Monday, January 4, 2016

ரகுவம்சம்

ரகுவம்சம் 

இரகு வம்ச சரிதாமிர்தம் என்பது ரகு மகா ராஜாவின் மரபில் பிறந்த அரசர் சரிதமாகிய அமிர்தம் என விரித்துக் கூறப்படும்; ரகு என்பவன் திலீபன் என்பவனுக்கு புதல்வனாய் தன் மரபிலே பின் வருவோர் எல்லாம் தன் பெயரோடு விளங்க நின்ற தனி முதல்வன்; ரகு என்பது கலைக் கடலையும் பாகைக் கடலையும் கடக்கவல்லவன் என்னும் காரணம் பற்றி வந்த பெயர்;

தெட்ட மெய்த்தவப் பயச் செல்வற்கவ்வயின்
மட்டிலகலைக்கடறனையும் வாளமர்
முட்டிய பகையையு முடிவுகாண்பனென்
றிட்டன ரொரு பெயரி ரகுவென்னவே. -- இரகுவம்சம். 

வம்சம் என்றால் மரபு; சரிதம் என்றால் கதை; இரகுவை வான்மீகி ராமாயணம் ககுத்தன் மகன் என்று கூறும்; இந்த வான்மீகி ராமாயணமும் பிறவும் தத்திதப் பெயரால் வழங்கப்படும்; இராகவர் என்றால் இரகுவின் மரபில் பிறந்தோர்;

இரகுவின் மரபிலே பிறந்த அரசர் சரிதங்களை காளிதாச மகாகவி ஒரு காவியமாக அமைத்துப் பாடி இருக்கின்றார்; அதன் பெயர் இரகுவம்சம்; இந்த இரகுவம்சம் தமிழ் மொழியிலும் மொழிபெயர்த்து காவிய நடையாக பாடப்பட்டிருக்கிறது; அதனைப் பாடியவர் யாழ்பாணத்தில் அரசராய் இருந்த பரராச சேகர மகாராசாவின் மருகர் அரசகேசரி என்பவர்;

இரகு வம்சத்தில் திலீப மகாராஜன் புத்திரர் இன்றி குலகுருவாகிய வசிட்ட முனிவர் கூறியபடி காமதேனுவை வழிபட்டு இரகு என்னும் புத்திரனை பெற்று கொண்ட கதையும் இரகு என்பவன் யாகக் குதிரையை காவல் புரிகையில் வந்து கவர்ந்த இந்திரனோடு போராடி வென்ற கதையும் திக்குகளை வென்று பொரூளீட்டி விச்சுவசித்து என்னும் யாகம் செய்த கதையும் கௌற்ச முனிவர்க்கு பதினாலு கோடி பொன்கொடுத்த கதையும் அவன் மகன் அயன் என்பவன் விதர்ப்ப தேச அரசன் புதல்வி இந்துமதியை சுயம்வர சபையிற் போய் வரிக்கப் பஎற்று மணம்புணர்ந்த கதையும் அயன் மகனாகிய தசரதன் காட்டிற்கு போய் வேட்டையாடி முனிபுதல்வன் ஒருவனை கொன்று சாபம் பெற்ற கதையும் தசரதன் மகனாகிய இராமபிரான் விசுவாமித்திரரோடு சென்று தாடகையை கொன்ற கதையும், அகலிகை சாபம் தீர்ந்த கதையும், சீதையை விவாகம் செய்த கதையும், இராவணனைக் கொன்ற கதையும், குசன் கதையும், பிறவும் சுருக்கமும் பெருக்கமுமாக சொல்லப்பட்டுள்ளது.

இக்கதைகளில் கற்கிபுராணம், கூர்மபுராணம் முதலிய புராணங்களிலும் கூறப்பட்டிருக்கின்றன; இந்த ரகுவம்ச சரிதை வடமொழியில் எழுதப்பட்டது;
(Courtesy: A.Kumarasamy Pillai's Raghuvamsa Sarithamirtham)



Sunday, January 3, 2016

மண்டைக்கயிறு

மண்டைக்கயிறு
பலவகை சங்குகள் மலிந்துள்ள எமது சமுத்திரங்களில், சங்கு குளிக்கும் பொருட்டுக் கீழைக்கரை சோனகர் பலர், காலத்துக்குக் காலம் தீவுப் பகுதி மண்ணில் ஜாகை அடித்துத் தொழில் செய்து, திரும்பும் வழமை, தொன்று தொட்டே இருந்தது. இப்படித் தொழில் நிமித்தம் வந்த கீழைக் கரையாரிற் சிலர் நிரந்தரமாகவே இப்பகுதிகளில் தங்கி விட்டார்கள். இன்று நயினா தீவில் வாழும் முசுலிம்கள், புலம் பெயர்ந்து வந்து, தொழில் காரணமாகத் தரித்துள்ளவர்களின் சந்ததியினர் என்பர்.
நாலைந்து பாகத் தண்ணீரில் முக்குளித்துச்  சுழியோடிச் சங்கெடுத்து விற்றுப் பிழைக்கும் தொழில் அவர்களுடையது. நாலைந்து பாகம் ஆழமான கடலிற் சுழியோடும். சுழியோடி, அரையிற் கட்டிய கயிற்றின் தலைப்பைக் குல்லாவில் நிற்பவரிடம் கொடுத்துப் போவர் என்றும், கயிற்றைச் சுண்டும் அசைவு கண்டவுடன், மேலுள்ளவர் இழுக்கத்தவறினால், ஆள் "மவுத்" ஆகிவிடுவார் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். எம்மூரில், மச்சான் முறை உள்ளவரை "மண்டைக்கயிறு" என்று சொல்வதுண்டு. சுழியோடியின் கயிறு அவரது மனைவியின் சகோதரனிடம் கொடுக்கும் வழக்கத்தினால், மைத்துனனை மண்டைக்கயிறென்று அழைத்தனர் போலும்.
சமுத்திரத்தில் சங்கு குளிப்பவர்களின் நிலை இவ்வாறாக, எமதூர் சரவணையிலும், ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தைந்தாம் ஆண்டுகளின் முன், பலர் சங்கெடுத்தார்கள். சமுத்திரங்களில் சுழியோடி அல்ல, நிலத்தில் குழிதோண்டி.
(நன்றி:: தில்லைச் சிவனின் "அந்தக்காலத்துக் கதைகள்" என்ற தொகுப்பிலிருந்து ஒரு பகுதி இது).

**

வலம்புரி சங்கு

வலம்புரி சங்கு
பௌர்ணமி அமாவாசை இரவு வேளைகளில் தீவுப் பகுதியைச் சுற்றியுள்ள பெருஞ் சமுத்திரங்களில் இருந்து "ஓம்" எனப் பேரொலி எழுந்து ஒலிப்பதைச் சிலர் கேட்டிருப்பர். பலர், இவ்வொலி, கடல் அலை வீசும்போது உண்டாகும் அலையோசை என, அவதானிக்காதுமிருப்பர். ஓங்காரத் துவத்த தொனியில் கேட்கும் ஒலி சமுத்திரங்களின் முழக்கம் என எனது பாட்டனார் கூறுவார். சமுத்திரத்தின் மையத்தில் தோன்றி, வரவரக் கரைந்து, கரையோர மக்களின் செவியில் வண்டின் ஒலிபோல மெலிதாக இசைத்துக் கொண்டிருப்பதை, அவதானிப்போரால் கேட்க முடியும்.
ஊரி, ஊட்டி, சிப்பி, சங்கு முதலானவை ஒரே இன உயிரிகள். எமது "நாய்வெட்டி வாய்க்கால்" கரைகளில் ஊரிகள் பாடுவதை, சில வேளைகளில் அவதானிக்கலாம். இரவிலோ பகலிலோ அமைதியான ஒரு இடத்தில், ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு கேட்டால் ஒரு மெல்லிய நாதம் கேட்பதை உணர முடியும். இதனைச் சிலர் சுவர்க்கோழியின் ஓசை எனவும் கூறுவர். இவ்வோசைகளையும் "பாஞ்சசன்நியத்தின்" ஓங்காரத் தொனியையும் பிரித்து, இதோ பாஞ்சசன்நியம் என்று என் பாட்டனார் சொல்லுவார். ஆயின் அதை என்னால் கேட்க முடிவதில்லை.
ஆயிரம் சிப்பிகள் சூழ, ஒரு இடம்புரி சங்கும், ஆயிரம் இடம்புரி சூழ, ஒரு வலம்புரிசங்கும், ஆயிரம் வலம்புரி சூழ ஒரு சலஞ்சமும், ஆயிரம் சலஞ்சஞ்சூழ ஒரு பாஞ்சசன்நியமும் ஒரே கூட்டமாக வாழும் என்றும், பாஞ்சசன்நியம் ஊதும்போது, மற்றெல்லாச் சங்குகளும் சேர்ந்தொலிப்பதால், கடலுள் பேரொலி எழுமென்றும், அப்பேரொலிச் செறிவில் பாஞ்சசன்நியத்தின் ஒலி கெம்பீரமாய் கேட்கும் என்றும், எனது பாட்டனார் கூறுவார். அவரது அவதானிப்பு ஏதும் தவறாது. இப்படியான ஒரு பாஞ்சசன்நிய சங்கினையே பரமாத்மாவாகிய கண்ணபிரான் கையில் வைத்துள்ளார் என்று கூறுவர்.
(நன்றி:: தில்லை சிவனின் "அந்தக் காலத்துக் கதைகள்" என்ற தொகுப்பிலிருந்து ஒரு பகுதி இது)


தோம்புக் கதை

தோம்புக் கதை
சில முதலாளிகள் காசுக் கட்டுகளை எண்ணும்போது ஒன்றினை "லாபம்" என்று ஒதுக்கி விடுகிறார்கள். பத்து ரூபா கட்டில், முதற் பத்தும், நூறு ரூபாவானால் முதல் நூறும், ஆயிரங்களில் முதலாயிரமும் லாபங்கள். அவரவர் தரத்துக்கு ஏற்ப புளக்கத்தில் இல்லாமல் முடக்கப் படுகின்றனவா என நினைத்ததுண்டு.
ஒரு நாற்பது , நாற்பத்தைந்து ஆண்டுகட்கு முன், செம்பு லோகத்தினாலான, தடித்த ஒரு சதம், அரைச் சதம், காற்சதக் குற்றிகளும் அதன்மேல் வெண்பொன்னாலான ஐந்து, பத்து, இருபத்தைந்து, ஐம்பது சத நாணயங்களும், முழு ஒரு ரூபாக் குற்றிகளும் புளக்கத்தில் இருந்தன. ஒரு வல்லுவம் (சாசுப்பை) நிறையச் சில சில்லறைகள் போதும். அக்கால வழக்கில் என் பாட்டனார் ஒன்றரைச் சதங்களை "ஒரு துட்டு" என்றும், ஆறு சதங்களை "ஒரு பணம்" என்றும் ஐம்பது சதக் குற்றியை "சில்லிங்" என்றும், பத்து ரூபாவை "ஒரு பவுன்" என்றும் கூறுவார். உண்மையில் அன்று ஒரு தங்கப் பவுன் பத்து ரூபா பெறுமதியானதென்றும் அறிந்திருந்தேன்.
எங்களுக்கிருக்கும் ஒரு காணியை இரண்டு இறசாலுக்குத் தனது முன்னோர் வாங்கியதாக எனது பாட்டனார் கூறினார். அந்த இறசாலின் பெறுமதியை இன்றைய ரூபாவில் சொல்ல, அவர் அறிந்திருக்கவில்லை. உலாந்தாக்காரர் என்ற ஒல்லாந்தர்கள், நிலங்களை அளந்து விற்று, இறசால் கணக்கில் பணத்தினைப் பெற்றுக் கொண்டு நொத்தரிசு (Notary) மூலம் உறுதி முடித்துக் கொடுத்துள்ளார்கள். இவ்வுறுதிகளைத் தோம்பு என்று கூறுகிறார்கள். இவ்வாறே பழைய கதைகளைச் சொல்லும் போது, தோம்புக் கதைகள் என்றும் சொல்வார். இவை டச்சுக் காலக் கதைகளாக இருக்குமோ என்னவோ, எனது பாட்டனார் சொன்ன, ஒரு புத்தியுள்ள கிழவனின் அந்திம காலம் பற்றிய கதை இது.
வயோதிகம் மிகக் கொடுமையானது. "இந்தக் கிழடுகளைக் கட்டிக் கொண்டு அழ யாரால் முடியும், நேரகாலத்துக்குப் போகாமல் கிடக்குதுகளே" என்று வருத்தப்பட்டு கொள்வாரும் உண்டு.
பாட்டனுக்கு கஞ்சி கொடுக்கும் சிரட்டையைக் காணாது தேடியபோது, "உங்களுக்குக் கஞ்சிதர எனக்குத் தேவைப்படும், அதனால் அந்த சிரட்டையை நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்" என்று மகன் சொன்னதை நினைப்பவர்களும் உண்டு.
பிள்ளைகளின் நினைப்பையும் நிலையையும் உணர்ந்து, "கண் கெட்ட கடவுள் என்னைக் கொண்டு போறார் இல்லையே" என்று உறவோடிரங்கும் வயோதிகர்கள் பலர்.
இளமையோடு இருக்கும்போதே இறந்துவிட்டால், "ஐயோ நாம் என்ன செய்வோம்" என்றே அழும் மனைவி மக்கள், தாமும் வயது சென்று கிழடான பின், "ஏன் இன்னமும் கிடக்குது" என்று அலுத்துக் கொள்வார்கள்.
கைப்பொருள், சம்பாத்தியம் வைத்திருக்கும் வயோதிகப் பெற்றோரைப் பராமரிக்க, "நான் முந்தி, நான் முந்தி" என்று முந்திக் கொண்டு சேவை செய்யப் பிள்ளைகள் வருவர். இன்றும் அன்றும் எமது சமுதாய நிலை இது. ஒன்று இரண்டு புறநடை இருக்கலாம்.
"அன்னையும் பிதாவும் பின்னடிக் கிடைஞ்சல்" என்ற புதுமொழி பகடியாகக் கூறப்பட்டாலும், சிந்தனைக்குரியதே. நாலைந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்த தந்தை தாயாரைப் பார்ப்பது யார் என்ற தகராறு குடும்ப உறவுகளையே பிரித்துப் போட்ட சமாச்சாரங்கள் பல. இவற்றினைத் தெரிந்து கொண்ட அனுபவஸ்தர்களான சிலர், எய்ப்பினில் வைப்பாக பணச் சேமிப்புகளைத் தமது கையிலேயே வைத்திருப்பர். அப்படி இல்லாத ஏழைக் கிழவர்கள் தமது அடிப்படைத் தேவைகட்கே அல்லற்படுவது உலக அனுபவம். இத்தகையவர்கள் தமது இறுதிக் காலத்தில் அனுபவித்த சோகங்களை அறிந்த எனது பாட்டனார் சொன்ன கதை வருகிறது.
ஒரு கிழவன், தனது ஐந்து பிள்ளைகளில், ஒருவரோடும் இன்றித் தானும் தன் பாடுமாய் ஒரு குடிலில் இருந்தார். உழைத்து வாழக்கூடிய தெம்பு இருக்கும்போது மற்றவர்கட்கு இடைஞ்சல் தரக்கூடாது என்ற நோக்கமாகவும் இருக்கலாம்.
பனாட்டுப் பினைதல், கடகம் பெட்டி இழைத்தல், ஈர்வாணிக் கொடி, உறி என்பன பின்னுதல், குத்துக் கண்ணி, கந்துவான், பாதக்கண்ணி நாற்கயிறு திரித்தல் போன்றன அவரின் தொழில்கள். இத்தொழிலில் இவர் நிபுணருங்கூட. இத்தொழிகளாற் கிடைக்கும் பண்ட மாற்றுத் தானியங்களையும் சொற்ப கட்டுக்களையும் கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டி வந்தார்.
இல்லாத பொல்லாத காலத்தில் காடும் கடலுங் கை கொடுக்க வாழ்க்கை சுகமாக நடந்தது.
சிறிது காலத்தில், அவர் நோய்வாய் பட்டுப் போனார். வயோதிக நோய். தொழில் செய்ய முடியவில்லை. வெளியில் சென்று வரவும் முடியவில்லை. ஐந்து பிள்ளைகள் குடும்பங்களுடன் ஒரே வளாகத்தில் பக்கம் பக்கமாக இருந்தும், கிழவரைக் கவனிப்பதில்லை. ஏனோ தானோ என்று அலுத்துப் போன நிலையில் எப்போதாவது வருவார்கள், போவார்கள்.
ஒருநாள், மூத்தமகன் வந்து எட்டிப் பார்த்தார். அவரைக் கண்டதும், மெல்லவே தனது படுக்கையில் கிடந்து எழுந்திருத்த கிழவர், தலையனைபோல் ஓலையால் இழைக்கப் பெற்றிருந்த ஒன்றைத் தலையின் கீழே இருந்து எடுத்து, மடியில் வைத்துக் கொண்டார். கைகள் மெல்லவே தலையனையில் தாளம் போட மகனைப் பார்த்துச் சொன்னார்.
"எனது நிலைமை சரியில்லை. இன்றோ நாளையோ சில நாட்களோ வாரங்களோ தெரியாது மகனே! எனது "சாவீட்டை" எளிய முறையில் நடத்திவிடுங்கள். பெற்று வளர்த்தது என் கடமை என்று அதை ஏதோ என் வசதிக்கேற்பச் செய்தேன். உங்கள் ஐந்து பேரையும் வளர்த்தெடுக்க நான் பட்ட பாட்டை உங்கள் ஆத்தாள் இருந்தாள் சொல்வாள், அந்த இலட்சுமி இந்தப் பாடுகளைக் காணமலே கண்மூடிவிட்டாள், புண்ணியவதி...." "இனி உங்கள் கடமை, ஊரார் நகைக்காமல், எல்லோரும் ஒற்றுமையாக நின்று சிக்கனமாக நடத்தி விடுங்கள்" என்று கூறினார்.
மகன் மௌனமாகவே இருந்தார். தகப்பனின் நிலை கவலை கொடுத்தது, அவர் மடி மீது இருந்த தலையனையிலும் கருத்துச் சென்றது. கிழவன் கொஞ்சமாகச் சேர்த்து வைத்த சில்லறைகளாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்பினார். ஆனால் வாய் திறந்து அதைப் பற்றி விசாரிக்காமலேயே வெளியே சென்றார்.
சிறிது நேரஞ் செல்ல, மூத்தவனின் மனைவி உணவுப் பெட்டியுடன் கிழவனாரின் கொட்டிலுள் நுழைந்தாள். இப்போது போல அக்காலத்தில் கடுதாசுப் பைகள் கிடையாது. உணவுப் பெட்டியைக் கிழவனிடம் கொடுத்து விட்டுத் திரும்பியவள், தலையனை உமலையும் கடைக்கண்ணாற் கண்டு கொண்டே சென்றாள்.
இவர்கள் இப்படியாகத் தொடர்புகள் வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, ஏணைய மக்கள் மருமக்கள் தாமும் ஏதோ விசேடம் அறிவார் போலப் போக வரத் தொடங்கினர். குசலம் விசாரித்தார்கள். எல்லோருக்கும் தனது அந்திம காலத்தை வெளிப்படுத்திக் கொண்ட கிழவனார், மடியிலிருக்கும் தலையனையில் தாளம் போட மறக்கவில்லை. கேள்விகளுக்குக் கூறும் பதிலோடு பதிலாக, தலையனையில், தாளம் போட்டபடி, அதனுள் இருந்து "கல் கல்" என ஒலி எழ, அதற்கு ஒத்திசைவாகக்
"கேட்டுக்க பொக்கணம் (பொட்டலம்)
கேட்டுக்க பொக்கணம்,
சோறும் வந்தது கேட்டுக்க பொக்கணம்,
கறியும் வந்தது கேட்டுக்க பொக்கணம்,
மீனும் வேணும் கேட்டுக்க பொக்கணம்,
மேலும் வேணும் கேட்டுக்க பொக்கணம்"
என்ற பாட்டும் வரும்.
மக்கள் மருமக்கள், 'கிழவர் எங்களை வாயாற்கேளாது, பொக்கணத்திடம் அல்லவா கேட்கிறார்.' பொக்கணத்துள் ஏதோ பெருஞ் சங்கதி இருக்குது போல என்று நினைத்து கொண்டார்கள். கிழவர் பொக்கணத்திடம் கேட்பதனைப் பிள்ளைகள் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் பொக்கணத்தையும் ஒரு கண் பார்த்து விட்டுத்தான் செல்வார்கள். இவற்றை அவதானித்த கிழவருக்கு உள்ளூர மகிழ்ச்சி. பொக்கணத்தைப் பற்றிய நம்பிக்கை வலுத்த வேளையில் அதன் பாதுகாப்புப் பற்றிய கவலையும் வலுத்தது. அது களவு போக முடியவே முடியாது, ஐயிரண்டு பத்துப்பேர் ஒருவர் அறியாமல் ஒருவர் அதற்குக் காவல். இவர்களை மிஞ்சி எவன் வரப் போறான்? என்ற நினைவுடனே இருந்த கிழவர், ஒருநாள் திடீரென்று மண்டையைப் போட்டுவிட்டார்.
ஏதோ ஒரு அரவங்கேட்டு ஒருவர் பின் ஒருவராக ஓடிவந்த பிள்ளைகள், நிலைமையைப் புரிந்து கொண்டு முதலிற் பார்த்தது தலையனையைத் தான். ஒருவரும் அதனைத் தட்டிப் பார்க்காது விடவில்லை. அதன் திண்மையும் 'கல்' என்ற ஒலியும் எல்லார் உள்ளத்திலும் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. முதல் வேளையாகத் தலையனையை ஒரு பாயாற் சுற்றி மறைத்துக் கட்டி, வீட்டு முகட்டுக் கூரையில் தொங்க விட்டார்கள். இதன் பின்னரே இறந்து போன கிழவனைத் துடைத்து ஒரு பாயில் வளர்த்தி, ஊர் உறவிற்கு அறிவிக்கவும் செலவைப் பற்றி சிந்திக்கவும் தொடங்கினார்கள்.
சாவீட்டு நிகழ்வுகளை முதன் மகன் ஒழுங்குபடுத்தினார். தந்தையார் தனக்குச் சொன்ன புத்திமதிகளை இம்மியும் பிசகாது அவர் சொற்படி நிறைவேற்றுவேன் என்று விடாப் பிடியாய் நின்றதால் சாவீட்டுச் செலவு ஒரு நூறினைத் தாண்டவில்லை.
இந்தச் செலவினைக் கேட்கும்போது இன்றைய சாவீட்டை ஒப்பிட்டால் மண்ணாங்கட்டிக்கும் மலைக்கும் உள்ள உயரம். இரண்டும் சாவீடுகள் தான். இறந்த உயிர்கள் திரும்பப் பிறக்காமல் விடப்போவதில்லை. தமது பெற்றோரை உயர் பதவிகளில் பணத்தினால் இருத்தலாம் என நினைக்கிறார்களோ இல்லையோ, தமது பெருமையைக் காட்டச் செய்யும் செலவினையும், குறைத்துக் கொண்டால், வசதியற்றோர்க்கு உதவாவிடினும் வழிகாட்டுதலாக அமையுமே என்ற ஆதாங்கத்தோடு தொடர்ந்து கதையைக் கேட்டேன்.
ஒரு சாப்பறையும், தம்பட்டமும் முழங்க ஆட்பேர்கள் சேர்ந்து விட்டார்கள், தடி வெட்டுபவன் தடி வெட்ட, பாடை கட்டுபவன் பாடை கட்ட, கட்டாடி பாடையைச் சுற்றிச் சேலை கட்டி முடிஞ்சுது. நாவிதன் பனணாங்கு பின்னியாச்சு, நாலு மூலைக்கு நாலு வாழைக் குட்டிகளைக் கட்ட வேண்டியதுதான். பாடை தயாராச்சு.
அடுத்தென்ன? கட்டைதறிச்சு வண்டியில் சுடுகாடு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வீட்டில் பிரதேதத்தை அரப்பெண்ணெய் வைத்து முழுக்காட்டிப் புத்தாடை புனைந்து, திருநீறு பூசிச் சந்தனம் குங்கும திலகமிட்டு, ஒரு மரக்கட்டிலில் தெற்கே தலை வைத்து வளர்த்தியாச்சு. நாலு தேவாரம் தெரிந்தோர் தேவாரம் பாடக் கற்பூர தீபப்புகையில் சாம்பிராணிப் புகையும் சந்தன வாசமும் பரிமளிக்க வாய்க்கரிசியிட்டு வழியனுப்புவோர் கட்டி ஒப்பாரி வைக்கப் பிரேதம் பவனியாகச் சுடுகாடு சென்றடையும்.
பிரேதத்தைக் கட்டையில் வைத்து, எழும்பி நிமிராதவாறு பாரமான நெஞ்சாங் கட்டையைப் பொருத்தி, குடம் உடைத்துக் கொள்ளி வைத்தவர் திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து சேர வேண்டியதுதான். சாவீடு முடிந்தது.
அடுத்த மூன்றாம் நாள் காடாத்து. நாவிதர் பிரதான பாத்திரம் வகிக்க, மூன்று நான்கு பேரோடு காரியம் சரி. அடுத்துள்ள எட்டுச் சிலவு. ஏழுக்கும் ஆறுக்கும் ஐந்துக்கும் கூட நடத்தலாம். நடத்தும் தினத்தைக் குறிப்பிட்டு உற்றார் உறவினருக்குத் தெரிவித்து விட்டுவந்து பந்தலுள் இரண்டு மூன்று கடகங்களை வைப்பர். வீடுகளில் அரிசி, காய்பிஞ்சு, தேங்காய், வெற்றிலை, பாக்கு என்பனவும், குறைந்தது ஆளுக்கு ஒரு பணம் (ஆறு சதம்) வீதம் காசும் வந்துசேரும்.
அரிசி தந்த ஒவ்வொரு வீட்டினருக்கும் அன்று சாப்பாடு. இறந்தவர் விரும்பி உண்ட உணவுகளனைத்தும் படையல் இட்டுக் குடிப்பறையன், குடிமை வண்ணான், குடிமை நாவிதன், என்பவர்கட்குக் கொடுப்பதுடன் அன்றுதான் சாவீட்டு வரவு செலவுகளைப் பார்த்து முடிப்பது வழக்கம்.
இவ்வாற்றே எல்லாவற்றையும் நிறைவேற்றியபின், சகோதரர் அனைவரும் சேர்ந்திருந்த சபையில், முகட்டில் தொங்கிய தலையனை அவிழ்க்கப் பெற்றது. எல்லா விழிகளும் பொட்டணத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு நிற்க, பொட்டணம் ஒரு சத்தகத்தால் கீறிக் கொட்டப்பட்டது. எல்லோர் மனதிலும் தோன்றி எழுந்த ஆவலின் பிரதிபலிப்பைக் கலகலவென்று கொட்டிய சிப்பி சோக்கிக் குவியலைக் கண்டு, "அட அண்ண வெறுச் சிப்பியடா" என்று எல்லோரும் அலுத்துக் கொண்ட போதிலும், கிழவரின் தந்திரத்தை எண்ணித் தம்முள் வெட்கமுங் கொண்டனர்" என்றார்.
இந்த கதையை கேட்டதும், "பாட்டா, நீங்கள் ஏமாற்ற மாட்டீர்கள் அல்லவா" என்று கேட்டுச் சிரித்தபோது, எனது தாயார், 'அவர்தான் ஒவ்வொரு காணியாய் விற்றுக் கொண்டு வாராறே" என்றார். எப்படி கவலை என்று பாருங்கள்.

(நன்றி:: தில்லை சிவன் அவர்களின் "அந்தக் கால கதைகள்" என்ற கதை தொகுப்பிலிருந்து ஒரு பகுதி.)
**


குடிகாரச் சின்னத்தம்பி

குடிகாரச் சின்னத்தம்பி
நான் சிறுவயதில் பார்த்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறேன். எங்கள் கிராம வாழ்க்கையும் அதில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்களும் என் நண்பர்களுக்கு வியப்பாக இருக்கிறது.
"எனக்கு அப்ப அஞ்சு, ஆறு வயது இருக்கும். 'குடிகாரச் சின்னத்தம்பி' என்று தான் அவனுக்குப் பேர்; எங்களுக்குப் பயம். வீட்டிலே சோறு தீத்தும் போதுகூட 'குடிகாரச் சின்னதம்பி' என்று சொல்லித்தான் தீத்துவார்கள்."
"ஒழுங்கையின் எத்தத்தில் அவன் வரும் போதே நாங்கள் உள்ளே ஓடி விடுவோம். குடித்துவிட்டு ஆடிக் கொண்டே வருவான். வேட்டி அவிழ்ந்து விடும். வேட்டியை ஒரு கையால் இழுத்தபடியே வருவான் சின்னத்தம்பி."
"சும்மா வரமாட்டான். உரத்த குரலில் திட்டிக் கொண்டுதான் வருவான். அவனுடைய 'மூடைப்' பொறுத்தது. ஒரு நாளைக்கு முன்வீட்டு முருகேசுவைப் பேசுவான். இந்த வேலிக்கும் அந்த வேலிக்குமாக 'உலாஞ்சி உலாஞ்சி' தான் வருவான்.  இன்னொரு நாளைக்கு நடராசாவை திட்டியபடியே வருவான். ஒரு நாளைக்கு அவன் பெண்சாதி; மற்றோரு நாளைக்கு அவன் தாயார். இப்படி."
எங்கள் ஊர் பெண்டுகள் எல்லாம் அவன் இன்றைக்கு ஆரை வைகிறான் என்று வேலி வழியாலும் பொட்டு வழியாலும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். மற்ற வீட்டு ரகசியங்களை அவன் கொட்டக் கொட்டக் கேட்டுக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஆர்வம்."
எங்கள் வீடு அவன் வீட்டுக்குப் பக்கத்தில்தான். ஆனால் அவன் வீட்டுப் படலை அடுத்த ஒழுங்கை வழியாகத்தான் இருக்கும். அம்மா அவன் மனைவியை 'ராசக்கா' என்று தான் கூப்பிடுவாள். எங்கள் வீட்டுக் குந்தில் ஏறி நின்று பார்த்தால் அவர்கள் வீட்டுக் கூரை தெரியும்."
"எங்கள் வீட்டுக்கு ஒரு பாட்டு வாத்தியார் வருவார். அவர், அக்காவுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பார். ஹார்மோனியம் வாசித்தபடியே அக்கா அவர் சொல்லிக் கொடுப்பதைத் திருப்பிப் பாடுவாள். அக்காவுக்கு அப்ப பதினாறு, பதினேழு வயதிருக்கும்."
"கனக சபா... பதி..... தரி.....சனம்....."
ஒருநாள், "கண்டால்..... கலி.... தீ.....ரும்.... ஆ....."
"அக்கா இந்தப் பாட்டை பாடுகிறாள். என் தகப்பனார் மரக் கட்டிலில் சப்பணம் கட்டிக் கொண்டு இருந்து ரசிக்கிறார்."
"மூன்று வீடு தள்ளி 'கனகசபாபதி, கனகசபாபதி' என்று ஒரு இளம் பொடியன்  சைக்கிளுக்குப் பின்னால் உமலைக் கட்டியபடி அடிக்கடி அந்தப் பக்கம் ஓடிக் கொண்டிருப்பதுதான் அவன் வேலை",
"ஒருநாள் இந்தக் குடிகாரன், வழக்கம்போல வேட்டியை இழுத்தபடி போறான். சத்தம் போட்டுக் கத்தியபடியே. எல்லாப் பெண்டுகளும் தங்கள், தங்கள் வேலைகளை விட்டுவிட்டு, காது கொடுத்துக் கேட்டபடியே இருக்கிறார்கள். அன்றைக்கு எங்களுடைய முறைபோலும். குடிகாரன் சொல்கிறான்.
"அது ஆரடி கனகசபாபதி? இது என்ன கூத்து? இதைக் கேட்பாரில்லையா?"
"அதற்குபிறகு, அக்கா அந்தப் பாட்டைப் பாடுவதையே நிறுத்தி விட்டாள். என் தகப்பனார் அப்படி உத்தரவு போட்டு விட்டார். கொஞ்ச நாள் பிறகு பாட்டுக்காரரையும் வேண்டாமென்று விட்டார்.".......
"என்ன இழவுக்கு இஞ்ச குடிச்சுப் போட்டு வாறாய்?" 
"ஏண்டி, உன்ரை கொப்பற்ற சீதனத்தில் குடிக்கிறேனா? இது அவன்.
"மூன்று நாள் பிள்ளைகளுக்கு சாப்பாடில்லை. நாள் மாறி நாள் இப்பிடி வாறியே? உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?"
"எந்தப் பெண்ணும் கேட்க வேண்டிய கேள்விதான்."
இப்ப அடி விழும் சத்தம். பிறகு ராசக்கா விளக்கு மாத்தைப் பிடுங்கி, 'ரப்பிலே' செருகிவிட்டாள். இவனுக்கு அது எட்டவில்லை. எம்பி எம்பிப் பார்த்தான்.
"எடுத்துக் குடடி, எடுத்துக் குடடி."
"காலால் அவளை உதைக்கிறான்."
"மனிதனுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? ராசக்கா அறைக்குள் புகுந்து கதவைப் படார் என்று சாத்தும் சத்தம். கொஞ்சம் நேரம் அமைதி, ஊர் முழுக்க மூச்சுவிடாமல் காதைக் கூர்மையாக்கி வைத்துக் கொண்டிருக்கிறது.
"அம்மா தான் முதலில் பார்த்தாள். வீட்டுக் கூரை 'டங்' என்று ஒரு கணம் ஆடியதை. 'ஐயோ, இஞ்சருங்கோ, என்னென்டு போய் பாருங்கோ" என்று கத்தினாள் அம்மா.
"எல்லோரும் வேலியைப் பாய்ந்தும், கிணத்தை தாண்டியும் வந்து விட்டார்கள். கதவு பூட்டியிருக்கிறது. சின்னராசு தான் உலக்கையால் கதவை உடைத்து முதலில் உள்ளுக்கு போறான். பிறகு அம்மா..."
"நாக்கு வெளியே நீண்டுவிட்டது. ராசக்கா முகட்டில் இருந்து ஒரு சேலையில் தொங்கிக் கொண்டிருந்தாள். எல்லோருமாகப் பிடித்து கீழே இறக்கி தண்ணி தெளிக்கிறார்கள். ஒரு கணம் பிந்தியிருந்தால் மரணம் தான்."
சின்னத்தம்பிக்கு வெறி முறிந்து விட்டது. தலையில் கைவத்தபடி ஒரு மூலையில் இருக்கிறான். பிள்ளைகள் கத்துகத்தென்று கத்துகிறார்கள்.
கொக்குவில் சனம் எல்லாம் வீட்டுக்குள்; விதானையாரும் வந்து விட்டார்.
"ஐயா, ஐயா! என்னைக் கொல்லுங்கோ! இந்தச் சனியனை இனி நான் தொட மாட்டேன். இது சத்தியம்" என்று கத்துகிறான் சின்னத்தம்பி. பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
"முதல் நாள், வேட்டியை கட்டியபடியே கீழே பார்த்தபடி வேலையிலிருந்து திரும்பினான் சின்னத்தம்பி. இரண்டாம் நாளும் அப்படியே. மூன்றாம் நாளும் அதேதான்.
அம்மா சொன்னாள், "சின்னத்தம்பி திருந்திவிட்டான்" என்று.
நாலாம் நாள் வேட்டி அவிழ, அவிழ அவன் கத்திக் கொண்டே வாறான்.
"விதானையார் என்ன எனக்குச் சொல்லுறது? அவள் என்ரை பெண்சாதி. அவர் ஆர், என்னைக் கேட்க?"

(நன்றி: எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் திகடசக்கரம் கதைத் தொகுப்பில் "குங்கிலியக் கலய நாயனார்" கதையில் ஒரு பகுதி இது).

சிகரெட் பழக்கம்

"இந்த பழக்கத்தில் இருந்து மீளவே முடியாதா?"
ஹூமெலின் சொன்னார், "சில பேரால் முடிகிறது. நான் ஒரு நாளைக்கு நூறு சிகரெட் வரை குடித்திருக்கிறேன். கல்லூரியில் தான் எனக்கு இந்தப் பழக்கம் முதலில் ஏற்பட்டது. இரவிரவாக இருந்து ஆராய்ச்சிக்கு தயார் பண்ண வேண்டும். சிகரெட் இதற்கு உறுதுணையாக இருந்தது. என் விரல் நகங்கள் எல்லாம் மஞ்சள். உதடுகள் கறுத்து இருக்கும். ஐந்து நிமிடங்களில் இன்னொரு சிகரெட் பத்தாவிட்டால் கைகள் நடுங்கத் தொடங்கிவிடும்."
"நான் தீக்குச்சியினால்தான்  சிகரெட் பற்ற வைப்பேன். முதல் உரசலில் அதைப் பற்ற வைக்கும்போது தீக்குச்சி மருந்துடன் சேர்ந்து ஒரு சுவை வரும். அது மகத்தானது. என் இன்பம் எல்லாம் அந்த முதல் இழுப்பில்தான். எத்தனையோ முறை முயன்றும் இந்தப் பழக்கத்தை உதற முடியவில்லை."
"ஒரு கோடை விடுமுறைக்காக பெற்றோரிடம் போய்க் கொண்டிருந்தேன். நீண்ட ரயில் பிரயாணம். டொரென்றோவில் இருந்து வுட்ஸ்ரொக் வரை."
"என்ன தோன்றியதோ, திடீரென்று என் கையிலிருந்த கடைசி சிகரெட் பெட்டியை ஜன்னல் வழியே விட்டெறிந்தேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதன்பின் நான் அதைத் தொடவே இல்லை. நான் பாக்கியசாலி."
"அதற்குப்பிறகு சிகரெட் குடிக்க வேண்டும் என்ற உத்வேகம் எப்பவாவது வந்ததா?"
"நான் அதை மாற்ற வேறு சில பழக்கங்களை வரவழைத்துக் கொண்டேன், சூயிங்கம் சாப்பிடுவது அதில் ஒன்று, இப்ப 17 வருடங்கள் ஆகிறது. இன்னும் எனக்கு அந்தப் பயம் முற்றிலும் போகவில்லை. எங்கே, இன்னொரு முறை திரும்பவும் தொற்றி விடுமோ? என்று பயந்தபடியே இருக்கிறேன்".
(நன்றி: எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் "திகடசக்கரம்" கதைத் தொகுப்பில் "குங்கிலியக் கலய நாயனார்" கதையில் ஒரு பகுதி இது)

 **

தோசை

தோசை பற்றிய வர்ணனை
பார்வதி என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவளுடைய தோசைதான். தோசை என்றால் 'காம்பஸ்' வைத்து வட்டம் அடித்தது போல இருக்கும். அந்த மணம் நாலு வீடு தள்ளி மணக்கும். ஆட்களை சுண்டி இழுக்கும்.
எங்கள் வீட்டிலிருந்து மூன்றாவது வீடுதான் பார்வதி வீடு. விடியற்காலை பல பலவென்று விடியும் போது கொழும்பு ரயில் வந்து சேரும். அதுதான் பார்வதி தோசை சுடும் மும்முரமான நேரம்.முதலில் தோசை மாவை அகப்பையில் எடுத்து தோசைக் கல்லில் ஊற்றுவாள். அதுவே ஒரு தனி அழகு. அது 'உஸ்' என்று சொல்லி வைத்தபடி அப்படியே வட்டமாக உருவெடுக்கும். கொஞ்சம் பொறுத்து தோசைக் கரண்டியால், அது பாதி காயும் போதே, கீழே கொடுத்து 'தெம்மி' மற்ற பக்கம் பிரட்டுவாள். அது படக்கென்று விழும். பிறகு அவதானித்து பொன்னிறமாக அது மாறும் போது எடுத்து ஓலைப் பெட்டியில் வைப்பாள்; அல்லது நீட்டிக் கொண்டிருக்கும் சில பேருடைய தட்டிலே போடுவாள்.
தோசை அப்ப ஆவி பறந்தபடி இருக்கும். எடுத்து நேராகப் பார்த்தால் ஊசி ஓட்டைகள் ஒரு நூறாவது பார்க்கலாம். எல்லா தோசையும் அதே மாதிரிதான் அச்சில் வார்த்தது போல வரும். அதிலே ஒரு 'விள்ளல்' எடுத்து வாயில் போட்டால் அது மெத்தென்று புளிப்பு கலந்த ஒரு ருசியாக மாறும்; தேவாமிர்தமாக இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கரைந்து விடும். சாதாரணமான தோசை மாவுக்கு இப்படி ஒரு மெதுமையையும், மணத்தையும், ருசியையும் சேர்ப்பதென்றால் அது ஒரு பரம ரகஸ்யம் தான். என்னுடைய அம்மாவும், மற்ற ஊர் பெண்டுகளும் அந்த ரகஸ்யத்தை அறிய எவ்வளவோ முயற்சித்தார்கள், ஆனால் பலிக்கவில்லை.
இந்த தோசையை அப்படியே சாப்பிடலாம். அதுக்குச் சேர்த்துக் கொள்ள ஒன்றுமே தேவையில்லைதான். ஆனால் பார்வதி அதற்கென்று ஒரு 'சம்பல்' செய்வாள். சம்பல் என்றால் சின்ன வெங்காயம், சிவப்பு செத்தல் மிளகாய், தேங்காய்ப்பூ, கொஞ்சம் உப்பு, ஒரு சொட்டுப் புளி என்று எல்லாம் போட்டு செய்ததுதான். இதற்கு கறிவேப்பிலையும் சேர்த்து ஒரு திவ்யமான மணம் வரும். சம்பலை கொஞ்சம் தொட்டு தோசையையும் விண்டு வாயில் போட்டால் அதுவே ஒரு தனி மயக்கம் தான்.
சம்பல் இடிக்கும்போது பார்வதி யாருடனும் கதைக்க மாட்டாள். 'நாணமாம்'. முணு முணுவென்று வாய்க்குள்ளே ஏதோ சொல்லுவாள்; மந்திரமோ என்னவோ......
(நன்றி; எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் "திகடசக்கரம்" என்று கதைத் தொகுப்பில் "பார்வதி" என்ற சிறு கதையில் ஒரு பகுதி இது)
 **

Saturday, January 2, 2016

படிக்கிறது திருவாசகம், இடிக்கிறது சிவன்கோயில்

காளமேகப் புலவர்
திருக்குடந்தையில் பிறந்து வளர்ந்த வடமானாகிய பிராணன் ஒருவன், ஸ்ரீரங்கத்தில் பெருமாள் கோயில் சுயம்பாகியாகிப் பரிசாரகம் செய்து கொண்டிருக்கையில், திருவானைக்காவில் உள்ள சம்புகேஸ்வரர் கோயில் தாசி ஒருத்தி மோகனாங்கி என்னும் பெயருடையவள், அதிக அழகும் ஆடல் பாடல்களிலே திறமையும் உடையவளாய் இருந்ததினால், அவன் அவளுடைய மோக வலையில் சிக்கித் தனக்கு அவள் இணங்கும் பொருட்டு, பெருமாள் பிரசாதம் முதலானவைகளை அவளுக்குக் கொண்டுபோய் கொடுத்து அவளோடு சம்பந்தப்படிருந்தான்.
அப்படி இருக்கும் அளவில், மார்கழி மாசத்தில் சம்புகேஸ்வரர் சந்நிதியில், மோகனாங்கிக்குத் திருவெம்பாவை பாடும் முறை வந்தபொழுது, "உன்கையில் பிள்ளை" என்னும் பாடலைப் பாடுகையில் அதில் "என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க" என்ற தொடரை அவள் வாயினால் சொல்லித் தலைகுனிந்து கொண்டதைப் பார்த்து அவளுடனே கூடவிருந்த மற்றைய தாசிகள் எல்லாம் புன்சிரிப்புக் கொண்டு, தங்களுக்குளே இவள் சிவன் கோயில் தாசியாய் இருந்தும், பெருமாள் கோயில் சுயம்பாகியுடனே சம்மந்தப்பட்டிருக்கிறாளே! இஃதென்ன! "படிக்கிறது திருவாசகம், இடிக்கிறது சிவன்கோயில்" என்பதாக வாயினால் பேசுகிறதொன்று, நடக்கிறது வேறொன்றாய் இருக்கிறதே என்று அவளைப் பரிகாசம் பண்ணினார்கள். அது அவளுக்கு மார்பிலே தைத்து முதுகிலே உருவினது போல வருத்தத்தை விளைவித்ததனால், அன்றிரவு அந்த வைஷ்ணவன் வரும் தருணத்திலே தெருக்கதவைச் சாத்தி உள்ளே வரவேண்டாம் என்று தடுக்க, அவன் வாயிலுக்கு வெளியே நின்றபடி என்ன நிமித்தத்தால் இன்றைக்கு என்னைத் தடை செய்கிறாளென, மோகனாங்கி,  "நீ விஷ்ணு அடியான், நான் சிவடியாள், ஆகையால் உன் சம்பந்தம் எனக்கு தகாதென கூறினாள், அவன், அந்தாமரையன்னமே நின்னையானகன்றுற்றுவனே"  என்றபடி உன்னை நான் ஒரு பொழுதாயினும் விட்டுப் பிரிந்து சகிப்பேனோ? சகிக்க மாட்டேனாதலால், உன் தலை வாயிலிலேயே  நான்று கொண்டு (தூக்குமாட்டி) என் பிராணனை விட்டு விடுகிறேன் என்றான்.
இவளோ, இஃதேது பழிவந்து சேர்ந்துவிடுமோ என்று நினைத்து, நல்லது நான் வேண்டுமென்பது உனக்கு ஆவசியகமாயிருந்தால், (நான் தான் உனக்கு வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால்) நீ தீட்சை பண்ணிக் கொண்டு சைவன் ஆனால் உன் இஷ்டம்படி நடக்கிறேன் என்று சொல்கிறாள்.
அவன் காமப் பேய் கொண்டவனாகையால், "பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்" என்ற விதமாய் அவளின் உறவைக் கைவிட மாட்டாமல், நீ சொன்னவன்னம் சைவ சமயத்தை அனுசரிக்கிறேன் என்று ஸ்ரீரங்கத்தை விட்டுச் சம்புகேசுரத்திற்கு வந்து சிவதீட்சை பண்ணிக் கொண்டு, அகிலாண்டவல்லி கோயில் பரிசாரசனாகி, தனக்கு அவ்விடத்தில் வரும்படிகளில் அவளுக்குக் கொடுத்து, மீந்ததைத் தன் ஜீவனத்துக்கு வைத்து அனுபவித்து கொண்டு வந்தான்.
அந்த நாளில் சம்புகேசுரத்தில் ஒரு சிவப் பிராமணன் தனக்கு, வித்தையில் பூரண பாண்டியத்தியம் உண்டாக வேண்டும் என வீம்புடன் திரிபுரை சக்கரம் ஸ்தாபித்து அதில் அத் தேவதைக்குரிய மந்திர பீஜாட்சரத்தைப் பிரணவ நமக சகிதமாக வரைந்து உருச் செபித்து நெடுநாளாக உபாசித்து கொண்டிருக்கிறான்.
ஒரு ராத்திரியில் நடுசாமத்தில் அகிலாண்ட நாயகி அழகான ஒரு சிறு பெண் போல வடிவெடுத்து வெள்ளை வஸ்திரம் உடுத்து வாய் நிறையத் தாம்பூலம் தரித்துக் கொண்டு உபாசகன் கண்ணுக்கெதிரே சென்று, "உன் வாயைத் திற என்று அந்த தாம்பூலத்தை அவன் வாயில் உழிழப் போகும் போது, அவன் நிர்ப்பாக்கியனாகையால், அவளை மகாதேவி என்று அறியாமல், "யாரடி நீ, எச்சில் தாம்பூலத்தை என் வாயிலே துப்ப வருகிறாய்! உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா! அப்புறம் எட்ட நில்லடி!" என்று கடிந்து கொண்டான்.
அத்துடன் அவனை விட்டுவிட்டு, திரும்பி வருகையில், மோகனாங்கி அன்றைய ராத்திரியில் கோயிற்குட வரிசைக்கு வந்திருப்பதை அறிந்த அவள் மேல் மோகம் கொண்ட அந்த பரிசாரகன் அவளிடம், "நீ வீட்டுக்குப் போகும்போது என்னை வந்து அழைத்துப் போ; நானும் இன்று உன் வீட்டுக்கு சேர்ந்து போவோம்; அதுவரை நான் இந்த மண்டபத்தில் ஒரு மூலையில் படுத்திருக்கிறேன்" என்று கூறி அவள் வரும்வரை அந்த மண்டபத்தில் ஒரு மூலையில் படுத்திருக்கிறான்; மோகனாங்கி குடவரிசை முடிந்தபின்பு, இவனைத் தேடி, கிடைக்காமல், அவள் மட்டும் வீட்டுக்குப் போகிறாள். கோயிலில் இருந்தவர்கள் எல்லோரும் வெளியில் போய் விட்டார்கள்; கோயில் ஸ்தானிகர் முதலியவர்கள் கோயிலை காப்பிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டார்கள்;
மோகனாங்கி எப்படியும் தன்னை வந்து எழுப்பி, அவள் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவாள் என்று ஆசையில் படுத்தவன், அப்படியே தூங்கிவிட்டான்.
இவன் கனவில் அந்த மோகனாங்கி வந்து விளையாடுகிறாள்; அதே நிலையில், சிறுமியாக வடிவெடுத்துள்ள வாயில் தாம்பூலத்துடன் வரும் அகிலாண்டநாயகி, தூங்கும் இவன் அருகில் வந்து, தன் வாயில் எச்சிலுடன் தாம்பூலத்தை அவன் வாயில் துப்பி "இதை தின்றுவிடு" என்றும் கூறினாள்.
மோகனாங்கி கனவில் இருக்கும் இவனோ, அது மோகனாங்கிதான் என்று நினைத்து, அவளின் எச்சில் தாம்பூலத்தை வாயில் ஏற்றுக் கொண்டு தின்று கனவில் மிதக்கிறான்.
இவன் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தினால், எச்சில் தாம்பூலத்தை மறுக்காமல் வாங்கியதினால், அகிலாண்ட நாயகி, அன்று முதல் அவனை, அளவில்லாமல் மழைபொழியும் காளமேகம் போல, தமிழில் "ஆசுகவி"  முதலாக சொல்லப்படும் நால்வகை கவிகளிலும் பாடும் சக்தியை கொடுத்தார். யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும், அதை முதலாக, அல்லது முடிவாக வைத்துக் கொண்டு உடனே கவி பாடுவிடும் திறமை இவருக்கு வந்துவிட்டது.
அகிலாண்டேஸ்வரியின் வரப்பிரதாசதத்தால் வந்த திறமை என்பதால், அது முதல் இவரை "காளமேகப் புலவன்" என்றே அழைத்தனர்.
**