Sunday, May 25, 2014

வினைப்பயனை வெல்வதற்கு

வினைப் பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பது எனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சே மெய்
விண்ணுறுவார்க்கு இல்லை விதி.

வினைப்பயனை வெல்வதற்கு = தாம் செய்த வினைப்பயனை வெல்வதற்கு;
வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை = வேதம் முதலிய அனைத்து நூல்களிலும் வழி இல்லை;
நினைப்பது என கண்ணுறுவது அல்லால் = தாம் நினைப்பதைத்தான் காண்கிறோம் அல்லாது;
கவலைப்படேல் நெஞ்சே = கவலைப் படாதே மனமே;

மெய் விண்ணுறுவர்க்கு இல்லை விதி = மெய்யாகிய முக்தி நெறி நிற்பவர்க்கு விதி என்பதே இல்லை;

கொண்ட கரு அழிக்கும்

நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறும் காலத்தில்
கொண்டகரு அழிக்கும் கொள்கை போல் - ஒண் தொடி
போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம் அயல்
மாதர் மேல் வைப்பார் மனம்.

நண்டு = நண்டு;
சிப்பி = சிப்பி;
வேய் = மூங்கில்;
கதலி = வாழை;
நாசமுறும் காலத்தில் = அழியும் நேரத்தில்;
கொண்ட கரு அழிக்கும் = அவைகளின் கருவான முறையே நண்டு தன் குஞ்சையும், சிப்பி தன் முத்தையும், மூங்கில் தன் அரிசியையும், வாழை தனது குலையையும் இழந்துவிடும்;
கொள்கைபோல் = அதுபோல;
ஒண்தொடி = வளையல் அணிந்தவளே!
போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம் = வித்தை, செல்வம், அறிவு இவைகள் அழியும் காலத்திலே;

அயல் மாதர் மேல் வைப்பார் மனம் = பிற பெண்கள் இடத்திலே ஆசை கொள்வார்கள்.

வேதாங்கம்

வேதாங்கம் (வேதத்துக்கு அங்கம்):
சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, ஜோதிடம் ஆகிய ஆறும் வேதத்திற்கு அங்கம்.

1. சிக்ஷை: வேதங்களை இராகத்துடன் ஓத வேண்டும். இல்லை என்றால் உரிய பலன் கிடைக்காது. இதைச் சொல்வது சிக்ஷை.

2. கற்பம்: வேதங்களில் சொல்லி உள்ள செயல்களின் முறைகளை சொல்வது கற்பம்.

3. வியாகரணம்: வேதங்களின் எழுத்து, சொல், பொருள் இவைகளின் இலக்கணங்களைச் சொல்வது வியாகரணம்.

4. நிருத்தம்: வேதப் பொருளை நிச்சயிப்பது நிருத்தம்.

5. சந்தோவிசிதி: வேத மந்திரங்களில் காயத்திரி முதலிய மந்திரங்களின் சந்தங்களின் பெயர்களையும், அவைகளுக்கு எழுத்து எவ்வளவு என்பதையும் சொல்வது சந்தோவிசிதி.


6. ஜோதிடம்: வேதத்தில் விதித்துள்ள கருமங்களை செய்யும் கால நேரங்களைச் சொல்வது ஜோதிடம்.

சிருஷ்டி இரகசியம்

இந்த பிரபஞ்சத்தின் ஒரு ஆயுள்காலம் 43,20,000 மனித வருடங்களை கொண்டது.
இதை மொத்தம் நான்கு பெரும் யுகங்களாகப் பிரிப்பர்.
1, கிருத யுகம் = 17,28,000 மனித வருடங்களைக் கொண்டது.
2, திரேத யுகம் = 12,96,000 மனித வருடங்களைக் கொண்டது.
3, துவாபர யுகம் = 8,64,000 மனித வருடங்களைக் கொண்டது.
4, கலி யுகம்  = 4,32,000 மனித வருடங்களைக் கொண்டது.
ஆக இந்த நான்கு யுகங்களும் சேர்ந்து மொத்தம் 43,20,000 மனித வருடங்களைக் கொண்டது.
இதில் ஒரு விசித்திரமான சிறப்பு என்னவென்றால், இந்த யுகங்களின் வருடங்களின் எண்ணிக்கையின் கூட்டுத்தொகை 9 வரும்.
ஒவ்வொரு யுகங்களின் எண்ணிக்கையை கூட்டினாலும் இந்த 9 எண்ணிக்கை வரும். மொத்த ஆயுளைக் கூட்டினாலும் இந்த 9 எண்ணிக்கைதான் வரும்.
இது 4:3:2:1 என்ற விகிதத்தில் அமைந்திருப்பதையும் பார்க்கலாம்.

இந்த 43,20,000 மனித வருடங்கள் சேர்ந்ததுதான் பிரம்மாவின் ஒரு பகல்பொழுது. இன்னொரு 43,20,000 மனித வருடங்கள் முடிந்தால் பிரம்மாவின் ஒரு இரவுப்பொழுது.
இவ்வாறு 360 பகல், இரவு காலங்கள் கழிந்தால் பிரம்மாவுக்கு ஒருவருடம் முடியும்.
இவ்வாறு நூறு வருடங்கள் கழிந்தால் இப்போதுள்ள பிரம்மாவுக்கு ஆயுள் முடியும்.
இந்த நூறு வருடத்தில் முதல் ஐம்பது வருடங்கள் பாத்தும கற்பம் என்றும்; அடுத்த ஐம்பது வருடங்களை வராக கற்பம் என்றும் சொல்வர்.
அதன்படி இப்போது நடந்து கொண்டிருப்பது வராக கற்பம்.

பிரம்மாவின் ஒரு பகல்பொழுதில், இந்த உலகில் 15 மனுக்கள் அரசு செய்வார்கள். ஒவ்வோரு மனுவும் ஒரு அந்தரம் ஆட்சி செய்யும் காலத்தில், தேவேந்திரன், சப்தரிஷிகள் பிறப்பார்கள்.
பிரம்மாவுக்கு இரவு வரும்போது (அதாவது 43,20,000 மனித வருடம் முடிவில்) ஒரு பிரளயம் வரும். அந்த பிரளயத்தில் மூன்று உலகங்களும் அழிந்துவிடும். பின்னர் மகர் உலகத்தில் உள்ளவர்கள் புதிதாக பிறப்பார்கள்.
இதன்படி இந்த பிரபஞ்சம் நிலையில்லாதது, ஆனால் அழிந்து, பின்னர் தோன்றும் இயல்புடையது.
மனுஎன்பவர் சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் பூமியை நிர்வகிக்க தெய்வ உத்தரவால் பிறப்பவர்.
மனுக்கள் மொத்தம் 14 பேர்கள்.
1, சுயாம்புவன்,
2, சுவாரோசிஷன்,
3, உத்தமன்
4, தாமசன்
5, ரைவதன்
6, சாக்ஷூசன்
7, வைவசுவதன்
8, சூரியசாவர்ணி
9, தக்ஷசாவர்ணி
10,பிரம்மசாவர்ணி,
11, ருத்திரசாவர்ணி
12, தர்மசாவர்ணி
13, ரௌசியன்.
14. பௌசியன்
இந்த மனுக்களே ஒவ்வொரு சிருஷ்டியின் போதும் மனித வர்க்கத்தை தோற்றுவிப்பவர்கள். எனவே இவர்களே மனிதர்களுக்கு மூலபிதாக்கள் (அ) மூதாதையர்கள்.
இப்போதுள்ள சிருஷ்டிக்கு மூலபிதாவாக இருப்பவர் வைவசுவத மனு என்பவர். இவர் ஏழாவது மனு.
ஒரு மனுவின் காலம் 43,20,000 மனித வருடங்களைக் கொண்டது.
இவ்வாறு ஆறு மனுவின் காலங்கள் சென்றுவிட்டன. இது ஏழாவது மனுவின் காலம்.


Saturday, May 24, 2014

எட்டுவகை குறைகள்

எட்டு வகை உடல் குறைகள்:
1. குறள்
2. செவிடு
3. மூங்கை
4. கூன்
5. மருள் (ஆணோ, பெண்ணோ என்று அறியமுடியாத உறுப்பு மயக்கம்)
6. குருடு
7. மா (விலங்கு உறுப்பு போன்ற வடிவம்),
8. உறுப்பில்லாப் பிண்டம் (உடல் உறுப்பு குறைந்த உருவம்)

.

பிறவித் துன்பம்

உடலின் 18 வகை குற்றங்கள் (துன்பங்கள்)
  1. பிறப்பு
  2. பசி
  3.  உறக்கம்
  4. அதிசயம்
  5. உவகை
  6. இன்பம்.
  7. நினைத்தல்
  8. பயம்
  9. கையறவு
  10. வியர்த்தல்
  11. நீர்வேட்டல்
  12. வேண்டல்
  13. வெகுளி
  14. மதம்
  15. கேதம்
  16. நோய்
  17. மூப்பு
  18. இறப்பு

அக்குரோணி

பன்னிருவகை தானை: (12 வகை தானைப் படை):
1. யானை ஒன்று, தேர் ஒன்று, குதிரை மூன்று, பதாதி ஐந்து - இவைகள் கொண்டது ஒரு 'பத்தி'.
2. பத்தி மூன்று கொண்டது 'சேனாமுகம்'.
3. சேனாமுகம் மூன்று கொண்டது ஒரு 'குல்மம்'
4. குல்மம் மூன்று கொண்டது 'கணம்'.
5. கணம் மூன்று கொண்டது 'வாகினி'.
6. வாகினி மூன்று கொண்டது 'பிருதனை'.
7. பிருதனை மூன்று கொண்டது 'சமூ'.
8. சமூ மூன்று கொண்டது 'பிரளயம்'.
9. பிரளயம் மூன்று கொண்டது 'சமுத்திரம்'.
10. சமுத்திரம் மூன்று கொண்டது 'சங்கு'.
11. சங்கு மூன்று கொண்டது 'அநீகம்'.
12. அநீகம் மூன்று கொண்டது 'அக்குரோணி'


கூவிளி கொள்ளல்

பேடிக்குரிய 25 வகை இலக்கணம்:
1. நச்சப்பேசல்
2. நல்லிசையோர்தல்
3. ஆண்பெண்ணாமடைவியற்றல்.
4. உச்சியிற் கையைவைத்தல்
5. ஒரு கை வீசி நடத்தல்
6. விழிகளை வேறாச் செய்தல்
7. முலையைவருத்திநிற்றல்
8. கண் சுழல நோக்குதல்
9. நாணுதல்.
10. தொந்தோமென்று தாளமிடல்
11. நடித்தல்
12. காரணமின்றிக் கோபித்தல்
13. அழுதல்
14. ஒருபக்கம் பார்த்தல்
15. இரங்குதல்
16. வருந்தல்
17. யாவரும் இரங்கும்படி பேசுதல்
18. வளைதல்
19. கோதாடல்
20. கூடல்
21. கூவிளி கொள்ளல்
22. மருங்கில் கையை வைத்தல்
23. அதனை எடுத்தல்
24. பாங்கியை நோக்கல்
25. ஏலேலேன்று பாடல்.



அறங்கள்32

முப்பத்திரண்டு அறம்:
1. ஆதுலரக்குச் சாலை
2. ஐயம்
3. அறுசமயத்தார்க்கு உண்டி.
4. ஓதுவார்க்கு உணவு
5. சேலை
6. ஏறு விடுதல்
7. காதோலை
8. பெண்போகம்
9. மகப்பால்
10. மகப்பேறு
11. மகவளர்த்தல்
12. மருந்து
13. கொல்லாமல் விலைகொடுத்து உயிர்நோய் தீர்த்தல்.
14. கண்ணாடி
15. பிறரிற்காத்தல்
16. கன்னிகாதானம்
17. சோலை
18. வண்ணார்
19. நாவிதர்
20. சுண்ணம்
21. மடம்
22. தடம்
23. கண்மருந்து
24. தண்ணீர்பந்தர்
25. தலைக்கு எண்ணெய்
26. சிறைச்சோறு
27. விலங்கிற்கு உணவு
28. பசுவுக்கு வாயுறை
29. அறவைப் பிணமடக்கல்
30. அறவைத்தூரியம்,
31. தின்பண்ட நல்கல்

32. ஆவுரிஞ்சுதறி.

அறிவின் அறிவு

1. ஓர் அறிவு உயிர் = புல், மரம் முதலியன. இவைகள் தனது உடம்பால் தொடுதலை (பரிசத்தை) அறியும் அறிவுடையது.

2. ஈரறிவு உயிர் = முரள், நந்து முதலியன; இவை தொடு உணர்ச்சியுடன், நாக்கால் (நாவால்) சுவையும் அறியும். (முரள் என்பது = அட்டை).

3. மூவறிவு உயிர் = கறையான், எறும்பு முதலியன; இவை மேற்கண்ட இரண்டு அறிவோடு, மூக்கினால் சுவையைநும் அறியும்.

4. நாலறிவு உயிர் = தும்பி, வண்டு முதலியன; இவை மேற்சொன்ன மூன்று அறிவுடன், கண்ணால் உருவத்தையும் அறியும்.


5. ஐயறிவு உயிர் = வானவர், மனிதர், நரகர், விலங்கு, புள்ளு; இவர் மேற்சொன்ன நான்கு அறிவோடு, செவியினால் ஒலியையும் அறிவர். இவர்களுக்கு மனதினால் அறிவும் சிறப்பான அறிவும் உண்டு.

எத்தனையோ டிரில்லியன்கள்!!

தமிழ் எண்கள் எண்ணிலடங்கா!!

அதியுகம் = நூராயிரம் கோடி கொண்டது.
பிரமம் = அதியுகம் நூறாயிரம் கொண்டது.
கோடி = பிரமம் நூறாயிரம் கொண்டது.
அர்ப்புதம் = கோடி பத்துக் கொண்டது.

கணகம் = கோடி நூறு கொண்டது.
கற்பம் = கணிகம் பத்துக் கொண்டது.
நிகற்பம் = கற்பம் பத்துக் கொண்டது.
சங்கம் = நிகற்பம் பத்து கொண்டது.
சமுத்திரம் = சங்கம் பத்து கொண்டது.

தமிழ் பெயர்கள்


பச்சை = மரகதம், திருமால், புதன்.
கச்சை = தழும்பு, கயிறு, கவசம்
செச்சை = வெள்ளாடுக்கடா, சாந்து
மிச்சை = பொய், தரித்திரம், அறிவில்லாமை.
பிச்சம் = ஆண்மயிர், வெள்ளைக்குடை.
கச்சம் = யானையின் கழுத்திலிடும் கயிறு, ஒரு அளவு, மரக்கால்.
எச்சம் = குறைவு, புத்திரன், யாகம்.
அச்சம் = அகத்திமரம், தகட்டு வடிவம், பயம்.
நிசி = இரவு, மஞ்சள், பொன்.
நீர் = சலம், குணம், பூராட நட்சத்திரம்.
பிசி = பொய், சோறு, அரும்பொருள்
சுசி = கோடைகாலம், சுத்தம், நெருப்பு,
சுடர் = விளக்கு, சூரியன், நெருப்பு.

காசு = கோழை, குற்றம், ரத்தினம். 

வீரபத்திரர்


சிவனின் குமாரர்களில் ஒருவர் இந்த வீரபத்திரர்.
சிவனையும், உமாதேவியாரையும், தக்ஷன் அவமதித்ததன் காரணமாக சிவன் கோபித்துக் கொண்டு தனது நெற்றிக் கண்ணை விழிக்க, அதிலிருந்து தோன்றியவர்தான் இந்த வீரபத்திரர். தோன்றியவுடனே இந்த வீரபத்திரர், தக்ஷனைக் கொன்றார். உடனே தேவர்கள் ஒன்றுசேர்ந்து சிவனை கெஞ்சி அவர்கள் செய்த பிழையை மன்னிக்கும்படி கேட்க, சிவனும் மனமிரங்கி, தக்ஷனுக்கு உயிர் கொடுத்தார். ஆனால் தக்ஷனின் தலையை ஒரு ஆட்டுத்தலையாக ஆக்கி விட்டார்.
இந்த வீரபத்திரனுக்கு ஆயிரம் தலைகளும், இரண்டாயிரம் கைகளும், மூவாயிரம் கண்களும் உண்டு.

சங்கரா! சூலபாணியே!

தனதன்நல் தோழா, சங்கரா, சூல
பாணியே, தாணுவே, சிவனே,
கனகநல் தூணே, கற்பகக் கொழுந்தே,
கண்கள் மூன்றுடையதோர் கரும்பே,
அனகனே குமர விநாயக கனக
அம்பலத்து அமரசே கரனே,
உனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே. -- (திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா)

"குபேரனது நண்பனே, நன்மை செய்பவனே, சூலத்தை கையிலே ஏந்தியவனே, அழிவற்றவனே. சிவனே, நல்ல பொற்தூண்போல் என்னைத் தாங்கிப் பற்றுக் கோடாயிருப்பவனே, கற்பகத் தளிரே, மூன்று கண்களையுடைய கரும்பு போன்ற இனியவனே, தூய்மையானவனே விநாயகனுக்கும் முருகனுக்கும் தந்தையே பொன்னம்பலத்திலே ஆடும்  தேவர் தலைவ, தொண்டனாகிய நான் உன் திருவடிகள் இரண்டையும் எனது நெஞ்சினுள்ளே இனிமையாக அனுபவிக்குமாறு நீ திருவருள் புரிவாயாக!

Tuesday, May 20, 2014

தேவரதா

தேவரதா Devavrata
மன்னன் சாந்தனு, கங்கை நதிக்கு போகும்போது, கங்காதேவி என்ற தேவதைப் பெண்ணை (தேவரதா) பார்த்து மயங்கி, ‘நீ யாராக இருந்தாலும், நீதான் என் மனைவியாக வேண்டும் என்றும் உனக்கு என் நாட்டையும் எல்லா சொத்துக்களையும் கொடுக்கிறேன்’ என கேட்கிறார். 

ஆனால், அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொண்ட அந்த தேவதை சில நிபந்தனைகளையும் விதிக்கிறார். ‘நான் யார் என்றும் எங்கிருந்து வந்தேன் என்றும் கேட்கக்கூடாது; நான் செய்யும் நல்லது கெட்டதை ஏன் செய்கிறாய் எனவும் கேட்கக்கூடாது; அப்படி ஏதாவது எனது மனத்துக்கு பிடிக்காமல் நடந்தால், நான் உங்களை விட்டு சென்றுவிடுவேன்’ என நிபந்தனை விதிக்கிறார். 

அதற்கு ஒப்புக்கொண்டு, சாந்தனு மன்னன் அவளை திருமணம் செய்கிறார். அவளுக்கு பிறக்கும் குழந்தைகளை ஒவ்வொன்றாக கங்கை நதியில் தூக்கி எறிந்து விடுவாள். மன்னனும் நிபந்தனையை மீறமுடியாமல், அவளை எதுவும் கேட்க முடியாமல் இருந்தார். அதுபோல 7 குழந்தைகளை கங்கை நதியில் தூக்கி எறிந்து விட்டாள். 

8-வது குழந்தையை தூக்கி கொண்டு போகும்போது, மன்னன் சாந்தனு கோபமாக தடுக்கிறான். ஏன் உன் குழந்தையையே கொடூரமாக கொலை செய்கிறாய் என கேட்கிறார். 

அதற்கு அவள், ‘நீங்கள் எனது நிபந்தனையை மீறி நடந்து விட்டதால், நான் போகிறேன். இந்த 8-வது குழந்தையை நான் கொல்ல போவதில்லை. உங்களிடமே விட்டுவிடுகிறேன். வசிஷ்ட முனிவரின் சாபத்தால்தான் நான், 8 குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன். அதனால்தான் இந்த கொடுமையான செயலை செய்தேன்’ என்று சொல்லி மறைந்து விட்டார். அந்த 8-வது குழந்தைதான் ‘பீஷ்மர்’. இவர் சாந்தனு மன்னனுக்கும் கங்காதேவி என்ற தேவதைக்கும் பிறந்தவர்.

கங்காதேவி தன் குழந்தைகளை ஆற்றில் போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட வசிஷ்டரின் சாபம் தான் என்ன?

வசிஷ்ட முனிவர் காட்டில் தவத்தில் இருக்கிறார். அவருடைய தேவைக்காக ஒரு பசுமாடு இருக்கிறது. அந்த பசுவின் பெயர் ‘நந்தினி’. இந்த பசு மிக தெய்வீக அழகை கொண்டது. அப்போது, வசுதேவர்கள் அவர்களின் மனைவிகளுடன் அந்த காட்டில் உள்ள மலைக்கு வருகிறார்கள். 

அதில், ஒரு வசுதேவரின்  மனைவி இந்த நந்தினி பசுமீது ஆசை கொண்டு, அது தனக்கே சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்று அவளின் கணவனை கேட்கிறாள். அந்த பசுவின் பாலை குடித்தால் தேவர்கள் ஆவார்கள். ஆனால் வசுதேவர்கள் ஏற்கனவே தேவர்களாக இருப்பதால், அந்த பசு தேவையில்லை என்று அவள் கணவர் கூறினார். ஆனாலும் அதை கேட்காத அந்த தேவதை அது தனக்கு வேண்டும் என அடம்பிடிக்கிறாள். வேறு வழியில்லாமல், வசிஷ்டர் இல்லாத நேரத்தில் அந்த பசுவை பிடித்துக் கொண்டு தேவலோகம் சென்று விடுகின்றனர். 

வசிஷ்டர் பசுவை காணமல் தேடி, அவரின் ஞானதிருஷ்டியால் அந்த பசு தேவலோக வசுதேவர்களிடம் இருப்பதை அறிந்து, கோபம் கொண்டு சாபமிடுகிறார். ‘இந்த வசுதேவர்கள் எல்லோரும் மனிதர்களாக பிறக்க வேண்டும்’ என்று சாபம். இதை கேள்விப்பட்ட வசுதேவர்கள், வசிஷ்ட முனிவரை வணங்கி தவறுக்கு மன்னிப்பு கேட்டு, சாப விமோஷனம் கேட்டனர். 

அதன்படி, ‘என் பசுவை கடத்தி சென்ற வசுதேவர் மட்டும் மனிதனாக பிறந்து, வெகுகாலம் இந்த மண்ணில் இருக்க வேண்டும். மற்ற வசுதேவர்கள், அவரவர் மனிதனாக பிறந்தவுடன், சாபம் நீக்கிவிடுவதால், அப்போதே இறந்து, பின்னர் தேவர்கள் ஆகிவிடலாம்’ என்று சாபத்துக்கு பரிகாரம் வழங்கினார். 

அந்த சாபத்தை நிறைவேற்றவே அவர்கள் கங்காதேவி என்ற தேவதையை கெஞ்சி கேட்டுக் கொண்டனர். அவளும் அதற்கு ஒப்புக் கொண்டார். அதன்படி சாந்தனு மன்னனை கணவனாக்கி அவனுக்கு 8 குழந்தைகளை பெற்றாள். அதில் 7 குழந்தைகளை கங்கையில் மூழ்கடித்தாள். 8-வது குழந்தையான ‘பீஷ்மரை’ மட்டும் மன்னனிடமே விட்டுவிட்டு சென்றாள். வசிஷ்டர் சாபத்தின்படி பீஷ்மர் கடைசிவரை மனிதனாக உயிர் வாழ்வார். (மனிதனாக பிறப்பதே சாபத்தின் வெளிப்பாடுதான் போல!).

Monday, May 19, 2014

நீதிக்கடவுள்

நீதிக்கடவுள்:

நீதியும் பெண்மையும் ஒரே வகையில் ஒத்து இருப்பவை. 

பெண்கடவுள் தெமிஸ் (Themis) என்பவர் கிரேக்க மகாகடவுள் ஜூயஸின் (Zeus) மனைவிகளுள் ஒருவர். இவரே சட்டத்துக்கும், நடைமுறை பழக்க வழக்கத்துக்கும் தேவதை. பழக்க வழக்கம்தான் சட்டமாக ஆகியது. ஒரே பழக்க வழக்கத்தை பழகி வந்தால் அதுவே பிற்காலத்தில் சட்டம். 

ரோமன் கலாச்சாரத்தில் இந்த நீதிதேவதைக்கு ஜஸ்டிசியா என்று பெயர் (Justitia or Lady Justice). இந்த ரோமன் நீதி தேவதைதான் அவளின் இடது கையில் ஒரு தாராசை வைத்திருக்கிறாள். அவளின் வலது கையில் ஒரு வீரவாள் வைத்திருக்கிறாள். இதற்கு நியாயமும் நீதியும் இருப்பதாக உருவகப்படுத்தப் பட்டுள்ளது. அவளின் கண்கள் துணியால் கட்டப்பட்டுள்ளது. தனக்கு முன்னால் நீதிகேட்டு நிற்பவர் தனக்கு வேண்டியவர் என்றோ, வேண்டாதவர்  என்றோ, யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் நீதி வழங்கவதற்காக கண்ணைக் கட்டிக் கொண்டாள். 

நமது இதிகாசங்களில் எமனை நாம் நீதிதேவன் என்கிறோம். சித்திரகுப்தனிடம் உள்ள நமது பாவ-புண்ணிய கணக்குப்படி இந்த தீர்ப்பு இருப்பதாக நம்புகிறோம். யமன் நமது இறப்புக்குப்பின் கணக்கு பார்ப்பவன்.

சூரியனின் புத்திரனாக சனியும் நீதிதேவனே. அவன் நம் வாழ்நாளிலேயே கணக்கு பார்த்து பலன் கொடுத்து விடுவான். போனபிறவி பாவ-புண்ணியத்தைப் பொறுத்து இந்தப் பிறவியில் பலன் தருவானோ என்னவோ!

நீதி என்பது கண்டிப்பான தண்டனையாகத்தான் இருக்க வேண்டும். தெய்வநீதி சரியாக இருக்கும்போது, மனித நீதியும் அவ்வாறே இருக்க வேண்டும். 


டைவர்ஸ் (Divorce)

டைவர்ஸ்/ டிவர்ஸ் (Divorce)

டைவர்ஸ் என்னும் மணமுறிவுகள் தற்போது அதிகரித்து விட்டது. பெண்களின் தனிப்பட்ட முடிவெடுக்கும் திறனால் இது ஏற்பட்டிருக்கலாம். முன்காலம் போல 'கல்லானாலும், புல்லானாலும்... கதையெல்லாம் இப்போது எடுபடாது.  வரவேற்கத்தக்க விஷயம்தான்

இதை சரி என்றோ அல்லது தவறு என்றோ ஒரே பதிலில் குறிப்படக் கூடாது. அவரவர்  வயிற்றுவலியின் அவஸ்தை அவரவருக்குத்தான் தெரியும். இருந்தாலும் ஒரு பொது  நியாயமாக இவ்வாறான மணமுறிவுகள் அதிகம் நிகழாதபடி முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை அவரவரைச் சார்ந்தவர்கள் திருமணத்துக்கு முன்னரே எடுத்துக் கொள்வது நல்லது. 

சட்டையைகழற்றிப்போடும் விஷயமாக இல்லாமல், திருமணம் செய்வதற்கு முன்னரே பல வழிகளில் அலசி ஆராய்ந்து வாழ்க்கைத் துணையின் நடவடிக்கைகளை தெரிந்தபின் மணம்புரிய வேண்டும். எல்லாம் முடிந்தபின் தலையில் கைவைப்பது சரியல்ல. ஆனால் நடைமுறையில் இது எவ்வளவு நேர்த்தியாக முன்ஜாக்கிரதை நடவடிக்கை எடுத்தாலும், 'பொய்' என்ற ஒரு விஷயம் இதில் உள்ளே புகுந்து மொத்தத்தையும் சிந்தி, சிதறடித்துவிட்டுச் சென்றுவிடும்

இந்த பொய்யில் மணமகன்/ மணமகள், அவரவர் பெற்றோர், அவரவர் சுற்றத்தார், இந்த திருமண ஏற்படாட்டை முன்னின்று  ஏற்படுத்தியவர் என பல தரப்பட்டவர்களின் பொய்களும் இதில் அடங்கும். பொய் பேராசையால் வந்ததா? பெருமைக்கு வந்ததா? பாதி பேராசையும், மீதிப்பாதி பெருமைக்கும்

பேராசையும் பெருமையும் திருமண வாழ்க்கையை நிலைக்கச் செய்வதில்லை. ஒருசில நேரங்களில்/ பல நேரங்களில் இவை இரண்டும் வெற்றியடைந்து வீரநடை போட்டுள்ளன. எதனால்? எதிர் நபரின் இயலாமையால் மட்டுமே!


கோர்ட் கச்சேரி

கோர்ட் கச்சேரி

'எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குத்தான் போரார்'


கோர்ட்டுகளை 'கச்சேரி' என்றுதான் அந்தக்காலத்தில் சொல்லி வந்திருக்கிறார்கள். 'எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குத்தான் போரார்' என்ற பழமொழியும் அப்படி வந்ததே. 

அந்த கோர்ட்-கச்சேரியில் கதா-காலாட்சேபம் செய்பவர்கள் இரண்டு தரப்பு வக்கீல்கள் மட்டுமே. மற்ற வக்கீல்கள் அதை வேடிக்கை பார்ப்பது மட்டுமே. அதுபோல ஒவ்வொரு வக்கீல் பேசும்போதும் மற்ற வக்கீல்கள் வேடிக்கை பார்க்கும் வக்கீலாக மட்டுமே இருப்பார். கேஸே இல்லாமல் வேடிக்கை பார்க்கவந்த வக்கீலை இந்தப் பழமொழியைக் கொண்டு 'வெட்டி வக்கீல்' என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கலாம்.

Friday, May 9, 2014

வில்லிபுத்தூராரின் பாரதம்:

வில்லிபுத்தூராரின் பாரதம்:
வில்லிபுத்தூராழ்வாரின் மகன் 'வரந்தருவான்' என்றுபெயர்.

இவர் தன் தந்தை வில்லிபுத்தூராழ்வாரிடமே பாடம் கற்றுக் கொண்டு வந்தார். ஒருநாள் தன் தந்தை சொன்ன பொருளை விட்டு வேறு பொருள் உள்ளது என மறுப்புச் சொன்னதால், அவரின் தந்தைக்கு கோபம் வந்து மகனை விரட்டி விட்டார். மகன் வரந்தருவான் வேறு ஊருக்குச் சென்று வேறு ஒரு ஆசிரியரைக் கொண்டு பாடம் கேட்டு வந்தார். தன் தந்தையின் கண்ணில்படாமல் வாழ்ந்து வந்தார்.

ஒருநாள், தந்தையான வில்லிபுத்தூராழ்வார் தான் இயற்றிய பாரதத்தை சபையில் அரங்கேற்றினார். அப்போது அந்த நூலின் முதல் வார்த்தையான 'ஆக்குமாறயனாம்' என்னும் கவியைக் காப்பாக எடுத்து பாடினார்.

அரங்கேற்ற சபையில் இருந்தவர்கள், வில்லிபுத்தூராரை நோக்கி, 'நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு பின்னர் உங்களின் அரங்கேற்றத்தை தொடங்குங்கள்' என்றனர். என்ன கேள்வி என்றதற்கு, 'நீங்கள் அரங்கேற்றுவதோ வியாசரின் பாரதம்; அந்த நூலில் முதலில் விநாயகரை வணங்கும் பாடலை முதலில் பாடியே ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது; அப்படி இருக்க, நீங்களோ, பொதுவான வணக்கம் மட்டுமே சொல்லி கவியை தொடங்குகிறீர்கள்; ஏன் விநாயகரை வணங்கும் கவியை சொல்லவில்லை' என்று கேட்டனர்.
அப்போது வில்லிபுத்தூரார் பதில் சொல்ல முடியாமல் தவித்தபோது, அவரின் மகன் வரந்தருவான் எழுந்து சபையோரைப் பார்த்து, 'இங்கு பல சமயத்தை சேர்ந்தவர்கள் கூடி இருக்கிறார்கள்; எனவே பொதுவணக்கம் செய்வதே முறை; மேலும் விநாயகர் வணக்கத்தை, கவி தனக்குத்தானே கூறிவிட்ட பின்னரே, இந்த பொதுவணக்கத்தை  சபையில் கூறினார்' என்று கூறி சமாளித்தார்.

சபையில் இருந்தவர்கள், 'நீ யார்? என்று கேட்க, அவனும், நானே வில்லிபுத்தூராரின் புத்திரன் என்று கூறினார். அப்போதுதான் வில்லிபுத்தூராரும், வந்தது தன் மகன்தான் என்று தெரிந்து மகிழ்ச்சி கொண்டார்.

சபையில் இருந்தவர்கள், 'அதுசரி, உனக்கு உன் தகப்பன் மனதுக்குள், விநாயகர் துதி பாடினார் என்று எப்படித் தெரியும் என்று கேட்டனர்.
இவர் பாடிய விநாயகர் காப்பு இதுதான் என்று கூறி இந்த கவியை பாடினார்.

'நீடாழி யுலகத்து மறைநாலொடைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக மேமேரு வெற்பாகங் கூரெழுத்தாணி தன்
கோடாக வெழுதும்பிரானைப் பணிந்தன்புகூர்வாமரோ'


பின்னர், வில்லிபுத்தூரார் பாரதத்தை அரங்கேற்றி, தன் மகனை அதற்கு சிறப்பாயிரம் செய்யும்படி பணித்தார்.


Krishna with his fiancée