Showing posts with label ஆன்மா. Show all posts
Showing posts with label ஆன்மா. Show all posts

Tuesday, August 12, 2014

நினைவுகள்-27 ஆன்மாவின் அறிவு

இப்பிறவியின் ஆன்மாவின் அறிவு:

இங்கு இந்தப் பிறவியில் நாம் தேடிக் கொள்ளும் அறிவு எல்லாம் என்ன ஆகும்? கூடவே அடுத்த பிறவிக்கு வருமா? இல்லை, இந்தப் பிறவியிலிலேயே இந்த உடம்புடனே இங்கேயே அழிந்து விடுமா?
இங்கேயே அழிந்துவிடும் என்றால், அதற்கு எதற்காக இவ்வளவு அறிவை தேடித் தேடி தேடிக் கொள்ள வேண்டும்.

இங்கேயே அழிந்துவிடுவதில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. சிறுவயதிலேயே மிகப் பெரிய சாதனை செய்தவர்கள் பலர் உண்டு. அவர்கள் அனைவருமே ஆன்மா வழியே அறிவை கொண்டு வந்தவர்களாகவே இருப்பார்கள் போலத் தெரிகிறது. அவர்கள், நிச்சயம் இங்கு தேடிய அறிவாக இருக்க முடியாது.

ஆன்மா, உருவமுள்ள பொருள் இல்லையாம். உடம்பு இல்லை, மனம் இல்லை. பின்? உயிர் உள்ள பொருள்களில், உயிர் உடலுடன் இருக்கும் போது, அந்த உடலும், மனமும் அனுபவிக்கும் அனுபவத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ளும் இந்த ஆன்மா. எனவே உடலும், உயிரும் இல்லாதபோது, அது பயணத்தை தொடங்கி விடுகிறது. அடுத்த உடல், உயிர் தேடுகிறது. இதுவே 'ஜீவாத்மா.' இது வந்த வேளையை முடிக்காமல் 'பரமாத்மாவுடன் சேராது போல!'

பிறக்கும்போது, கருவில் முதலில் உடல் உருவாகிறதா, இல்லை உயிர் உருவாகிறதா? தெரியவில்லை. பின், எப்போது இந்த ஆன்மா உயிருள்ள உடம்பில் சேர்கிறது? தெரியவில்லை.

ஆன்மா வரும்போது அறிவுடன் தான் வருகிறது.
ஜெர்மன் விஞ்ஞானி சொல்கிறார். (Dr. Kant). ஒரு பசுமாடு, கன்றுக் குட்டியை ஈனும்போது, அந்தக் கன்றுக் குட்டி வெளியே வந்தவுடன், சிறிதுநேரம் தன் கால்களில் நிற்க முடியாமல் தள்ளாடி, பின் சமாளித்து நின்று கொள்கிறது. இன்னும் சிறிது நேரத்தில், ஆச்சரியப்படும் வகையில், அந்த கன்றுக் குட்டி, தன் தாயின் கால்களுக்கு நடுவில் இருக்கும் மடுவை தன் முகத்தால் முட்டி, வாயால் பாலைக் குடிக்கிறது. இது இயல்பு. இந்த இயல்பை, அந்தக் கன்றுக் குட்டிக்கு யார் கற்றுக் கொடுத்தது? தாய் கற்றுக் கொடுக்கவில்லை. கன்றுக் குட்டிக்கு, தன் தாயின் மடுவில் பால் குடிக்க வேண்டும் என்றும், அந்தத் தாயின் மடு, அதன் கால்களுக்கு நடுவில்தான் உள்ளது என்றும் அந்தக் கன்றுக் குட்டிக்கு யார் சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்?

அதன் ஆன்மாவில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள நினைவுகளின் அடிப்படையில் இது நிகழ்கிறதோ? அப்படியென்றால், ஆன்மாவில் ஏற்கனவே நிகழ்வுகள் பதியப் பட்டே அவை இங்கு வருகின்றன என்று நினைக்கலாமா?

மகாபாரதத்தில், அம்பையை, பீஷ்மர் மணக்க மறுத்த கோபத்தில், அவரை கொல்வேன் என சபதம் செய்து, இப்பிறவியில் (ஒரு ஆணோ, பெண்ணோ) அவரைக் கொல்ல முடியாதாம் என்ற நிலையில் தீக்குளித்த அம்பை, மறுபிறப்பில் அதே நினைவில் ஒரு ஆணுமற்ற, பெண்ணுமற்ற நிலையில் பிறந்து பீஷ்மரைக் கொன்றாள். அவளின் ஆன்மா, முன்பிறப்பின் நிகழ்வை மறக்காமல் வைத்திருந்தது. அதற்கான வழியைத் தேடித்தந்தது.


இப்பிறவியில் நாம் அடையும் எல்லா அனுபவங்களும் நமக்குத் தேவையே! இவைகள் அடுத்த பிறவியின் அடித்தூண்கள்!
.

Saturday, July 5, 2014

நினைவுகள்-1


கடவுள்:    இவரே பிரபஞ்சத்தைப் படைத்தவர். அதற்கும் மேலாக மனிதனுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுபவரும் இவரே. இவர் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமான கருத்தில் சொல்லியுள்ளன. சில மதங்கள், மனிதனைப் போலவே கடவுளைப் படைத்துள்ளன. சில மதங்கள் அவருக்கு உருவமே கொடுக்கவில்லை. உண்மையில் கடவுள் உருவத்தில் இருப்பாரா? பிரபஞ்சத்தை படைத்தவரே தனக்கும் ஒரு உருவத்தைப் படைத்திருப்பாரா? எதற்காக அவருக்கு ஒரு உருவம் வேண்டும்? மனிதனை அவ்வப்போது வந்து பார்ப்பதற்கா? கடவுள், தேவைப்படும்போது, மனித-அவதாரங்களாக வந்ததாகச் சில மதங்களின் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
'ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இவரே' என்றும் கருதப்படுகிறது. எல்லாப் பொருள்களிலும் இவர் இருந்து இயங்குவதாகவும் அல்லது இயக்குவதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கருத்துப்படி பார்த்தால், அவருக்குக்கென்று தனியான உருவம் தேவையில்லை. ஆனாலும், மனிதன், 'இல்லாத ஒன்றை, இருப்பதாக' கற்பனை செய்யத் தயங்குகிறான். எங்கும் நிறைந்து தனிஉருவம் இல்லா நிலையை, மனிதமனம் ஏற்க சிரமப்படுகிறது. இறைநிலைதான் இறைவன் என்றால், எப்பொருளிலும் அவர் இருப்பு உள்ளது என்றே கருதவேண்டும். எல்லாப் பொருளின் இயக்கமும் அவர் இயக்கமே! உயிரற்ற பொருளில் அவர் இயக்கம் எப்படி இருக்கிறது என்று மனிதனால் உணர முடியவில்லை. ஆனாலும் அதிலும் அவரின் அணுசக்தி இயக்கநிலையில் உள்ளது என்றே விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. அப்படியென்றால், உயிருள்ள பொருள்களில் அவரின் இயக்கசக்தியை தாண்டி ஒரு அறிவு சக்தி இருக்குமா? அதுவே நகர்தலையும், மனதையும், சிந்தித்தலையும், இயக்குகிறதா? உயிருள்ள பொருள்களில்தான் 'ஆன்மா' என்னும் 'அறிவு சக்தி' இருக்கிறதா? உயிரற்ற பொருள்களில் அது இல்லையா? உயிரற்ற பொருள்கள் அனைத்தும், உயிருள்ள பொருள்களுக்கு உதவிக்காக இறைவன் படைத்தாரா?
இறைநிலையே எல்லாமாக இருக்கும்போது உயிரினங்கள் எதற்கு? அந்த உயிரினங்களில் 'ஆன்மா' என்னும் 'அறிவுசக்தி' எதற்கு? மற்ற உயிரற்ற பொருள்கள் எதற்கு?
மனித வர்க்கத்தையே முன்னிறுத்தித்தான் இந்த பிரபஞ்சம் முழுவதும் படைக்கப்பட்டதா? இறைவனின், பிரபஞ்ச படைப்பின் நோக்கம் என்ன? மனிதன் என்ற ஒரு அற்ப உயிருடன் இறைவனுக்கு அப்படி என்ன அதீதித உறவு? மனிதனின் உச்சபட்ச நிலைதான் இறைவனா?
இந்துமதத்திலுள்ள, 'துவைத, அத்வைத, விசிஷ்டாத்வைத' கொள்கைகளின்படி இறைவன் என்னும் பரமாத்மாவும், மனிதன் என்னும் ஜீவனில் உள்ள ஜீவாத்மாவும் ஒன்றே என்றும், அல்லது இரண்டும் வேறுபட்ட இருநிலை என்றும், அல்லது ஜீவனின் முதிர்ந்த முக்திநிலையே பரமாத்மாவின் ஐக்கியம் என்றும் சொல்லும் தத்துவ கோட்பாடுகள் பொருந்துகிறதோ?
பரமாத்மாவுடன் சேரும்காலம்வரை, ஜீவாத்மா மறுபிறப்புகளில் சஞ்சரிக்கும்போது இறைவனை விட்டு இடைபட்ட நிலையில் அவைகள் இயங்குகின்றனவா? அவ்வாறு பிறந்து, இறந்து பிறவிகள் எடுத்தால், அந்த இடைநிலையை நிர்வகிக்கும் இறைவன் யார்? அல்லது இறைவனின் துணைஅதிகாரி யார்? பிரபஞ்சத்தில் இடைப்பட்ட உலகங்களும் உள்ளனவா?
உயிருள்ள மனிதனின் மனதில் எண்ணவோட்டம் இருக்கிறது. அதைக்கொண்டே அவன் சிந்தனையும் செயலும் இருக்கிறது. அதை 'மனிதஅறிவு' என்கிறோம். அதேபோல பரமாத்மாவிடமும் மிகப்பெரிய அறிவு என்னும் எண்ணவோட்டம் இருக்கவேண்டும். இந்த இரண்டு எண்ண ஓட்டங்களுக்கும் ஏதேனும் தொடர்பும் இருக்கவேண்டும். மனிதனின் எண்ண ஓட்டமானது, பிரபஞ்ச இறைநிலையான பரமாத்மாவிடம் உள்ள மிகப்பெரிய அறிவு என்னும் எண்ண ஓட்டத்துடன் கலக்கலாம், கலந்துரையாடலாம், பகிர்ந்தும் கொள்ளலாம். அவ்வாறெனில், மனித அறிவின் எண்ண ஓட்டத்தின் தன்மையைக் கொண்டே, பிரபஞ்ச பரமாத்வாவின் பதில் எண்ண ஓட்டமும் இருக்க வேண்டும்; அப்போதுதான், எண்ணத்துக்கு ஏற்ப பலனும், செயலுக்கு ஏற்ப எண்ணமும் இருக்கும்.
இவ்வாறு மனிதனின் எண்ண ஓட்டம் அவனவனின் ஆன்மஅறிவுக்கேற்ப இருக்கும் என்ற கருதினால், இதில் இறைவனின் பொறுப்பு என்று ஏதும் இல்லை என்றே கருதவேண்டும். மனிதன், தன் ஆன்ம அறிவை, பிரபஞ்ச இறை நிலை அறிவுடன் இணக்கமாக வைத்துக்கொண்டும், அதன் சக்தியை பெற்றுக் கொண்டும் இயங்குபவர்களுக்கு 'எண்ணம் போல் வாழ்வு' என்பது சரியாகவே இருக்கும்.
ஆனாலும், மனிதனின் முன் ஜென்ம கர்ம நிலையானது, அவனின் ஆன்மா மட்டுமே அறிந்த ஒன்று; அதனால்தான் மனிதனின் உடலான மனதுக்கு தெரியாமல், ஆன்மா மட்டும், பிரபஞ்ச  அறிவுடன் தொடர்பு கொண்டு அதன் பலன்களை பெற்றுக் கொள்ளும் என கருத வேண்டியுள்ளது. இப்பிறவியில் மனிதன் தனக்கு அல்லது தன் அறிவுக்கு தெரியாமலேயே பல கஷ்டங்களை அனுபவிக்க இந்த மனித ஆன்மா காரணமாக இருக்கவேண்டும்!
எல்லா இயக்கங்களுமே ஒரே இறைசக்தியின் இயக்கமா? ஒரே இறைசக்தியில் தோன்றி இருந்தாலும், அவை பல இறைசக்திகளாக வெளிப்பட்டு, இந்த மனித அறிவுசக்தி அல்லது ஆன்ம சக்தியுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றே கருத வேண்டும். எனவே ஒன்றிலிருந்து பல இறைசக்தி தோன்றி இயக்கம் பெற்றிருந்தால், ஒரே இறைவன் என்ற நிலைமாறி, பன்மையில் இறைநிலையையும் உணர வாய்பிருக்கிறது.
இவை எல்லாம் ஒரு எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடே! மனிதனாகிய நாம், நமது அறிவு-சக்தி அல்லது ஆன்ம-சக்தி என்னும் அறிவை இறை-சக்தியுடன் சேர்க்கும் கலையை அல்லது முறையை நாமே தெரிந்து அந்த இறைநிலையில் தொடர்பு கொண்டு ஆன்மாவின் அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை அது அடுத்தடுத்த பிறவிகளை தடுக்கலாம்; அல்லது பரமாத்மா என்ற இறைநிலையுடன் ஐக்கியமாக உதவலாம். ஏன் ஐக்கியமாகவேண்டும் என்று தெரியவில்லை. ஒருவேளை அது அவ்வாறு இல்லையென்றால், அடுத்தடுத்த பிறவிகளை சிரமம் இல்லாமல் அனுபவிக்கவாவது உதவும் என்றே கருதுகிறேன்.
உங்களின் ஆன்ம அறிவுக்கேற்ப சிந்தித்துக் கொள்ளவும்.

.

Saturday, March 29, 2014

சைவ மதம்

சைவ மதம்:

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டுள்ள ஒரு மதம். இந்த மதத்தை சேர்ந்தோரை சைவர் என்பர்.

பதி, பசு, பாசம், என்னும் மூன்றும் நிலையான (நித்திய) பொருள்கள்.

ஆன்மாக்கள் பசுக்கள். இவைகள் அவை செய்யும் புண்ணியத்தினால் ஞானம் பெற்று சிவனுடன் இரண்டற கலந்து முக்தி அடையும். பற்றை விடுவதே முக்திக்கு வழி.

சிவன், 'சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுகிரகம்' என்னும்  பஞ்சகிருத்தியங்களையும், ஆன்மாக்களையும் ஈடேற்றுபவர் என்றும் சொல்கிறது இந்த மதம்.


Friday, March 28, 2014

ஆன்மா எங்கு செல்லும்


இந்த ஜீவ-ஆன்மா முக்திபெற்று பேராத்மாவுடன் சேர்வதற்கு உபகாரமாக உபதேசித்த உபநிஷதங்களின் சாரமே ஸ்ரீகிருஷ்ணன் அருளிய கீதை.

உபநிஷதங்களினது உண்மையை உணரும் பக்குவம் கலியுகத்து மக்களுக்கு கைகூடாதென்பதால், கலியுகம் ஆரம்பத்தில், ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்து அந்த உபநிஷதங்களின் சாரத்தை தந்தான்.
எந்த விருப்பும் வெறுப்பும் இன்றி கடமையை கடமையாகச் செய்து வந்தால் ஒருவன் ஞானியாக இருக்கலாம் என்பது கீதையின் சித்தாந்தம்.
கீதையை கேட்டு நமக்கு வெளியிட்டவர் சஞ்சயன்.
  

கீதைக்கு, ஆதிசங்கராச்சாரியார் ‘அத்வைத’ விளக்கமும், 
ஸ்ரீராமானுஜாச்சாரியார் ‘விசிஷ்டாத்வைத’ விளக்கமும், 
ஸ்ரீமத்வாச்சாரியார் ‘துவைத’ விளக்கமும் மிக விரிவாகச் செய்துள்ளனர்.