Sunday, October 2, 2016

நட்ஷெல்

அபிமன்யூ
மகாபாரதக் கதைகளில் “அபிமன்யூ கதை” மிகவும் உருக்கமானது என்று சொல்வார்கள்!

அபிமன்யூ என்பவன் அர்ச்சுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்தவன்; சுபத்திரை என்பவள் கிருஷ்ணனின் தங்கை;

சுபத்திரை கர்ப்பமாக இருக்கிறாள்; வயிற்றில் அபிமன்யூ கருவில் இருக்கிறான்; கிருஷ்ணன் ஒருநாள் இரவு சுபத்திரைக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறான்; சுபத்திரை, கிருஷ்ணன் சொல்லும் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்;

கிருஷ்ணன், “சக்கரவியூகம்” என்னும் போர் முறையைப் பற்றிச் சுபத்திரையிடம் கதையாகச் சொல்கிறான்; மிகத் தந்திரமான போர்முறை இது; எதிரிகளின் படைக்குள் உள்ளே நுழைந்து சென்று, போரிட்டு, அதே முறையில் மீண்டு வெளியில் வருவது; எதிரியின் சக்கர வியூகத்துக்குள் போகவும் முடியாது; போனால் திரும்ப வரவும் முடியாது; அப்படியொரு சிக்கலான போர் முறைத் தந்திரமே இந்த சக்கரவியூகம்!

கிருஷ்ணன் இந்தக் கதையை சுபத்திரைக்குச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சுபத்திரையின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் அபிமன்யூ காது கொடுத்துக் கேட்கிறான்! தாய் விழிப்புடன் இருக்கும்போது கருவில் இருக்கும் குழந்தையும் விழிப்புடன் இருக்குமாம்! விஞ்ஞான உண்மைதான்!

கிருஷ்ணன், சக்கரவியூகத்தை உடைக்கும் முறையைச் சொல்லி விட்டான்; சுபத்திரை கேட்டுக் கொண்டாள்; சுபத்திரை வயிற்றில் உள்ள கருவான அபிமன்யூவும் இதைத் தெள்ளத் தெளிவாகக் கேட்டுக் கொண்டான்;

சுபத்திரைக்கு தூக்கம் வந்துவிட்டது; மெதுவாக தூங்க ஆரம்பிக்கிறாள்; கிருஷ்ணன், சக்கர வியூகத்திலிருந்து வெளியேறும் தந்திரத்தை சொல்ல ஆரம்பிக்கிறான்; சுபத்திரை  ஆழ்ந்த தூக்கத்திற்குள் சென்று விட்டாள்; கருவில் இருக்கும் அபிமன்யூவுக்கு கிருஷ்ணன் சொல்லும் எதுவும் கேட்கவில்லை; சக்கர வியூகத்திலிருந்து வெளியேறும் தந்திரம் அபிமன்யூவுக்கு தெரியாமலேயே போய் விடுகிறது; தாய் தூங்காமல் இருந்திருந்தால் வெளியேறும் தந்திரமும் கற்றுக் கொண்டிருப்பான்! விதி! விளையாடி விட்டது!

அபிமன்யூ வாலிபன் ஆகி விட்டான்! மகா பாரதப் போர் நடக்கிறது; துரியோதன் படைகள் சக்கர வியூகம் அமைத்து சண்டையிடுகிறது; அன்று அபிமன்யூ போருக்கு போகிறான்; இவனுக்கு சக்கர வியூகத்தை உடைத்து அந்தப் படைகளை சிதறடித்து உள்ளே நுழையும் தந்திரம் தெரியும்; நுழைந்தே விட்டான்; உள்ளே நுழையத்தானே சிரமம்! நுழைந்து விட்டால், தன் தந்தையர்கள் இருக்கிறார்கள் எதிரி படைகளை உடைத்து சின்னா பின்னப்படுத்த என்ற தைரியம் அபிமன்யூவுக்கு!

துணிச்சலாக உள்ளே நுழைந்து எதிரிகளை சிதறடித்தான்; வெளியேறும் வகை தெரியவில்லை! சிக்கிக் கொண்டான்! விதியின் விளையாட்டு! அபிமன்யூ கொல்லப்படுகிறான்! அர்ச்சுனனின் மகன் கொல்லப் படுகிறான்! சுபத்திரையின் மகன் கொல்லப் படுகிறான்!

இந்த உலகில் எந்தக் குழந்தையும் ஒரு விபரமும் இல்லாமல் பிறப்பதில்லை! அவை கருவுக்கு வரும்போதே விஷய-ஞானத்துடனேயே வருகிறது என்கிறது விஞ்ஞானமும் மெய்ஞானமும்! கருவில், தாயின் வயிற்றில் அறிவை வளர்த்துக் கொண்டே இருக்கிறதாம்!

ஜெர்மன் நாட்டு தத்துவ மேதை சொல்கிறார், “ஒரு பசுமாடு கன்றுக் குட்டியை ஈனும் போது, (பெற்றெடுக்கும்போது), அது தன் குட்டியை நாக்கால் நக்க மட்டுமே செய்கிறது; ஆனால் கன்றுக் குட்டி, தன் தாயில் மடுவில் பால் கிடைக்கிறது என்ற அறிவுடன், தன் தாயின் பின்னங்கால்களுக்கு நடுவில் உள்ள மடுவை முட்டி முட்டி பால் குடிக்கிறது; இந்த அறிவை அந்த கன்றுக் குட்டிக்கு யார் சொல்லிக் கொடுத்தது என்ற கேள்வியுடன் இந்தப் பிரச்சனையை அணுகிறார்; எல்லா உயிர்களும் (ஆன்மாக்களும்) இயல்பிலேயே அடிப்படை அறிவைக் கொண்டே இங்கு பிறக்கின்றன! அந்த அறிவைக் கொண்டே வளர்கின்றன! பிறந்தபின்னர், இந்த உலகில், மேலும் அறிவை பெற்று ஆன்மாவை பலப்படுத்துகின்றன என்று கருதுவதற்கு சாத்தியம் உள்ளது என்கிறார்;

அப்படியென்றால், கருவில் உள்ள குழந்தை அறிவுடன், கான்சியஸ் என்னும் தன்நிலை உணர்வுடன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லைதான்!

இப்படியான ஒரு கருத்தைக் கொண்டு, Ian McEwan ஐயன் மெக்கேவன் ஒரு புதிய நாவலை உருவாக்கி உள்ளார்; கருவில் உள்ள குழந்தை வெளியில் நடப்பதை கவனிப்பதும், உணர்வதும், கேட்பதும் செய்யும் என்று சொல்கிறார்;  இது கிட்டத்தட்ட ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் கதையைப் போலவே பின்னப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்;

அந்தக் கதைக்குப் பெயர் -Nutshell (நட்ஷெல்); ஒரு 28 வயது அழகான பெண் திருமணம் செய்து கொள்கிறாள்; கணவருடன் இருக்கும்போதே, கணவனின் தம்பியிடம் தகாத உறவு வைத்துக் கொள்கிறாள்; அவள் கணவன் மூலம் கர்ப்பமாகி இருக்கிறாள்; அவள் வயிற்றில் ஒரு குழந்தை கருவாக உருவாகி வளர்கிறது; அது வெளி உலகில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் கேட்டுக் கொண்டும், உணர்ந்து கொண்டும் வளர்கிறது; தன் தாயின் நடவடிக்கைகளை அது உணர்ந்து கொள்கிறது, கவனித்து வருகிறது; தன் கணவரின் வீடான ஒரு பெரிய பங்களாவில் வசிக்கிறாள் அவள்; ஆனால், கணவனை வீட்டை விட்டு விரட்டி விடுகிறாள்; அவள் கணவன் ஒரு பாழடைந்த வீட்டுக்கு வாடைக்குப் போய் அங்கு தங்கி இருக்கிறான்;

இந்த கருவில் வளரும் குழந்தை இந்த விபரங்களை எல்லாம் கேட்டுக் கொண்டும் உணர்ந்து கொண்டும் தாயின் வயிற்றுக்குள் இருக்கிறது; அவளும், தன் காதலனும், தன் கணவனைக் கொல்ல சதி செய்கிறார்கள்; அதையும் அந்த கருவில் வளரும் குழந்தை கேட்டுக் கொண்டே இருக்கிறது; அந்த கருக்குழந்தை நினைக்கிறது, “எது சொன்னாலும், எந்த திட்டம் தீட்டினாலும், எல்லாம் இந்தக் காற்றில் சுற்றிக் கொண்டேதான் இருக்கும்; சீனாவின் பீஜின் நகரத்தின் மேலே சுற்றிக் கொண்டிருக்கும் அடர்ந்த புகையைப் போல!” என்று நினைக்கிறது அந்தக் குழந்தை;

**

ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்

ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்
(Shakespeare’s Hamlet)

ஷேக்ஸ்பியர் நாடகங்களிலேயே மிக அதிகமாகப் படிக்கப்பட்ட நாடகம் இந்த ஹாம்லெட் என்பார்கள்; ஏனென்றால் அதில் ஏதோ ஒரு சோகம் இழையோடி இருக்குமாம்!

இளவரசன் ஹாம்லெட் ஜெர்மனியில் படித்துக் கொண்டிருக்கிறான்; திடீரென்று தகவல் வருகிறது; அவனின் தந்தை (மன்னர்) இறந்து விட்டார் என்றும் உடனடியாக டென்மார்க்கு திரும்பி வரும்படி தகவல்; பதறி விட்டான் சிறுவன் ஹாம்லெட்; டென்மார்க்குக்கு திரும்பி வருகிறான்; தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறான்;

அங்கு அவன் தாயாரைப் பார்க்கிறான்! ஆறுதல் சொல்வதற்காக! ஆனால் அதிர்ச்சி அடைகிறான்! அவனின் தாய் (Gertrude), அதற்குள் மறு திருமணம் செய்து கொண்டு விட்டாள்! வேறு யாருமல்ல, அவனின் தகப்பனின் தம்பியை திருமணம் செய்து கொண்டிருக்கிறாள்! அவனுக்குச் சித்தப்பன்; அவன் பெயர் Claudius. கிளாடியஸ்;

முறைப்படி, மன்னர் இறந்துவிட்டால், அவரின் மகன்தான் அரியனை ஏறவேண்டும்; அதன்படி ஹெம்லெட்தான் அடுத்த மன்னர் ஆக வேண்டியவன்; ஆனால், சித்தப்பன் அந்த பதவியைப் பிடித்துக் கொண்டான்; அவனே முடிசூடிக் கொண்டான்; இவனின் தாயையும் மறு திருமணம் செய்து கொண்டான்; வெறுத்து விட்டான் ஹேம்லெட்! திருமணமே கொச்சைப் படுத்தப்பட்டு விட்டதோ என்று கலங்குகிறான்! இதில் ஏதோ சூதும் இருக்கக்கூடும் என நினைக்கிறான்!

இவன் சந்தேகப்படுவது போலவே, இவனின் இறந்த தந்தை ஆவியாக அங்கு வந்து செல்கிறார்! இவனைப் பார்க்கிறார்! அசரீரி கேட்கிறது! மகனே! என் ஆன்மா சாந்தி அடைய மறுக்கிறது! ஏனென்றால், நான் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கிறேன் என்று மகனிடம் தந்தையின் ஆவி அழுகிறது!

இதைப்பற்றி நம்பிக்கையானவர்களிடம் பேசுகிறான்! சித்தப்பன் கிளாடியஸ் காதுக்கும் செய்தி எட்டிவிட்டது! தகப்பன் ஆவி வந்து மகனே! என் உன் சித்தப்பன்தான் என்னை கொலை செய்தான்; நான் தூங்கும்போது, என் காதில் விஷத்தை ஊற்றி கொன்றான்! என்று சொல்லி இருக்கிறதாம்! மகன் பலிவாங்கத் திரிகிறான் என்றும் தகவல்!

ஹேம்லெட்டுக்கு வேறு வழி தெரியவில்லை! துக்கம் தாளாமல் ஒரு சர்ச்க்குப் போய் அங்கு சிலகாலம் வசித்து வருகிறான்; இரவில் ஒரு ஆற்றங்கரை ஓரம் நடந்து போகிறான்! அங்கு இறந்த அவனின் தந்தையின் ஆவி வருகிறது... மகனே! என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை; என் இறப்புக்கு காரணமானவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும்; உன் சித்தப்பனான என் தம்பி கிளாடியஸை பழி வாங்கிவிடு! உன் தாயான, என் மனைவி கெட்ரூட் (Gertrude) என்ன கதியாவது ஆகிவிட்டுப் போகிறாள்! கடவுள் அவள் முடிவை எடுத்துக் கொள்ளட்டும்! என்று புலம்புகிறது தந்தையின் ஆவி!

ஹேம்லெட்டால் நிலை கொள்ள முடியவில்லை! பழி உணர்ச்சி பெருக்கெடுக்கிறது; பைத்தியம் பிடித்துவிடும்போல உள்ளது! முகமூடி அணிந்து கொள்கிறான்! அதனுடனேயே நடமாடுகிறான்! அப்போதுதான் மற்றவர் என்ன செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும் என நினைக்கிறான்;

மறுபடியும் குழப்பம்! உண்மையில் ஆவியாக வந்தது தன் தந்தைதானா என்று குழப்பம்! ஒருவேளை, வேறு ஏதாவது ஒரு கெட்ட ஆவி, என்னிடம் வந்து இப்படி குழப்பி விட்டு போய் இருக்கிறதா? ஒன்றும் விளங்கவில்லையே என்று குழம்புகிறான்!

நான், என் சித்தப்பனை கொல்வதால், பிரச்சனை தீர்ந்துவிடுமா? என் மனதில் உள்ள குழப்பம் நீங்கி விடுமா?... இல்லை, நான் கோழையாகி விட்டேனா?

உண்மையில் அந்த ஆவி என் தந்தையின் ஆவிதானா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்! நாடக நடிகர்களை கூப்பிடுகிறான்; The Murder of Gonzago என்ற நாடகத்தை நடத்துகிறான்; அதில் இவன் தகப்பன் கொலை செய்யப்படுவது போன்ற காட்சிகளை சேர்த்து அரங்கேற்றுகிறான்; இந்த புதிய நாடகத்துக்கு The Mousetrap என்று பெயர் வைக்கிறான்; (எலிப்பொறி என்ற பெயராக இருக்கலாம்); தன் சித்தப்பனும் அந்த நாடகத்துக்கு வருகிறான்; நாடகத்தைப் பார்த்த அவன் சித்தப்பனின் முகபாவனை மாறிவிட்டது; ஹேம்லெட் உடனே அந்த நாடக கொட்டகையை விட்டு வெளியே வருகிறான்! அவனால் மூச்சு விட முடியவில்லை! ஆம், என் சித்தப்பன்தான் வில்லன்! என் சித்தப்பனை கொல்ல வேண்டும்! மனம் முடிவெடுத்து விட்டது! ஆனால் மனச்சாட்சி எப்போதும் நம்மை கோழையாக்கிவிடும் என்பதை உணர்கிறான்! குழப்பத்தில் கொலை செய்ய முடியாது!

குழம்பி நிலையிலேயே, ஆறு வேறு வேறு கொலைகளைச் செய்கிறான்! முதல் கொலை போலோனிஸ் என்பவனை; அவன், இவனை வேவு பார்த்தான் என்று கொன்றான்; இதை சித்தப்பன் தெரிந்து கொண்டு, இவனை இங்கிலாந்துக்கு நாடு கடத்தி விட்டான்! அங்கு தன் பால்ய நண்பர்களை அழைத்து அவர்களை, டென்மார்க்குக்குப் போய் தன் சித்தப்பனை வேவு பார்க்கும்படி ஏற்பாடு செய்திருந்தான்! ஆனால் சித்தப்பனோ, இங்கிலாந்து மன்னர் மூலம் ஹேம்லெட்டை தூக்கிலிடும்படி கூறி இருந்திருக்கிறான்! ஆனால், ஹேம்லெட்டுக்குப் பதிலாக அவனின் இரு நண்பர்களை தூக்கில் போட்டு விட்டனர்!

ஹெம்லெட்டால் கொல்லப்பட்ட போலோனியஸ் என்பவரின் மகள் ஒபெலியா (Ophelia); இவள் ஹேம்லெட்டை காதலிக்கிறாள்! ஒபெலியாவுக்கு ஒரு சகோதரன், அவன் பெயர் லார்டெஸ் (Laertes);

ஒபெலியா ஒருபக்கம் தந்தை இறந்த வருத்தம்; மறுபக்கம் ஹெம்லெட்டின் மீது தீராத காதல்! ஆனால், ஒபெலியாவின் சகோதரன் நினைக்கிறான், இந்த ஹேம்லெட் நல்லவன் இல்லை, அவன் என் தங்கையை காதலிப்பதுபோல நடித்து, ஆசையை தீர்த்துக் கொண்டு தூக்கி எறிந்து  விடுவான் என்று எண்ணுகிறான்; ஆனால், ஹெம்லெட்டுக்கு ஒபெலியா மீது காதல் ஏதும் இல்லை; இந்த ஒபெலியா ஒரு சாகசக்காரி! இவள் காதலிப்பதாக சொல்லிக் கொள்வது எல்லாம் பொய்; இவளுக்கு ஒரு ஆண் வேண்டும் என்பதால் என் பின்னே சுற்றுகிறாள் என்று அலட்சியமாக எண்ணுகிறான் ஹேம்லெட்;

லார்டெஸ், (ஒபெலியாவின் சகோதரன்) பிரான்சிலிருந்து டென்மார்க் வருகிறான்; அங்குள்ள ஹேம்லெட்டை கொல்ல முயற்சிக்கிறான்; அவன் தகப்பனை கொன்றவனைப் பழிவாங்க நினைக்கிறான்;

அங்கு தன் தங்கை ஒபெலியா பைத்தியம் பிடித்தது போல சுற்றிக் கொண்டிருக்கிறான்; காதல் பாட்டு பாடி ரோட்டில் திரிகிறாள்; ஹேம்லெட் மீது காதல்! பைத்தியமாகி இறந்து விடுகிறாள்;

லார்டெஸ்க்கு இரட்டை பலி வாங்க வேண்டும்: தகப்பனை கொன்று விட்டான் இந்த ஹேம்லெட்; தங்கையின் சாவுக்கும் காரணமாகி விட்டான் இந்த ஹேம்லெட்;

ஒரு கட்டத்தில் இருவருக்கும் கத்திச் சண்டை நடக்கிறது; ஆக்ரோஷம்!  லார்டெஸ் தன்னிடமிருந்து விஷம் தோய்த்த கத்தியை வீசுகிறான்; அதில் தப்பித்த ஹேம்லெட், அதே விஷக் கத்தியைப் பறித்து அந்தக் கத்தியாலேயே லார்டெஸை குத்தி விட்டான்! லார்டெஸ் இறக்கிறான்! இறப்பதற்கு முன் கூறுகிறான், நான் ஏற்கனவே இந்த விஷக் கத்தியால் உன்னை குத்தி இருக்கிறேன்; இந்த விஷம் இப்போது வேலை செய்ய ஆரம்பித்துவிடும்; நீயும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவாய் ஹேம்லெட் என்று சொல்லிவிட்டுச் சாய்கிறான்;

அங்கு ஹேம்லெட்டின் தாய் வருகிறாள்; மகன், வாள் சண்டையில் ஜெயித்து விட்டான் என்று கருதி, அருகில் இருந்த ஒயின்-ஜூஸை குடிக்கிறாள்; அது ஏற்கனவே, ஹேம்லெட் இறக்க வேண்டும் என நினைத்து அதில் விஷம் ஊற்றி வைக்கப்பட்ட வைன்-ஜூஸ்; இதை சித்திப்பன்-கிளாடியஸ் வைத்திருக்கிறான் என்று தெரியாமலேயே அவனின் தாய் குடிக்கிறாள்; ராணி இறந்து விட்டாள்;

இறப்பதற்கு முன், லேர்டெஸ் சொல்கிறான், உன் தந்தையை உன் சித்தப்பன்தான் கொன்றான்; ஹெம்லெட்டுக்கு கோபம் உச்சிக்கு போகிறது; தன்னிடமிருந்த விஷ கத்தியை எடுத்து சித்தப்பன் கிளாடியஸை குத்துகிறான்; பக்கத்தில் இருந்து ஒயினை எடுத்து சித்தப்பனின் தொண்டைக் குழியில் ஊற்றுகிறான்;
ஹேம்லெட்டின் கடைசி மூச்சு நிற்கிறது;
இராஜ மரியாதையுடன் அவனின் உடல் அடக்கம் செய்யப் படுகிறது;
**




Saturday, October 1, 2016

டொனால்டு டிரம்பும், ஹிலாரி கிளின்டனும்

டொனால்டு டிரம்புக்கும், ஹிலாரி கிளின்டனுக்கும் போட்டி; யார் அமெரிக்காவின் அதிபராக வரவேண்டும் என்பதில் இந்தப் போட்டி; அங்குள்ள ஒரு வழக்கப்படி, இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து வாதம் செய்து கொள்வார்கள்; இப்படிப்பட்ட வாத-பிரதிவாதம் மூன்று நாட்களுக்கு முன் இருவருக்கும் நடந்தது; அதை நாடே பார்த்துக் கொண்டிருந்தது; சுமார் 100 மில்லியன் மக்கள் பார்த்தார்களாம்;
நாட்டின் பொதுவான பிரச்சனைகளை இருவரும் அலசிப் பேச வேண்டும்; அதில் யார் பேச்சு சிறந்தது என்று மக்கள் தீர்மானித்து அவர்களுக்கு ஓட்டுப் போடுவார்கள்; இதுதான் அதன் நடைமுறை;
ஆனால், டிரம்பும், கிளின்டனும், பொதுப் பிரச்சனையைக் காட்டிலும், அவர்கள் இருவரின் தனிப்பட்ட பிரச்சனைகளை ஆவேசத்துடன் பேசிக் கொண்டனர்; இது ஒட்டுமொத்த மக்களையும் முகம்சுளிக்க வைக்கும் செயல்;
டிரம்ப் அவரின் வருமான வரி செலுத்திய விபரத்தை வெளியிடவில்லை என்று கிளின்டன் குற்றம் சாட்டுகிறார்; வருமானவரி தணிக்கையில் உள்ளபோது அதை வெளியிட முடியாது என டிரம்ப் சொல்கிறார்; அதில் ஏதோ சூட்சமம் இருக்கும்போல! அதனால்தான் கிளின்டன் அந்தப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்;
அதேபோல, கிளின்டன் உடல் நிலையையும், பென்காசி மெயில் பிரச்சனையையும் டிரம்ப் அள்ளி வீசினார்;
இருவருமே ஏதோ தவறு செய்துள்ளதைப் போலவே நடந்து கொண்டுள்ளனர்; இந்த தவறுகளில் எது குறைவானது, எது பெரியது என தீர்மானிக்கும்படி மக்கள் உள்ளனர்; ஆக, சரியான ஆளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடம் இல்லாமலேயே போய்விடுகிறது; ஜனநாயகத்தின் சிறப்பு இதுதான் போலும்! கட்சிகள் நல்லவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவரை, பிரபல்யமானவரை நிறுத்தி ஓட்டைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவரை, ஜனநாயகம் ஒரு கேளிக்கூத்தே!
**


ஹரிகேன்-மாத்யூ (Hurricane Mathew)

Hurricane ஹரிகேன் என்பது, ஒரு மணிக்கு சுமார் 74 கி.மீ. (119 கி.மீ) வேகத்துக்கும் அதிகமாக புயல் காற்று வீசினால் அதை ஹரிகேன் புயல் என்பர். இந்த புயல் வேகத்தை 64 நாட் (knots) என்றும் சொல்கிறார்கள். ஹரிகேன் என்பது ஸ்பானிஷ் மொழி வார்த்தையாம். ‘Hurricane’ என்பது “god of the storm”.
இப்போது ஒரு ஹரிகேன் புயல் ஜமைக்கா நாட்டில் உருவாகி உள்ளது. கியூபா நாட்டுக்குத் தெற்கே ஜமைக்கா நாடு உள்ளது. இது தீவு நாடு. அதன் தலைநகரம் கிங்ஸ்டன் (Kingston).
இந்த நாடு கரீபியன் (Caribbean) கடலில் உள்ள தீவு நாடு. ஸ்பெயின் நாட்டின் பிடியில் இருந்த நாடு; அப்போது, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை கொண்டு வந்தனர். பின்னர் வந்த பிரிட்டீஸ் ஆட்சியில், சைனாக்காரர்களையும், இந்தியர்களையும் கொண்டு வந்து இங்கு விட்டுள்ளனர்; இப்படி பல மொழி பேசும் மக்கள் வந்து சேர்ந்திருந்தாலும், இங்கு ஆங்கிலம்தான் பேசுகிறார்களாம். இப்படி வேற்றுமொழிக்காரர்கள், ஆங்கில மொழி பேசும் இயல்பை ‘ஆங்கிலோ-போன்’ (Anglophone) நாடு என்பர்;
கரீபியன் கடல் என்பது இந்த ஜமைக்கா நாட்டுக்கும் தென்-அமெரிக்க நாட்டுக்கும் நடுவில் உள்ள கடல்; இந்தக் கடலில்தான் இப்போது புதிய ஹரிகேன் புயல் உருவாகி உள்ளது; எப்போதும் இப்படிப்பட்ட புயலுக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்வார்கள்; இது ஒரு அடையாளத்துக்குத்தான்! அப்படி ஒரு புயல் இப்போது கரீபியன் கடலில் உருவாகி உள்ளது; அது ஜமைக்கா நாட்டில் நுழையும் அபாயமும் உள்ளதாம்; அந்த புயலுக்கு பெயர் வைத்துள்ளார்கள்; அதன் பெயர் ஹரிகேன்-மாத்யூ (Hurricane Mathew);
ஏற்கனவே மிக மோசமான ஒரு ஹரிகேன்-புயல் இந்த பகுதியில் வந்துள்ளதாம்; அது அட்லாண்டிக் கடலில் வந்ததாம்; அதற்குப் பெயர் ஹரிகேன்-பெலிக்ஸ் (Hurricane Felix); இது 2007-ல் வந்துள்ளது;
இந்த மாத்யூ புயல், மணிக்கு சுமார் 160 மைல் வேகத்தில் (260 கி.மீ.) அடிக்குமாம்; 1988-ல் ஜமைக்காவில் ஒரு பெரும் புயல் வந்ததாம்; அதற்கு ஹரிகேன்-கில்பர்ட் என்று பெயர் வைத்துள்ளனர்; அது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விட்டு போனதாம்!
இந்த கில்பர்ட் புயலை விட, இப்போது வரும் மாத்யூ புயல் மிக அதிக வேகத்தில் இருக்கும் என யு.எஸ்.நேஷனல் ஹரிகேன் சென்டர் என்னும் மியாமியில் உள்ள அமைப்பு தெரிவித்து உள்ளதாம்! மேத்யூ புயல் மிக அதிக மழையைக் கொடுக்குமாம்! 15 அங்குலம் (செ.மீ.) குறைந்த அளவு முதல், மிக அதிக அளவாக 25 அங்குலம் (63 செ.மீ.) வரை மழை பெய்யும் வாய்ப்பு இருக்குமாம்!
**


Sunday, July 31, 2016

அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 -(3)

அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 -(3)
டொனால்டு டிரம்பும், கிளாரி கிளிட்டனும் எதிர் எதிர் போட்டி; டிரம்ப், ரிபப்ளிக்கன் கட்சியை சேர்ந்தவர்; இப்போது எதிர் கட்சி வரிசையில் இருக்கிறது அவரின் கட்சி; இவரின் கட்சியின் சின்னம் யானை;
கிளாரி கிளின்டன் டெமாக்ரிடிக் கட்சியைச் சேர்ந்தவர்; இவரின் கட்சி இப்போது ஆட்சியில் இருக்கிறது; ஒபாமா அதிபராக இருக்கும் கட்சியே டெமாக்ரடிக் கட்சி; இந்த கட்சியின் சின்னம் கழுதைச் சின்னம்;
இருவரும் சரிசம போட்டி என்ற அளவிலேயே உள்ளனர்; ஒரு சில மாநிலங்களில் ஒருவருக்கு அதிக ஓட்டுக்களும், ஒரு சிலவற்றில் குறைவான ஓட்டுக்களும் இருக்கின்றன! போட்டி என்னவோ கடுமையாக இருக்கும் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள்;
ஸ்விங்க் ஆகும் சில மாநிலங்கள் உள்ளனவாம்! அதிக ஓட்டுக்கள் கிடைக்கும் என்று நினைப்பார்கள், ஆனால் கவுந்து விடுவார்கள்; இப்படிப்பட்ட இழுபறி அல்லது ஆபத்தான நிலையில் உள்ள ஓட்டுக்களைக் கொண்ட மாநிலங்கள் சில உள்ளனவாம்; அவை: ப்ளோரிடா, ஒஹியோ, கோலராடோ, விர்ஜீனியா; இங்கு தொலைக்காட்சி விளம்பரங்கள், வேட்பாளர் நேரில் வருவது, ஓட்டுக் கேட்பவர்கள் வீடு வீடாக செல்வது என்று ஓட்டுச் சேகரிப்பு தூள் பறக்கிறதாம்!
இன்னும் 100 நாட்களே உள்ளன! என்று பொருளை விற்பவர்கள் போல கோஷம்!  நவம்பர் 8-ம் தேதி அதிபர் எலெக்ஷன்! இந்த தேதி எப்போதுமே மாறாது! (இந்தியாவில், தேர்தல் கமிஷன்தான் புதிதாக தேதியை அறிவிக்கும்; ஆனால் அமெரிக்காவில், நவம்பர் 8-ல் தான் காலம் காலமாக அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும் நாள்; இது எப்போதுமே மாறாது! அமெரிக்கா வித்தியாசமான நாடு என்பது இதிலும்தான்!)
கிளாரி கிளின்டன் இந்த அதிபர் தேர்தலை வேகமாகவே சந்திக்கிறாராம்! அதிகப் பணம் செலவு, ஆட்கள் அதிகம் வேலை பார்க்கிறார்கள்; விளம்பரமும் அதிகமாம்; இதுவரை பெண்கள் யாரும் அதிபர் தேர்தலுக்கு போட்டியில் இருந்ததில்லையாம்!  ஒருவேளை, இந்த தேர்தலில் கிளாரி கிளன்டன் ஜெயித்தால், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் இவராகத்தான் இருப்பாராம்! இதுவே அமெரிக்க பெண்களை இவர் பக்கம் ஈர்த்திருக்கிறது என்கிறார்கள்! வடகிழக்கு மாநிலங்களில் டெமாக்ரடிக் கட்சிக்கே (கிளாரி) ஓட்டு அதிகம் கிடைக்குமாம்!
அதற்கு நேர் மாறான நிலை டிரம்புக்கும் இருக்கிறது; இவருக்கும் மவுசு அதிகமாம்! நியூ ஹாம்ஸ்பைர் மாநிலத்தில் இவருக்கு வாய்ஸ் அதிகமாம்! ஆனாலும், டிரம்ப், நியார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்து வேண்டுமாம்!
எந்த ஒரு தனி மாநிலத்தையும், இவர் பிடிப்பார், அவர் பிடிப்பார் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத நிலைதான் இருக்கிறதாம்!
1992ல் நடந்த அதிபர் தேர்தலில் பில் கிளின்டன் போட்டியிட்டு வென்றார்; அப்போது அவர் "மாற்றம்" என்ற கோஷத்தை வைத்து வென்றார்;
அடுத்து, ஜார்ஜ் புஷ் 2000-த்தில் "அதே நிலை" என்னும் Status quo கோஷத்தை வைத்து வென்றார்;
பின்னர், 2008-ல் பராக் ஒபாமா, மறுபடியும் "மாற்றம்" Change  என்ற கோஷத்தை முன்வைத்து வென்றார்;
இப்போது 2016ல் டிரம்ப் அதே "மாற்றம்" என்ற கோஷத்தை வைத்து நிற்கிறார்;
ஒரு மூடநம்பிக்கையும் உள்ளது; ரிபப்ளிக்கன் கட்சி வேட்பாளர், ஒஹியோ மாநிலத்தை ஜெயிக்காமல் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியாதாம்! ஒஹியோ மாநிலத்தை ஜெயித்தால்தான்  ரிபப்ளிக்கன் வேட்பாளர் அதிபர் ஆக முடியுமாம்!
ஒஹியோவில், நாட்டுப் புறத்தில் ட்ரம்புக்கு அதிக மதிப்பு இருக்கிறதாம்! நகரத்துப் பகுதிகளில் கிளாரி கிளின்டனுக்கு வாய்ஸ் அதிகமாம்! மைனாரிட்டி மக்கள்  கிளாரி இழுக்கிறாராம்! ஒஹியோவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்பவர்களை டிரம்ப் குறிவைக்கிறாராம்!
டிரம்ப், டீவியில் பேசினால் மட்டும் போதாது, நேரில் வந்து மக்களைச் சந்திக்கவேண்டும் என ப்ளோரிடா மக்கள் நினைக்கிறார்களாம்!
**



Don't be couch potatoes


“Don’t be couch potatoes.”

போப் பிரான்சிஸ் அப்போது போலந்து நாட்டில் பிரயாணத்தில் இருந்தார்; அங்கு போலந்து மக்களிடம் ஒரு கூட்டத்தில் பேசியபோது இப்படிச் சொல்லி இருக்கிறார்: 

“இளம் தலைமுறையே! சோம்பேறிகளாக இருக்காதீர்கள்; எதையாவது சாதித்து கொண்டிருங்கள்;” என்றார்; 
“Dear young people, we didn’t come into this world to ‘vegetate’, to take it easy, to make our lives a comfortable sofa to fall asleep on. No, we came for another reason. To leave a mark.” 
ஒரு மில்லியன் மக்கள் கூட்டத்தில் (10 லட்சம்) இந்த கோபத்தை வெளிப்படுத்தினார்;
நாம் பிறவி எடுத்திருப்பது, ஏதோ மனிதனாக இந்த உலகில் பிறந்து, சோற்றுக்காக, மரம், செடி, கொடிகளைப் போல வாழ்ந்து, மடிவதற்காக அல்ல! சோம்பேறிகளாக (கவுட்ச் பொடாடோ Couch Potato) வாழ்வதற்கும்,  சோபாவில் படுத்துக் கொண்டு தூங்குவதற்கும் அல்ல! நாம் வேறு ஒரு காரணத்துக்காக இங்கு பிறவி எடுத்திருக்கிறோம்! எதையாவது சாதித்து விட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இங்கு பிறந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் இளைஞர்களே! என்று போப் பிரான்சிஸ் சற்று காட்டமாகவே கூறி உள்ளார்;
கவுட்ச் couch என்றால் சாய்வு நாற்காலி; அதில் படுத்துக் கிடக்கும் பொடாடோ (potato) என்னும் உருளைக் கிழங்கு; எதற்கும் உதவாத சோம்பேறி!
இளைஞர்களே! உங்களை கம்யூட்டரும் அதில் உள்ள விளையாட்டுக்களும் தனிமைப் படுத்தி விட்டது! யாருடனும் பேசுவதில்லை; அதிலேயே மூழ்கிவிட்டீர்கள்! நீங்களும் தனிமைப்பட்டு, உங்களைச் சார்ந்தவரையும் தனிமைப்படுத்தி விட்டீர்கள்! 

சீசஸ் கிறிஸ்து, தன் வாழ்நாளில் ஆபத்துக்களையே எதிர்நோக்கிய இறைவன்; அவர் வசதியில், பாதுகாப்பில், சௌகரியமாக வாழ்ந்த இறைவன் அல்ல; “Jesus is the “Lord of risk…. Not the Lord of comfort, security and ease.”
இந்த உலகம் உன்னத நிலையை அடைய, பொருளாதார வளர்ச்சியில் வளர, நீங்கள், சோம்பேறி என்னும அந்தச் சோபாவை விட்டு எழுந்து வாருங்கள்! உங்களின் அடையாளத்தை இந்த உலகில் பதித்துவிட்டுப் போங்கள்! உங்களைப் பார்த்து யாரும், “இளைய சோம்பேறி என்று சொல்லாமல், பம்பரமாகச் சுற்றும் இளைஞன்” என்று சொல்லும்படி பெயரெடுங்கள் என்று இளைஞர்களின் கரகோசத்துக்கு நடுவில் இந்த வார்த்தைகளை உதிர்த்தார்!
“You want others to decide your future?” No!
“You want to fight for your future?” Yes!
"மற்றவர், உங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க அனுமதிக்காதீர்கள்!"

நமக்கு இப்போது வசதிகளின் மேல் ஆசை வந்துவிட்டது; அதில்தான் சந்தோஷம் இருப்பதாகவே உணர்கிறோம்! அதன் உள்ளேதான் நம் வாழ்க்கையை கொண்டு வந்து வைத்துவிட்டோம்! இப்படியே வாழ்ந்து நம் ஒவ்வொருவரின் கர்மாவையும் (fate) இழந்து, வாழ்வை முடித்துக் கொள்கிறோம்!
வாழ்வில், எதையாவது சாதிப்பவராக இருங்கள்!

**

Saturday, July 30, 2016

டைவர்ஸ் ஆன மனைவியின் விலை!

டைவர்ஸ் ஆன மனைவியின் விலை!

பைரேலி காலண்டர் அட்டையில் மாடல் அழகியாக போஸ் கொடுப்பவர் கிறிஸ்டியானா எஸ்டிரேடா என்பவர்; இவர் பிரபல்யமான அழகி; இவருக்கு இப்போது 54 வயதாகிறது; (கிழவி); இவரைக் கோடீஸ்வரர் ஒருவர், இவர் அழகியாக இருக்கும்போது, திருமணம் செய்து கொண்டார்; அவர் சவுதி நாட்டைச் சேர்ந்தவர் (ஷேக் போலும்!); அந்த கணவருக்கு இப்போது 61 வயதாகிறது;
இருவருக்கும் கணவன்-மனைவி சண்டை வந்து பிரிந்து விட்டார்கள்; அந்த அழகி-மனைவி, தனக்கு 238 மில்லியன் ஈரோ பணம் வேண்டும் என்று கோர்ட்டில் வக்கீல் மூலம் வழக்கு போடுகிறார்; ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்; ஒரு ஈரோ பணம் என்பது 75 இந்திய ரூபாய்க்கு சமம்);
மனைவி சொல்கிறார், “நான் வசதியாக வாழ்ந்தவள்; என்னால் சாதாரணமாக வாழ முடியாது; எனவே எனக்கு அவ்வளவு பணம் தேவைப்படுகிறது” என்று வக்கீல் வைத்து வாதாடினார்; இந்த கணவர் மூலம் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளதாம்;
ஆனால், கோர்ட்டில் சமாதானம் ஏற்படுகிறது: அதில் 75 மில்லியன் ஈரோ பணம் மதிப்புக்கு சொத்துக்களாகவும், 53 மில்லியன் ஈரோ பணம் ரொக்கமாகவும் கொடுத்தால் போதும் என்று அழகியின் வக்கீல் சமாதானம் செய்து வைக்கிறார்; அதையே கோர்ட் தீர்ப்பாக வழங்கி விட்டது;
அழகிக்கு ஒரே சந்தோஷமாம்! “I am very grateful for today’s ruling. I have lived in the United Kingdom since 1988 and am thankful for access British courts. I never wanted to be here. I always wanted to resolve the matter amicably. …. Walid (husband) and I were happily married for 12 years and have a beautiful daughter together. He took both a second wife and divorced me without my knowledge.”
கோர்ட்டில் அழகி எஸ்ட்ரடாவை எதிர் வக்கீல் குறுக்கு விசாரனை செய்திருக்கிறார்; அதில், தனக்கு வருடத்துக்கு ஒரு மில்லியன் ஈரோ பணம் துணிமணி செலவுக்கு மட்டுமே தேவைப்படும் என்று கூறி உள்ளார்; (சுமார் 75 லட்சம் இந்தியப் பணம்); அவர் அணியும் ஷூக்களுக்கு (செருப்புக்கு) 21,000 ஈரோ பணம் தேவைப்படுமாம் (ஒரு ஈரோ பணம் என்பது 75 இந்திய ரூபாய்க்கு சமம்);
அவர், குடும்பநல கோர்ட் நீதிபதியைப் பார்த்து, “I am Christina Estrada. I was a top international model. I have lived this life. This is what I am accustomed to. It is difficult to convey the extraordinary level of luxury and opulence we were fortunate enough to enjoy.” நான் வாழ்ந்த வாழ்க்கை என்ன! இருந்த இருப்பு என்ன! எனக்கு அதே போல வாழ்க்கை முறை வேண்டும் யுவர் ஆனர்!
கணவருக்குச் சொந்தமான லண்டனில் உள்ள ஒரு மிகப் பெரிய பங்களாவை இந்த அழகிக்காக கொடுத்து விட்டார்; அதன் விலை மட்டும் 60 மில்லியன் ஈரோ பணம்; இது இல்லாமல் இன்னொரு வீடும்.. பங்களாவும் கொடுத்து விட்டார்; அது லண்டனில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் உள்ளதாம்! ஐந்து விலை உயர்ந்த கார்களைக் கொடுத்துள்ளார்; கார்களின் விலை மட்டும் சுமார் 5 லட்சம் ஈரோ பணத்துக்கு இணை; அதில் மூன்று கார்கள் லண்டனில் இருக்கும்போது ஓட்டிக் கொள்வதற்காகவும், இரண்டு கார்கள் அமெரிக்காவில் இருக்கும்போது ஓட்டிக் கொள்வதற்காகவுமாம்!
எதிர் வக்கீலுக்கு (கணவரின் வக்கீலுக்கு) கோபம் வந்துவிட்டது; அவர் நீதிபதியைப் பார்த்து, இந்த அழகிக்கு ஏற்கனவே கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன; அதனால், மேலும் கணவரிடமிருந்து 53 மில்லியன் ஈரோ பணம், சொத்து கொடுப்பதாக தீர்ப்பு கொடுத்திருப்பது கனவுலகில் இருப்பது போன்றதே! என்று பொரிந்து தள்ளி இருக்கிறார்;
அழகியின் வக்கீல் கூறுகிறார், “கணவருக்கு இருக்கும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் சுமார் 8 பில்லியன் ஈரோ; (ஒரு பில்லியன் என்பது 100 கோடி; இந்தியப் பணத்தில் 800 கோடி X ரூ.75); அந்தக் கணவருக்கு மூன்று மனைவிகள் உண்டாம்;
இந்த அழகி எஸ்ட்டிரடா அமெரிக்க சிட்டிசன்; கடந்த 20 வருடங்களாக இங்கிலாந்தில் வசித்து வருகிறார்; கணவரின் பங்களாவில் வசித்து வந்தார்; அந்த பங்களா மட்டும் 33 ஏக்கர் பரப்பளவு கொண்டது;
இந்த அழகியை பிடிக்கவில்லையே என்னவோ தெரியவில்லை; மனைவிக்கு தெரியாமலேயே அவளை டைவர்ஸ் செய்து விட்டாராம்; முகமதிய சட்டப்படி கணவர் விரும்பினால் மனைவியை டைவோர்ஸ் செய்யலாமாம்! இது நடந்தது 2012-ல்; ஏன் இந்த அழகியை டைவோர்ஸ் செய்தார் என்று ஆராய்ந்து பார்த்தால், கணவர், அப்போதுதான் 25 வயது லெபனான் அழகியை பிடித்து விட்டாராம்; அவளைத் திருமணம் செய்து கொள்வதற்காக, லண்டன் அழகியை கழற்றி விட்டுவிட்டுள்ளார்; அந்த 25 வயது லெபனான் அழகிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறதாம்; என்ன கண்றாவியோ!
இதுவரை டைவர்ஸ் வழக்குகளில் இவ்வளவு பணம் கொடுத்து செட்டில் ஆனதில்லையாம்! ஆமாம்! அழகி, பிடித்தாலும் பிடித்தார் ஒரு புளியங்கொம்பை அல்லவா பிடித்துள்ளார்!

**

இரட்டையர்கள் (Twin Brothers)

இரட்டையர்கள் (Twin Brothers)

பெல்ஜியம் நாட்டில் இந்த இரட்டையர்கள் வாழ்ந்து வருகிறார்கள்; இவர்களுக்கு இப்போது 103 வயதாகி விட்டது; பெயிட்டர் என்றும் பாலஸ் என்றும் இவர்களின் பெயர்கள்; இவர்கள் இருவருமே திருமணமே செய்து கொள்ளவில்லையாம்; ஒரே அறையில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக வாழ்ந்து வருகிறார்களாம்;
எப்போதாவது இவர்களுக்கு வருத்தம் வருமாம்! நாமும் திருமணம் செய்து கொண்டு மனைவி மக்கள் பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்திருக்காலாமோ என்று ஏங்கியதுண்டாம்! ஆம், தனி வாழ்க்கையில் ஒரு விரக்தி ஏற்படும் என்பது இவர்கள் மூலம் கண்ட உண்மையே!
இருவரும் எப்போதும், ஸ்மார்ட்டாக உடை அணிந்து கொண்டு இருப்பது வழக்கமாம்! இருவருமே கோர்ட் மாஜிஸ்டிரேட்டாக வேலை செய்து ஒய்வு பெற்றவர்களாம்!
இருவரும் எப்போதுமே பிரென்ச் மொழியில் பேசிக் கொள்வார்களாம்! ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி, பியரி என்றும் பால் என்றும் கூப்பிட்டுக் கொள்வார்களாம்!
இவர்கள் இன்னும் நீண்ட காலம் வாழ வாழ்த்துவோம்!
இவர்கள் இன்னும் இரண்டு வருடங்கள் வாழ்ந்தால், ஏற்கனவே 105 வயது வரை வாழ்ந்து உலக சாதனை செய்த இரட்டையர்களான அமெரிக்க ட்வின் சகோதரர்களான க்ளென், டேல் இவரின் சாதனையை முறியடிப்பார்களாம்!
வாழட்டும், வாழ்த்துவோம்!

**

Friday, July 29, 2016

அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 –(2)

அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 –(2)
டொனால்டு டிரம்ப்: Donald Trump:
அமெரிக்காவிலேயே இவர் பெரிய ரியல் எஸ்டேட் ஓனர்: பெரிய பணக்காரர்: எங்கு பார்த்தாலும் இவரின் வியாபாரம்தான்; இப்படிப்பட்டவர் அமெரிக்க அதிபர் ஆக ஆசைப்பட்டதில் வியப்பில்லைதான்!
அமெரிக்காவில் இரண்டு பெரிய கட்சிகளே உள்ளன; ஒன்று, டெமாக்ரடிக் கட்சி (இதில்தான் ஒபாமா அதிபாராக இப்போது இருக்கிறார்); மற்றொரு பெரிய கட்சி ரிபப்ளிக்கன் கட்சி;  இதுவே அமெரிக்காவில் பழைய கட்சி என்றும் சொல்வார்கள்; அதனால்தான் இந்த கட்சியை ரிபப்ளிகன் கட்சி என்றும் ஜிஓபி கட்சி என்றும் சொல்வர்; ஜிஓபி என்றால் GOP = Grand Old Party. (இந்தியாவில், சுதந்திரம் வாங்கும்போது காங்கிரஸ் கட்சி இருந்ததுபோல, அமெரிக்கா சுதந்திரம் வாங்கும்போது இருந்த பழமையான கட்சி இது); இந்த ரிபப்ளிக்கன் கட்சியில்தான் இவர் அதிபர் வேட்பாளராக நிற்கிறார்;
இந்த டொனால்டு டிரம்ப் தகப்பனாரும் பெரிய பணக்காரரே! அவர் பெயர் ப்ரெட் சி.டிரம்ப் Fred C. Trump. இவரும் ரியல் எஸ்டேட் வியாபாரிதான்; மகன் டிரம்ப் சொல்கிறார், “என் தகப்பனாரிடம் நான் நிறைய வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்; அவரிடம் நான்  ஐந்து வருடங்கள் கூடவே இருந்து கற்றுக் கொண்டேன்” என்கிறார்; அதேபோல, தகப்பனும் மகனை விட்டுக் கொடுக்காமல் புகழ்கிறார், “என் மகன் எனக்கு அதிகமாக உதவியாக இருந்தான்; அவன் என்னுடன் சேர்ந்து வியாபாரம் செய்த காலத்தில் மிகப் பெரிய லாபம் கிடைத்தது: பெரிய வேலைகளை எல்லாம் எடுத்துச் செய்தோம்; என் மகன் தொட்டதெல்லாம் பொன்னாகும்” என்று புகழ்கிறார்;
அமெரிக்க நியூயார்க் நகரில் இவர்கள் பேரைச் சொன்னால் தெரியதவர்களே கிடையாது; அந்த அளவுக்கு பிரபல்யம் ஆனவர்கள்; இவர்கள் கட்டிய எல்லாக் கட்டிங்களுக்கும் டிரம்ப் என்றே பெயர் சூட்டி உள்ளனர்;
இவர் 1946ல் பிறந்தவர்; இப்போது 70 வயதாகிறது; ஜூன் 14ல் பிறந்தவர்; பிறந்த தேதியின் கூட்டுத் தொகை 5; ஐந்து எண் வெற்றியைக் குறிக்கும்; எனவேதான் இவர் பணக்கார வீட்டில் பிறந்து பணக்காரராகவே இருக்கிறார் என கருதலாம்; இவர் நியூயார்க் சிட்டில் உள்ள மேன்ஹாட்டன் ஏரியாவில் டிரம்ப் டவர் என்று ஒரு பெரிய வீட்டை.... பங்களாவை..... அரண்மனையை கட்டி அங்கு குடியிருக்கிறார்; இவர் செய்துவரும் வியாபார நிறுவனத்துக்குப் பெயர் தி டிரம்ப் ஆர்கனைஷேசன்;
இவர் முதலில் இவானா என்பவரை திருமணம் செய்தார்; 1977ல்; பின்னர் மரியா மேப்பில்ஸ் என்பவரை 1993ல் திருமணம் செய்தார்; பின்னர் மெலனியா என்பவரை 2005ல் திருமணம் செய்து அவருடன்தான் இப்போது வாழ்கிறார்; மூத்த மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2-வது மனைவி மூலம் ஒரு குழந்தை; மூன்றாவது மனைவி மூலம் ஒரு குழந்தை; ஆக 5 குழந்தைகள் உள்ளனர்; முதல் இரண்டு மனைவிகளையும் டைவர்ஸ் செய்து விட்டாராம்; 2-வது மனைவி மரியா சினிமா நடிகையாம்;
இந்த டிரம்பின் தாத்தா, அவரின் 16 வயதில் ஜெர்மனி நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு பிழைப்புத்தேடி வந்தவர்; அலஸ்காவில் தங்கம் கிடைக்கிறது என்று மக்கள் குவிந்தபோது, இவரின் தாத்தா சாப்பாட்டுக் கடை திறந்து வியாபாரம் பார்த்து, அதில் கோடி கோடியாகச் சம்பாதித்து விட்டாராம்; இந்த பணம், சொத்துக்கள்தான், இந்த டிரம்பின் தகப்பனாருக்கு கிடைத்திருக்கிறது;
டிரம்பின் அம்மா மேரி ஸ்காட்லாந்துகாரர்; இவரும் தன் 17 வயதில் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்து வந்தவராம்; இங்கு அமெரிக்காவுக்கு வந்து, நியூயார்க் நகரில் ஆயா வேலை போன்ற வீட்டு வேலை செய்தவராம்; அப்பா டிரம்பும், அம்மா மேரி டிரம்பும் 1936ல் நியூயார்க் நகரில் சந்தித்துக் கொண்டபோது, திருமணம் செய்து கொண்டனராம்;
டொனால்டு டிரம்ப், “தொட்டதெல்லாம் பொன்னாகும்” என்று அவரின் அப்பா சொன்னது உண்மைதானோ! இன்று டொனால்டு டிரம்ப் Republican கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர்!
**


அமெரிக்க தேர்தல் 2016 –(1)

அமெரிக்க தேர்தல் 2016 –(1)
திருமதி. கிளாரி கிளின்டன்
அமெரிக்காவில் தேர்தல் களை கட்டிவிட்டது: இரண்டு கட்சிகள்; ஒன்று, டெமாக்ரடிக் கட்சி; இதை கழுதைக் கட்சி என்பர்; சின்னம் கழுதை; இப்போதுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தக் கட்சியைச் சேர்ந்தவரே! இவர் இரண்டு முறை அதிபராக இருந்து விட்டார்; இனி மூன்றாவது முறை தேர்தலில் இவர் நிற்க முடியாது; அதுவே அமெரிக்க சட்டம்; எனவே அவர் கட்சியைச் சேர்ந்த திருமதி. கிலாரி கிளின்டன் அதிபர் தேர்தலில் போட்டி இடுகிறார்; இவர் ஏற்கனவே அதிபராக இருந்த கிளிண்டன் அவர்களின் மனைவியே!
இந்த கிளாரி கிளின்டனுக்கு ஒரு பெருமையும் சேர்ந்துள்ளது; அமெரிக்க நாடு சுதந்திரம் அடைந்து, ஜனநாயக நாடாகி இதுவரை சுமார் 240 வருடங்கள் ஓடி விட்டன; இந்த 240 வருடங்களாக, இதுவரை எந்தப் பெண்மணியும் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லையாம்! அதிசயமாக உள்ளது! பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசிய நாடு அமெரிக்கா; பெண்கள் முன்னேற்றமாக உள்ள நாடு அமெரிக்கா; ஆனாலும், ஒரு பெண்மணி அதிபர் வேட்பாளராகக்கூட நிற்கவில்லையாம்! ஆச்சரியமே!
இத்தகைய சம்பவத்தை, திருமதி கிளாரி பெருமையுடன், வேட்பாளர் ஏற்பு உரையில் கூறி உள்ளார்; “When there are no ceilings, the sky is the limit.”
பெனிசில்வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்பியா நகரில்தான், முதன் முதலில் அமெரிக்க அரசியல் சாசன சட்டம் எழுதப்பட்டது; அப்போது, கிழக்குப் பகுதியில் உள்ள 13 மாநிலங்கள் மட்டும் சேர்ந்து அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தை  முதன்முதலில் இயற்றினார்கள்; எனவே இங்குதான் அமெரிக்காவில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளும் தங்களின் அதிபர் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கன்வென்ஷன் கூட்டம் நடக்கும்;
அதன்படி, திருமதி. கிளாரி கிளின்டன் அதிபர் வேட்பாளராக இங்கு இன்று பேசியுள்ளார்; அவரின் ஆதரவாளர்கள் பலூன்களை பறக்க விட்டு அவரை திக்குமுக்காடச் செய்து விட்டனர்; இப்போதுள்ள அதிபர் ஒபாமாவும் இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்;
திருமதி கிளின்டன் பேசும்போது, “தன் கட்சியில் ஏற்கனவே இருந்து சாதித்த டெமாக்ரடிக் கட்சித் தலைவர்களை நினைவு கூர்ந்தார்; ஆப்ரஹாம் லிங்கன் கூட இந்தக் கட்சிதான்; பெண்கள் முன்னேறியதைப் பற்றி பெருமையுடன் பேசினார்; சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெண்களுக்கு அமெரிக்காவில் ஓட்டுரிமையே இல்லை என்றும் வருத்தப்பட்டார்; ஆனால் இன்று பெண்கள் அதிபராக போட்டி இடுவதற்கு வழி ஏற்பட்டது என்பது பெருமையே என்றார்; ஏற்கனவே 8 வருடங்களுக்கு முன், அதிபராக ஆசைப்பட்டு கட்சி தேர்தலில் நின்றார்; அப்போது ஒபாமாவும் எதிர்த்து நின்றதால், அந்த வாய்ப்பு ஒபாமாவுக்குப் போனது, இவருக்கு கிடைக்கவில்லை; ஆனால் இப்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது பெருமை என்றும் கூறினார்:
பலவீனம் என்று பார்த்தால், இவரின் கணவர் கிளிண்டன் ஏற்கனவே அதிபராக இருந்தபோது, சில பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டார்; இவரும் இப்போது ஈமெயில் பிரச்சனையில் சிக்கி உள்ளார்: அதை எதிர்க்கட்சி கடுமையாக விமர்சிக்கிறது; இவரை எதிர்த்து இவர் கட்சியில் அதிபர் சீட் கேட்டவர் செனட்டர் பெர்னி சான்டர்ஸ்; அவரை வென்றுதான், இப்போது அதிபர் வேட்பாளராக களத்தில் உள்ளார்;
இவரை எதிர்த்து, மாற்றுக் கட்சியான ரிபப்ளிகன் கட்சியில் நிற்கும் அதிபர் வேட்பாளர் பணக்காரரான டொனால்டு டிரம்ப்;

**

Saturday, June 4, 2016

Global Entry Programme

விசா
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கும், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கும் வந்து போகிறவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியன் பேர் இருக்குமாம்;
இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் வசிப்பவர்கள், இந்தியாவில் ஆழ வேரூன்றி இருப்பவர்கள் சுமார் மூன்று மில்லியன்கள் இருக்கலாமாம்;
இவர்கள் போவதற்குறிய விசா நடைமுறைகள் சற்று சிரமமாக இருந்தது; அதை, இப்போது எளிதாக்கி உள்ளனராம்; அமெரிக்காவில் குறிப்பிட்ட 40 விமான நிலையங்களில் இது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனராம்; அமெரிக்காவில் இப்படி எளிய முறை விசா வசதியை பெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா ஒன்பதாவது நாடாகச் சேர்ந்துள்ளது;
இதன்படி செக்யூரிட்டி கிளியரன்ஸ் நடைமுறை வெகு சீக்கிரம் முடிந்து விடும் வாய்ப்பு உள்ளது; இதற்கான உடன்படிக்கையை (எம்.ஓ.யு) இரு நாட்டின் அதிகாரிகளும் கையெழுத்துச் செய்துள்ளனராம்; இந்தியாவின் அமெரிக்க அம்பாசிடர் அருண் கே. சிங் அவர்களும், யு.எஸ். கஸ்டம்ஸ் டெபுடி கமிஷனர் கெல்வின் கே. மெக்அலீனன் இருவரும் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளனர்;
இனி அமெரிக்க விசா நடைமுறைகள் எளிதாகிவிடும் என்கிறார்கள்.

*

இந்திய ஐகோர்ட்டுகள்

இந்தியாவில் மொத்தம் 24 ஐகோர்ட்டுகள் உள்ளன; இதில் இருக்கவேண்டிய மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1079 ஆக இருக்க வேண்டும்; ஆனால் இப்போதோ, 621 நீதிபதிகள் மட்டும் தான் பணியில் உள்ளனர்; மீதி 458 நீதிபதிகள் இன்னும் நியமிக்கப்பட வேண்டும்; அந்த இடங்கள் காலியாக உள்ளன;
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன், மூத்த நான்கு நீதிபதிகள் கொண்ட அமைப்பை “கொலீஜியம்” என்பர்; இந்த அமைப்புதான், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளை நியமனம் செய்யும் அமைப்பு; அந்த அமைப்பு புதிய நீதிபதிகளை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது; ஆனால் அதை மத்திய அரசு, தேசத்தின் நன்மை என்ற காரணத்தால் சுப்ரீம் கோர்ட்டுக்கே மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பி உள்ளதாம்;
அலகாபாத் ஐகோர்ட்டில் மட்டுமே, 160 ஐகோர்ட் நீதிபதிகள் இருக்க வேண்டிய இடத்தில், 81 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்;
சென்னை ஐகோர்ட்டில் 37 நீதிபதிகள் இடம் காலியாக உள்ளது; மொத்தம் 75 நீதிபதிகள் கொண்ட அமைப்பு சென்னை ஐகோர்ட்;
ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த நேஷனல் ஜூடிசியல் அப்பாய்ண்ட்மெண்ட் கமிஷன் என்னும் என்.ஜே.ஏ.சி அமைப்பு சட்டத்தை சுப்ரீம்கோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை; அதில் அரசியல் தலையீடு இருப்பதுபோல உள்ளதாம்;
இந்த என்.ஜே.ஏ.சி. சட்டத்தை 2014 ஆகஸ்டு 13ல் மக்கள் சபையிலும், 2014 ஆகஸ்டு 14ல் மேல்சபையிலும் கொண்டு வந்து சட்டமாகியது; இது 99வது அரசியல் திருத்தச் சட்டம் ஆனது; அதை ஜனாதிபதியும் 2013 டிசம்பர் 31ல் ஒப்புதல் கொடுத்து சட்டத்தை நடைமுறை ஆக்கினார்; இது 2015 ஏப்ரல் 13லிருந்து நடைமுறைக்கு வரும் என்றது;
இந்த புதிய சட்டப்படி, இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி, அதன் இரண்டு மூத்த நீதிபதிகள், சட்ட அமைச்சர், இரண்டு எமினென்ட் நபர்கள் (முக்கியஸ்தர்கள்), இவர்கள் கொண்ட அமைப்பாக அது இருக்க வேண்டும்; இந்த முக்கியஸ்தர்களை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை, தலைமை நீதிபதியும், பிரதம மந்திரியும், எதிர்கட்சி தலைவரும் கொண்ட குழுவே தேர்ந்தெடுக்க வேண்டும்;
ஆனால், இதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொள்ளாமல், இந்த கொலீஜியம் நடைமுறையே தொடரலாம் என்றும், புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று சொல்லிவிட்டது;
ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும்போது, ஐகோர்ட் கொலியம் அமைப்பு, புதிய நிதிபதிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து, மத்திய அரசுக்கு அனுப்பும்; அது அதை சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் அமைப்புக்கு அனுப்பும்; சுப்ரீம் கோர்ட் கொலிஜயம் அந்த புதிய நீதிபதிகளின் பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்புவர்; ஜனாதிபதிதான் புதிய நீதிபதிகளை சட்டபூர்வமாக நியமிப்பார்;

**

Friday, June 3, 2016

நாலாவது குண்டு யாருடையது?

மும்பாய் ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு;
1948 ஜனவரியில் நடந்த மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய விசாரனை வேண்டுமாம்; புதிய கமிஷன் நியமித்து, அதில் உள்ள சதியை மீண்டும் விசாரிக்க வேண்டுமாம்; டாக்டர் பங்கஜ் பாண்டிஸ் என்பவர் இந்த பொதுநல மனுவை மும்பாய் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்; இவர் அபினவ் பாரத் என்ற அமைப்பின் டிரஸ்டி ஆவார்; ஏற்கனவே மகாத்மா காந்தி கொலை பற்றி விசாரனை செய்த ஜே.எல்.கபூர் கமிஷன், கொலை சதியை முழுமையாக வெளிக் கொண்டுவரவில்லை என்று கூறுகிறார்;
ஏற்கனவே நடந்த அந்த வழக்கில் அரசு தரப்பில், “காந்தியை, ஒரு கொலையாளி, தன் ரிவால்வார் மூலம் சுட்டான் என்றும், அந்த ரிவால்வார் மொத்தம் ஏழு குண்டுகள் கொண்ட துப்பாக்கி என்றும், அதில் மூன்று குண்டுகள் காந்தியின் உடம்பில் பாய்ந்தது என்றும், மீதி நான்கு குண்டுகளுடன் அந்த ரிவால்வாரை போலீஸ் பறிமுதல் செய்தது” என்றும் சொல்லப் பட்டுள்ளது;
ஆனால், இந்த பொதுநல வழக்கின் கூற்றுப்படி, “1948 ஜனவரி 30ல், காந்தியின் உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளது என்றும், அதற்கு ஆதாரமாக அன்றைய தின செய்தித் தாள்களிலும் அவ்வாறே நான்கு குண்டுகள் பாய்ந்து இறந்ததாகவே சொல்லப்பட்டுள்ளது” என்றும் கூறி உள்ளார்;
அப்படி என்றால், அந்த நான்காவது புல்லட் எங்கிருந்து வந்தது, யார் சுட்டது என்றும் கேள்வி எழுப்பி, அதனால் புதிய விசாரனைக் கமிஷன் கேட்டுள்ளார்;
இது மும்பாய் ஐகோர்ட்டில் ஜூன் 6ம் தேதி மும்பாய் ஐகோர்ட் தலைமை நீதிபதி DH வகேலா தலைமை தாங்கும் பெஞ்சில் வர இருக்கிறது;
நாத்துராம் கோட்சே சுட்டதில் மூன்று புல்லட்டுகள் மட்டுமே காந்தி உடலில் பாய்ந்தது, மீதி நான்கு புல்லட்டுகள் அவன் ரிவால்வாரிலேயே இருந்துள்ளது என்றால், காந்தி உடலில் பாய்ந்த நான்காவது புல்லட் யாருடையது என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்; நாத்துராம் கோட்சே தவிர, வேறு கொலையாளி இருக்கிறானா என்று கேட்கிறார்;
காந்தி கொலையில் வேறு சதி உள்ளதா என்றும், இந்த கொலைக்கும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கும் சம்மந்தம் உள்ளதா என்றும் கேட்கிறார்; காந்தி-ஜின்னா பேச்சு, காந்தி பாகிஸ்தான் சென்று மக்களை நேருக்கு நேர் சந்திக்க முடிவு செய்திருந்தது, அதற்கு முன்பே காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணி, இவைகளும் விசாரிக்கபட வேண்டியதே என்கிறார்;
காந்தி கொலை வழக்கில் வீரசவர்க்கர் சேர்க்கப்பட்டு, முடிவில் அவர் விடுதலை ஆனார்; இந்த வீரசவர்க்கர்கருக்கு எதிராக, கபூர் கமிஷன் விசாரனையில் சில விரும்பத்தகாத சொற்கள் சொல்லப்பட்டுள்ளன என்றும் அதையும் நீக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்; வீரசவர்க்கர் மீது இந்த மனுவை தாக்கல் செய்த டாக்டர் பங்கஜ் அபிமானம் உள்ளவராம்;
**