Sunday, December 18, 2016

இதோபதேசம்—10

இதோபதேசம்—10
Serendipity செரின்டிபிட்டி
நம்முடைய சின்னச் சின்ன புத்திசாலித்தனங்கள் தான், நமக்கு எதிர்பாராத அதிஷ்டத்தைக் கொடுக்கும் என்பது நிதர்சனம்; அப்படிப்பட்ட அதிஷ்டத்துக்கு பெயர் தான் “Serendipity” (செரன்டிபிட்டி); இந்த வார்த்தையை முதன்முதலில் ஒரு ஆங்கிலேய கதை ஆசிரியர் உருவாக்குகிறார்; அவரும் ஒரு கதையைப் படித்தபிறகு இந்தப் பெயரை உருவாக்கினாராம்; அதுதான்,
“The Three Princes of Serendip” என்பது ஒரு உலகப் புகழ் பெற்ற கதைத் தொகுப்பு;
செரன்டிப் என்ற நாட்டில், அந்த நாட்டு மன்னருக்கு மூன்று மகன்கள்; அந்த மூன்று இளவரசர்களும் கல்வி கற்று தேர்ந்து விட்டார்கள்; அவர்களுக்கு தேவைப்படும் உலக அறிவை கற்றுக் கொள்வதற்காக, மன்னர், அந்த மூன்று இளவரசர்களையும் வெளி உலகம் சுற்றி வர அனுப்புகிறார்; அவர்களும் சாதாரண மனிதர்களாக வெளி உலகில் திரிந்து உலக அனுபவங்களைக் கற்கிறார்கள்; அவர்கள் சந்தித்த வாழ்க்கையே இந்தக் கதைத் தொகுப்பு; அதில் பல கதைகள் உள்ளன; கதைக்குள் கதைகளும் உள்ளன;
அந்த மூன்று அரசிளங் குமாரர்களும் பிரயாணப்பட்டு ஒரு ஊருக்கு போகிறார்கள்; அங்கு ஒருவன் ஒட்டகத்தை தேடிக் கொண்டு வருகிறான்; தன் ஒட்டகத்தை எங்காவது பார்த்தீர்களா என்று இந்த இளவரசர்களிடம் கேட்கிறான்; இளவரசர்கள் கீழ்கண்ட கேள்வியை அவனிடம் கேட்கிறார்கள்;
“உன் ஒட்டகத்துக்கு ஒரு கண் தெரியாதா?
உன் ஒட்டகத்துக்கு ஒரு பல் இருக்காதா?
உன் ஒட்டகத்தின் ஒரு கால் நொண்டியா?
உன் ஒட்டகத்தின் முதுகின் ஒரு பக்கம் வெண்ணையும், மறுபக்கம் தேனும் கட்டிய மூட்டை இருந்ததா?
அதில் ஒரு பெண் சவாரி செய்தாளா?
அவள் கர்ப்பமாக இருந்தாளா?
என்று அத்தனை கேள்விகளையும் மாறி மாறி கேட்டனர்;
ஒட்டகத்தை தொலைத்தவன், “ஆம்” என்றே எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறான்;
அப்படியென்றால், உன் ஒட்டகம், இந்த ரோட்டின் வழியேதான் சென்றுள்ளது; இங்கிருந்து சுமார் 20 மைல் தொலைவில் அது கிடைக்கலாம் என்று சொன்னார்கள்;
அவனும் நம்பி, 20 மைல் தூரம் ஓடிச் சென்று ஒட்டகத்தை தேடிப் பார்க்கிறான்; அங்கு அந்த ஒட்டகம் இல்லை; இவர்கள் ஏதோ பொய் சொல்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டு, திரும்பி வந்து கேட்கிறான்; அவர்கள் பொய் சொல்லவில்லை என்கிறார்கள்;
“அப்படியென்றால் என் ஒட்டகத்தை நீங்கள்தான் திருடி எங்கோ ஒழித்து வைத்திருக்கிறீர்கள்; இல்லையென்றால், என் ஒட்டகத்தை பற்றிய எல்லா அடையாளங்களும் உங்களுக்கு எப்படி இவ்வளவு தெளிவாகத் தெரியும்?” என்று கோபமாகக் கேட்டு, அந்த நாட்டின் மன்னரிடம் சென்று, இந்த இளைஞர்கள் என் ஒட்டகத்தை திருடிக் கொண்டு என்னை ஏமாற்றுகின்றனர் என்று குற்றம் சுமத்துகிறான்;
மன்னர், இந்த இளைஞர்களை அழைத்து விசாரிக்கிறார்; எப்படி நீங்கள் கண்ணால் பார்க்காத ஒட்டகத்தின் அடையாங்கள் எல்லாம் உங்களுக்கு தெரிகிறது? என்று கேட்கிறார்:
அப்போது இளைஞர்கள் மூவரும் விளக்கம் அளிக்கிறார்கள்;
“மன்னரே! நாங்கள் மூவரும் வழியில் ஒட்டகத்தைப் பார்க்கவே இல்லை; ஆனால், ஒரு ஒட்டகத்தின் காலடி தடத்தைப் பார்த்தோம்; அதில் ஒரு காலடி சரியாக மிதிபடாமல் மண்ணில் இழுத்துக் கொண்டு சென்றுள்ளது; எனவே அந்த ஒட்டகத்தின் ஒரு  கால் நொண்டியாக இருக்கும்; சாலையின் ஒருபக்கத்தில் மட்டும் புற்கள் மேயப்பட்டிருக்கின்றன; மறுபக்கம் உள்ள புல் அப்படியே இருக்கிறது; எனவே அந்த ஒட்டகத்துக்கு ஒரு கண் தெரியாது; அப்படி அது புல்லை அசைபோட்டுத் தின்று கொண்டு போகும்போது ஒரு துணுக்கு மட்டும் தொடர்ந்து கீழே சிந்திக் கொண்டே சென்றுள்ளது; எனவே அந்த ஒட்டகத்துக்கு ஒரு பல் இல்லை என்றும் தெரிகிறது; ஒரு இடத்தில் அந்த ஒட்டகம் முட்டி போட்டு படுத்திருக்கிறது; அந்த இடத்தில் ஒட்டகத்திலிருந்து இறங்கிய ஒரு பெண்ணின் கால்தடம் மண்ணில் பதிந்துள்ளது; எனவே அதில் ஒரு பெண் பிரயாணம் செய்துள்ளாள்; அவள் பக்கத்தில் சென்று சிறுநீர் கழித்துள்ளார்; அது இன்னும் ஈரமாக உள்ளது; அதன் வாசனை அவள் கர்ப்பிணியாக உள்ளதை தெரிவிக்கும் வாசனை ஆகும்;” என்று விளக்கம் கூறினர்;
மன்னர், “அந்த ஒட்டகத்தில், வெண்ணையும் தேனும் உள்ள மூட்டைகள் உள்ளதாகச் சொன்னீர்களே; அது எப்படி உங்களுக்குத் தெரியும்” என்று கேட்டார்;
இளைஞர்கள், “மன்னரே! ஒட்டகம் சென்று பாதையில், ஒரு பக்கம் எறும்புகள் தொடர்ந்து ஊர்ந்து வந்துள்ளன; பொதுவாக வெண்ணைக்கு எறும்புகள் வரும்; அதுபோல, பாதையின் மறுபக்கம் ஈக்கள் ஊர்ந்து வந்துள்ளன; தேனுக்கு ஈக்கள் வரும்; எனவே அந்த ஒட்டகத்தில் வெண்ணையும், தேனும், ஒட்டகத்தின் ஒவ்வொரு பக்கமும் கட்டித் தொங்க விடப் பட்டிருக்கும் என்பது எங்களின் யூகம்” என்று பதில் சொன்னார்கள்;
இவர்களின் அறிவுக்கூர்மையைப் பாராட்டிய மன்னர், அவர்களை தனக்கு ஆலோசகர்களாக வைத்துக் கொண்டாராம் மன்னர்;
இந்தக் கதை பெர்ஷிய மொழியில் இருந்தது; அதிலிருந்து பிரென்ஞ் மொழிக்கு மொழி பெயர்க்கப் பட்டதாம்; அதிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப் பட்டதாம்; ஆங்கிலத்தில், ஒட்டகத்துக்குப் பதிலாக கோவேறு கழுதையை கதையில் சேர்த்துக் கொண்டனராம்;
அந்த கதையைப் படித்து, தன் நண்பருக்கு கடிதம் எழுதிய ஹொரேஜ் வால்போல் என்பவர் இந்த கதைகளில் வரும் அதிஷ்டத்தை இந்த புதிய வார்த்தையான செரின்டிபிட்டி Serendipity என்ற வார்த்தையை புதிதாக உபயோகித்துள்ளார்;
1754ல் இந்த வார்த்தை கண்டுபிடிக்கப்பட்டு உபயோகித்தில் உள்ளதாம்;
**




No comments:

Post a Comment