Thursday, November 10, 2016

டொனால்டு டிரம்பின் அமைச்சரவை(!)

ஒருவழியாக, ஆச்சரியப்படும்படியாக, டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டார்; வாழ்த்துக்களைச் சொல்லி வைப்போம்!

அடுத்து அவரின் பலமிக்க அமைச்சரவையில் யார் யார் வர வாய்ப்பு இருக்கிறது என அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது;

ரூடி கிலியானி (Rudy Giuliani): இவர் நியூயார்க்கின் பழைய மேயர்; இவரை  அட்டார்னி ஜெனரலாக அமர்த்த வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது;

நெட் ஜின்கிரிட்ச்   (Newt Gingrich): இவர் பழைய சபாநாயகராக இருந்தவர்; இவரே தேர்தல் நேரத்த்தில் டொனால்டு டிரம்பின்  செய்தி தொடர்பாளர் ஆவர்; இவர் இனி வெளியறவுத் துறை அமைச்சர் ஆகிறார்; அங்கு இந்த பதவியை Secretary of State என்று பெயர்;

பாப் கார்க்கர் (Bob Corker):  இப்போது இவர் வெளிநாட்டு தொடர்பின் செனட் சபையின் சேர்மனாக இருந்தவர்; இனி இவருக்கு ஸ்டேட் டிபார்ட்மென்டின் பதவி ஏதாவது உண்டு:

பென் கார்சன் (Ben Carson): ஒரு நேரத்தில் இவர் டிரம்பின் ஏதிர் கோஷ்டியில் இருந்தவர்; பெரிய டாக்டர்; இவரே இனி சர்சன் ஜெனரல்; தலைமை டாக்டர் பதவி இவருக்கு கொடுக்கலாம்!

மைக் ப்ளைன் (Mike Flynn): இவர் மிலிட்டரியிலிருந்து மிலிட்டரி ஜெனரலாக இருந்து ரிட்டையர் ஆனவர்; இவரே இனி பாதுகாப்பு அமைச்சராக இருப்பார் என்கின்றனர்;

ஜெப் செசன்ஸ் (Jeff Sessions): இவர் செனட் சபை உறுப்பினர்; இனி இவர் பென்டகனில் அதிகாரி ஆவார்;
ரெயின்ஸ் பிரிபஸ் (Reince Priebus): இவர் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ஆவாராம்!

கிறிஸ் கிறிஸ்டி (Chris Christie): நியூஜெர்சியின் கவர்னராக இருப்பவர்; இவருக்கு நீதித்துறை ஒதுக்கப்படலாம் அல்லது வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ஆகலாம் என்கிறார்கள்!

ஸ்டீவ் பனான் (Steve Bannon): தேர்தலில் டிரம்புக்கு உதவியாக இருந்தவர்; இவரும் வெள்ளை மாளிகை அதிகாரி ஆகலாம்;

மைக் பென்ஸ் (Mike Pence): இவரே துணை ஜனாதிபதி; இன்டியானா கவர்னர்; டிரம்புக்கு உடன் இருந்து அவரின் அதிபர் பதவிக்கு துணையாக ஆலோசனையும் கூறுவாராம்!



Wednesday, November 9, 2016

Donald Trump (டொனால்டு டிரம்ப்)

Donald Trump (டொனால்டு டிரம்ப்)

அமெரிக்காவில் எப்போதுமே தேர்தல் தேதி என்பது நவம்பர் 8-ல் தான் வரும்; அந்த தேதி மாறவே மாறாது; இப்போது 2016 நவம்பர் 8-ல் தேர்தல் நடந்தது; டொனால்டு டிரம்ப் ரிபப்ளிக்கன் கட்சியில் அதிபர் வேட்பாளராக யானைச் சின்னத்தில் நின்றார்; எதிர்த்து ஹிலாரி கிளின்டன் என்ற பெண்மணி டெமாக்ரடிக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கழுதைச் சின்னத்தில் நின்றார்;

8-ம் தேதி இரவே ஓட்டுக்கள் எண்ணப்பட்டன; அதில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டு விட்டார்; புதிய அதிபருக்கு வாழ்த்துக்கள்! அமெரிக்காவை இப்போது இருப்பதைக் காட்டிலும் மேம்படுத்த பாடுபடுவேன் என்று அவர் வெற்றி உரை ஆற்றினார்;

“I want to tell the world community that while we will always put American interest first, we will deal fairly with everyone”. என்று டிரம்ப் பேசி உள்ளார்;

இனி, உலக நாடுகளுடன் அவரின் உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்;


Thursday, November 3, 2016

கந்தரலங்காரம்-16

கந்தரலங்காரம்-16

தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும்
இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழுபாரும் உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் துளைக்க வைவேல்
விடுங்கோன் அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே!

(நிலையற்ற மனத்தைத் தடுத்து நிறுத்துங்கள்! வெகுளி என்னும் கோபத்தை விட்டு ஒழியுங்கள்! தானத்தை எப்போதும் செய்து வாருங்கள்! உண்மை நெறியில் இருந்தபடியே இருங்கள்! ஏழு உலகத்தில் உள்ளவர்களும் உய்யும்படி, கொடிய கோபத்தை உடைய சூரனுடன் மலையையே திறக்கும்படி துளைக்க, வைவேல் என்னும் கூரிய வேலாயுதத்தை விடும் கோன் என்னும் முருகக் கடவுளுடைய அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே!)

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-16)


Wednesday, November 2, 2016

கந்தரலங்காரம்-15

கந்தரலங்காரம்-15

தாவடி ஓட்டு மயிலிலும் தேவர் தலையிலும் என்
பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ படி மாவலிபான்
மூவடி கேட்ட அன்று  மூது அண்ட கூட முகடு முட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே!

(தாவி அடி எடுத்து ஓடும் மயிலிலும், தேவர் தலையிலும், என் பாடலின் அடி கொண்ட ஏட்டிலும், பட்டதன்றோ, உன் திருவடிகள்! (படி=நிலம்) (மாவலிபான் = மாவலி சக்கரவர்த்தி) மாவலி மன்னரிடம் மூன்று அடி நிலம் கேட்ட அன்று, பெரிய விண்ணுலகத்து முகடு தட்டும்படி, தன் சிவந்த காலடியை நீட்டிய பெருமானான விஷ்ணுவின் மருகமான முருகா உன் சிறிய திருவடிகளே!)

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-15)


கந்தரலங்காரம்-14

கந்தரலங்காரம்-14

குப்பாய வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய் இரு நான்கு வெற்பும்
அப்பாதியாய் விழ மேரும் குலுங்க விண்ணாரும் உய்யச்
சப்பாணி கொட்டிய கை ஆறு இரண்டு உடைச் சண்முகனே!

(குப்பாய வாழ்க்கையுள் = இந்த உடல், ஒரு கூடு போன்ற சரீரத்தில் (உடலில்) கூத்தாடிக் கொண்டிருக்கும் ஐவர் என்னும் ஐம்புலனங்களினால் ஆட்டுவிக்கும் இந்த பாச நெஞ்சை ஈடேற்றுவாய் முருகா! இரு நான்கு வெற்பு என்னும் எட்டு மலைகளும், பாதி பாதியாய் பிளந்து விழ, மேரு மலையும் நடுங்க, விண்ணவர் என்னும் தேவர்கள் உய்ய, சப்பாணி விளையாட்டில் கை கொட்டி விளையாடும் பன்னிரண்டு கைகளை (ஆறு இரண்டு கைகள்) உடைய சண்முகக் கடவுளே!)

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-14)

Tuesday, November 1, 2016

கந்தரலங்காரம்-13

கந்தரலங்காரம்-13

ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரனுடை மணிசேர்
திருவரைக் கிண்கிணி ஓசைபடத் திடுக்கிட்ட அரக்கர்
வெருவரத் திக்குச் செவிடுபட்டு எட்டு வெற்பும் கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயங் கெட்டதே!

(ஒருவனாக சிவனின் ஒரு பாகத்தில் இருக்கிற உமா தேவியின் குமாரனாகிய முருகக் கடவுளுடைய, மணி சேர் திரு அரைக் கிண்கிணி =  இரத்தினம் பொருந்திய இடுப்பில் அணிந்த சதங்கை ஒலியின் ஓசையைக் கேட்டவுடன், அரக்கர் திடுக்கிட்டு, அஞ்சி நடுங்கினர்; திசைகள் எல்லாம் செவிடுபட்டு, அதனால், எட்டு மலைகளும், கனகப் பருவரை குன்று என்னும் பொன்னால் ஆகிய குன்றும் அதிர்ந்தன; அதனால், தேவர்களின் பயம் நீங்கிற்று!

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-13)



கந்தரலங்காரம்-12

கந்தரலங்காரம் -12

படைபட்ட வேலவன் பால் வந்த வாகைப் பதாகை என்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதி கிழிந்து
உடைபட்டது அண்ட கடாகம் உதிர்ந்தது உடுப்படலம்
இடைபட்ட குன்றழ மாமேரு வெற்பும் இடிபட்டவே!

(படைபட்ட  = படை பொருந்திய வேலன் பால் வந்த, வாகைப் பதாகை என்னும் வெற்றிக் கொடியாகிய, தடைபட்ட சேவல் = வேலனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட சேவல், அதன் சிறகை அடித்துக் கொள்வதால், சலதி என்னும் கடல் பிரிந்து உடைந்தது; அண்ட கடாகம் உதிர்ந்தது; உடுபடலம்  என்னும் நட்சத்திர கூட்டத்தின் அடுக்குகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி மோதிக் கொண்டன; குன்றமும், மாமேரு மலையும் ஒன்றுடன் ஒன்று இடிபட்டன;


(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-12)

கந்தரலங்காரம்-11

கந்தரலங்காரம்-11

குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக்
கசை இடு வாசி விசை கொண்ட வாகனப் பீலியின் கொத்து
அசை படு கால் பட்டு அசைந்தது மேரு அடி இட எண்
திசை வரை தூள் பட்டது அத்தூளின் வாரி திடர் பட்டதே!

(குசை நெகிழா = கூர்மை குன்றாத வெற்றி தரும் வேலாயுதத்தை உடைய எங்கள் முருகப் பெருமானே! அவுணர் = அசுரர்களின் குடல் குழம்பிக் கலங்கும்படி, வாசி என்னும் குதிரையின் வேகத்தைப் போன்ற வேகமுள்ள உனது மயில் வாகனத்தில் வரும்போது, அதன் பீலி என்னும் தோகைகள் வேகமாக ஆடும்! அப்போது, (கால்=காற்று) அதனால் ஏற்படும் காற்றில் மேரு மலையே அசைந்தது; மயில் தன் காலின் அடியை வைக்க, அதனால் எண் திசை (எட்டுத் திசை) மலைகளும் பொடிப் பொடியாயின! அதனால் வாரி எறியப் பட்ட தூசிகள் கடல் திடல் போல ஆனது!

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-11)



கந்தரலங்காரம்-10

கந்தரலங்காரம்-10

சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல எனை விட்டவா! இகல்வேலன் நல்ல
கொல்லியைச் சேர்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைக் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் வல்லபமே!

(சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்று எல்லாவற்றையும் இழந்து, சும்மா இருக்கும் எல்லை என்னும் மௌனத்தின் எல்லைக்குள் என்னை செல்ல விட்டவனே! வலிமையான வேலாயுதத்தை உடைய வேலவனே! நல்ல கொல்லி என்னும் பண் (பாடலை) இசைப்பதால் வரும் இனிய மொழியாளாகிய, கல் மலையில் இருக்கும் கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயை உடைய கொடி போன்றவளைப் புணருகின்ற மலை போன்ற தோள்களை உடைய எங்கள் முருகப் பெருமானின் வல்லமைதான்!

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-10)


இதோபதேசம்-2

இதோபதேசம்-2

Skeptic (ஸ்கெப்டிக்): எதுக்கெடுத்தாலும் சந்தேகமாடா என்று சினிமா வசனம் ஒன்று வரும்; அதுபோல எல்லாவற்றுக்கும் சந்தேகப்படும் நபரை Skeptical (ஸ்கெப்டிக்கல்) என்பர்; இப்படிப்பட்டவரை Doubting Thomas என்றும் வேடிக்கையாக அழைப்பர்; ஜீசஸ் கிறிஸ்துவின் 12 தூதர்களில் இந்த தாமஸூம் ஒருவர்; ஏசு கிறிஸ்து இறந்து, அவரை அடக்கம் செய்த கல்லறையிலிருந்து உயிர் பெற்று எழுந்து வருகிறார்; அப்போது அவரின் சீடர்களில் ஒருவரான இந்த தாமஸ் உண்மையில் இவர் ஏசு கிறிஸ்துதானா என்று அவரிடமே சந்தேகமாக கேட்கிறார்; ஏசு கிறிஸ்து தன் உடலில் ஏற்படிருந்த காயங்களின் தழும்பை காட்டுகிறார்; அப்போதுதான் தாமஸ் நம்புகிறார்; அதனால்தான் தாமஸூக்கு டவ்ட்டிங் தாமஸ் (Doubting Thomas) என்று பட்டப் பெயரும் ஏற்பட்டது; St. Thomas, apostle who doubted Jesus’ resurrection until he had proof of it. ஏசு கிறிஸ்துவின் 12 தூதர்களையும் apostle (அப்பாசல்) என்று பொதுவாக அழைப்பார்கள்; தாமஸ் என்றால் ஹீப்ரூ மொழியில் டைமஸ் என்பர்; அதன் பொருள் “இருவர்” (Twins) என்பதாம்! இந்த தாமஸ்தான் புனிதர், அதிசயங்களை நிகழ்த்தியவர் என, (Saint or St.) பட்டம் பெற்று, இந்தியாவில் தமிழகம் வந்து மைலாப்பூரில் வாழ்ந்து கிறிஸ்துவின் கொள்கைகளைப் பரப்பியவர்; இவர் நினைவாகத்தான் சென்னையில் செயின்ட் தாமஸ் மவுன்ட் என்ற இடம் பெயரிடப் பட்டது;

ஸ்கெப்டிக் என்றால் சந்தேகப் பேர்வழி; ஆனால் எதிர்மறையாக கருத்துச் சொல்பவருக்கு அல்லது எல்லாவற்றையும் மறுத்துப் பேசிக் கொண்டே இருப்பவரை cynic (சினிக்) என்று சொல்வர்; இவரை fault-finder என்றும் சொல்வர்; நமக்கு வாழ்க்கையில் பாசிடிவ் (positive) எண்ணம் இருக்க வேண்டும்; அடுத்தவர் செய்யும் செயலில் அல்லது அடுத்தவர் சொல்லும் சொல்லில் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கக் கூடாது; அப்படிச் செய்தால் நம்மை “சினிக்”(cynic) என்று முத்திரை குத்தி விடுவர்; நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் இருக்க வேண்டும்: நாம் செய்வது மட்டுமே நல்ல விஷயம் என்றும் மற்றவர் செய்வது எல்லாம் ஏதோ உள்நோக்கத்துடன் செய்கிறார், சுயநலவாதி என்றும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது; மனைவியை அதிகாரம் செய்வதாக நினைத்துக் கொண்டு இப்படி குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பர்; இது மனைவிக்குப் பிடிக்காது;

ஒரு மனிதன், ஸ்கெப்டிக்காவும், சினிக்காவும் இருக்கக் கூடாது; வாழ்க்கையில் முன்னேறவே முடியாது; அப்படி இருந்தால் நம் முதுகுக்குப் பின்னால் நம்மைப் பற்றி “He is a skeptic and a cynic.” என்று பேசுவார்கள்; அதற்கு இடம் கொடுக்கக் கூடாது; பொதுவான அவரவரின் மனைவிகளிடம் இந்தப் பெயரை எடுத்துவிடக் கூடாது;
**



Monday, October 31, 2016

இதோபதேசம்-1

இதோபதேசம்-1
பீனிக்ஸ் பறவை: Phoenix or Phenix: கிரேக்க இதிகாசத்தில் இதைப் பற்றிய பெருமை பேசப்பட்டுள்ளது; நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழும் பறவை; வானில் உயரத்தில் பறந்து கொண்டே இருக்கும்; தரை இறங்காது; நூறு ஆண்டுகள் கடந்து, ஒரு நேரத்தில்  நெருப்பில் குதித்துச் சாம்பலாகும்; அந்த சாம்பலில் இருந்தே மறுபடியும் உயிர்த்தெழும்; இது சூரியனைத் தேடிப் பயணிக்கும் என்று கிரேக்க இதிகாசத்தில் சொல்லப் பட்டுள்ளது; இதிகாசத்தில் இது 1400 ஆண்டுகளுக்கு மேலும் வாழும் பறவை என்று சொல்லப் பட்டுள்ளது; இந்துக்களின் இதிகாசத்தில் இதை கருடனுக்கு ஒப்பிடுவர்;
இரானிய இதிகாசத்தில் இதை Homa or Huma என்கிறார்கள்; இந்த ஒரே பறவையிலேயே ஆணும் பெண்ணும் கலந்து ஒரே பறவையாகவே இருக்குமாம்!
இந்தப் பெயர் கொண்ட பெண்மணியான ஹூமா அபதின் Huma Abedin அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில், கிளாரி கிளின்டனுக்கு 24 மணி நேரமும் கூடவே இருந்து உதவி வந்தவர்; இப்போது தலைவலி ஆகி விட்டார்;
கிளாரி கிளின்டனுக்கு அரசியல் உதவியாளராக வெகுகாலம் ஹூமா இருக்கிறார்; எப்போதும் கூடவே இருப்பார்: இவரின் தந்தை பழைய பிரிட்டீஸ் இந்தியாவில் டெல்லி பகுதியைச் சேர்ந்தவர்; இவரின் தாயார் பழைய பிரிட்டீஸ் இந்தியாவின் பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்; இந்தப் பெண் பிறந்து அவரின் 2-வது வயதில் அந்தக் குடும்பம் சவுதி அரேபியா சென்று விட்டது; பெற்றோர்களும் பெரிய படிப்பாளிகள்; பின்னர் இந்தப் பெண், அவரின் 18 வயதில், பட்டப் படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா பல்கலையில் பி.எச்.டி பட்டம் பெறுகிறார்; பல மொழிப் புலமை கொண்ட பெண்; பெரிய அறிவாளியும் கூட! அமெரிக்க அதிபர் மாளிகையான ஒயிட் ஹவுஸில் வேலைக்குச் சேருகிறார்; அப்படியே கிளாரி கிளின்டனுக்கு உதவியாளராக இதுவரை பணியாற்றி வருகிறார்;
கிளாரி கிளின்டனும், “ஹூமா எனது இன்னொரு மகள்” என்று வாஞ்சையுடன் குறிப்பிட்டுள்ளார்; ஹூமா, அங்கு வசிக்கும் அந்தோனி வெய்னர் என்ற யூத இளைஞரை திருமணம் செய்கிறார்; இந்த திருமணத்தை, குடும்ப உறுப்பினர் என்ற முறையில், அதிபர் கிளன்டன் நடத்தி வைத்தார்;
கிளாரி கிளின்டனின் ஈமெயில் வேலைகளை இந்த ஹூமா உதவி வருகிறார்; 2012-ல் லிபியாவில் நடந்த பென்கசியில் உள்ள அமெரிக்க தூதரகத் தாக்குதலில் அமெரிக்க தூதர் கொல்லப்படுகிறார்: அதில் கிளாரி கிளின்டன் பொறுப்பாக செயல்படவில்லை என அவர் மீது தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது; அதில் அரசாங்க ஈமெயில் கணக்கில் மெயில்கள் அனுப்பாமல் கிளாரியின் தனி ஈமெயில் கணக்கிலிருந்து தகவல் அனுப்பி, பாதுகாப்புக்கு பங்கமாக இருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது; எனவே அந்த ஈமெயில்களை போலீஸ் பார்வையிட்டு அதில் குறைகள் ஒன்றும் இல்லை என்றும், தனியார் ஈமெயில் கணக்கில் அனுப்பியது தவறான செயல் என்று மட்டும் குறை சொல்லி விட்டுவிட்டது;
ஆனால் இப்போது, தேர்தல் நேரத்தில் மறுபடியும் தூசு தட்டி அந்தப் பிரச்சனை மீண்டும் எடுக்கப்படுகிறது; மேலும் சில ஈமெயில்களை பார்வையிட உத்தரவு இட்டது: ஏனென்றால், இந்த ஈமெயில்களில் சில சிறுவயது பெண்களுக்கு அசிங்கமான படங்கள் அனுப்ப பட்டதாகவும் புகார்;
அந்த ஈமெயிலில் ஹூமாவுக்கு எந்த தொடர்பும் இல்லாதபோதிலும், அவரின் கணவர் அந்தோனி வெய்னருக்கு தொடர்பு இருக்கும் என நினைக்கின்றனர்; ஏனென்றால், ஏற்கனவே இந்த அந்தோனி அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்; அவரும் பொறுப்பான எம்.பி.யாக இருந்தவர்; ஆனாலும் அவரின் ட்விட்டர் கணக்கில் சில சிறு வயது பெண்களுக்கு அசிங்கமான படங்களை அனுப்பி மாட்டிக் கொண்டார்; இருந்தாலும், அவரின் மனைவியான ஹூமா கணவரை மன்னித்து அவருடன் இதுவரை வாழ்ந்து வந்தார்;
ஆனால், இப்போதும் அதை தொடர்ந்து ஒரு பெண்ணுக்கு இவரின் அசிங்கமான படத்தை அனுப்பியது தெரிந்ததால், அவருடன் வாழாமல் விலகி விட்டார்; அவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான்;
இப்போது, கிளாரி ஈ-மெயில் விவகாரம் தேர்தல் நேரத்தில் சூடு பிடித்து, கிளாரிக்கு இருக்கும் ஓட்டு எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக சிலர் கருதுகின்றனர்;
மனைவி கம்யூட்டரை கணவன் உபயோகப்படுத்துவது சாதாரண விஷயம்தான்! ஆனால், அரசாங்க விவகாரத்தில் இப்படி இருக்க கூடாது என்றும், அமெரிக்க பாதுகாப்பு விஷயத்தில் கிளாரியின் உதவியாளரான ஹூமா இப்படி நடந்து கொண்டது தவறு என்றும் எதிர் கட்சி வேட்பாளரான டொனால்டு ஆதரவாளர்கள் போர்கொடி தூக்குகின்றனர்;
அமெரிக்க எப்.பி.ஐ. என்னும் புலனாய்வு ஏஜென்சியின் தலைவர் ஜேம்ஸ் காமே, இதை தேர்தல் நேரத்தில் பெரிதாகப் பேசி வருவது தேர்தல் நடவடிக்கைகளையும், தேர்தல் தர்ம நியாத்திற்கும் எதிரான செயல் என்று கிளின்டன் கட்சி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்;
ஹூமா என்ற பீனிக்ஸ் பறவை மறுபடியும் புத்துயிர் பெற்று கிளாரியுடன் சேர்ந்து பணியாற்றுவாரா என்று தேர்தலுக்குப் பின்னர் பார்க்கலாம்!

**

Friday, October 28, 2016

கந்தரலங்காரம்-9

கந்தரலங்காரம்-9

தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா மொழித் தெய்வவள்ளி
கோன் அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவற்றோ
வான் அன்று, கால் அன்று, தீ அன்று, நீ அன்று, மண்ணும் அன்று,
தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று, சரீரி அன்றே!

(தேன் என்றும், பாகு என்றும் உவமை சொல்ல முடியாத இனிய சொல்லை உடைய தெய்வ கன்னியாகிய வள்ளியின் பதி (கணவர்) ஆகிய முருகா, நீ எனக்கு அந்நாளில் உபதேசம் செய்தது என்னவென்று என்னால் கூறமுடியவில்லையே! "அது வான் என்னும் வானமும் இல்லை, கால் என்னும் காற்றும் இல்லை, தீ என்னும் நெருப்பும் இல்லை, நீர் என்னும் சலமும் இல்லை, மண் என்னும் பூமியும் இல்லை, தான் என்னும் நாம் இல்லை, நான் என்னும் நானும் இல்லை, அசரீரி என்னும் சரீரம் இல்லாத பொருள் இல்லை, சரீரி என்னும் (தொடும் பொருள்) இல்லையே!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-9)
**


கந்தரலங்காரம்-8

கந்தரலங்காரம்-8

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியின் மேல்
அளியில் விளைந்த ஒர் ஆனந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறுந் தனியைத்
தெளிய விளம்பியவா, முகம் ஆறுடைத் தேசிகனே!

(ஒளி என்னும் பரஞ்சோதியில் உண்டாகிய உயர்வான ஞான மலையின் உச்சியில், உன் அருளினால் உண்டான ஒப்பற்ற ஆனந்தத் தேன் என்னும் பேரின்பத்தை, அநாதி என்னும் சுத்த வெளியான சிவனிடத்தில், வெறும் பாழை என்னும் சுத்தப் பிரணவத்தை, தெளிவாக விளக்கிச் சொல்லிய ஆறு முகங்கள் கொண்ட தேசிகன் என்னும் என் குருமூர்த்தியே கந்தா!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-8)

**

கந்தரலங்காரம்-7

கந்தரலங்காரம்-7

சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும் என் தன்
உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய், அவுணர் உரத்து உதிரக்
குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து வெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுது ஆட  வேல் தொட்ட காவலனே!

(சளம் என்னும் இந்த மாயப் பொய் வாழ்வில் சிக்கிக் கொண்டு, அசட்டுக் கிரியை என்னும் இந்த இழிவான தொழிலினுள்ளே கிடந்து, தவிக்கும் எனது உள்ளத்தில், ப்ரமம் என்னும் மயக்கத்தை நீங்குவாய் கந்தா! அவுணர் என்னும் அரக்கர்களின் மார்பிலிருந்து சொரியும் ரத்தக் குளத்தில் குதித்து, அதில் குளித்து, அதனால் துள்ளி ஆனந்தக் கூத்தாடி, அதைக் குடித்து, அந்த வெற்றிக் களத்தில் செருக்கு கொண்டு, கழுது என்னும் பேய்கள் ஆடும்படி, உன் வேலைச் செலுத்தி என்னைக் காப்பாற்று கந்தா!)
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம் பாடல்-7)

**

கந்தரலங்காரம்-6

கந்தரலங்காரம்-6

பெரும் பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள
அரும்பும் தனிப் பரமானந்தம் தித்தித்து அறிந்த அன்றே
கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே!

(பெரும் பைம் புனம் என்னும் பரந்த பச்சை காட்டில், சிற்றேனல் என்னும் சிறு தினைக் கதிர்களைக் காக்கின்ற பேதை வள்ளியின் கொங்கைகளை விரும்பும் குமரக் கடவுளே! மெய் அன்பினால், மெல்ல மெல்ல உன்னை நினைக்க, உன் தோற்றம் அரும்பி, எனக்குப் பேரின்பம் தோன்றும்! அப்போது, எனக்கு கரும்பும் துவர்க்கும், செந்நிறந் தேனும் புளித்துக் கசக்குமே!
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-6)

**

கந்தரலங்காரம்-5

கந்தரலங்காரம்-5

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற் பாவை திரு முலைப் பாலை
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழக் குன்று அழச் சூர் அழ விம்மி அழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே!

(புவனங்கள் என்னும் இந்த பிரபஞ்சம் உய்யும்படி அவைகளைத் தோற்றுவித்த பொற்பாவை போன்ற உமாதேவியின் திருமுலைப் பாலை அருந்தி, சரவணப் பொய்கையில் பூந்தொட்டிலில் குழந்தையாகக் கிடந்து, கார்த்திகைப் பெண்கள் என்னும் ஆறு பெண்களின் பால் உண்ண விரும்பி, கடல் அழ, குன்று அழ, சூரன் கலங்கி அழ, குருந்தை என்னும் பச்சிளம் குழந்தையாக விம்மி அழும் குறிஞ்சிக் கிழவன் என்று உலகம் (குவலயம்) துதிபாடும்  மலைநாட்டுக் கிழவனே கந்தா!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-5)

**

கந்தரலங்காரம்-4

கந்தரலங்காரம்-4

ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டுத் தாள்
சேர ஒட்டார், ஐவர் செய்வது என் யான், சென்று  தேவர் உய்யச்
சோர நிட்டூரனைச் சூரனைக் காருடல் சோரிக் கக்கக்
கூர கட்டாரி இட்டு இமைப் பொழுதினில் கொன்றவனே!

(ஓர ஒட்டார் = ஒன்றை ஆராய விட மாட்டார்; உன்ன ஒட்டார்  = ஒன்றை எண்ண விட மாட்டார்; மலர் இட்டு உனது திருவடியைச் சேர விடமாட்டார்; ஐவர் என்னும் ஐம்புலன்களாகிய பகைவர்கள் இப்படி என்னை துன்பப் படுத்துகிறார்கள்; அடியேன் என்ன செய்வது? தேவர்கள் பிழைப்பதற்காக, சேர நிட்டூரச் சூரன் என்னும் கள்வனும் கொடியவனுமாகிய சூரன் என்பவனை, அவனின் கார் உடல் என்னும் கரிய உடலை, ரத்தம் கக்கும்படி (சோரி கக்க), கூரிய உன் வேல் கொண்டு, ஒரு இமைப் பொழுதினில் கொன்றவனே முருகா!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-4)

**

கந்தரலங்காரம்-3

கந்தரலங்காரம்-3

தேர் அணி இட்டுப் புரம் எரித்தான் மகன் செங்கையில் வேல்
கூர் அணி இட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்
நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேர் அணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே!

(தேர் அணி என்னும் தேர்ப் படைகளைக் கொண்டு புரம் என்னும் முப்புரத்தையும் எரித்தவனான சிவபெருமானின் மகனான முருகனின் சிவந்த கையில் உள்ள வேலாயுதத்தின் கூரிய நுனியானது, சீறிச் சென்று, கிரௌஞ்சம் என்னும் பெரும் மலையை, அணு அணுவாக தூள் தூளாக்கி பொடியாக்கி தகர்த்து, அரக்கர்கள் நேராக அணி வகுத்து நின்ற அவர்களின் சேனையை நெளித்தது; அதனால் சூரனின் பெரிய படை அழிந்தது; அதனால் தேவேந்திர லோகமே பிழைத்தது!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-3)

**

கந்தரலங்காரம்-2

கந்தரலங்காரம்-2

அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர்! ஏரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெண் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே!

(அடுத்த பிறவிகள் வேண்டும் என்ற ஆசையை அழித்து, மீண்டும் பிறவி எடுக்க விடாமல், அயில் வேலன் என்னும் கூரான  வேலாயுதத்தை உடைய கடவுளைப் பற்றிய கவிதையை, அன்போடு, எழுத்துப் பிழை இல்லாமல் ஓதிவர விருப்பமில்லாமல் இருக்கின்றீர்கள்!  ஏரி என்னும் நெருப்பு பற்றி எரிவது போல, கண்களை உருட்டி விழித்து, புகை எழுமாறு கொதிக்கின்ற, வெம் கூற்றன் என்னும் கொடிய யமன் விடும் கயிற்றால், கழுத்தில் சுருக்கு மாட்டி, உங்களை இழுப்பான் யமன்! எனவே நீங்கள் (முருகனைத் தவிர) வேறு கவிகளை ஓதலாமா?)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-2)

**

கந்தரலங்காரம்-1

கந்தரலங்காரம்-1

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத வென்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா! செஞ்சடா  அடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே!

(புண்ணியம் என்னும் பேரும், தவமும் சிறிதும் இல்லாத என்னை, பிரபஞ்சம் என்னும் இந்த சேறு நிறைந்த உலகிலிருந்து விலக வழி விட்டவனே! செம்மையான (சிவந்த) சடையை உடைய, காடு போல் உள்ள சடையில் கங்கையையும், பாம்பையும், கொன்றை மலரையும், தும்பை பூவையும், சந்திரனின் பிறையையும், அணிந்த பெருமானான சிவபெருமானின்  குமாரனான  கிருபாகரனே (முருகனே) உன்னை வணங்குகிறேன்!
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-1)

**