரயாண வாகனத்தில் (பஸ், இரயில் பிரயாணங்களில்) இன்னும் பாதுகாப்பு குறைவாகவே உள்ளதாக எண்ணுகிறார்கள்.

நான், பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்கும் ஒரேஇடம் எனது வீடுதான். என்வீடுதான் எனக்கு இவைகளிலிருந்து ஆறுதல் அளிக்கிறது. இந்த நாட்டில், பத்தில் ஒன்பது பெண்களை கொடுமைக்கு உட்படுத்தி கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி உள்ளனர். கணவன் அவனின் மனைவியை அடிப்பதில் தப்பில்லை என்றே இந்த சமுதாயம் கருதுகிறது. எனவே வீட்டில் இளம் கணவன், அவனின் இளம் மனைவி எதிர்த்துப் பேசினால் அடிக்க உரிமை உள்ளதாக இந்த சமூகம் ஏற்றுக் கொண்டுள்ள கொடுமை நடக்கிறது.

இந்த சமுதாயம், என் மக்கள், என்னை சுதந்திரமாகவும், பாதுகாப்பாவும், வாழ விடுவதில்லை.

இது எனக்கு வாழ்வில் கிடைத்த நரகம் என்றே நினைக்கிறேன். எகிப்தில், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில், நமது எகிப்து நாடு, உலக அரங்கில், மோசமான அரசியல் ஸ்திரதன்மையில் ஏழாவது இடத்தில் உள்ளதாக கூறுகிறது. மொத்தமுள்ள 135 நாடுகளில் எகிப்து 128வது இடத்தில் உள்ளது. பெண்களிடத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு இந்த அரசியல் ஸ்திர தன்மைக்கு காரணமாகிறது. இங்கு எகிப்து நாட்டில், நான்கு ஆண்களுக்கு ஒரு பெண்ணே வேலை வாய்ப்பை பெறுகிறாள்.

பெண்களின் கல்வி எகிப்தில் போராட்டமாகவே உள்ளது. பெண்களில் கல்வி கற்றவர் 58% மட்டுமே. ஆனால் ஆண்களின் கல்வி கற்றவர்கள் 75%. பெண்களை பொருளாதாரத்தில் கைகொடுக்கவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் சரியான சட்டங்கள் இல்லை.

பெண்களின் சுகாதாரம் பற்றிய கல்வியே இங்கு அறவே இல்லை. இங்கு எகிப்தில் பிறப்பவர்களில் 14% தேவையில்லாமலேயே பிறந்துவிடுகின்றனர். அதை கட்டுப்படுத்தும் செக்ஸ்கல்வியும் இங்கு இல்லை. பெண்களுக்கு கருவை தடை செய்யும் முறையும் தெரியவில்லை. சொல்லிக் கொடுக்கும் கல்வியும் இல்லை.
இங்கு, கேன்சர் நோய்  மற்றவருக்குப் பரவக்கூடியது என்று தவறுதலான பிரச்சாரமும் உண்டு. அவ்வாறு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் வந்தால், அதை காரணம் சொல்லி அவளின் கணவன் டைவர்ஸ் வாங்கிவிடுகிறான்.

நானும் பலரைப் போலவே இவ்வாறான கொடுமைகளுடனேயே வாழ்கிறேன், ஏனென்றால் இந்த சமுதாயம் எனக்கு இந்த தண்டனை என்ற விதியை கொடுத்துள்ளது. இந்த விதியுடனேயே நான் வளர்ந்து, திருமணம் செய்து, குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறேன்.

நான், ஒரு வக்கீலாக ஆக எனக்கு விதியில்லை; ஆசிரியராக ஆக விதியில்லை; ஏன் நாட்டின் அதிபராகக்கூட ஆக விதியில்லை; நான் மௌனமாக்கப் பட்டுள்ளேன். நான் பேசினாலும் அது எதுவும் முக்கியமானதாக கருதமாட்டார்கள் என்று எனக்கு சிறுவயது முதலே சொல்லி கொடுக்கப் பட்டுள்ளது. ஏனென்றால் நான் ஒரு பெண் மட்டுமே. எனக்கும் உணர்வுகள் ஆசா-பாசங்கள் உண்டு என்றாலும் அதை என்னால் காட்டமுடியாது.
இந்த உலகத்தில் வாழும் மனித இனம் அல்லாத இனத்துடன் நான் இருப்பதாக கருதுகிறேன். என்னுடைய உணர்வுகளை நான் வெளிப்படுத்தினால் நான் பலமில்லாதவள்-கோழை என பட்டம் சுமத்த தயாராகின்றனர். நான் கோழை இல்லை. நான் கோழையாக இருப்பதற்காக பிறக்கவும் இல்லை. நான் என்னை கோழை என்று யாரும் கருதவும் விரும்பவில்லை. என்னிடம் உள்ள உணர்வுகள் பலம் வாய்ந்தவை. என்னுள் இருக்கும் தணல் இந்த சமுதாயத்தை ஒளிமிக்கதாக மாற்றும் சக்தியுடையது. எவ்வாறு இந்த சமுதாயம் இருக்கவேண்டும் என நினைக்கிறேனோ, அதை நான் அவ்வாறே மாற்ற முடியும். அதனால்தான், நான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். இதுவரை என்னிடமிருந்து பறிக்கப்பட்ட, திருடப்பட்ட எதிர்காலத்தை மாற்றி எழுத விளைகிறேன். இதற்கு உங்களின் உதவியை கோருகிறேன்.

அதிபர் அவர்களே,
நீங்கள் இந்த பிரச்சனையின் ஆழத்தை புரிந்து கொள்ள விரும்பினால் நான் வருகிறேன். கடவுள் எனக்கு இயற்கையாய் கொடுத்த சுதந்திரத்தை, இந்த சமுதாயம் என்னை அடிமையாக ஆக்கி வைத்துள்ளது. இது எனது எதிர்காலத்தையே இருண்டதாக்கிவிடும்.
எனக்கு முத்திரை குத்திவிட்டார்கள். காலங்காலமாக இந்த சமுதாயம் என்னை எதை செய்யச் சொன்னதோ அதையே காப்பியடிக்கச் சொல்கிறார்கள். என்னுள் இருக்கும் எனது ஒளியை வெளியே கொண்டுவர முடியவில்லை. எனக்கும் வேறு வழிதெரியாமல் இந்த சமுதாயக் கட்டுப்பாட்டிலேயே உழன்று கொண்டிருக்கிறேன். அதை சாதகமாக்கிக் கொண்டு, பெண் என்பதால், என்னை வலைக்குள் விழந்த இரையைப் போல இந்த சமுதாயம் கொடுமைப் படுத்துகிறது.

நான், இந்த நாட்டில் இரண்டாந்தர குடிமகளாக நடத்தப்படுகிறேன். இந்த விசாலமான, அழகான பிரபஞ்சத்தில், எதற்கும் உதவாதவளாகக் கருதப்படுகிறேன்; மதிக்கப்படாதவளாக இருக்கிறேன்; என்விருப்பத்துக்கு அருகதையில்லாதவளாகவும் இருக்கிறேன்.

இவைகள் எல்லாம் இருக்க, இப்போதும் நான் சிறப்பாக வாழவே ஆசைப்படுகிறேன். எனக்கு, சூழ்நிலை, அந்த வாய்ப்பை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய பலம் என்னவென்று எனக்குத் தெரியும்; அதைக்கொண்டே இந்த சமுதாய மாற்றத்தை கொண்டுவருவேன்; அதற்காகவே நான் படைக்கப்பட்டதாக கருதி கொள்வேன்; நான் இந்த எகிப்தை இதிலிருந்து காப்பாற்றுவேன் என்று நம்புகிறேன்.
இதனால்தான், நான் உரத்த குரலில் மந்திரமாக இதை சொல்லியும், என் அடித்தொண்டையிலிருந்து குரல் கொடுத்தும் வருகிறேன். உண்மையில் இதுவே இந்த நாட்டின் வெற்றியும்கூட. ஏனென்றால், சுதந்திர எகிப்து எனக்குறிய சுதந்திரத்தையும் அளிக்கும்.

அதிபர் அவர்களே!
நான் உங்கள் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். அதை கேட்கும்முன், ஒரு விஷயத்தை தெளிவாக்கவும் விரும்புகிறேன். உங்களின் இரக்கத்தையோ, பரிதாபத்தையோ கேட்கவில்லை. நானும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருத்தியாக இருந்துவிட்டுப் போகிறேன், அதற்காக உங்களிடம் இரக்கம் பெற்று வாழ விரும்பவில்லை. நான் இந்த கொடுமைகளில் பாதிக்கப்பட்டவளாக நினைத்துக் கொள்ளமாட்டேன். நான் எல்லா சூழ்நிலையையும் சமாளிக்கும் ஒரு பெண் என்று நினைத்துக் கொள்வேன். நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது எல்லாம், இந்த சூழ்நிலையில் உங்களால் எதை செய்யமுடியும் என்பதை தெரிந்து கொள்ளத்தான்.
இங்கு, எனக்குள்ள பிரச்சனையானது, இந்த வன்கொடுமைகளைத் தாண்டி உள்ள பிரச்சனைகள்தான். இவைகள் இப்போது இங்கில்லை என்று எகிப்தில் இனி செய்திகள் வரவேண்டும். இருந்தபோதிலும், கல்வியும், ஆட்சி அமைப்பும், சுகாதாரமும், சமுதாயத்தில் சரிஉரிமையும் மற்றும் சிலவும் மிக முக்கியம் என்றே கருதுகிறேன்.

அதிபர் அவர்களே!
நானும் உங்களுடன் சேர்ந்து நமது எகிப்தை உருவாக்குவதில் உதவுகிறேன். நான் எனது நாட்டை உயர்த்தப் பாடுபடுகிறேன். எனது பறிக்கப்பட்ட எதிர்காலத்தை திரும்ப பெறவிரும்புகிறேன். அது கிடைக்கும்வரை நான் ஓயமாட்டேன். நான் கேட்டுக் கொள்வதெல்லாம், எனக்கு என்னுடைய உரிமையை கொடுத்து சுதந்திரப் பெண்ணாக என்னை வாழவிடுங்கள் என்பதே! நான் சுதந்திர பெண்ணாக மட்டுமில்லை, என்னை மதிக்கும், என்னை ஆதரிக்கும் என்ற சமுதாயத்துடன் வாழவிட வேண்டும். அது நீங்கள் அதிபராக இருக்கும் கடைசி நாள் வரை இதுஇருக்க வேண்டும். நீங்கள் எனது போரட்டத்துக்கு உதவ வேண்டும். எனக்கும் சரிநிகர் வருமானம் கிடைக்கவும், சரிநிகர் உரிமைகள் கிடைக்கவும், தெருவில் நடந்து செல்லும்போது என் சதையை தின்ன எண்ணும் அந்த பசிமிருகங்களை எதிர்க்கவும் எனக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.
கடைசியாக ஒன்றை கேட்டுக் கொள்கிறேன்!

நீங்கள் மேடைகளில் பேசும்போது, என்னை (என்போன்ற பெண்களை), "தாய்மார்களே, மனைவியாக இருப்பவர்களே, சகோதரிகளே'"என்று பேசாதீர்கள். ஏனென்றால், நானும் ஆண்களைப் போன்றே ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினர்தான். குடும்பத்தில், கணவர்களுக்கு நாங்களும் ஒரு முதலாளி, டாக்டர், என்ஜனியர் தான். மேலும் ஆண்களை பாதுகாக்கும் ஒரு பெண்போலீஸூம் கூட.

எனவே நீங்கள் எனக்கு ஆதரவு தரவேண்டும். ஆதரவு தரவேண்டும்.
இப்படிக்கு,
ஒரு எகிப்திய பெண்.

(நன்றி: Egyptian Streets)- a blog

Friday, July 11, 2014

நினைவுகள்-5

ஆடுகள், மனித வாழ்வில் கூடவே வந்தவை. இந்த இரண்டு ஆன்மாக்களுக்கும் ஏதோ ஒரு தொடர்ப்பு இருக்கும் என்றே நினைக்கிறேன். அவைகளை மனிதனிடமிருந்து பிரித்துவிட முடியாது போலும். 

ஆடுகளிடமிருந்து, அதன் பால், மாமிசம், இவைகள் மனிதனுக்கு கிடைக்கிறது என்ற சுயநலத்தினால் அவன் அவைகளை வளர்க்கிறான் என்றாலும், அதில் ஏதோ ஒரு முன்-ஜென்ம-சொந்தம் இருக்க வேண்டும்தான். நகரங்களில் வசிப்பவரும் அந்த தொடர்பை அதன் மாமிச உருவத்தில் சந்தித்துத்தான் கொண்டிருக்கின்றனர். 

பொதுவாக ஆடுகள் மிச்சமீதி உள்ள கழிவுகளையும் புல்லையும் சாப்பிட்டே வாழும் குணமுடையவை என்றாலும், சில நேரங்களில் செலவு செய்து போட்டிருந்த பயிர்களையும், அதை பாதுகாக்க போட்டிருந்த வேலிப் பயிரையுமே மேய்ந்துவிடும் கொடூரமும் உண்டு.

ஆடுவளர்ப்பது என்பது பழைய தொழிலாகவே ஆகிவிட்டது. இப்போது ஒருசிலர் மட்டுமே அதை செய்கின்றனர். மற்றைய நாடுகளைப்போல இந்தியாவில் மிகப் பெரிய அளவில் ஆடுவளர்ப்பதில் ஆர்வமில்லாமல் உள்ளனர். கௌரவக் குறைவான தொழிலாகவும் நினைக்கின்றனர். ஆடுகளை பண்ணைமுறையில் வளர்ப்பவர்கள் மிகக் குறைவே. ஏழ்மை காரணமாகவும், லாபம் கிடைக்கும் என்ற நோக்கிலும் பலர் சில நூறு ஆடுகளை மட்டுமே வளர்த்து வருகிற போதிலும் அவர்களுக்கென்று தனியே மேய்ச்சல் நிலம் ஏதும் இல்லை என்பதால், அதை பாதுகாப்பதில் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். மழைகாலம் வந்தாலோ கொடுமையிலும் கொடுமை இந்த ஆடுகள் படும்பாடு.

மழைகாலங்களில், இந்த ஆடு வளர்ப்பு என்பது ஒரு நரக வேதனையான ஒன்றுதான். ஆடு வைத்திருப்பவருக்கு தனியே மேற்கூரை கொண்ட இடம் இல்லாமையால், ஊரில் உள்ள கோயில், பொதுகட்டிடச் சுவர்கள் உபயோகத்தில் இல்லாத மண்டபங்கள், மரத்தடிகள் இவைகளில் அந்த ஆடுகள் ஒதுங்கவும் முடியாமல், நிற்கவும் முடியாமல்  தத்தளித்துத் தடுமாறும்போது அதை வைத்திருப்பவனின் பாடு படு திண்டாட்டமே!

ஆடுகளில் செம்மறி ஆடுகள் அவ்வளவு அழகாகவும் இருக்காது. மனிதனிடம் ஒன்றியும் பழகாது. ஒரு எதிரியே பார்ப்பது போலவே மனிதனை அது சந்திக்கும். மனிதனை எப்போதுமே அது நம்பாது. ஒருவேளை மனிதனைப் பற்றிய உண்மை தெரிந்திருக்குமோ என்னவவோ!

ஆனால், வெள்ளாடு என்பது அப்படியில்லை. நம்முடன் கூடப்பிறந்தவன் போலவே அதன் எல்லா நடவடிக்கையும் இருக்கும். மனிதனை நம்புவதில், வளர்ப்பு நாய்க்கு இது போட்டியாகவே வரும்! வெள்ளாடு சுத்தத்திலும் சிறந்தது. செம்மறி ஆடுபோல் கெட்ட வாசனை வராது. வெள்ளாடு, வளர்ப்பவனின் உடம்பின் மீது முகர்ந்து விளையாடும். அதனுடன் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டால், அதை விட்டுப்பிரியவே மனம் வராது. 


வெள்ளாடுகளில், இளம் ஆடுகளே கறிக்குச் சிறந்தது என்பதால், இளம் வயதிலேயே குட்டியாக இருக்கும் 'இளம்குட்டிகளை' தாயிடமிருந்து பிரித்து விலைக்கு வாங்கிக் கொண்டு சென்றுவிடுவர். அந்த பிஞ்சுக்குட்டியானது, தாயைப் பிரிந்து பால் குடிக்க முடியாமல் தவித்துக் கத்தித் திரிவதை பார்க்க பரிதாபமாக இருக்கும். அதைப் பார்த்த எந்த மனித நெஞ்சமும் கரைந்துவிடும். அதன் குரலே அம்மாவை கேட்டு 'மே' என்று கத்தும் துயரம் சகிக்காதுதான். அவைகளின் சாபங்கள்தானோ என்னவோ மனிதனும் பாசத்திற்கு ஏங்கி தவிக்கிறான்.


நினைவுகள்-4

Cry and Howl என்ற ஒரு பிளாக்கில் -- மகனைப் பறிகொடுத்த ஒரு தாயின் கதறலாக -- அதிபர் ஒபாமாவுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் அட்டகாசத்தை இவ்வாறு தனது கடிதத்தில் வடித்துள்ளார்.

"நான், வரிகட்டிவரும், சட்டத்தை மிக மதிக்கும் ஒரு அமெரிக்க பிரஜை. எனது மகன் சார்ஜண்ட் பிராண்டன் போலீஸ் அதிகாரி. அவன், நேருக்குநேர்  நடந்த கார்களின் மோதலில் கடந்த  2014 மே 12-ல் கொல்லப்பட்டான். இந்தச் செயல் ஒரு தவறுதலான ஓட்டுனரால் நடந்தது. அந்த மோசமான ஓட்டுனரோ சட்டவிரோதமாக இந்த நாட்டுக்குள் நுழைந்தவன். ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தண்டனை அனுபவித்தவன். அவனுக்கு இந்த நாட்டின் 'சமூக பாதுகாப்பு நம்பர்' என்னும் Social Security Number இல்லை. அவனுக்கு இந்த நாட்டில் மோட்டார் வாகனத்தை ஒட்டுவதற்குறிய லைசென்ஸ்கூட இல்லை. ஆனாலும், அவன் எப்படியோ ஒரு வாகனத்தை இங்கு வாங்கிவிட்டான். அதை அவன் பெயரில் பதிவும் செய்துவிட்டான்.

அந்த பாதகனின் செயலால், நான் என் மகனை இழந்துவிட்டேன். அந்த பாதகன் இந்த செயலை செய்தபோது, மூன்றுமடங்கு குடித்திருத்தான். அவனின் வாகனத்தை, தவறுதலான பாதைவழியே 35 மைல் தவறுதலாகவே ஓட்டிவந்திருக்கிறான்.

இவன் சட்டவிரோதமாக இங்கு வாழ்கிறான் என்பதை இந்த அரிசோனா மாநில அரசும் அறிந்திருக்கிறது. ஏற்கனவே இதற்காக 1994 ல் தண்டனையும் பெற்றிருக்கிறான். பல குற்றங்கள் அவன்மீது சுமத்தியிருந்தாலும், அரசு வக்கீலின் சலுகையான நடவடிக்கையால் அவன் விடுதலையும் பெற்றிருக்கிறான். அவன் சட்டவிரோதமாக இந்த நாட்டினில் நுழைந்திருக்கிறான் என்று மாநில அரசுக்கு நன்றாகவே தெரிந்திருந்தபோதிலும், ஏன் அவனை நாடு கடத்தவில்லை என்பது தெரியவில்லை. ஏன் அவனைப் போன்ற மற்றவர்கள்மீதும், இந்த அரசு, நடவடிக்கை எடுக்காமல் வைத்திருக்கிறது?

என் மகனைக் கொல்வதற்காகவா இந்த மாநில அரசு அவனை இந்த நாட்டில் தங்க அனுமதித்தது என்ற கோபம் எனக்கு மிக அதிகமாக வருகிறது.


என் மகனைப் பற்றி பல பத்திரிக்கைகளில் வந்த அவனின் சேவை சிறப்புகளை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். போலீஸ் அதிகாரிகளில் அவன் ஒரு நட்சத்திரம். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும், நல்ல நிம்மதியான வாழ்க்கையை மக்கள் அனுபவிக்க வேண்டும் என தன் கடமையை செய்து வந்தவன். தன்னலமற்றவன், பிறருக்கு உதவுபவன். வேலை நேரம் முடிந்தபின், ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய போய்விடுவான். அவனின் சொந்த பணத்தைக் கொண்டு உதவுவான். கிறிஸ்துமஸ் சமயத்தில் குழந்தைகளைத் தத்து எடுத்து, அவனின் சொந்தபணத்தில், அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்வான்."


Sunday, July 6, 2014

நினைவுகள்-3

கோர்ட் வழக்கு தேவையா?

பொதுவாக, எல்லாப் பிரச்சனைகளுக்குமே கோர்ட்டுக்கு போனால்தான்  முடிவு கிடைக்கும் என பலர் நினைக்கின்றனர். அவர்கள் சொல்லும் காரணம், 'கலகம் பிறந்தால்தான், ஞாயம் பிறக்கும்'. முடிவு வேண்டும் என எதிர்பார்ப்பவர் கோர்ட்டுக்கு போகக் கூடாது. சமாதான வழியிலேயே முடிவை அடைய வேண்டும்.

எதிரி நம்மை விடமாட்டான்:
ஆனால் நமது எதிரியோ அவ்வாறு நம்மை நிம்மதியாக இருக்க விடமாட்டான். அவன் முந்திக்கொண்டு கோர்ட்டுக்கு போய்விடுவான். அந்த வழக்கை, வேறு வழியின்றி, நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். ஏன் என்றால் அவனின் நோக்கமே, நாம் அலைகழிந்து ஓய்ந்துவிடவேண்டும் என்பதே!  அதுவே அவனின் வெற்றியும் கூட!

நாம் எதிரியை விட்டுவிடுவாம்:
நாம் அதுபோன்ற ஒரு வீண் வழக்கை யார்மீதும் தொடரக் கூடாது. முடிந்தவரை சமாதான வழியிலேயே செல்வதால், இந்த பிறவியில் நாம் ஒரு பெரிய காலத்தை வாழாமல் இழக்கும் வாய்ப்பிலிருந்து தப்பிக்கலாம். வழக்கு என்பது ஒருவரின் வாழ்நாளை வீண்டிக்கும், மற்ற வாழ்க்கைமுறையை வாழவிடாமலும் செய்துவிடும். வழக்கு போடுவதில் வைராக்கிய எண்ணம் இருக்கக் கூடாது.

நாம் வழக்கு போடவேண்டிய கட்டாயம் இருந்தால்:
சில நேரங்களில், நமது ஞாயமான பிரச்சனைக்கு எதிரி தீர்வை கொடுக்க மாட்டான். அவனிடம் கோர்ட் மூலமே தீர்ப்பை பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் இருக்கும்போது, நாம் கோர்ட்டுக்கு போகலாம். ஆனாலும், அங்கு சமாதானத்துக்கு நாம் முதல் ஆளாகவே இருக்க வேண்டும். இந்த வழக்கில் ஏற்படும் தீர்ப்புதான்  என் வாழ்வை நிர்ணயிக்கும் என்று எண்ணிக் கொண்டே இருக்கக்கூடாது.

பங்காளி சொத்துச் சண்டை:
உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், சித்தப்பா, பெரியப்பா , அத்தை, மாமி, வாரிசுகள், இவர்களிடம் நமது குடும்ப சொத்தை பகிர்ந்து கொள்ள பிரச்சனை ஏற்பட்டால், முடிந்தவரை சமாதான வழிகளையே கடைபிடிக்கவும். கோர்ட்டுக்கு போனால், அங்கு ஒரு நீதிபதியே அந்த நியாயத்தைதான் சட்ட தீர்ப்பாக சொல்லப் போகிறார். அந்த நியாயம் நமக்கும் தெரியும். ஏன், நாமே அதை நமக்குள் செய்து கொள்ளக் கூடாது. ஒருவேளை, கோர்ட்டுத்தான் முடிவு என்று வந்தால், அந்த வழக்கில் கிடைக்கும் சொத்தே தனக்கு வாழ்நாள் வாழ்வு என்று அதைக் கட்டிக் கொண்டே அழாமல், நமக்கென்று உள்ள தனிப்பட்ட சம்பாத்தியத்துக்கும் உத்தியோகத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். வழக்குக்காக வாழ்நாளை விரயமாக்காதீர்கள்.

அரசாங்க வழக்குகளில்...
நமக்கு சட்டப்படி கிடைக்கவேண்டிய சலுகையோ, பணமோ, உத்தரவோ, அரசாங்க அதிகாரியிடமிருந்து கிடைக்காவிட்டால், (பொதுவாக, பதவி உயர்வு, சம்பளசலுகை, இடமாற்றம், இடைநீக்கம்) அதற்காக கோர்ட்டுக்கு செல்வதில் தப்பில்லை. ஆனால் அது உங்களின் மனச்சாட்சிப்படி ஞாயமானதாக இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும், 'அந்த வழக்குத்தான் என் வாழ்வே' என்று இருக்கக்கூடாது. கிடைத்தால் பலன்; இல்லையென்றால் பழைய நிலையே என்ற மனத்திடம் இருக்க வேண்டும்.

எதிலும் ரிஸ்க் எடுக்கலாம் என்பது தவறு!
பொதுவாக, ரிஸ்க் எடுத்தால்தான் வாழ்வு என்பது ஒரளவுக்கு பொருந்தும் என்றாலும், எல்லா விஷயத்திலும் அது பொருந்தவில்லை. 100 ரூபாய் வைத்திருப்பவன் 50 ரூபாய்க்கு ரிஸ்க் எடுக்கலாம். அதையே தலைகீழாக எடுப்பவன் கதி, விதி வழியேதான்! அதுபோலத்தான் வழக்கிலும், தனது முழு வருமானத்தையும் வழக்காட செலவிடவேண்டாம்.

இறைவன் தீர்ப்பே கடைசி:
நாம் எவ்வளவுதான் கீழ்கோர்ட், மேல்கோர்ட், அப்பீல் கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம்கோர்ட் என வழக்காடினாலும், கடைசியில் நமக்கு கிடைக்கும் தீர்ப்பே இறுதியானது. அதை எல்லாம் வல்ல இறைவனே நமக்கு அளிக்கிறான். நமது முயற்சியால்தான் ஒரு வழக்கு தீர்ந்ததாக சொல்லிக் கொள்ள முடியாது.
நல்ல வழக்குகள் சில நேரங்களில் தோற்பதும் உண்டு.
மோசமான வழக்குகள் சில நேரங்களில் ஜெயிப்பதும் உண்டு.
கோர்ட் என்பது நாம் போகவேண்டாத இடம் என்று நினைப்பதே சரி.

.

நினைவுகள்-2

கட்டிடம்:
இந்த மண்ணில் பிறந்ததன் அடையாளமாக அவரவர் ஒரு வீட்டை கட்டி அதில் வாழ்ந்து செல்கின்றனர். எல்லோருக்கும் அவ்வாறான அடையாளம் கிடைப்பதில்லை. இதற்குமுன் கட்டப்பட்ட வீடுகளுக்கு எந்த கட்டிட விதிமுறைகளும் இல்லாதபோதும் அவை நூற்றாண்டை தாண்டி வாழ்ந்திருக்கின்றன. அப்போதெல்லாம் வீட்டின் உறுதி தன்மைக்காகவே கட்டிடத்தின்  கட்டுமானப் பொருள்கள் உபயோகிக்கப்பட்டன. இப்போதோ, சிக்கனம், செலவு குறைப்பு, என்ற பல மேதாவிகள் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, கட்டிடத்தின் உறுதித் தன்மையை கோட்டை விடுகின்றனர்.
நம்மிடம் அதிக அளவுக்கு பணம் இருந்தாலொழிய, நம்மால் தனிப்பட்ட வீட்டை கட்டி அழகு பார்க்க முடிவதில்லை. அளவான பணம் இருப்பவர், மற்றவர் சொல்வதை மட்டும் கேட்டு மட்டுமே கட்டிடம் கட்டமுடியும். அதனால் தனி அனுபவம் என்பது கிடைக்காது. அந்த அனுபவம் தேவையில்லை என்றே பலரும் நினைக்கின்றனர்.
நகரங்களில் வீடுகள் வெகுவாக வளர்ந்து வருவதால், அரசு அதை ஒரு வரைமுறைக்குள் கொண்டுவர நினைத்தது. அதை செயல்படுத்துவதில்தான் பல சிக்கல்களை சந்தித்தது. எப்போதுமே இதுபோன்ற ஒரு மிக அத்தியாவசியமான, காலாகாலத்துக்கும் இருக்க வேண்டிய ஒரு சட்ட திட்டத்தை மிக தெளிவாக வரையறுத்திருக்க வேண்டும். ஏனோ அவ்வாறு செய்யவில்லை அல்லது செயல்படுத்தவில்லை. எப்போதுமே, மக்களின் மனநிலையும், கட்டுப்பாடு இல்லை என்றால், அதை மீறுவதில் ஒரு ஆனந்தம் அல்லது அதன் கெடுபிடிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமலும் மீறிகின்றனர். மக்கள் மனநிலைக்கு எதிரான எந்த சட்டமும் நிலைத்து நிற்பதிலும், அதை செயல் படுத்துவதிலும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
ஒரு சட்டம் எவ்வளவு இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்கு சிங்கப்பூரில் உள்ள கட்டிட கட்டுமான சட்டம் ஒரு உதாரணமாக சொல்வர். அங்கு ஒருவர் வீடு அல்லது பெரிய கட்டிடம் கட்ட நினைத்தால், அவரின் பண வசதிக்கேற்ப எவ்வளவு உயரத்தில் வேண்டுமானாலும், பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழத்தில் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாமாம்; ஒரு கட்டுப்பாடும் கிடையாதாம். ஆனால் அவர்கள் இரண்டு விதிமுறைகளை மட்டும் கண்டிப்பாக அனுசரிக்க வேண்டுமாம். ஒன்று, தரைதளத்தை வானக நிறுத்துக்குத் தவிர வேறு எந்த உபயோகமும் செய்யக் கூடாதாம். இரண்டு, அந்த கட்டிடத்தின் வீதியை ஒட்டிய முகப்பில் ஒரு பொதுகழிப்பிட வசதி கண்டிப்பாக செய்யவேண்டுமாம். இதைத் தவிர அவரின் ஆர்கிடெக்ட், ஸ்டக்சுரல் என்ஜினியர் என்ன அறிவுரை சொல்கிறாரோ அதன்படி அந்த வீட்டின் உரிமையாளர் தன் விரும்பம் போல கட்டிடத்தை கட்டிக் கொள்ளலாம்.
ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள கட்டிட விதிகளோ மிகக் கடுமையானது; பொதுவாக, கடுமையான விதிகள், விதிமீறலையே சந்திக்கும். அதன்படியே சென்னையும் அதிகப்படியான விதிமீறலையே சந்தித்தது.
நான்கு கிரவுண்ட் மனையில் வீடுகட்டுபவர் வேண்டுமானால், கட்டுமான விதிகளை கடைப்பிடிக்க முடியும். ஆனால் கால் கிரவுண்ட் மனையில் வீடுகட்டி அழகு பார்க்க நினைப்பவருக்கு இந்த விதிகள் உண்மையில் அவர்களின் தலையில் எழுதப்பட்ட விதியே தவிர, அனுசரிக்கவேண்டிய விதிகள் அல்ல.
லண்டனில் ஏற்கனவே நிர்மானிக்கப்பட்ட வீதிகள் உள்ளன. எனவே அங்கு கட்டிட கட்டுமானம் என்பது விதிகளுக்கு பொருந்தி உள்ளன. சென்னையோ, ஏற்கனவே தானாகவே வளைந்து, நெளிந்து பாம்பு வடிவ வீதிகளே அதிகம். இங்கு ஒரே அளவில் எந்த வீதிகள் இருக்காது. எனவே வீதியின் அகலம் என்று எதை எடுத்துக் கொள்வது. வீதியின் அகலத்திற்கு ஒன்னறை மடங்குக்கு மேல் கட்டிடத்தின் உயரம் இருக்கக் கூடாது என்பதும் ஒரு விதி. இந்த உயரப் பிரச்சனை எதற்காக என்றால், அந்த கட்டிடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் (தீ பிடித்தால்) அங்கு தீயனைப்பு வண்டி செல்ல போதுமான வழி இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட சட்டமாம். ஏன், தீயனைப்பு வண்டியின் அகலத்தை குறைத்து ஒரு வண்டியை செய்து கொள்ளலாமே. அது ஒரு லிப்ட் போல பல அடி உயரத்துக்கு எழும்பலாமே? யோசிக்க வேண்டிய விஷயம்தான்!
மற்றொரு விதி என்னவென்றால், மனையில் பக்கவாட்டில் காலி இடம் விடவேண்டும் என்பதும் ஒரு விதி. வளர்ந்த சென்னையில் இது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை. புதிதாக உருவாகும் மனைகளுக்கு இது பொருந்தலாம். அதுவும்கூட சிறு மனைகளுக்கு இதில் விதிவிலக்கும் அளிக்கலாம். கேட்டால், ஒரு வீட்டுக்கு வெளிச்சம் வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது என்கிறது சட்டம். சென்னையில் எத்தனை வீடுகள் இந்த விதிகளின் அடிப்படையில் உள்ளது? ஏன் மக்கள் சென்னை நகருக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியில் உள்ள மனைக்கு பெரிய சலுகைகள் (ரோடுவசதி, மின்வசதி, கழிவுநீர்வசதி) செய்தால் அங்கு மக்கள் குவிவார்களே! யோசிக்க வேண்டிய விஷயங்கள்தான்.

.

Saturday, July 5, 2014

நினைவுகள்-1


கடவுள்:    இவரே பிரபஞ்சத்தைப் படைத்தவர். அதற்கும் மேலாக மனிதனுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுபவரும் இவரே. இவர் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமான கருத்தில் சொல்லியுள்ளன. சில மதங்கள், மனிதனைப் போலவே கடவுளைப் படைத்துள்ளன. சில மதங்கள் அவருக்கு உருவமே கொடுக்கவில்லை. உண்மையில் கடவுள் உருவத்தில் இருப்பாரா? பிரபஞ்சத்தை படைத்தவரே தனக்கும் ஒரு உருவத்தைப் படைத்திருப்பாரா? எதற்காக அவருக்கு ஒரு உருவம் வேண்டும்? மனிதனை அவ்வப்போது வந்து பார்ப்பதற்கா? கடவுள், தேவைப்படும்போது, மனித-அவதாரங்களாக வந்ததாகச் சில மதங்களின் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
'ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இவரே' என்றும் கருதப்படுகிறது. எல்லாப் பொருள்களிலும் இவர் இருந்து இயங்குவதாகவும் அல்லது இயக்குவதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கருத்துப்படி பார்த்தால், அவருக்குக்கென்று தனியான உருவம் தேவையில்லை. ஆனாலும், மனிதன், 'இல்லாத ஒன்றை, இருப்பதாக' கற்பனை செய்யத் தயங்குகிறான். எங்கும் நிறைந்து தனிஉருவம் இல்லா நிலையை, மனிதமனம் ஏற்க சிரமப்படுகிறது. இறைநிலைதான் இறைவன் என்றால், எப்பொருளிலும் அவர் இருப்பு உள்ளது என்றே கருதவேண்டும். எல்லாப் பொருளின் இயக்கமும் அவர் இயக்கமே! உயிரற்ற பொருளில் அவர் இயக்கம் எப்படி இருக்கிறது என்று மனிதனால் உணர முடியவில்லை. ஆனாலும் அதிலும் அவரின் அணுசக்தி இயக்கநிலையில் உள்ளது என்றே விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. அப்படியென்றால், உயிருள்ள பொருள்களில் அவரின் இயக்கசக்தியை தாண்டி ஒரு அறிவு சக்தி இருக்குமா? அதுவே நகர்தலையும், மனதையும், சிந்தித்தலையும், இயக்குகிறதா? உயிருள்ள பொருள்களில்தான் 'ஆன்மா' என்னும் 'அறிவு சக்தி' இருக்கிறதா? உயிரற்ற பொருள்களில் அது இல்லையா? உயிரற்ற பொருள்கள் அனைத்தும், உயிருள்ள பொருள்களுக்கு உதவிக்காக இறைவன் படைத்தாரா?
இறைநிலையே எல்லாமாக இருக்கும்போது உயிரினங்கள் எதற்கு? அந்த உயிரினங்களில் 'ஆன்மா' என்னும் 'அறிவுசக்தி' எதற்கு? மற்ற உயிரற்ற பொருள்கள் எதற்கு?
மனித வர்க்கத்தையே முன்னிறுத்தித்தான் இந்த பிரபஞ்சம் முழுவதும் படைக்கப்பட்டதா? இறைவனின், பிரபஞ்ச படைப்பின் நோக்கம் என்ன? மனிதன் என்ற ஒரு அற்ப உயிருடன் இறைவனுக்கு அப்படி என்ன அதீதித உறவு? மனிதனின் உச்சபட்ச நிலைதான் இறைவனா?
இந்துமதத்திலுள்ள, 'துவைத, அத்வைத, விசிஷ்டாத்வைத' கொள்கைகளின்படி இறைவன் என்னும் பரமாத்மாவும், மனிதன் என்னும் ஜீவனில் உள்ள ஜீவாத்மாவும் ஒன்றே என்றும், அல்லது இரண்டும் வேறுபட்ட இருநிலை என்றும், அல்லது ஜீவனின் முதிர்ந்த முக்திநிலையே பரமாத்மாவின் ஐக்கியம் என்றும் சொல்லும் தத்துவ கோட்பாடுகள் பொருந்துகிறதோ?
பரமாத்மாவுடன் சேரும்காலம்வரை, ஜீவாத்மா மறுபிறப்புகளில் சஞ்சரிக்கும்போது இறைவனை விட்டு இடைபட்ட நிலையில் அவைகள் இயங்குகின்றனவா? அவ்வாறு பிறந்து, இறந்து பிறவிகள் எடுத்தால், அந்த இடைநிலையை நிர்வகிக்கும் இறைவன் யார்? அல்லது இறைவனின் துணைஅதிகாரி யார்? பிரபஞ்சத்தில் இடைப்பட்ட உலகங்களும் உள்ளனவா?
உயிருள்ள மனிதனின் மனதில் எண்ணவோட்டம் இருக்கிறது. அதைக்கொண்டே அவன் சிந்தனையும் செயலும் இருக்கிறது. அதை 'மனிதஅறிவு' என்கிறோம். அதேபோல பரமாத்மாவிடமும் மிகப்பெரிய அறிவு என்னும் எண்ணவோட்டம் இருக்கவேண்டும். இந்த இரண்டு எண்ண ஓட்டங்களுக்கும் ஏதேனும் தொடர்பும் இருக்கவேண்டும். மனிதனின் எண்ண ஓட்டமானது, பிரபஞ்ச இறைநிலையான பரமாத்மாவிடம் உள்ள மிகப்பெரிய அறிவு என்னும் எண்ண ஓட்டத்துடன் கலக்கலாம், கலந்துரையாடலாம், பகிர்ந்தும் கொள்ளலாம். அவ்வாறெனில், மனித அறிவின் எண்ண ஓட்டத்தின் தன்மையைக் கொண்டே, பிரபஞ்ச பரமாத்வாவின் பதில் எண்ண ஓட்டமும் இருக்க வேண்டும்; அப்போதுதான், எண்ணத்துக்கு ஏற்ப பலனும், செயலுக்கு ஏற்ப எண்ணமும் இருக்கும்.
இவ்வாறு மனிதனின் எண்ண ஓட்டம் அவனவனின் ஆன்மஅறிவுக்கேற்ப இருக்கும் என்ற கருதினால், இதில் இறைவனின் பொறுப்பு என்று ஏதும் இல்லை என்றே கருதவேண்டும். மனிதன், தன் ஆன்ம அறிவை, பிரபஞ்ச இறை நிலை அறிவுடன் இணக்கமாக வைத்துக்கொண்டும், அதன் சக்தியை பெற்றுக் கொண்டும் இயங்குபவர்களுக்கு 'எண்ணம் போல் வாழ்வு' என்பது சரியாகவே இருக்கும்.
ஆனாலும், மனிதனின் முன் ஜென்ம கர்ம நிலையானது, அவனின் ஆன்மா மட்டுமே அறிந்த ஒன்று; அதனால்தான் மனிதனின் உடலான மனதுக்கு தெரியாமல், ஆன்மா மட்டும், பிரபஞ்ச  அறிவுடன் தொடர்பு கொண்டு அதன் பலன்களை பெற்றுக் கொள்ளும் என கருத வேண்டியுள்ளது. இப்பிறவியில் மனிதன் தனக்கு அல்லது தன் அறிவுக்கு தெரியாமலேயே பல கஷ்டங்களை அனுபவிக்க இந்த மனித ஆன்மா காரணமாக இருக்கவேண்டும்!
எல்லா இயக்கங்களுமே ஒரே இறைசக்தியின் இயக்கமா? ஒரே இறைசக்தியில் தோன்றி இருந்தாலும், அவை பல இறைசக்திகளாக வெளிப்பட்டு, இந்த மனித அறிவுசக்தி அல்லது ஆன்ம சக்தியுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றே கருத வேண்டும். எனவே ஒன்றிலிருந்து பல இறைசக்தி தோன்றி இயக்கம் பெற்றிருந்தால், ஒரே இறைவன் என்ற நிலைமாறி, பன்மையில் இறைநிலையையும் உணர வாய்பிருக்கிறது.
இவை எல்லாம் ஒரு எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடே! மனிதனாகிய நாம், நமது அறிவு-சக்தி அல்லது ஆன்ம-சக்தி என்னும் அறிவை இறை-சக்தியுடன் சேர்க்கும் கலையை அல்லது முறையை நாமே தெரிந்து அந்த இறைநிலையில் தொடர்பு கொண்டு ஆன்மாவின் அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை அது அடுத்தடுத்த பிறவிகளை தடுக்கலாம்; அல்லது பரமாத்மா என்ற இறைநிலையுடன் ஐக்கியமாக உதவலாம். ஏன் ஐக்கியமாகவேண்டும் என்று தெரியவில்லை. ஒருவேளை அது அவ்வாறு இல்லையென்றால், அடுத்தடுத்த பிறவிகளை சிரமம் இல்லாமல் அனுபவிக்கவாவது உதவும் என்றே கருதுகிறேன்.
உங்களின் ஆன்ம அறிவுக்கேற்ப சிந்தித்துக் கொள்ளவும்.

.